full screen background image

ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தப் போகும் சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’

ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தப் போகும் சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’

2019-ம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் நம்பிக்கைக்குரிய படங்களில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ள சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ திரைப்படம், ரசிகர்கள் கூட்டத்தின் கவனத்தை தொடர்ந்து தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.

இந்தப் படத்தை K.J.R. ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கோட்டபாடி ஜே.ராஜேஷ் தயாரித்திருக்கிறார்.

படத்தில் சிவகார்த்திகேயன், ‘ஆக்சன் கிங்’ அர்ஜீன், அபய் தியோல், கல்யாணி ப்ரியதர்ஷன், இவானா என்னும் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இசை – யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு – ஜார்ஜ் சி.வில்லியம்ஸ், படத் தொகுப்பு – ரூபன், கலை இயக்கம் – வி.செல்வகுமார், சண்டை இயக்குநர் – திலீப் சுப்பராயன்,  எழுத்து – எம்.ஆர்.பொன் பார்தித்திபன், ஆண்டனி பாக்யராஜ், சவரிமுத்து, ஒலி வடிவமைப்பு – தபஸ் நாயக்,  பாடல்கள் – பா.விஜய், நடன இயக்கம் – ராஜு சுந்தரம், சதீஷ்,  ஆடை அலங்காரம் – பல்லவி சிங், உடைகள் வடிவமைப்பு – எஸ்.செல்வகுமார், வி.எஃப்.எக்ஸ் – சிவா டிஜிட்டல் ஆர்ட்ஸ் லார்வென் ஸ்டுடியோ, மைண்ட் சென் நிறுவனங்கள், நிர்வாகத் தயாரிப்பு – டி.எழுமலையான், இயக்கம் – பி.எஸ்.மித்ரன்.

hero-movie-poster-4

இத்திரைப்படம் பற்றி ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் பேசுகையில், “இந்த ‘ஹீரோ’ அதன் முன்னோட்டத்தில் சொல்லப்பட்டிருப்பது  போலவே நாட்டில் நிலவும் மிக முக்கியமான பிரச்சனையை எல்லோருக்கும் சென்று சேரும் விதத்தில் பேசும் படைப்பாக இருக்கும்.

தயாரிப்பாளர் கொட்டாப்பாடி J.ராஜேஷ் இல்லையென்றால் இது எதுவுமே சாத்தியமாகியிருக்காது. அவரால்தான் இப்படம் பெருமளவு ரசிகர்களை சென்றடையும்வகையில் மிகப் பிரமாண்டமான முறையில் வெளியிடப்படுகிறது.

இப்போது முழுப் படமாக பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. ஆனால் மிகச் சிறு கருவாக இருந்த இந்தப் படத்தினை ஒவ்வொரு நடிகர்களும், ஒவ்வொரு தொழில் நுட்பக் கலைஞர்களும் இணைந்து இந்தளவு  மிகப் பெரிய படமாக உருவாக்கியுள்ளார்கள்.

இந்தப் படம் ஒரு ஐடியாவாக உருவானதிலிருந்தே நான் இயக்குநர் மித்ரனுடன் இணைந்து  பயணிக்கிறேன். இது ஒளிப்பதிவாளராகப் படத்திற்குப் பெரும் துணையாக இருந்தது. நண்பர்களுடன் இணைந்து வேலை செய்வது எளிதானது மேலும் அதற்கான பலன்களும் அதிகம். நான், மித்ரன், சிவகார்த்திகேயன் மூவரும்  நண்பர்களாக இருப்பதும் ஒத்த கருத்துகள் கொண்டிருப்பதும் படத்திற்கு மிகப் பெரும் பலமாக இருந்தது.

சிவகார்த்திகேயனின் திரை ஆளுமை ஒப்பிடமுடியாத வசீகரம் கொண்டது. சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் அவர் நடிப்பின் இன்னொரு முகத்தை இப்படத்தில் காண்பார்கள். ஆக்‌ஷன் கிங் அர்ஜீன் மிகத் திறமையான நடிகர், அவரது நடிப்பு படத்தை அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. அபய் தியோல், கல்யாணி ப்ரியதர்ஷன் இருவரும் தங்கள் நடிப்பால் படத்திற்கு புத்துணர்வூட்டியுள்ளார்கள்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்தில் இணைந்திருப்பது மிகப் பெரும் பலம். நாங்கள் அனைவருமே அவரின் தீவிர விசிறிகள். அவரின் இசை படத்தின் உயிர்ப்பை உறுதி செய்திருக்கிறது. இப்படத்தில் பணிபுரிந்திருக்கும் அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்களும் இதனை தங்கள் படமாக கருதி ஆத்மார்த்தமாக உழைத்திருக்கிறார்கள்…” என்றார்.

hero-movie-poster-5

படத் தொகுப்பாளரான ரூபன் ‘ஹீரோ’ படம் பற்றிப் பேசுகையில், “இந்த ‘ஹீரோ’ படத்தின் டிரெயிலருக்கு கிடைத்து வரும் வரவேற்பு எங்களுக்கு மகத்தான மகிழ்ச்சியைத் தருகிறது. விஷுவல் புரொமோக்களை எப்படி ஒரு வடிவமாக்க வேண்டும் என்று குழுவாக நாங்கள் திட்டமிட்டு செயலாற்றியதுதான் டிரெயிலரின் வெற்றிக்குக் காரணம்.

சிவகார்திகேயன் மிகப் பெரிய நடிகராக இருந்தும் அவர் எங்கள் பணியில் எப்போதும் குறுக்கிடவில்லை. குறிப்பாக டிரைலரை கட் பண்ணும்போது எங்களை முழு சுதந்திரத்தைக் கொடுத்தார். டிரைலரையும், பின்னர் முழுப் படத்தையும் பார்த்துவிட்டு தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.

ஒரு திரைப்படம் என்பதையும் தாண்டி, சமூகப் பொறுப்புடன் ஒரு காட்சியை கருத்தாக்கம் செய்யும் இயக்குநர் மித்ரன் வசீகரமான முறையில் அதை வழங்கியிருக்கிறார்.

இந்த ‘ஹீரோ’ படம் பொழுதுபோக்கு அம்சங்கள் நிரம்பிய ஜனரஞ்சகமான படம் என்றாலும், இதிலுள்ள செய்தி படம் பார்ப்பர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி பாராட்டையும், வரவேற்பையும் பெறும் என நான் நம்புகிறேன்.

திரையில் தோன்றும் நடிகர்களின் சிறப்பான நடிப்பு, ஆதிக்கம் செலுத்தும் யுவன் சங்கர் ராஜா சாரின் மனம் மயக்கும் இசை, ஜார்ஜ் சி.வில்லியம்ஸின் அருமையான ஒளிப்பதிவு என்று இந்த ‘ஹீரோ’ படத்தின் ஒவ்வொரு அம்சமும் ரசிகர்களிடம் வெகுவான பாராட்டுதல்களைப் பெறும்.

‘ஹீரோ’ படத்தைப் பொறுத்தவரை படத் தொகுப்புப் பணி சற்று கடினமாகவே இருந்தது. காரணம் இயக்குநர் மித்ரனும், அவரது குழுவினரும், ஒவ்வொரு காட்சியையும் ரசிக்கத்தக்க வகையி்ல் எடுத்திருந்தனர். 

படத்துக்குத் தேவையில்லை என்று தோன்றும் காட்சிகளை நீங்கள் தாராளமாக வெட்டி எடுத்து விடலாம் என்று சவால் விடுவதுபோல் சுவையான காட்சிகளை கொண்டு வந்து என் எடிட்டிங் டேபிளை நிரப்பியிருந்தார்கள்.

செதுக்கி, செதுக்கி ‘ஹீரோ’ படத்தை நாங்கள் உருவாக்கியவிதம் எங்கள் எல்லோருக்கும் மிகுந்த மகிழ்ச்சியையும், திருப்தியையும் கொடுத்திருக்கிறது. இப்போது ரசிகர்கள் எனும் நீதிபதிகளின் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம்…” என்றார் உற்சாகமாக.

‘ஹீரோ’ திரைப்படம் வரும் டிசம்பர் 20-ம் தேதியன்று உலகமெங்கும் வெளியாகிறது..!

Our Score