full screen background image

விஜய் சேதுபதி, இயக்குநர் மணிகண்டன் கூட்டணியில் ‘கடைசி விவசாயி’

விஜய் சேதுபதி, இயக்குநர் மணிகண்டன் கூட்டணியில் ‘கடைசி விவசாயி’

நாயகர்களை நம்பி தமிழ்த் திரையுலகமே ஓடிக் கொண்டிருந்த நிலையில், சின்ன பசங்களையும் நடிக்க வைத்து ஹிட் கொடுக்க முடியும் என ‘காக்கா முட்டை’ படத்தின் மூலம் நிரூபித்தவர் இயக்குநர் மணிகண்டன். அதன் தொடர்ச்சியாக ’குற்றமே தண்டனை’, ‘ஆண்டவன் கட்டளை’ என சிறப்பான படங்களைக் கொடுத்து கதையை மட்டுமே நம்பி பயணித்திருக்கிறார்.

‘ஆண்டவன் கட்டளை’ படத்துக்குப் பிறகு, மணிகண்டன் இயக்கியிருக்கும் புதிய திரைப்படம் ‘கடைசி விவசாயி’. இந்தப் படத்தில் ‘நல்லாண்டி’ என்ற பெரியவர்தான் பிரதான கதாபாத்திரம். இந்தப் படத்தில் விஜய் சேதுபதியும், யோகி பாபுவும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இணையத்தில் வெளியான இந்தப் படத்தின் டிரெய்லர் பலரது பாராட்டுக்களையும் பெற்றிருக்கிறது. தமிழ்த் திரையுலகத்தினர் பலரும் “இந்தப் படத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்…” எனக் கூறியிருப்பதே இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பினை அதிகரித்துள்ளது.

இந்தப் படம் தொடர்பாக இயக்குநர் மணிகண்டன் பேசும்போது, “விவசாயத்தை ஒரு தொழிலாகப் பார்க்காமல், ஒரு வாழ்வியலாக பார்க்க வேண்டும். அதில் எவ்வளவு பேர் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள்.. அது எப்படி இருக்கிறது என்பதுதான் இந்தப் படத்தின் கதைக் கரு.

ஒரு கிராமத்தில் நல்ல விஷயங்களே நடக்காமல் இருக்கிறது. குல தெய்வம் சாமிகூட கும்பிடப்படாமல் இருக்கிறது. அதை கும்பிட ஊர் தயாராகும். அதைக் கும்பிடும் வழிமுறைக்கு ஊர் மக்கள் அனைவரும் ஒரு மரக்கா நெல் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அந்த ஊரில் யாருமே விவசாயம் செய்யவில்லை என்று அவர்களுக்கே தெரியும்.

20 வருடங்களாக தங்களது குல தெய்வத்தை கும்பிடவில்லை என்பதால் யாருக்குமே இந்த நெல் விஷயம் ஞாபகத்தில் இருக்காது. அப்போது அந்த ஊரில் வயதான பெரியவர் ஒருவர், சின்ன நிலத்தில் தனக்கான விவசாயத்தை மட்டும் பார்த்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

85 வயது மதிக்கத்தக்க பெரியவர்.. அவருக்கு காதும் அவ்வளவாக கேட்காது. அவர் தான் உண்டு.. தன் தோட்டமுண்டு என்று இருப்பார். அந்த ஊரே அவரிடம் போய் நெல் கேட்கும். அதற்கு அவர் என்ன சொல்கிறார்.. செய்கிறார்..? குல தெய்வக் கோயில் கும்பிடுவது எப்படி மாறியுள்ளது..? வழிபாட்டு முறையில் நமக்கு இருக்கும் நம்பிக்கை போன்ற விஷயங்கள் அனைத்தும் திரைக்கதையில் சொல்லப்பட்டிருக்கிறது.

கிராமத்தில் ஒரு துக்கத்தைச் சொன்னால்கூட நையாண்டியாக சொல்வார்கள். ஆகையால் படத்தில் காமெடியை தவிர்க்கவே முடியாது. படம் முழுக்க காமெடி இருந்து கொண்டே இருக்கும்.

நாகரீகம் வளர்வதற்கு முன்னாள் இருந்த மனிதர்களும், நாகரீகத்தில் உச்சத்தில் இருக்கும் மனிதர்களும் வரும்போது எப்படி காமெடி இல்லாமல் இருக்கும்..? அதேபோல், அவர்களின் உரையாடல் நம்மை யோசிக்க வைக்கும்விதமாகவும் இருக்கும். 

இந்தப் படத்தை உசிலம்பட்டியைச் சுற்றியுள்ள சுமார் 16 கிராமங்களில் படமாக்கியிருக்கேன். அங்கிருக்கும் விவசாய முறை ரொம்பவும் பழசு. நம்ம தமிழர்களோட விவசாய முறையை இன்னும் கையில் வைத்திருப்பது கரிசல் காட்டு விவசாயிகள்தான்.  அவர்களை கடைசி விவசாயிகளாகத்தான் நான் பார்க்கிறேன்.

படத்தில் அதிகப்பட்சம் கிராமத்தில் இருப்பவர்களையே நடிக்க வைத்துள்ளேன். நேரடி ஒலிப்பதிவு என்பதால் அவர்களுடைய குரலிலேயே முழுப் படமும் இருக்கும். விஜய் சேதுபதியும், யோகி பாபுவும் சின்ன கேரக்டர் பண்ணியிருக்காங்க. இருவரது கேரக்டருமே ரொம்ப அருமையாக வந்துருக்கு. ஏன் அவர்களை நடிக்க வைத்தேன் என்று படம் பார்த்தால் தெரியும்…” என்று சொல்லி முடித்தார்.

2020-ம் ஆண்டு ஜனவரியில் வெளியாகவிருக்கும் இந்தப் படத்துக்கு தன் இசையால் உயிரூட்டியிருக்கிறார் இளையராஜா. கலை இயக்குநராக தோட்டாதரணி பணிபுரிந்துள்ளார். படத்தின் களம் கிராமம் என்றாலும் அதில் நீதிமன்றம், கோவில் திருவிழா போன்ற பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து படமாக்கியுள்ளனர்.

மேலும், இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான அரங்குகளில்கூட நேரடி ஒலிப்பதிவிலேயே இந்தப் படம் உருவாகியுள்ளது. சினிமா ரசிகர்களுக்கு இந்த ‘கடைசி விவசாயி’ ஒரு விருந்தாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

Our Score