full screen background image

மணியார் குடும்பம் – சினிமா விமர்சனம்

மணியார் குடும்பம் – சினிமா விமர்சனம்

VC Cinemas நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் தேன்மொழி சுங்க்ரா இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.

பிரபல நடிகரும், இயக்குநருமான தம்பி ராமையாவின் மகனான உமாபதி ராமையா இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். மிருதுளா ரவி நாயகியாக நடித்திருக்கிறார்.

மேலும் தம்பி ராமையா, சமுத்திரக்கனி, ஜெயப்பிரகாஷ், ராதாரவி, மொட்டை ராஜேந்திரன், விவேக் பிரசன்னா, பவன், ஸ்ரீரஞ்சனி, ஸ்ரீஜாரவி, யாஷிகா ஆனந்த், மீரா கிருஷ்ணன், சிங்கம்புலி, சிங்கமுத்து, வைரபாலன், ராமர், தங்கத்துரை, சரவண சக்தி, ஹலோ கந்தசாமி மற்றும் பலர் நடித்துள்ளனர். 

எழுத்து, இசை, பாடல்கள், இயக்கம் – ஜெ.தம்பி ராமையா, தயாரிப்பாளர் – தேன்மொழி சுங்க்ரா, ஒளிப்பதிவு – பி.கே.வர்மா, படத் தொகுப்பு – கோபி கிருஷ்ணா, கலை இயக்கம் – வைரபாலன், பின்னணி இசை – பி.தினேஷ், நடன இயக்கம் – தினேஷ், ராபர்ட், சண்டை இயக்கம் – ஹரி தினேஷ், பிரதீப் தினேஷ், கூடுதல் தயாரிப்பு – பி.அய்யாச்சாமி, ஏ.ஷாகுல் ஹமீது, தயாரிப்பு நிர்வாகம் – என்.சுப்பு, இணை இயக்கம் – ஜி.பூபாலன், மக்கள் தொடர்பு – நிகில், புகைப்படங்கள் – ராமசுப்பு, உடைகள் – கணேஷ், ஒப்பனை – ராமச்சந்திரன்.

இந்தப் படத்தை சக்தி பிலிம் பேக்டரியின் சார்பில் பிரபல விநியோகஸ்தரான பி.சக்திவேலன் வெளியிட்டுள்ளார்.

தனது மகன் உமாபதியை பிரமோட் செய்வதற்காகவே இந்தப் படத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கியிருக்கிறார் தம்பி ராமையா. இந்தப் படத்தை இயக்கி கொடுப்பதற்காகவே கடந்த ஓராண்டாகவே தம்பி ராமையா பல படங்களில் நடிக்காமல் தவிர்த்துவிட்டார். அப்படி கஷ்டப்பட்டு தயாரிக்கப்பட்டிருக்கும் படம் எப்படி வந்திருக்கிறது..?

ஊரிலேயே மிகப் பெரிய தலைக்கட்டுக் குடும்பம். பரம்பரை பணக்காரக் குடும்பம் மணியக்காரக் குடும்பம். அந்தக் குடும்பத்தின் தற்போதைய தலையான நார்த்தங்காய் சாமி என்னும் தம்பி ராமையா குதிரை பந்தயத்தில் அத்தனை சொத்துக்களையும் இழந்துவிட்டார். இப்போது அவருக்கு இருக்கும் ஒரே சொத்து அவருடைய வீடு மட்டுமே.

அந்த வீட்டிலும் கதவு, ஜன்னல் என்று இருப்பவைகளை விற்றுத்தான் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார். மணியக்கார குடும்பம் என்றாலும் எதைப் பற்றியும் கவலைப்படாத குணமுடையவர் தம்பி ராமையா. அவரை அவமானப்படுத்தி பேசினால்கூட பொருட்படுத்தாமல் அதனால் ஒன்றுமில்லை என்று நினைக்கும் கேரக்டர்.

இவரது மகன்தான் குட்டிமணியார் என்னும் உமாபதி. இவரும் தற்போது வெட்டி ஆபீஸர்தான். இவருடைய தாய் மாமன் விவேக் பிரசன்னாவுடன் சேர்ந்து ஊருக்குள் சுற்றிக் கொண்டிருப்பார் உமாபதி.

இந்த வெட்டி ஆபீஸர் உமாபதிக்கும், அவருடைய அத்தை மகளான நாயகி மிருதுளாவுக்கும் இடையில் நீண்ட நாளாக காதல் ஓடுகிறது. இதனால் தன்னைப் பார்க்க வரும் பல மாப்பிள்ளைகளை நாயகி மிருதுளாவே ஏதாவது சொல்லி அனுப்பி விடுகிறார்.

உமாபதிக்கு கல்யாணம் செய்து வைக்க தீர்மானிக்கிறார் தம்பி ராமையா. இதற்காக தனது தங்கை மீரா கிருஷ்ணனிடம் பெண் கேட்க நினைத்து ஊரையே கூட்டிக் கொண்டு செல்கிறார் தம்பி ராமையா. மீராவின் கணவரான ஜெயப்பிரகாஷ் “வேலை வெட்டியில்லாமல் ஊரைச் சுற்றி வரும் உன் பையனுக்கு எவன் பொண்ணு தருவான்..?” என்று சொல்லி அவர்களை அவமானப்படுத்துகிறார்.

இதனால் வெகுண்டெழும் உமாபதி இன்னும் 3 மாதத்தில் தான் பெரிய தொழிலதிபராகி ஜெயப்பிரகாஷை தன் வீட்டுக்கு வந்து தன் பெண்ணைக் கட்டிக் கொள் என்று கெஞ்ச வைப்பதாக தனது தந்தை தம்பி ராமையாவின் தொடையில் தட்டி சபதம் செய்கிறார்.

இந்த சபதத்தை நிறைவேற்றும் பொருட்டு காதலியான மிருதுளாவே ஒரு ஐடியா கொடுக்கிறார். காற்றாலை அமைக்கும்படி உமாபதியை தூண்டுகிறார். இதற்காக 3 கோடி ரூபாய் செலவாகும் என்றும், ஒரு கோடியை நாம் காட்டினால் மீதி வங்கிக் கடனாக கிடைக்கும் என்றும் சொல்கிறார் மிருதுளா.

இதை வேதவாக்காகக் கொண்டு உமாபதி ஊர்க்காரர்களிடம் தலா பத்தாயிரம் ரூபாய்க்கு ஷேர்களை விற்கிறார். இப்படி செய்து 1 கோடி ரூபாயை கலெக்ட் செய்து விடுகிறார். இந்தப் பணத்தை வங்கிக்குக் கொண்டு போகும் வழியில் தனியார் கார் டிரைவரான மொட்டை ராஜேந்திரன் அந்தப் பணத்தை களவாடிச் சென்று விடுகிறார்.

இதையறியும் ஊர்க்காரர்கள் மொத்தமும் தம்பி ராமையாவின் குடும்பத்தினர் மீது கோபமாகிறார்கள். அந்தப் பணத்தைத் தான் தேடிக் கொண்டு வருவதாகச் சொல்லி உமாபதி கிளம்ப.. தம்பி ராமையாவின் குடும்பத்தை வீட்டுக்குள் வைத்து பூட்டுகிறார்கள் ஊர்க்காரர்கள். வேளைக்கு ஒரு வீட்டில் இருந்து அவர்களுக்கு சாப்பாடு கொடுக்கும்படி ஏற்பாடு செய்கிறார்கள்.

உமாபதி கொள்ளையடிக்கப்பட்ட பணத்தைக் கண்டுபிடித்தாரா.. தனது குடும்பத்தினரை விடுவித்தாரா.. தனது காதலியைக் கரம் பிடித்தாரா… என்பதுதான் படத்தின் திரைக்கதை.

எல்லாம் நானே என்று களத்தில் குதித்த தம்பி ராமையா படத்தின் அடிப்படையான கதைக் கருவைப் பற்றிக் கொஞ்சம் சிந்தித்திருக்கலாம். கடந்த 18 ஆண்டுகளாக படங்களில் நடித்து தேசிய விருதையும் பெற்றிருக்கும் அவருக்கு இப்போதைய தமிழ்ச் சினிமா துறையின் வியாபார நெளிவு, சுழிவுகளைப் பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் எப்படி இத்தனை தெளிவாக அவரே அவர் தலையில் மிளகாய் அரைத்துக் கொண்டார் என்று தெரியவில்லை..!

தம்பி ராமையாவின் கேரக்டர் ஸ்கெட்ச்சே முட்டாள்தனமாக இருக்கிறது. மூளை வளர்ச்சியடையாதவர் என்று சொல்லியிருந்தால்கூட பரவாயில்லை. ஆனால் எந்த மான, ரோஷத்துக்கும் ஆட்படாதவர் என்று அவரைக் காட்டியிருப்பதும், இதற்கு ஒத்து ஊதும்வகையில் அவரது அம்மாவும், மனைவியும் இருக்கிறார்கள் என்பதுமே அந்தக் குடும்பக் கதையின் மீதான நம்பகத்தன்மையைக் குறைத்துவிட்டது.

எந்தத் தைரியத்தில் பெண் கேட்டுப் போகிறார்.. பையன் என்ன வேலையில் இருக்கிறான்.. பையன், மருமகள் காதல் அவருக்குத் தெரியுமா.. தெரியாதா என்பது பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஊர்க்காரர்களின் கேலி, கிண்டலைக்கூட கண்டு கொள்ளாமல் இருப்பது படத்தையே கேலிக் கூத்தாக்கிவிட்டது.

சமுத்திரக்கனி என்னும் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளரை மிக நெருங்கிய உறவுக்காரராக வைத்துக் கொண்டும் களவு போன ஒரு கோடி ரூபாயை ஹீரோ தானே நேரில் சென்று தெருத் தெருவாய் அலைந்து கண்டுபிடிப்பதெல்லாம் எந்தக் காலத்து திரைக்கதை ஐயா..? சமுத்திரக்கனியை வைத்தே இந்தக் கதையை கொஞ்சம் உண்மைத்தன்மையுடன் நகர்த்தியிருக்கலாமே..

திடீரென்று பவனுடன் மோதிவிட்டு பின்பு அவருடனேயே கூட்டணி வைத்துப் பணத்தைத் தேடுவதும், கடைசியாக மிருதுளா நிராகரித்த மாப்பிள்ளையின் கைங்கிரியம் என்பது தெரிய வரும்போது ஏற்படும் சண்டை காட்சிகளும் ஹீரோவின் ஹீரோயிஸத்தை காண்பிப்பதற்காக வைக்கப்பட்ட திரைக்கதையாகத் தெரிகிறது.

இதில் தம்பி ராமையாவின் அம்மாவின் வாழ்க்கைக் கதை, சிங்கம்புலியின் கதை, ராதாரவியின் கதை.. இதையெல்லாம் நீக்கிவிட்டு அந்த இடத்திலெல்லாம் தம்பி ராமையா-ஜெயப்பிரகாஷ் குடும்பக் கதையை இன்னும் கொஞ்சம் சொல்லியிருந்தால் மனதில் டச் ஆகியிருக்கும்.

உமாபதி ஹீரோவாக ஆக வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளோடு படத்தில் நடித்திருக்கிறார். அவருடைய நடனம், சண்டை பயிற்சி இதெல்லாம் சரியாக பொருத்தமாக அமைந்திருந்தாலும் நடிப்பில் இன்னும் வெகுதூரம் அவர் கடக்க வேண்டியிருக்கிறது என்பது தெரிகிறது. இப்போது அவருக்குத் தேவை மிகச் சரியான புதிய சிந்தனையோடு கூடிய ஒரு இயக்குநர். அவர் கிடைத்துவிட்டால் உமாபதியின் நடிப்பு கேரியரில் ஏதேனும் நல்லதொரு மாற்றம் நிகழலாம்.

நாயகி மிருதுளா ரவியின் வயதுக்கேற்ற கேரக்டர் என்பதால் ரசிக்க முடிகிறது. பாடல் காட்சிகளில் அழகாக தெரிகிறார். மற்றபடி தனிப்பட்ட நடிப்புக்கேற்ற ஸ்கோப் இல்லை என்பதால் அடுத்தடுத்த படங்களில் பார்க்கலாம்.

குறிப்பிடத்தக்க நடிப்பைக் கொட்டியிருக்கிறார் தம்பி ராமையா. அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். தான் இருக்கும் பிரேமில் கொஞ்சம்கூட நழுவாமல் முழு நடிப்புத் திறனையும் காட்டியிருக்கிறார் தம்பி. அவரது சிச்சுவேஷனுக்கேற்ற டயலாக் டெலிவரி, நொடிக்கு நொடி மாறும் முக பாவனைகள், நல்லவரா… கெட்டவரா.. புரிந்து பேசுகிறாரா.. அல்லது புரியாமல் பேசுகிறாரா என்பதையெல்லாம் கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு தனது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் தம்பி ராமையா. வாழ்த்துகள். பாராட்டுக்கள்.

தம்பி ராமையாவின் லூசு மனைவியாக ஸ்ரீரஞ்சனி. எதையும் கண்டு கொள்ளாத அம்மாவாக ஸ்ரீஜா ரவி, பாசமுள்ள தங்கையாக மீரா கிருஷ்ணன், கொடுமைக்கார மைத்துனராக ஜெயப்பிரகாஷ், உற்ற தோழனாக விவேக் பிரசன்னா என்று அனைவருமே அவரவர் கேரக்டர்களில் வஞ்சகமில்லாமல் நடித்திருக்கிறார்கள். ஜெயப்பிரகாஷூக்கு இது நோஞ்சான் கேரக்டர் என்றாலும் குறைவில்லாமல் நடித்திருக்கிறார்.

இடைவேளைக்கு பின்பு நமக்குக் கிடைக்கும் ஒரேயொரு ஆறுதல் மொட்டை ராஜேந்திரனை வைத்து ஹோட்டலில் தம்பி ராமையா படும்பாடுதான். அது ஒன்றுதான் மிக இயல்பாக அமைந்திருக்கிறது. மொட்டையார் இந்தக் காட்சியில் தம்பியையும் கொஞ்சம் மிஞ்சியிருக்கிறார்.

ராதாரவிக்கு கெஸ்ட் ரோல் போலும். இரண்டே இரண்டு காட்சிகளில் நடித்திருக்கிறார். கடைசியாக இவரையும் லூஸ் போல காட்டியிருப்பது பெரும் ஏமாற்றம். சமுத்திரக்கனிக்கு நல்ல கேரக்டர். இவரை வைத்தே படத்தின் பிற்பாதியில் பெரும் திரைக்கதையை எழுதியிருக்கலாம். ஆனால் அதைச் செய்யாமல் விட்டதினால் ஏதோ இந்தப் படத்தில் தானும் தலையை நீட்டியிருக்கிறேன் என்பதுபோலாகிவிட்டது அவரது நிலைமை.

தம்பி ராமையா இயக்குநர் என்பதையும் தாண்டி சிறந்த இசையமைப்பாளர் என்கிற பெயரையும் இந்தப் படத்தின் மூலம் பெற்றிருக்கிறார். பாடல்கள் அனைத்துமே மீண்டும், மீண்டும் கேட்கும் ரகம்.

‘அடி பப்பாளி பழமே.. என் தக்காளி ரசமே’ பாடல் காட்சியில் யாஷிகா ஆனந்தை அழைத்து வந்து ஆட வைத்த தந்திரத்தை படத்தின் மற்றவைகளிலும் பயன்படுத்தியிருக்கலாம். நடனமும், பாடலும் துள்ள வைக்கிறது. இதேபோல ‘ஸ்லீப்பி கண்ட மீனு’, ‘என் மனசுக்குள்ள’ பாடல்களும் மீண்டும் மீண்டும் கேட்கும் ரகம். தம்பி ராமையா இசையமைப்பாளராகவும் ஒரு ரவுண்டு வரலாம்.

படத்தின் துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் ஒரு காட்சியில்கூட கேமிரா தொய்வில்லாமல் பணியாற்றியிருக்கிறது. சுற்றுச் சூழலை மட்டுன்றி இயற்கைக் காட்சிகளையும், நடிகர், நடிகைகளையும் மிக அழகுர பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பி.கே.வர்மா. பாராட்டுக்கள் ஸார்..!

இந்த ‘மணியார் குடும்பம்’ போலவே வாழ்ந்து கெட்ட குடும்பங்கள் பலவும் தமிழகத்தின் ஒவ்வொரு ஊரிலும் இருப்பார்கள். அவர்களது வாழ்க்கையில் குடி, பெண், ரேஸ், சூதாட்டம் என்ற நான்குவித சனியன்களால் தங்களது வாழ்க்கையையும், தங்களது பரம்பரையின் பெருமையையும் கெட்டுக் குட்டிச்சுவராக்கியிருப்பார்கள்.

அப்படியொரு கதையை எடுத்துக் கையாண்டிருந்தால் இந்தப் படம் நிச்சயமாக பேசப்பட்டிருக்கும். இப்போதைக்கு ‘மணியார் குடும்பம்’ என்கிற அறிமுகம் மட்டுமே இந்தப் படத்தின் மூலமாக அனைவருக்கும் கிடைத்திருக்கிறது..!

நாயகன் உமாபதி அடுத்தடுத்த படங்களில் வெற்றி பெற வாழ்த்துகிறோம்..!

Our Score