full screen background image

குரு மிஷ்கினுக்கு சீடன் வடிவேலுவின் காணிக்கை ஒரு குத்துப் பாடல்..!

குரு மிஷ்கினுக்கு சீடன் வடிவேலுவின் காணிக்கை ஒரு குத்துப் பாடல்..!

வரும் மார்ச் 20-ம் தேதியன்று வெளியாகவிருக்கும் திரைப்படங்களில் முக்கியமானது ‘கள்ளப்படம்’. பத்திரிகையாளராக இருந்து இயக்குநராக மாறியிருக்கும் ஜெ.வடிவேல் இயக்கியிருக்கும் முதல் படம் இது.

இவர் இயக்குநர் மிஷ்கினிடம் மூன்று படங்களுக்கு உதவி இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார் என்பதும், ‘ஆனந்தவிகடனில்’ இளம் பத்திரிகையாளராக பணியாற்றிய அனுபவசாலி என்பதும் கூடுதல் செய்திகள்.

kallappadam stills-1

இந்தக் ‘கள்ளப்பட’த்தில் ஒரு விசேஷம் என்னவெனில் ஒரு இயக்குநர், ஒரு ஒளிப்பதிவாளர், ஒரு இசையமைப்பாளர், ஒரு எடிட்டர் ஆகிய நான்கு முக்கிய கேரக்டர்களில் உண்மையான அந்தந்த துறையின் திறமைசாலிகளே நடித்துள்ளனர் என்பதுதான். இந்தியாவிலேயே இந்த மாதிரியான வடிவமைப்பில் ஒரு படம் தயாராகியிருப்பது இதுதான் முதல் முறை என்கிறார்கள்.

இயக்குநராக ஜெ.வடிவேல், ஒளிப்பதிவாளராக ஸ்ரீராம் சந்தோஷ், இசையமைப்பாளராக கே, எடிட்டராக காஜின் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இவர்களில் ஒளிப்பதிவாளரும் இயக்குநரும் ஏற்கெனவே அறைத் தோழர்கள்தானாம். அன்றைக்கு எடுத்த முடிவின்படி வடிவேல் இயக்குநராகும் முதல் படத்தில் ஸ்ரீராம் சந்தோஷ் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகியிருக்கிறார்.

_MG_2821

மேலும் இப்படத்தில் நடிகை லட்சுமி பிரியா மிக முக்கிய கேரக்டரில் வந்திருக்கிறார். இவருடன் ‘ஆடுகளம்’ நரேன், ஜிஷ்னு, வின்னர் ராமச்சந்திரன், செஃப் தாமு ஆகியோரும் நடித்திருக்கின்றனர். இதுவரையில் சின்னத்திரையில் நடிகர்களை இயக்கிக் கொண்டிருந்த சின்னத்திரையின் ஹாட்டஸ்ட் இயக்குநர் கவிதாபாரதி மிக முக்கியமான வில்லன் கேரக்டரில் வெள்ளித்திரைக்கு அறிமுகமாகியிருக்கிறார்.

படத்தில் நடித்த இயக்குநர், ஒளிப்பதிவாளர், எடிட்டர், இசையமைப்பாளர் என்ற நால்வருமே படத்திலும் அந்தந்த பணிகளை செய்திருக்கிறார்கள். பாடல்களை மணி அமுதவன், மிஷ்கின் இருவரும் எழுதியிருக்கின்றனர். பி.சந்தோஷம் நடனம் அமைத்திருக்கிறார். இறைவன் பிலிம்ஸ் சார்பாக ஆனந்த் பொன்னிறைவன் தயாரித்திருக்கிறார். இவர் தமிழகத்தில் பிறந்து படித்து வளர்ந்து இப்போது ஆஸ்திரேலியாவில் மருத்துவராகப் பணியாற்றுகிறாராம்.

IMG_1243

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி சமீபத்தில் ஒரு மாலை மயங்கும் நேரத்தில் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. நிகழ்ச்சித் தொகுப்பாளர் என்கிற அறுவையெல்லாம் இல்லாமல் தானாகவே மைக்கை பிடித்த இயக்குநர் ஜெ.வடிவேல் படம் சம்பந்தப்பட்ட அனைவருக்கே நன்றி சொல்லி அவர்களை மேடைக்கு அழைத்தது வித்தியாசமாக இருந்தது.

படத்தின் துவக்கத்தில் டிரைலர் திரையிடப்பட்டது. டிரைலரில் ரஜினி, கமல் நடிக்கும் படத்தில் வேலை செய்வது போல் கனவு காணும் நான்கு இளைஞர்களை காண்பிக்கிறார்கள். இந்த காட்சியே படத்தின் கதையைச் சொல்லிவிட்டது.

_MP_1181

அடுத்துத் திரையிட்ட இரண்டு பாடல் காட்சிகளுமே அல்வா ரகம். அதிலும் மிஷ்கின் ஸ்டைலில் ஒரு குத்துப் பாடல்.. ஆபாச அங்க சேஷ்டைகள் இல்லாமல் நடனம் சார்ந்து ஆடியிருக்கிறார்கள்.

IMG_1258

“அஞ்சாதே’ படத்தின்போதே வடிவேலுவை எனக்குத் தெரியும்.  ஒரு நிமிஷம்கூட ச்சும்மா இருக்க மாட்டார். ஏதாவது வேலை செஞ்சுக்கிட்டேயிருப்பாரு. ஓடிக்கிட்டேயிருப்பாரு. ‘நீ படம் பண்ணு.. கண்டிப்பா நான் அதுல நடிக்கிறேன்’னு அப்பவே அவர்கிட்ட சொல்லியிருந்தேன். அதே மாதிரி இந்தப் படத்தின் துவக்கத்தில் என்கிட்ட வந்து கதை சொன்னாரு. கேட்டேன். பிடிச்சிருந்தது. சட்டுன்னு ஒத்துக்கிட்டேன். வடிவேலு மாதிரியான யெங்கர்ஸை வரவேற்கணும்.. இதுக்காகவே இந்தப் படத்துல நடிச்சிருக்கேன்..” என்றார் ‘ஆடுகளம்’ நரேன்.

IMG_1260

அடுத்து பேசிய இயக்குநர் கவிதாபாரதி, “ச்சும்மாதான் என்னோட மீசையை ஒரு ஸ்டைல் மாதிரி முறுக்கி விட்டிருந்தேன். இதைப் பார்த்துட்டு வடிவேலு வந்து என்னை நடிக்கக் கூப்பிட்டாரு. அதுலேயும் கொடூரமான வில்லனா.. நான் இந்தத் துறைக்குள்ள வந்ததே சினிமாவுக்காகத்தான். அதுல முனைப்போட என்னால செயல்பட முடியலை. அதை நோக்கிய பயணத்தின் ஊடாக சின்னத்திரையில் எனது படைப்புகளை செஞ்சுக்கிட்டு வரேன். இந்த நேரத்தில் என்னுடைய திரையுலகப் பயணம் இப்படியொரு படத்தோடு துவங்கும்னு நானும் எதிர்பார்க்கலை…” என்றார்.

IMG_1581

இயக்குநர் வடிவேலு பேசும்போது, “கோடம்பாக்கத்தில் சினிமா கனவுடன் உலவும் பலருக்கும் திரை ஜாம்பவான்களான ரஜினி, கமல் ஆகியோரின் படத்தில் வேலை செய்ய வேண்டும் என்ற கனவு இருக்கும். அப்படிப்பட்ட நான்கு பேரின் கதைதான் இந்தக் ‘கள்ளப்படம்’. சினிமாவுலகம் எப்போதுமே வெற்றி பெறுபவர்களை மட்டும்தான் கொண்டாடும். அந்த வெற்றிக்கு பின்னால் அந்த நபர் கடந்த வந்த பாதையை யாரும் பார்ப்பதில்லை. ஒவ்வொரு கலைஞனும் தன் எதிர்காலத்துக்கான கனவை ஒரு புள்ளியில் நிறுத்தியாக வேண்டியிருக்கிறது. அங்கிருந்து அவன் எதிர்கொள்ளும் விஷயங்களின் கோர்வைதான் இந்தக் ‘கள்ளப்படம்” என்றார்.

கேள்வி பதில் சீசனில் கேள்விகள் பறந்து வந்து விழுந்தன. தயக்கமேயில்லாமல் எதிர்கொண்டார்கள் படக் குழுவினர்.

குத்துப் பாடலை வைத்திருப்பது பற்றிக் கேட்டவுடன், “அது எனது குரு மிஷ்கின் ஸாருக்கு நான் செய்த குருதட்சிணை..” என்றார் இயக்குநர். “மிஷ்கின் சார்கிட்ட அசிஸ்டெண்டா வேலை பார்க்கும்போது அவரை தினமும் ரசிச்சிருக்கேன். அவர் ஒரு நிமிடம்கூட ச்சும்மா இருக்க மாட்டார். ஏதாவது வேலை பார்த்துக்கிட்டேயிருப்பார். அவர் படத்தில் பாடலே இல்லேன்னாலும் தினம் ஒரு பாடலை எழுதி அதுக்கு மியூஸிக் கம்போஸ் பண்ணுவாரு. அப்படிப்பட்டவருக்கு அவருடைய பாடலையே அர்ப்பணிச்சா எப்படியிருக்கும்னு யோசிச்சோம்.. அதன்படியே அவரோட ஸ்டைலேயே இந்தப் பாடலை உருவாக்கினோம்..” என்றார் இயக்குநர் வடிவேல்.

“எங்க பார்த்தாலும் ஒரே கதை திருட்டா இருக்கே.. இந்தப் படத்தோட கதை எந்த உதவி இயக்குநரிடமிருந்து சுட்டது..?” என்ற வெளிப்படையாக பறந்து வந்த கேள்வியைப் பார்த்து திகைத்துப் போனார் இயக்குநர் வடிவேல். பின்பு சங்கடத்துடன் “இதற்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியலை. இங்கேயிருக்கிற ஒவ்வொரு உதவி இயக்குநர்களிடமிருந்தும் இந்தக் கதையை சுட்ருக்கோம் சார். இந்த கதையே உதவி இயக்குநர் ஒருவர் எப்படி படம் இயக்க வருகிறார் என்பதுதான்.. இந்தக் கதைக்குள் எல்லாருடைய கதையும்தான் இருக்கு..” என்றார் பொத்தாம்பொதுவாக.

‘கள்ளப்படம்’ நல்ல படமாகவே இருக்குமென்றுதான் ரசிகர்களும் காத்திருக்கிறார்கள்..!

Our Score