full screen background image

ஓவியாவின் ஆர்மியினருக்காக வரவிருக்கும் ‘களவாணி-2’ திரைப்படம்

ஓவியாவின் ஆர்மியினருக்காக வரவிருக்கும் ‘களவாணி-2’ திரைப்படம்

ஒரு திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் கழித்தும் அது கொண்டாடப்படுகிறது என்றால், அந்த படத்தின் வீச்சு பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அப்படி ஒரு படம் மீண்டும் வராதா என ரசிகர்களை ஏங்க வைத்த, ‘களவாணி’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி, வெளியாக இருக்கிறது.

வர்மன்ஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில்,  இயக்குநர் சற்குணத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த ‘களவாணி-2’ படத்தில், முதல் பாகத்தில் நடித்த விமல், ஓவியா, இளவரசு, சரண்யா பொன்வண்ணன் உட்பட பெரும்பாலான நடிகர்கள் நடித்துள்ளனர்.

ஸ்க்ரீன் சீன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிடும் இத்திரைப்படம் வரும் ஜூலை 5-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

இதையொட்டி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு பிரசாத் லேப் தியேட்டரில் இன்று மதியம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாயகன் விமல் தவிர மற்ற படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு படம் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

IMG_1723

இசையமைப்பாளரும், பாடலாசிரியருமான மணி அமுதவன் பேசும்போது, “பாடலாசிரியராக இருந்த என்னை இசையமைப்பாளராக்கியவர் சற்குணம் சார். மூன்று பாடல்களை எழுதி, அதற்கு நானே இசையமைத்திருக்கிறேன். மேலும் பல படங்கள், பாடல்களுக்கும் இசையமைத்து வெற்றி பெற்று, அதை சற்குணம் சாருக்கு சமர்ப்பணம் செய்ய விரும்புகிறேன்…” என்றார்.

durai sudhakar

படத்தில் வில்லனால நடித்திருக்கும் துரை சுதாகர் பேசும்போது, “விமல், ஓவியா ஆகியோருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தபோது ஆரம்பத்தில் எனக்கு கொஞ்சம் தயக்கம் இருந்தது. அந்த தயக்கத்தை போக்கி, இருவரும் என்னை மிகவும் சகஜமாக்கினர். இந்த படத்தின் மூலம் விமல் என்ற நல்ல நண்பர் எனக்கு கிடைத்திருக்கிறார். சரண்யா மேடம், இளவரசு சார் போன்ற மிகச் சிறந்த நடிகர்களுடன் ஒரு நாள் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. நிறைய கற்றுக் கொண்டேன். இது உள்ளாட்சி தேர்தலை மையமாக கொண்ட படம். அடிமட்ட அரசியலை பேசும் படம். நல்ல ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்கும்..” என்றார்.

இசையமைப்பாளர் நடராஜன் சங்கரன் பேசும்போது, “களவாணி-2’ எனக்கு மிகவும் பிடித்த படம். வாழ்வியல் சார்ந்த படங்களை கொடுப்பது மிகவும் கடினமான ஒரு விஷயம். அதை சற்குணம் சார் மிக எளிதாக செய்கிறார். இந்தப் படத்துக்கு பின்னணி இசை அமைக்கும்போது படத்தைப் பார்த்தேன், மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. அனைவரும் ரசிக்கும் படமாக இது இருக்கும்..” என்றார்.

ilavarasu-saranya

நடிகர் இளவரசு பேசும்போது, “களவாணி’ படம் வெளியாகி பத்து வருடங்கள் கழித்தும் இப்போதும் என்னை பார்ப்பவர்கள் ‘அறிக்கி அப்பா’, ‘களவாணி அப்பா’ என்றே அழைக்கிறார்கள். அந்த அளவுக்கு எனக்கு பெயர் வாங்கி கொடுத்த படம் ‘களவாணி’. எனக்கும் சரண்யா அவர்களுக்கும் பெயர் சொல்லும் படங்களில் ஒன்று. துரை சுதாகர் நடிக்க வரும் முன்பே அவருக்கு பயிற்சி கொடுத்து நடிக்க வைத்தனர். அவர் நடிப்பில் அந்த பயிற்சி தெரிந்தது. ஓவியா மிகப் பெரிய அளவில் வளர்ந்திருக்கிறார், இது அப்படியே தொடர வேண்டும். இது இப்படியே தொடர்ந்து களவாணி 3, 4, 5 என அடுத்தடுத்த பாகங்கள் வர வேண்டும் என விரும்புகிறேன்…” என்றார்.

saranya ponvannan

நடிகை சரண்யா பொன்வண்ணன் பேசும்போது, இந்த ‘களவாணி’ திரைப்படம் எனக்குக் கிடைத்த ஒரு வாழ்நாள் சாதனை திரைப்படம். அந்த படத்தில் வந்த ‘ஆடி போயி, ஆவணி போயி’ வசனம் எனக்கு உலகப் புகழை பெற்று தந்தது.

இப்போதும் நான் எங்க போனாலும், கடைகளுக்கு, கல்யாணத்துக்கு, சொந்தக்காரங்க வீட்டுக்கு என்று எங்க போனாலும் அந்த வசனத்தைப் பேசச் சொல்லிக் கேக்குறாங்க. எனக்கு சங்கடமா இருந்தாலும், கொஞ்சம் பெருமையாவும் இருக்கு.

முதல் பாகத்தில் இருந்து இந்த படம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். புதியக் களத்தில் இந்த கதை நிகழும். படத்தில் நடிக்கும்போது முழுக்க சிரித்துக் கொண்டே இருந்தேன். முதல் இரண்டு நாள் படப்பிடிப்பிலேயே இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியை பெறும் என்ற நம்பிக்கை உருவானது.

எனக்கு இளவரசு சாருடன் இணைந்து நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். அவர்தான் எனக்கு சரியான ஜோடின்னு நினைக்கிறேன். டயலாக் பேசும்போது நாங்களே பேசிக்கிட்டு மாத்திக்குவோம். கூட பேசிக்குவோம். இந்த அளவுக்கு பிரெண்ட்லியா வேற எந்த நடிகர்கிட்டேயும் என்னால நடிக்க முடியலை.

ஓவியா இப்போது ஒரு சூப்பர் ஸ்டார் நடிகை ஆகிட்டாங்க, அவருடைய வளர்ச்சியை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது…” என்றார்.

oviya

நடிகை ஓவியா பேசும்போது, “இந்தக் ‘களவாணி’ திரைப்படம் எனக்கு மிகவும் நெருக்கமான படம். சற்குணம் சார்தான் எனக்கு ‘ஓவியா’ என்ற பெயரை வைத்தார். அந்த படத்தில் நடித்த அத்தனை நடிகர்களையும் இங்கு பார்ப்பது மகிழ்ச்சி. எனக்கும் விமலுக்கும் இருக்கும் கெமிஸ்ட்ரியைவிட, இளவரசு சார், சரண்யா அம்மாவுக்கும் இடையில் இருக்கும் கெமிஸ்ட்ரிதான் சிறப்பாக இருக்கும். விமல் என் நெருங்கிய நண்பர். அவர்தான் எனக்கு தமிழ் கற்றுக் கொடுத்தவர். இந்த படமும் ‘களவாணி’ அளவுக்கு ரசிகர்களை திருப்திப்படுத்தும்…” என்றார்.

படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான சற்குணம் பேசும்போது, “இது ‘களவாணி’ படத்தின் முழு தொடர்ச்சி இல்லை. வேறு ஒரு புது களத்தில் கதை இருக்கும். களவாணி முதல் பாகத்தைவிடவும், இந்த பாகத்தை ரசிகர்கள் மிகவும் ரசிப்பார்கள்.

sarkunam

விமலின் ‘களவாணி’ தோற்றத்தை முதல் நாள் படப்பிடிப்பில் பார்த்தபோதே அந்த நம்பிக்கை வந்தது. ஓவியாவிடம் இந்தக் ‘களவாணி-2’ படம் பற்றி சொன்னபோது எந்த கேள்வியும் கேட்காமல் உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டார். ஓவியா இந்தப் படத்தில் மகளிர் குழு தலைவியாக நடித்திருக்கிறார். படப்பிடிப்பின்போது அவருக்குப் பயங்கர காய்ச்சல், ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் நடித்துக் கொடுத்தார்.

சரண்யா மேடம் என்னை எப்போதும் ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பார். இளவரசு சார் படப்பிடிப்பை தாண்டி, என் மீது மிகுந்த அக்கறை கொண்டவர். நேரம் கிடைக்கும்போதெல்லாம் என்னை அழைத்து பேசுவார். ஆலோசனை வழங்குவார்.

வில்லன் கதாபாத்திரத்தில் துரை சுதாகர், ஓவியாவின் அப்பாவாக வில்லன் ராஜ், சூரிக்கு பதில் ஆர்.ஜே.விக்னேஷ் காந்த் ஆகியோர் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்.

நடராஜன் சங்கரன், மணி அமுதவன், ரொனால்ட் ரீகன், வி-2 என 4 இசையமைப்பாளர்கள் இந்த படத்தில் பணிபுரிந்திருக்கிறார்கள். இந்தக் ‘களவாணி-2’ திரைப்படம் நிச்சயமாக நல்லதொரு பொழுது போக்கு படமாக இருக்கும்…” என்றார் இயக்குநர் சற்குணம்.

இந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் குமார், ரோபோ சங்கர், வில்லன் ராஜ், படத் தொகுப்பாளர் ராஜா முகம்மது, ஒளிப்பதிவாளர் மாசாணி, இசையமைப்பாளர் ரொனால்ட் ரீகன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Our Score