full screen background image

கடவுள் இருக்கான் குமாரு – சினிமா விமர்சனம்

கடவுள் இருக்கான் குமாரு – சினிமா விமர்சனம்

‘தெய்வ வாக்கு’, ‘சின்ன மாப்ளே’, ‘ராசையா’, ‘அரவிந்தன்’, ‘அரவான்’ போன்ற பிரம்மாண்டமான படங்களை தயாரித்த அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் 25-வது படம் இது. இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கியிருக்கும் 7-வது படமும்கூட.  

லஞ்சப் பேயான ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் இரண்டு இளைஞர்கள் சிக்கிக் கொண்டு தவிப்பதுதான் சுருக்கமான கதைக் கரு. இதற்கு எம்.ராஜேஷின் வழக்கமான பாணியிலான திரைக்கதையைக் கொண்டு கதையை உருவாக்கியிருக்கிறார்கள்.

நாளை நிகில் கல்ரானியுடன் தனக்கு திருமணம் நடக்கும் நிலையில் இன்று பேச்சுலர் பார்ட்டி என்று கொண்டாடுவதற்காக பாண்டிச்சேரி வருகிறார் ஜி.வி.பிரகாஷ்குமார். உடன் அவரது உற்ற நண்பர் பாலாஜி.

பாண்டிச்சேரியில் இருந்து திரும்பும் வழியில் டோல்கேட்டை தாண்டியவுடன் தமிழக எல்லை சாவடியில் லஞ்சப் போலீஸான பிரகாஷ்ராஜ், ரோபோ சங்கர், சிங்கம்புலி கூட்டணியிடம் சிக்குகின்றனர் இருவரும்.

பிரகாஷுக்கே தெரியாமல் பாண்டிச்சேரியில் சரக்கை வாங்கி காரில் டிக்கியில் வைத்து கொண்டு வந்திருக்கிறார் பாலாஜி. இதைப் பார்த்து பிரகாஷ்ராஜ் இவர்களை அரெஸ்ட் செய்யும்படி சொல்ல, கிடைத்த இடைவெளியில் காரை எடுத்துக் கொண்டு தப்பித்து ஓடுகிறார்கள் இருவரும்.

ஆனாலும் பிரகாஷ்ராஜ் இருவரையும் விரட்டிப் பிடிக்கிறார். 50 ஆயிரம் ரூபாயை லஞ்சமாகக் கொடுத்துவிட்டு போகும்படி சொல்கிறார். உலகத்திலேயே முதல் முறையாக 50 ஆயிரம் ரூபாய் லஞ்சத்தை செக்காக எழுதிக் கொடுத்துவிட்டு தப்பிக்கிறார்கள் இருவரும்.

ஆனாலும் மறுபடியும் பாலாஜி செய்த திருவிளையாடலால் கடுப்பான பிரகாஷ்ராஜ் இம்முறை அவர்களை கொலை வெறியாய் விரட்டிப் பிடிக்கிறார். இம்முறை லஞ்சத் தொகை அதிகமாகி 3 லட்சமாகிறது. இதைக் கொடுக்காவிட்டால் பல வழக்குகளை அவர்கள் மீது போட்டு திருமணத்தையும் நடத்தவிடாமல் செய்துவிடுவதாக பிரகாஷ்ராஜ் மிரட்டுகிறார்.

இன்னொரு பக்கம் மணப்பெண்ணும், அம்மாவும் “எப்போ வருவ…?” என்று போனில் டார்ச்சர் செய்ய.. மாப்பிள்ளையும், மாப்பிள்ளை தோழனும் என்ன செய்தார்கள்..? லஞ்ச போலீஸிடமிருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் பிரதான திரைக்கதை.

ராஜேஷின் மற்றைய படங்களை போலவே இந்தப் படமும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்துமே அந்த நொடியில்.. அந்த நிமிடத்தில் சிரித்துவிட்டு மறந்து போகின்ற அளவுக்கான காமெடிகள் என்பதுதான் கொஞ்சம் சோகமான விஷயம்.

படத்தின் முற்பாதியில் உண்மையிலேயே விறுவிறுப்புதான். அதிலும் பாண்டிச்சேரி போர்ஷன் ஆரம்பித்த பின்புதான் படமே வேகமெடுக்கிறது. பின்பு பிரகாஷ்ராஜின் வருகை அதை இன்னும் வேகமெடுத்து ஓட வைத்திருக்கிறது. ஆனால் படத்தின் பிற்பாதியில் தேவையில்லாமல் பேய்க் கதையைப் புகுத்தியிருப்பதால் சட்டென அசுர வேகத்தில் போய் பட்டென்று முதல் கியரில் சாதுவாக நடப்பது போன்ற பீலிங்கை படம் கொடுத்திருப்பதில் சற்று ஏமாற்றமாகவே இருக்கிறது.

பொதுவாக ராஜேஷின் படங்களில் கலாய்ப்புகள் அதிகமாக இருக்கும். அந்தக் கலாய்ப்புகள் அதிகமாக இன்றைய இளைஞர்களைக் கவரும்வகையிலேயே இருக்கும். இந்தப் படத்திலும் அவைகள் அனைத்துமே இருக்கின்றன.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை கழுவி, கழுவி ஊற்றியிருக்கிறார்கள். ஏற்கெனவே பலவித கட்டப் பஞ்சாயத்துக்களில் இருக்கும் நிலைமையில் இது வேறய்யா..? அந்தம்மா பொங்கிரப் போகுதுப்பா..!

இது போதாதென்று கிறித்துவ பாதிரியார்களையும், சர்ச்சுகளையும், அப்பம் வாங்குவதையும்கூட விட்டு வைக்காமல் கிண்டலடித்திருக்கிறார்கள். இது எங்கே போய் முடியப் போகுதோ..?

லஞ்சம் கொடுப்பது தவறு.. வாங்குவதும் தவறு என்பதை அரசு தீண்டாமை விளம்பரத்திற்கடுத்து அதிக அளவில் பரப்புரை செய்து வரும் வேளையில், லஞ்சம் கொடுத்தாவது காரியத்தைச் சாதிக்க வேண்டும் என்று துடிக்கும் இளைஞர்களை கண்டிப்பது போல காட்சிகள் இல்லாததும் கண்டிக்கத்தக்கதுதான்..

படத்தில் ஹீரோ, ஹீரோயின்களையும் மிஞ்சியவர்கள் ஊர்வசியும், பிரகாஷ்ராஜூம்தான்..! பஞ்சாயத்து செய்யும் அக்காவாக அமர்ந்திருக்கும் ஊர்வசி செய்யும் அலட்டல், அலப்பறைகள்.. பஞ்சாயத்துகள் வயிற்றை பதம் பார்க்கும் காமெடிகள்..! இடையிடையே மனோபாலா எடுத்துக் கொடுக்கும் சேனலின் ரகசியங்கள் குபீர் சிரிப்பை வரவழைப்பவை.

தான் காதலித்த பெண்ணின் அப்பாவான எம்.எஸ்.பாஸ்கர் போடும் குடும்பத்தோடு கிறித்துவ மதத்திற்கு இடப் பெயர்ச்சி செய்ய வேண்டும் என்கிற நிபந்தனையும் அதன் விளைவுகளும் இன்னொரு பக்க காமெடி அண்ட் சென்ஸ் ஸ்டோரி. இதைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் பேசும் அந்த நீளமான வசனமும் அவர் ஒரு நடிகர் என்பதை நிரூபித்திருக்கிறது.

இதேபோல் ஸ்கிரீனில் தோன்றும் முதல் காட்சியில் இருந்து கடைசியாக தனது சின்ன வீடு விஷயத்தை மனைவியிடம் சொல்லாதே என்று கெஞ்சும் காட்சிவரையிலும் பிரகாஷ்ராஜின் சின்னச் சின்ன ஆக்சன்கள்கூட ரசிக்க வைத்திருக்கின்றன. சிறந்த நடிகர்களால் மட்டுமே காட்சிகளை மேலும் நகர்த்திச் செல்ல முடியும் என்பதற்கு பிரகாஷ்ராஜ் கூட்டணியினரின் தொடர்ச்சியான நகைச்சுவை துணுக்குகளே உதாரணம்.

ஜி.வி.பிரகாஷுக்கு இந்த லவ்வர் பாய் ஹீரோ வேஷம் பொருந்துகிறதா என்று தெரியவில்லை. டார்லிங் கதையம்சமே வேறு என்பதால் அதில் ரசிக்க முடிந்தது. இதில் ராஜேஷின் இயல்பு தன்மையும் கலந்திருப்பதால் இயக்குநரே அதிகம் மேலோங்கியிருக்கிறார்.

நிக்கி கல்ரானி, ஆனந்தி இரு ஜோடிகளில் சிறப்பான இயக்கத்தினால் இவர்களை முழுமையாக ரசிக்கவும் முடிந்திருக்கிறது. நிக்கியைவிடவும் ஆனந்தி நடித்திருக்கிறார். ஆனந்தியைவிடவும் நிக்கி அதிகமாக கவர்ந்திழுக்கிறார். நிக்கியைவிடவும் ஆனந்தி ஆடைக் குறைப்பில் எச்சரிக்கையாக இருந்திருக்கிறார். ஆனந்தையவிடவும் நிக்கியே பாடல் காட்சிகளில் கிளாமரை கொட்டியிருக்கிறார்.

சுவாரஸ்யமான காட்சிகளால், வசனங்களால் காதலர்களின் மோதல், ஊடல், காதல் என்று அனைத்தையும் சகஜமாக்க நம்மிடையே நேரலை மின்சாரம் போல கடத்தியிருக்கிறார் இயக்குநர்.

“தயவு செய்து இங்கிலீஷ் பேசாத” என்று சொல்லி நிக்கி பிரகாஷை துரத்தும் காட்சியும், தன்னை மறந்துவிட்டு நிக்கியை கல்யாணம் செய்து கொள்ளும்படி ஆனந்தி பிரகாஷை துரத்தும் காட்சியும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல ராஜேஷின் சிறப்பான இயக்கத்திற்கு உதாரணமாக சுட்டலாம்.

நடிப்பில் குறை வைக்காத ஜி.வி.பிரகாஷ், இசையில்தான் கோட்டைவிட்டுவிட்டார். அனைத்துமே ஒலியின் இரைச்சலில் பாய்ந்தோடிய ஒலிக் கலவைகளாகவே இருக்கின்றன. ‘லொக்காலட்டி பாய்ஸ்’, ‘நீ போன தெருவுல’, ‘ஹேய் பார்த்து போடி’ என்ற பாடல்கள் காட்சியமைப்புகளால் கவர்ந்திழுக்கின்றன. ‘இரவில் ஆட்டம் பகலினில் தூக்கம்’ பாடலை ரீமிக்ஸ் செய்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். தேவையா என்றுதான் கேட்க வைக்கிறது அந்தப் பாடல் காட்சி.

படத்தின் மிகப் பெரிய தொய்வே அந்த பேய் பங்களா காட்சிகள்தான். அதுவரையிலும் ஸ்மூத்தாக பரபரவென்று ஓடிக் கொண்டிருந்த கதையில் திடீர் பள்ளம் விழுந்திருப்பது இதில்தான். இதையடுத்து மீண்டும் கல்யாண மண்டபத்தில் பிரகாஷ்ராஜ், பிரகாஷ் சந்திப்பு மேலும் சுவாரஸ்யத்தைக் கூட்டினாலும், இப்படித்தான் நடக்கப் போகிறது என்று நம்மால் ஊகிக்க முடிவதால் சிறிது ஏமாற்றம்தான்…!

சக்தி சரவணனின் ஒளிப்பதிவில் ஹீரோயின்களும், லொகேஷன்களும் பக்காவான அழகைக் காட்டியிருக்கின்றன. ‘ஹேய் பார்த்து போடி’ பாடல் காட்சியில் லொகேஷனும், ஆடுபவர்களின் காஸ்ட்யூம் டிஸைனும், ஒளிப்பதிவும் சேர்ந்து அதீதமாக கவனத்தை ஈர்த்திருக்கின்றன.

விவேக் ஹர்ஷனின் படத் தொகுப்பில் மிக அதிகமான ஷாட்டுகளைக் கொண்டிருக்கும் இந்தப் படத்தில் கொஞ்சமும் தொய்வில்லாமல் வசனங்களை பிசிறு தட்டாமல், ஆக்சன் குறையாமல் காட்சிகளை ரசிக்க முடிந்திருக்கிறது. வெல்டன் தொகுப்பாளர்.

ராஜேஷின் படங்களில் டாஸ்மாக் சரக்கும், மதுவருந்துவதும் முக்கிய கேரக்டர்களாக இருக்கும். இதில் சரக்கை காட்டியதோடு சரி.. அந்த வகையில் நல்ல பிள்ளையாக பெயர் எடுக்க முனைந்திருக்கும் இயக்குநர் ராஜேஷுக்கு நமது வாழ்த்துகள். பாராட்டுக்கள்..!

ராஜேஷின் முந்தைய படங்களிலெல்லாம் கொஞ்சம் அழுத்தமான கதையும் இருக்கும். கூடவே, இளைஞர்களின் மனசைத் திசை திருப்பும் டாஸ்மாக் சீன்கள் அதிகமாக இருக்கும். ஆனால் இதில் டாஸ்மாக்கே இல்லை. கூடுதல் திருப்பமாக கதையிலும் அழுத்தம் இல்லாமல் இருப்பது அதிர்ச்சிதான்.

எதற்கு சிரித்தோம்.. ஏன் சிரித்தோம்.. என்ற கேள்விக்கே விடையில்லாமல் ஒரு கமர்ஷியல் சினிமாவுக்குப் போனோமா? சிரிச்சோமோ? வந்தோமா? என்றிருக்க வேண்டுமாய் இயக்குநர் ராஜேஷின் இந்தப் படம் அமைந்திருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்தான்..!

Our Score