full screen background image

ககனாச்சாரி – சினிமா விமர்சனம்

ககனாச்சாரி – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் மலையாளத்தின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான சுரேஷ் கோபியின் மகன் கோகுல் சுரேஷ் முதன்மைக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், அனார்கலி மரைக்கார், அஜு வர்க்கீஸ், K.B.கணேஷ்குமார் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

டிஸ்டோபியன் சயின்ஸ் பிக்சன் ஜானரில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தினை ஜெமினி பிலிம்ஸ் சர்க்யூட் இந்தியா முழுவதும் வெளியிட்டுள்ளது.

கேரளாவில் இயற்கை பெருமளவு அழிந்து போன 2040-ம் ஆண்டில், மூன்று மனிதர்களிடம் ஒரு ஏலியன் பெண் அடைக்கலமாகிறாள். அதன் பிறகு நடக்கும் குளறுபடிகளைக் கலகலப்பான காமெடியுடன், புதுமையான திரைக்கதையில், புதுமையான களத்தில் இத்திரைப்படம் சொல்லியிருக்கிறது.

2040-ம் வருடத்திய காலக்கட்டத்தில் கடவுளின் தேசம்’ என்றழைக்கப்படும் கேரளம் கடவுளால் கைவிடப்பட்ட தேசமாக காணப்படுகிறது. அந்தக் காலக்கட்டத்தில் பெய்த மழை, வெள்ளத்தினால் மாநிலத்தில் பெருமளவு நிலப்பரப்பு அழிந்துபோய் பூமிக்கு அடியில் போய்விட்டது.

அப்போதைய ஆட்சியும் இதுவரையிலும் காணாத ஒரு அடக்குமுறை ஆட்சியாக இருக்கிறது. அரசு சர்வாதிகாரத்தை கையாண்டு வருகிறது. மக்களை அடக்கி வைத்திருக்கிறது. மின்சார வாகனங்களைத்தான் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. அதோடு மக்களை எந்தப் பக்கம் திரும்பினாலும் கண்காணித்து வருகிறது அரசு அமைப்புகள். ஒவ்வொரு வீட்டிலும் அரசின் உளவு கருவி பொருத்தப்பட்டு இதனை காவல்துறையும் கண்காணித்து வருகிறது.

இத்தகைய தருணத்தில் வேற்றுக் கிரகவாசிகளை தாய் மண்ணுக்காக வேட்டையாடிய முன்னாள் ராணுவ வீரரான கே.பி.கணேஷ்குமார், ஏலியன்களிடமிருந்த தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி பல்வேறு பாதுகாப்பு உபகரணங்கள் துணையோடு ஒரு பாதுகாப்பான கட்டிடத்தில் தனது உதவியாளர்களான கோகுல் சுரேஷ் மற்றும் அஜூ வர்க்கீஸூடன் மறைந்து வாழ்கிறார்.

அந்தக் கணேஷ் குமாரைப் பற்றி ஆவணப் படம் எடுப்பதற்காக டிவி சேனல் குழுவினர் அவரைச் சந்திக்கிறார்கள். அவர் சந்தித்த சம்பவங்களை, போர்க்களன்களை அவரது உதவியாளர்கள் வந்திருக்கும் குழுவினரிடம் விவரிக்கிறார்கள். அவர்கள் விவரிக்க.. விவரிக்க.. அந்தக் காட்சிகள் திரையில் நமக்குக் காட்சிகளாக விரிகின்றன.

இப்படியொரு நிலைமையில் இந்த மூன்று பேருடன் ஒரு பெண் ஏலியனும் வந்து இணைகிறது. வந்த பெண் ஏலியனை கோகுல் சுரேஷ் காதலிக்கத் துவங்குகிறார். இந்தக் காதல் ஒரு பக்கம் காமெடியாக ஓடத் துவங்குகிறது.

தொடர்ந்து அபரிமிதமான செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதால் ஏற்பட்ட நன்மைகளும், தீமைகளும்.. காலநிலை மாற்றத்தால் அடிக்கடி பொழிந்து தள்ளும் மழையும், இதனால் ஏற்படும் வெள்ள பாதிப்பும், மனிதத் தவறுகளால் ஏற்படும் பெட்ரோல் தட்டுப்பாடும், இதனால் நாட்டில் ஏற்படும் குழப்பங்களும், பிரச்சினைகளும்.. வேற்றுக் கிரகவாசியின் உலகத்திற்கும், மனித குலத்திற்கும் உள்ள தொடர்பு என்று நம் அறிவுக்கு அப்பாற்பட்ட பல விசயங்களை இத்திரைப்படம் பேசுகிறது.

இறுதியில், கோகுல் சுரேஷ்-ஏலியன் பெண்ணின் காதல் என்ன ஆனது?.. பூமியில் நடக்கும் ஏலியன் தாக்குதலுக்கு பின்னணியில் இருக்கும் உண்மை என்ன?.. என்ற கேள்விகளுக்கான விடைதான் இந்த ககனாச்சாரி’ திரைப்படம்.

கணேஷ்குமார் தனது நீண்ட, நெடிய பல வருட கால அனுபவமிக்க நடிப்பைக் காண்பித்திருக்கிறார். கோகுல் சுரேஷூக்கு இது முதல் படம் என்பதாலும் ஒரு ஹீரோவுக்குரிய திரைக்கதை இதில் இல்லாததாலும் அடக்கமாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார். அஜூ வர்கீஸ் தன் இயல்பான நடிப்பு, மற்றும் டைமிங்சென்ஸ் டயலாக் டெலிவரியிலேயே சிரிக்க வைத்திருக்கிறார்.

ஏலியன் பெண்ணாக நடித்திருக்கும் அனார்கலி மரைக்காயர் வசனமே பேசாமல் வெறும் பார்வையிலேயே பலவித மனித உணர்வுகளை காண்பித்திருக்கிறார்.

ஆனாலும் படத்தின் முக்கியக் கதாப்பாத்திரங்களான மூவரும் எப்போதும் பேசிக் கொண்டே கதையை நகர்த்துவதுபோல இருப்பது போரடித்தாலும், அவ்வப்போது வசனங்களில் வெளிப்படும் ஸ்டாண்ட் அப் வசனங்களால் சிரிக்கவும் முடிகிறது.

இது மாதிரியான சயின்ஸ் பிக்சன் கலந்த நேட்டிவிட்டி படங்களுக்கு ஒளிப்பதிவு மிகவும் முக்கியம். ஒளிப்பதிவாளர் சுர்ஜித் எஸ்பய் தனது கேமிராவின் கண்களால் அத்தனை பொருட்களுக்கும் உருவம் கொடுப்பதைப்போல கொடுத்துப் படமாக்கியிருக்கிறார். ஆவணப் படத்தை உருவாக்கியிருக்கும்விதமும், நமக்குத் திரையில் காட்டியவிதமும் பாராட்டுக்குரியது.

கலை இயக்குநர் எம்பாவாவின் கை வண்ணத்தில் கதையில் பிரதானமாக கடைசிவரையிலும் காண்பிக்கப்படும் கட்டிடமும், அதன் பின்னணி காட்சிகளும், காட்சிகளுக்குக் கொடுத்திருக்கும் வண்ணமும், திரையில் காட்டப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் ஒரு அறிவியல் ரீதியாக முக்கியத்துவத்தைக் கொடுத்துக் காண்பிப்பதும் நம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

இசையமைப்பாளர் சங்கர் சர்மாவின் இசையில் பின்னணி இசைதான் வித்தியாசமாக அமைந்துள்ளது. படத் தொகுப்பாளர் சீஜே அச்சு முடிந்த அளவுக்கு போரடிக்காமல் கதையைக் கொண்டு போக எத்தனித்து நிறைய கட் டூ கட் காட்சிகளை அமைத்திருந்தாலும் தொடர்ந்த பேச்சுக்களால் நாம் டயர்டாகிப் போனதென்னவோ உண்மைதான்.

இது போன்ற சயின்ஸ் பிக்சன் படங்களுக்கேற்ற கிராபிக்ஸ் காட்சிகளும் நம்மை அசர வைத்திருக்கிறது. மிகுந்த பிரயத்தனப்பட்டு குறைந்த செலவில் நிறைவைத் தரும் அளவுக்கு வி.எஃப்.எக்ஸ் காட்சிகளை வடிவமைத்திருக்கும் வித்தகர் மெராகிக்கு நமது பாராட்டுக்கள்.

கதை, திரைக்கதை எழுதியிருக்கும் இயக்குநர் அருண் சந்து மற்றும் சிவ சாய் இருவரும் மிக சுவாரஸ்யமான ஒரு அறிவியல் கற்பனை கதையை நகைச்சுவையாக கொடுத்து  ரசிகர்களை சிரிக்க வைக்க முயற்சித்துள்ளனர். ஆனால் அதில் பாதிதான் ஜெயித்திருக்கிறார்கள். இயக்குநரின் குரலை வயதான பெண்மணி குரலாக ஒலிக்கச் செய்யும் காட்சிகளில் அரங்கம் அதிரும் சிரிப்பு எழுகிறது.

வரும் காலத்தில் கால நிலை மாற்றத்தினால் பூமியில் நடக்கவிருக்கும் இயற்கையின் பேரழிவுகள்.. மற்றும் அறிவியல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால் மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்படும் தலைகீழ் மாற்றத்தினால் நாட்டில் ஏற்படவிருக்கும் சீரழிவு.. இதையெல்லாம் ஒரு கற்பனைக் கதையாக சொல்ல வந்திருக்கும் இயக்குநர் இதைக் காட்சிப்படுத்தலில் சொல்ல ஆர்வம் காட்டாமல் வெறும் வசனத்தாலேயே நகர்த்தியிருப்பதுதான் படத்தின் மிகப் பெரிய மைனஸ் பாயிண்ட்.

கூடவே வேற்றுக் கிரகவாசிகள், செயற்கை நுண்ணறிவு என்று உலகம் தழுவிய தற்போதைய அறிவியல் முன்னேற்றங்களையும் இத்திரைப்படம் பேசியிருப்பதால், இந்தக் கதை சர்வதேச கதையாகவும் மாறியிருக்கிறது.

ஆனால் இதை சொல்லும்போது மொழி பிரச்சினையைப் பற்றி யோசிக்காமல் மலையாளத்திலேயே அனைத்தையும் பேசி முடித்திருப்பதுதான் படத்துக்கு மிகப் பெரிய எதிரியாகிவிட்டது.

மலையாள மொழி தெரியாதவர்களுக்குக் கண்ணைக் காட்டி காட்டில்விட்டதுபோலவே இத்திரைப்படம் அமைந்துவிட்டது சோகத்திலும் சோகம். ஓடுகின்ற சப்-டைட்டிலும் நடிகர்களின் வேகமான வசன உச்சரிப்புக்கு ஏற்றாற்போல் மின்னல் வேகத்தில் வந்து ஓடி, மறைந்து போவதால்.. படத்தைப் புரிந்து கொள்வது மலையாள மொழி தெரிந்தவர்களைத் தவிர மற்றவர்களுக்கு எட்டாத உயரமாகிவிட்டது.

இதை சரி செய்திருந்தால் இந்தியாவில் இருக்கும் மற்றைய மொழிக்காரர்களும் இந்தியாவின் எதிர்காலத்தைப் பற்றி கொஞ்சமேனும் பயம் கொண்டிருப்பார்கள்..!

RATING : 3 / 5

Our Score