‘டிமான்ட்டி காலனி’ படம் பார்த்து பாராட்டிய கலைஞர் கருணாநிதி..!

‘டிமான்ட்டி காலனி’ படம் பார்த்து பாராட்டிய கலைஞர் கருணாநிதி..!

சமீபத்தில் திரைக்கு வந்து இன்னமும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘டிமான்ட்டி காலனி’ திரைப்படத்தை பார்த்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி, படக் குழுவினரை பெரிதும் பாராட்டியுள்ளார்.

demonte-colony-1

நேற்று முன்தினம் படத்தினை தனது வீட்டிலேயே பார்த்த கருணாநிதி, அதில் ஹீரோவாக நடித்திருந்த தனது பேரன் அருள்நிதியையும், படத்தை தயாரித்து வெளியிட்ட ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பாளர் முரளி ராமசாமியையும் நேரில் அழைத்து பாராட்டியிருக்கிறார். மேலும் அந்தப் படக் குழுவினரைப் பாராட்டி அறிக்கையும் வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில், “மோகனா மூவிஸ்’ மு.க. தமிழரசு தயாரிப்பில், ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிட்டிருக்கும் அஜய் ஞானமுத்து இயக்கி, அருள்நிதி நடித்த, ‘டிமான்ட்டி காலனி’ திரைப்படத்தின் பிரத்யேக காட்சியை இன்று பார்த்து ரசித்தேன். இப்படம் ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பாக இருந்தது. அருள்நிதியின் நடிப்பு அருமையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் கதாநாயகன் அருள்நிதிக்கும் - இயக்குனர் அஜய் ஞானமுத்துவுக்கும் - சக நடிகர்களான ரமேஷ், சனந்த், அபிஷேக், எம்.எஸ்.பாஸ்கர், மதுமிதா, சிங்கம்புலி ஆகியோருக்கும் - ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் மற்றும் இப்படக் குழுவினருக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்…” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

எப்போதும் நுங்கம்பாக்கம் போர் பிரேம்ஸ் தியேட்டருக்கு நேரில் வந்து படம் பார்க்கும் பழக்கமுடைய கலைஞர் கருணாநிதி தனது உடல்நலனை முன்னிட்டு தற்சமயம் படங்களை பார்ப்பதையே குறைத்துக் கொண்டார். இந்தப் படத்தையும் தன் வீட்டிலேயே பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைப் படித்து நெகிழ்ச்சியான நடிகர் அருள்நிதி, "எனக்கு இதைவிட உயரிய அங்கீகாரம் வேறெதுமில்லை... நன்றி தாத்தா:))))" என்று முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.