full screen background image

‘கடைசி விவசாயி’ – சினிமா விமர்சனம்

‘கடைசி விவசாயி’ – சினிமா விமர்சனம்

நாயகர்களை நம்பி ஓடிக் கொண்டிருந்த திரையுலகில், சின்ன பசங்களையும் நடிக்க வைத்து ஹிட் கொடுக்க முடியும் என ‘காக்கா முட்டை’ படத்தின் மூலம் நிரூபித்தவர் இயக்குநர் மணிகண்டன்.

அதன் தொடர்ச்சியாக ’குற்றமே தண்டனை’, ‘ஆண்டவன் கட்டளை’ என சிறப்பான படங்களைக் கொடுத்து கதையை மட்டுமே நம்பி இதுவரையிலும் பயணித்திருக்கிறார்.

‘ஆண்டவன் கட்டளை’ படத்துக்குப் பிறகு, மணிகண்டன் இயக்கியிருக்கும் புதிய திரைப்படம்தான் இந்தக் ‘கடைசி விவசாயி’.

இந்தப் படத்தில் நல்லாண்டி’ என்ற பெரியவர்தான் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் விஜய் சேதுபதி, யோகி பாபு, ராய்ச்சல் ரபேக்கா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விவசாயத்தை ஒரு தொழிலாகப் பார்க்காமல், ஒரு வாழ்வியலாக பார்க்க வேண்டும். அந்த வாழ்க்கையில் எவ்வளவு பேர் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள்..? ந்தத் தொழில் இப்போது எப்படி இருக்கிறது என்பதுதான் இந்தப் படத்தின் கதைக் கரு.

உசிலம்பட்டி அருகேயிருக்கும் பெருங்காமநல்லூர் கிராமத்தில் வசிப்பவர் மாயாண்டி’ என்ற 80 வயது முதியவர். இவரது மனைவி இறந்துவிட்டார். இவரது மகனான  விஜய் சேதுபதி புத்தி சுவாதீனம் இல்லாதவர். தீவிர முருக பக்தராகி கோவில், கோவிலாகச் சுற்றி வருகிறார். பெரியவர் மாயாண்டிக்கு காது சற்று மந்தம். அவரே சமைத்து சாப்பிடுகிறார்.

மாயாண்டிக்கு ஊரிலேயே 1 ஏக்கர் நிலம் இருக்கிறது. இவர் ஒகுவர் மட்டும்தான் அந்த ஊரில் விவசாயம் பார்க்கிறார். கிணறும், தண்ணீரும் இருப்பதால் இவரால் மட்டும் சமாளிக்கவும் முடிகிறது. 2 மாடுகளை வளர்த்து வருகிறார்.

கிராமத்து மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் வந்து கொண்டேயிருப்பதால் குல தெய்வம் கோவிலுக்கு விழா எடுத்தால் பிரச்சினை தீரும் என்று நினைக்கிறார்கள். இதற்காக சாமி கும்பிட ஏற்பாடு செய்கிறார்கள்.

அவர்களின் வழக்கப்படி ஊரில் இருக்கும் அனைத்து வீட்டுக்காரர்களும் ஒரு மரக்கா நெல்லை கோவிலுக்குக் காணிக்கையாக தர வேண்டும். ஆனால் மாயாண்டியைத் தவிர வேறு யாரும் விவசாயம் செய்யாததால், கோவில் நிர்வாகிகள் மாயாண்டியைத் தேடி வருகிறார்கள்.

மாயாண்டியும் நெல்லை விதைக்க ஒத்துக் கொள்கிறார். அதுபோலவே தன்னுடைய நிலத்தை தானே உழுது, நெல்லைப் பயிரிடுகிறார். அந்தச் சமயத்தில் ஒரு நாள் அவரது வயல் அருகேயே 1 ஆண் மயிலும், 2 பெண் மயில்களும் இறந்து கிடக்கின்றன.

அதைப் பார்த்துப் பரிதாபப்படும் மாயாண்டி அந்த மயில்களை தனது நிலத்தின் அருகேயே குழி தோண்டிப் புதைக்கிறார். இதைப் பார்க்கும் வேட்டைக்காரன் ஒருவன் போலீஸிடம் பற்ற வைக்கிறான்.

ஏற்கெனவே அந்த ஊர் மக்களிடம் முன் விரோதத்தில் இருந்த லோக்கல் போலீஸ் இதுதான் சமயம் என்று பெரியவர் மாயாண்டியை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துகிறது.

ஜாமீனில் வெளிவர முடியாத குற்றம் என்பதால் மாயாண்டி சிறையில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதே நேரம் அவரது நெற்பயிர்களைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. கோவில் கும்பிடுக்கும் நாள் நெருங்குகிறது.. அந்த ஊர் மக்கள் என்ன செய்கிறார்கள்..? மாயாண்டி அந்த வழக்கில் இருந்து தப்பித்தாரா இல்லையா..? என்பதுதான் இந்த வாழ்க்கைக் கதையின் திரைக்கதை.

‘மாயாண்டி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பெரியவர் நல்லாண்டி அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அறிமுக நடிகர்களை சீரியஸ் காட்சிகளில் நடிக்க வைப்பது மிக, மிக கடினம். அதிலும் வயதானவர்கள் என்றால் சாத்தியமே இல்லை. அதில் அத்தனையையும் சாத்தியமாக்கியிருக்கிறார் இயக்குநர் மணிகண்டன்.

பெரியவரின் உடலும், அதன் வலிமையும் அவரது நடத்தலில் இருந்தே தெரிந்தாலும், இந்த வயதிலும் இப்படி உழைக்கிறாரே என்கிற ஒரு விஷயத்தை பார்வையாளனின் மனதில் பதிய வைத்துவிட்டார் இயக்குநர்.

மிகச் சாதாரணமான, எளிமையான, இயல்பான பேச்சு. தனது மகனை சாப்பிட வைப்பதற்காகத் தனக்குப் பசியில்லை என்று சொல்வதும், மகன் ஆசைப்பட்டானே என்பதற்காக அப்பளம் பொரித்துக் கொடுப்பதும் அந்த வயோதிகத்திலும் அவர் காட்டும் பாசம் நம் கண்ணில் நீரை கசிய வைக்கிறது.

மகனது கடைசி நிமிடத்தை உணர்ந்து கொண்ட நிலையில் “அவன் முருகன்கிட்ட போயிட்டான்…” என்று சொல்லி தன்னைத்தானே திருப்திப்பட்டுக் கொள்ளும் காட்சியிலும் நம்மை உருக வைத்திருக்கிறார்.

நீதிமன்றத்தில் “நெல்லுக்கு தண்ணி பாய்ச்சலைன்னா அது செத்திராதா..? அதுவும் ஒரு உசிருதான.. அதுக்கு யார் கேஸ் போடுவா..?” என்றும், “போன வருஷம் ஒரு நாய்கூடத்தான் செத்துக் கிடந்தது. அதையும் நான்தான் எடுத்துப் புதைச்சேன். அதுக்கும் கேஸ் போடுவீங்களா…?” என்று தைரியமாகக் கேட்கும் இடத்திலும் கை தட்டல்களை அள்ளியிருக்கிறார் பெரியவர்.

கிளைச் சிறையில் படுத்தபடியிருக்கும் அவரது நிலைமையைப் பார்த்த அந்த ஒரு கணம் நம் வயிற்றிலேயே கலவரத்தை உண்டு பண்ணிவிட்டார் பெரியவர். அந்த அளவுக்கு அந்தக் காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது. கிளைமாக்ஸில் நிலத்தில் கால் வைக்கும் அந்தப் பெரியவரின் கால் தடம்தான் இந்த நூற்றாண்டின் தமிழ்நாட்டின் கடைசி விவசாயியின் கால் தடம் என்று அதிகாரப்பூர்வமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். தன்னுடைய இந்தச் சிறப்பான நடிப்பைப் பார்க்க அவர் தற்போது உயிருடன் இல்லை என்பதுதான் சோகத்திலும் சோகம்.

பழுப்பேறிய பற்கள்.. இரண்டு கைகளிலும் கணக்கிலடங்கா சிவப்புக் கயிறுகள்.. நெற்றி நிறைய விபூதி.. பார்த்தவுடன் நூறு சதவிகிதம் லூஸு என்று ஊர்ஜிதமாய் சொல்லும் அளவுக்கு இரண்டு கைகளிலும் ஒரு பெரிய பையில் தெருவில் கிடந்த பொருட்களைத் தூக்கிக் கொண்டு அலையும் தோற்றத்தில் விஜய் சேதுபதி தனது தனித்துவ நடிப்பைக் காண்பித்திருக்கிறார்.

“மலை மேலே ஏறி இறங்குனேன்ல.. கால் வலிக்குதுப்பா…” என்று தனது அப்பாவிடம் சொல்லும்போதும், எச்சில் இலைகளை எடுத்துச் சாப்பிடும் சாமியாருக்கு தனது சாப்பாட்டைக் கொடுத்துச் சாப்பிடச் சொல்லும்போதும் அந்த கேரக்டராகவே மாறியிருக்கிறார் விஜய் சேதுபதி. இவருடைய புண்ணியத்தில் படத்தில் இடம் பெறும் இரண்டு முருகன் பக்தி பாடல்களுமே படத்தை ஆழ்ந்த ரசிப்புக்குள் உள்ளாக்கியிருக்கின்றன.

அந்தச் சாமியார் சொல்லும் அந்தப் பொண்ணை மறந்துட்டியே என்ற வசனத்தில்தான் விஜய் சேதுபதியின் இன்றைய நிலைமைக்குக் காரணம் ஒளிந்திருக்கிறது. ஒருவேளை காதல் தோல்வியால் ஏற்பட்ட நிலைமையாகக்கூட இருக்கலாம். இயக்குநர் இதை மட்டும் கொஞ்சம் தெளிவுபடுத்தியிருக்கலாம்.

மாடு கட்டிப் போராடித்தால் மாளாது என்று யானை கட்டிப் போரடித்தார்கள் என்று நமது மன்னர்கள் ஆட்சிக் கால அறுவடைக் காலத்தை நமது தமிழ் நூல்களில் படித்திருக்கிறோம். ஆனால் இந்தப் படத்தில் இருந்த நிலத்தை விற்றுவிட்டு அந்தப் பணத்தில் ஒரு யானையை வாங்கி பிச்சையெடுக்கும் தொழிலைச் செய்கிறார் யோகிபாபு. 

குறைந்த கால்ஷீட்டில் நடித்திருக்கிறார் போலும். இவரால் விவசாயத்தின் அழிவையும், நிலத்தை வாங்கி, விற்கும் புரோக்கர்கள் செழிப்பாக வாழ்வதையும் எடுத்துச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

படத்தில் அதிகப்பட்சம் அந்தக் கிராமத்தில் இருப்பவர்களையே நடிக்க வைத்துள்ளார்கள். நேரடி ஒலிப்பதிவு என்பதால் அவர்களுடைய குரலிலேயே முழுப் படமும் உருவாகியுள்ளது. இதனாலேயே இவர்களது இயல்பான நடிப்பும் நம்மை கவர்ந்திழுக்கிறது.

நீதிபதியாக நடித்திருக்கும் ரெபேக்காவும் இன்ஸ்பெக்டராக நடித்தவரும் அவரவர் கதாபாத்திரங்களுக்கேற்ற நடிப்பைக் காண்பித்திருக்கிறார்கள். பொய் வழக்கு என்பதைக் கண்டறிந்து பெரியவரைக் காப்பாற்றத் துடிக்கும் ஜட்ஜூம், பொய் வழக்குதான்.. நம்மை முன்னாடி ஒரு தடவை அடிச்சாங்கம்மா என்று உண்மையைச் சொல்லும் இன்ஸ்பெக்டரும் இன்றைக்கும் நாட்டில் உலாவுகிறார்கள்..!

பெரியவருக்கு உதவி செய்து வரும் இளைஞரும், மோட்டார் போட்டுவிட ஊருக்குள் வரும் போலீஸ்காரரும் நம் கண்ணில் இருந்து அகலவேயில்லை.

கிராமத்தில் ஒரு துக்கத்தைச் சொன்னால்கூட நையாண்டியாக சொல்வார்கள். அது இந்தப் படத்திலும் கடைசிவரையிலும் இழையோடிக் கிடக்கிறது.

புதிய வகை விதையில்லாத தக்காளி பற்றி பெரியவரிடம் சொல்கையில், “அவனுக்கு பிள்ளை பிறந்தா அவன் விதையில்லாமல் இருந்தா சந்தோஷப்படுவானாக்கும்…” என்று அவர் திருப்பிச் சொல்கையில் தியேட்டரே கை தட்டலில் அதிர்கிறது. மனிதனின் மாற்று விஞ்ஞானத்தை தேடுவதே இயற்கையை அழிப்பதற்காகத்தான் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார் இயக்குநர். தன்னை அழைத்து வந்த போலீஸை மின் வாரிய ஆள் என்று நினைத்து அவர் பேசும்பேச்சு குபீர் சிரிப்பை வரவழைக்கிறது.

கலை இயக்குநராக தோட்டாதரணி பணிபுரிந்துள்ளார். படத்தின் களம் கிராமம் என்றாலும் அதில் நீதிமன்றம், கோவில் திருவிழா போன்ற பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து படமாக்கியுள்ளனர். இது செட் போலவே தெரியவில்லை. அற்புதம்..

இயக்குதல் போலவே தனது ஒளிப்பதிவு திறமையையும் சிறப்பாகவே காண்பித்திருக்கிறார் மணிகண்டன். முதல் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் பொட்டல்வெளியையும், கரிசல் பூமியையும், காய்ந்த நிலத்தையும், வெடித்துப் போய் கிடக்கும் வயல் வெளிகளையும் மண்ணின் மைந்தர்களையும் அப்படியே கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது கேமிரா.

இளையராஜாவின் பின்னணி இசையைப் புறக்கணித்துவிட்டு சந்தோஷ் நாராயணனின் இசையைப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர். ஏன் என்று தெரியவில்லை. ஆனால் இதில் குறை சொல்ல ஒன்றுமே இல்லை என்பதுதான் உண்மைதான்.

இந்தப் படத்தை உசிலம்பட்டியைச் சுற்றியுள்ள சுமார் 16 கிராமங்களில் படமாக்கியிருக்கிறார்கள். அங்கிருக்கும் விவசாய முறை ரொம்பவும் பழையது. நம் தமிழர்களின் விவசாய முறையை இன்னமும் கையில் வைத்திருப்பது கரிசல் காட்டு விவசாயிகள்தான்.  உண்மையில் இவர்கள்தான் தமிழகத்தில் இருக்கும் கடைசி விவசாயிகள் என்றே சொல்லலாம்.

ந்தியாவில் விவசாயம் பொய்த்துப் போய்க் கொண்டிருக்கிறது என்பதற்கு வானமும், மழையும் மட்டும் காரணமில்லை. நமது அரசுகளும், நிர்வாக அமைப்புகளும் ஒரு காரணம் என்பதை இந்தப் படம் சுட்டிக் காட்டுகிறது.

மாயாண்டி போன்ற விவசாயிகளை போற்றிப் பாதுகாக்க வேண்டிய அரசுகள் விவசாயத்தை துச்சமாக நினைத்து அந்த விவசாயக் குடி மக்களை அடிமைகளாக நினைப்பதுதான் விவசாயத்தை அழிக்கும் முதல் காரணியாகும். எத்தனை கிராமங்களில் விவசாயிகளின் வாழ்க்கையைக் கெடு்த்தது குடியும், அவர்களது அப்பாவி குணமும்தான்.

உற்பத்திக்கு ஏற்ற விலையைக் கொடுக்காமல் அவர்களை ஏமாற்றி வரும் அரசுகளும், பெரும் வியாபாரிகளும், கார்பரேட் நிறுவனங்களும், செயற்கை ரசாயன உரத் தயாரிப்பாளர்களும், வட்டி தொழில் செய்பவர்களும்கூட இந்த விவசாயத்தைக் குழி தோண்டி புதைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

கடைசி நெல்.. கடைசி மீன்.. வரிசையில் இந்தக் கடைசி விவசாயியைும் நாம் சேர்த்து வைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.

இப்படியொரு படத்தைத் தயாரித்து அளித்திருக்கும் இயக்குநர், தயாரிப்பாளரான மணிகண்டனுக்கு நமது கோடி நன்றிகள்..!

RATING : 4.5 / 5

Our Score