கடிகார மனிதர்கள் – சினிமா விமர்சனம்

கடிகார மனிதர்கள் – சினிமா விமர்சனம்

Christ P The International Productions நிறுவனத்தின் சார்பில் பிரபீஷ், பிரதீப் ஜோஸ் இருவரும் இணைந்து இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

படத்தில் கிஷோர், லதா ராவ் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் கருணாகரன், பிரதீப், ஷெரின், வாசு விக்ரம், பாலாசிங், சிசர் மனோகர், பாவா லட்சுமண், செளந்தர், ஷீலா கோபி, மாஸ்டர் ரிஷி, விஜயா பாட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – உமாசங்கர், இசை – சி.எஸ்.சாம், பாடல்கள் – கார்க்கி பவா, வைகறை பாலன், படத் தொகுப்பு – ஹரிசங்கர், கலை இயக்கம் – பி.ராஜூ, நடன இயக்கம் – கூல் ஜெயந்த், ராதிகா, சண்டை இயக்கம் – மகேஷ், தயாரிப்பு – கே.பிரவீஷ், பிரதீப் ஜோஸ், எழுத்து, இயக்கம் – வைகறை பாலன்.

வாடகை வீட்டில் குடியிருக்கும் ஏழை குடும்பத்தினர் படும் கஷ்டங்கள்தான் படத்தின் கதைக் கரு.

கிஷோர் திருமணமாகி மூன்று குழந்தைகளுக்குத் தகப்பன். ரொட்டி தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர். அவருடைய நிறுவனம் ஒரே நாளில் மூடப்பட்டு அவருடைய குவார்ட்டர்ஸும் மூடப்பட்டதால் தெருவுக்கே வந்துவிட்டார்.

வீட்டுப் பொருட்களை வேனில் ஏற்றிக் கொண்டு வீடு தேடி அலைந்து கொண்டிருக்கிறார். வீட்டு புரோக்கர் சிசர் மனோகரை தேடி வருகிறார். சிசர் மனோகரும் இவருக்காக பல இடங்களில் வீடு தேடுகிறார். ஆனால் அனைத்து வீட்டு ஓனர்களும் விதம்விதமான நிபந்தனைகள் விதிக்கிறார்கள்.

குடும்பம் பெரிதாக இருந்தால் வேண்டாம் என்கிறார்கள். வாடகை 4500 ரூபாய்க்குள்ளாக தேடுகிறார் கிஷோர். இதற்குள் வீடே கிடைக்கவில்லை. அல்லல்படும் வேளையில் பாலாசிங்கின் குடித்தனத்தில் ஒரு வீடு கிடைக்கிறது. ஆனால் பாலாசிங்கோ 4 பேர் என்றால் வீடு தரத் தயார் என்றும் அதற்கு மேல் என்றால் வீடு கிடையாது என்றும் சொல்கிறார்.

சிசர் மனோகர் தனக்கு கமிஷன் கிடைக்குமே என்ற எண்ணத்தில் “ஒரு பையனை கொஞ்ச நாளைக்கு மறைச்சு வைச்சுக்குங்க. அதுக்குள்ள வேற நல்ல வீடு நானே பார்த்துச் சொல்றேன்…” என்று ஐஸ் வைத்துவிட்டுப் போகிறார்.

இதனால் வேறு வழியில்லாமல் கடைசி மகனை மட்டும் ரொட்டி கொண்டு போகும் பெட்டிக்குள் வைத்து வீட்டுக்குள் கொண்டு செல்கிறார் கிஷோர். இந்தப் பையனையும் அருகில் இருக்கும் பள்ளிக்கூடத்தில் சேர்க்கும் கிஷோர் தனக்கு 1 பையன், 1 பொண்ணு என்று மட்டுமே பொய் சொல்லி அனைவரையும் நம்ப வைக்கிறார்.

விடியற்காலையில் பையனை எழுப்பி கக்கூஸூக்கு அழைத்துப் போகிறார். குளிக்க வைக்கிறார். வீட்டிலிருந்து வெளியே போக வேண்டுமெனில் அட்டைப் பெட்டியில் வைத்துத் தூக்கிச் செல்கிறார்.

அதே குடியிருப்பில் குடி வரும் கருணாகரன் பாலாசிங்கின் மகளான ஷெரினை காதலித்துத் திருமணம் செய்து மொத்தச் சொத்தையும் கைப்பற்ற நினைக்கிறார். இதனால் கோவிலில் பிச்சையெடுக்கும் ஒரு பாட்டியை அழைத்து வந்து தன்னுடைய பாட்டி என்று சொல்லி வீடு கேட்டு குடியேறுகிறார்.

ஷெரினுடன் கருணாகரனுக்கு காதல் ஓகே ஆகிறது. காதலர்கள் காதலித்துக் கொண்டிருக்க.. பாலாசிங்கின் மைத்துனன் ஷெரினை தான் கல்யாணம் செய்ய நினைத்துக் கொண்டிருக்கிறான்.

வேறு வீடு தேடிக் கொண்டேயிருக்கிறார் கிஷோர். ஆனால் கிடைக்கவில்லை. அவருடைய சைக்கிளையும் கடன் கட்டவில்லை என்று வட்டிக்காரரான வாசு விக்ரம் பறித்துக் கொண்டு செல்கிறார். இதையும் கஷ்டப்பட்டு மீட்கிறார் கிஷோர்.

வாழ்க்கை இப்படியே போய்க் கொண்டிருக்க ஒரு நாள் குட்டு வெளியாகிறது. கிஷோருக்கு மூன்றாவது மகன் இருக்கும் விஷயம் வெளியில் தெரிய வர.. இதையடுத்து கோபமாகும் பாலாசிங் கிஷோரை வீ்ட்டை விட்டு வெளியேறச் சொல்கிறார். பின்பு என்ன ஆகிறது என்பதுதான் இந்தப் படத்தின் சுவையான திரைக்கதை.

சென்னை போன்ற பெருநகரங்களில் மத்திய தரக் குடும்பத்திற்கும், ஏழை, அன்றாடக் காய்ச்சி குடும்பங்களுக்கும் மிகப் பெரிய பிரச்சினையே வாடகை வீடும், அது தொடர்பான பிரச்சினைகளும்தான்.

சிலருக்கு வீட்டு ஓனர்களால் பிரச்சினை. பலருக்கு வீட்டு வாடகை கொடுக்க முடியாததால் பிரச்சினை என்று பல்வேறு ரூபங்களில் வீட்டை ஒட்டி நடைபெறும் இந்த அவலத்தில் இருந்து தப்பிக்க முடியாமல் திணறுகிறார்கள் மக்கள்.

அவர்களில் ஒருவரது கதையை படமாக்க நினைத்த இயக்குநர் வைகறை பாலனுக்கு நமது பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

கிஷோர் கதையின் நாயகனாக மிக எளிமையான மனிதனாக நடித்துள்ளார். அப்பாவி அப்பாவாகவும், குடும்பத் தலைவனாகவும் பரிதாபத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு நடிப்பைக் காண்பித்திருக்கிறார்.

பையனை வெளிக்காட்ட முடியாமல் அவரும், அவர் மனைவி லதா ராவும் தவிக்கும் தவிப்பும், பையனுக்காக அவர் படும் கஷ்டங்களும் மிக இயல்பாக படமாக்கப்பட்டிருப்பதால் கிஷோரின் நடிப்பில் நாம் மறந்து போகிறோம்.

ஆபீஸில், நண்பர்களிடத்திலெல்லாம் கோபத்தைக் கொப்பளிக்க பேசும் சிலர், வீட்டு ஓனர்களிடம் மட்டும் அப்படி பேச முடியாமல் தவிப்பார்கள். அதுதான் யதார்த்தம். அதைத்தான் படம் முழுவதும் காட்டியிருக்கிறார் கிஷோர்.

வாசு விக்ரமிடம் சைக்கிளை இழந்துவிட்டு தவியாய் தவிப்பதும், பையன் பள்ளி மேடையில் வாங்கிய பரிசினைகூட பெற முடியாமல் தவிக்கும் தவிப்பும், இறுதியில் மீண்டும் தெருவுக்கே வந்து நிற்கும் சோகத்தை சந்திக்கும் அவலமும் இப்படியொரு கொடுமை எந்தவொரு குடும்பத் தலைவனுக்கும் வரவே கூடாது என்கிற யதார்த்த எண்ணத்தை நம் மனதில் தோற்றுவித்திருக்கிறார் இயக்குநர்.

கிஷோரின் மனைவியாக லதா ராவ் சில காட்சிகளே என்றாலும் இப்படியொரு சூழலை எதிர்கொள்ளத் தயங்கும் சராசரி பெண்ணாகவே காட்சியளிக்கிறார். திரும்பவும் ஊருக்கே போய்விடலாம் என்று கதறும் காட்சி அனேகமா படம் பார்க்க வரும் அனைத்து ரசிகர்களின் வாழ்க்கையிலும் என்றேனும் ஒரு நாள் நடந்திருக்கக் கூடும்.

புரோக்கரான சிசர் மனோகர் வாயுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும்வகையில் வாயாலேயே வடை சுடுவது நன்று. வீட்டு உரிமையாளராக பாலாசிங்.. அந்தத் திமிரைக் காட்டும்வகையில் நடித்திருக்கிறார். கருணாகரன் பணத்துக்காக காதலிக்க அலையும் கேரக்டரில் நடித்திருக்கிறார். அவருடைய பாட்டியாக நடித்தவர் இந்தப் பொண்ணை காதலிக்கத்தான் என்னை பாட்டின்னு சொன்னியா என்று கேட்கும் காட்சியில் உருக வைத்திருக்கிறார்.

‘ஏனோ வீடு தேடி கால்கள்’ பாடல் காட்சியில் மாண்டேஜ் ஷாட்டுகளாக வீடு பற்றிய பிரச்சினைகளைக் காட்டு மனதைத் தொட்டிருக்கிறார். கொஞ்சம் ரிலாக்ஸூக்காக ‘பட்டாசு வெடிங்கடா மத்தளம்’ பாடலும், காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.

கிளைமாக்ஸ் காட்சியில் இருக்கும் உருக்கம் படத்தின் மீதான தாக்கத்தை அதிகப்படுத்தியிருக்கிறது. அந்த சைக்கிள் பந்தயமும், பரிசுத் தொகையையும்கூட கிஷோரால் அனுபவிக்க முடியவில்லை என்கிற சோகத்தை சொல்லும்போது வாழ்க்கை மீதான பயத்தை நமக்குள்ளும் தோற்றுவிக்கிறது. இயக்குநர் கிஷோரின் கேரக்டரை இப்படி செய்திருக்க தேவையில்லை..! அப்படியே விட்டிருக்கலாம்..!

கதையும், திரைக்கதையும், இயக்கமும் மட்டுமே இங்கே பிரதானம் என்பதால் ஒளிப்பதிவு, படத் தொகுப்பு என்பதிலெல்லாம் பெரிய அளவுக்கு எதிர்பார்ப்பை கூட்டவில்லை. அவைகள் தங்களது வேலையை அளவே செய்திருக்கின்றன.

வாடகை வீடு பற்றிய பிரச்சினைதான் என்றாலும் இன்னும் நம்பக் கூடிய வகையில் திரைக்கதையை அமைத்திருந்தால் படத்தை இதைவிடவும் நன்கு ரசித்திருக்கலாம். என்னதான் பிரச்சினை என்றாலும் பெற்ற குழந்தைகளை குறைத்துச் சொல்லி வீடு பிடிப்பது என்பது குடிசை வீட்டில்கூட நடவாத காரியம். பெற்றோர்கள் அதனை விரும்பவே மாட்டார்கள்.

தண்ணீர் பிரச்சினை.. கக்கூஸ் பிரச்சினை.. மின்சார செலவு.. கருணாகரன்-ஷெரின் காதலுக்கு உதவி செய்ததில் ஏற்பட்ட பிரச்சினை என்று வேறுவிதமாக கதையைத் திருப்பியிருந்தால் இன்னும் நன்றாகவே இருந்திருக்கும்.

நம்ப முடியாத கருவைக் கொண்டு படத்தின் திரைக்கதையை வடித்திருப்பதுதான் படத்தில் இருக்கும் ஒரேயொரு பிரச்சினை. திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் வலுவாக மனதைத் தொடும் நிகழ்வுகள் நிறைய இருந்திருந்தால் நிச்சயமாக படத்தை அதிகமாக ரசித்திருக்கலாம்.

இயக்குநர் வைகறை பாலனுக்கு நமது வாழ்த்துகளும்.. பாராட்டுக்களும்..!

Our Score