கடாரம் கொண்டான் – சினிமா விமர்சனம்

கடாரம் கொண்டான் – சினிமா விமர்சனம்

இத்திரைப்படத்தை ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் மற்றும் ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

படத்தில் ‘சீயான்’ விக்ரம் நாயக கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் அபிஹாசன், அக்சரா ஹாசன், லேனா, விகாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ஸ்ரீநிவாஸ் ஆர்.குதா, படத் தொகுப்பாளர் கே.எல்.ப்ரவீன், இசை – ஜிப்ரான், திரைக்கதை, இயக்கம் – ராஜேஷ் எம்.செல்வா.

இந்தப் படத்தின் கதைக் களம் மலேசியா என்பதால் ‘கடாரம் கொண்டான்’ என்று நாயக பிம்பத்தின் அடிப்படையில் தலைப்பை வைத்திருக்கிறார்கள்.

ஒரு இரவில் பல மாடிக் கட்டிடத்தில் எதையோ எடுக்கப் போகும் நாயகன் விக்ரம், அங்கே அவரைத் தேடி வருபவர்களால் சுடப்படுகிறார். அவர்களிடமிருந்து தப்பித்து ஓடுபவர், வழியில் ஒரு விபத்தில் சிக்கி மயக்கமாகிறார்.

விக்ரமை மருத்துவமனைக்குத் தூக்கி வருகிறார்கள். அவர் கோமாவில் ஆழ்ந்திருக்கிறார். போலீஸும் வருகிறது. விக்ரமை யார், எவர் என்று விசாரிக்கிறார்கள். அவரிடத்தில் எந்த ஒரு அடையாள அட்டையும் இல்லாததால் அவரை அடையாளம் காண முடியாமல் தவிக்கிறது போலீஸ்.

இந்த நிலையில் அதே மருத்துவமனையில் அதே வார்டுக்கு புதிய ஜூனியர் டாக்டராக வேலைக்கு வருகிறார் அபி. இவருடைய மனைவிதான் ஆதிரா என்னும் அக்சரா ஹாசன். அக்சரா இப்போது கர்ப்பிணியாக இருக்கிறார். வீட்டில் உதவிக்கு ஆட்களே இல்லை. காதல் திருமணம் என்பதால் குடும்பத்தினரோடு சரியாக தொடர்பு இல்லாமல் இங்கே வந்து மாட்டிக் கொண்டுள்ளார்கள்.

நைட் டூட்டிக்கு மருத்துவமனைக்கு வரும் அபி, அங்கு நோயாளியாக மயக்கத்தில் இருக்கும் விக்ரமை பார்க்கிறார். டூட்டி முடிந்து வீட்டுக்கு வந்தவரை ஒரு கும்பல் தேடி வந்து அடித்து உதைக்கிறது. மயங்கி சரிகிறார் அபி. கூடவே அக்ஷராவைக் கடத்திச் செல்கிறது அந்தக் கும்பல். மயக்கம் தெளிந்த அபியிடம் மருத்துவமனையில் இருக்கும் விக்ரமை கடத்தி தங்கள் கையில் ஒப்படைத்தால் அவருடைய மனைவியான அக்சராவை தாங்கள் ஒப்படைப்பதாக போனில் சொல்கிறார்கள்.

தனது மனைவி மீது தீராக் காதல் கொண்டிருக்கும் அபி முடிவெடுக்க முடியாமல் திணறி கடைசியில் போலீஸுக்குப் போகாமல் விக்ரமை தானே தன்னந்தனியே மருத்துவமனையைவிட்டு வெளியில் கடத்தி வருகிறார். இதையறியும் போலீஸ் அபியையும், விக்ரமையும் துரத்துகிறது.

ஆனால் மனைவியை மீட்கும் இடத்தில் விக்ரமை கொல்லும் ஆட்கள் வர.. பயந்து போன விக்ரம் அபியைக் காப்பாற்றும் நோக்கத்தில் தன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்.

இப்போது விக்ரமை கடத்தியவர் மருத்துவர் அபிதான் என்று மலேசிய போலீஸ் அறிக்கை வெளியிட, அனைத்து தொலைக்காட்சிகளிலும் அபி மற்றும் விக்ரமின் புகைப்படங்கள் ஒளிபரப்பாகின்றன.

மலேசிய போலீஸில் அதிகாரியாக இருக்கும் லேனா தலைமையிலான ஒரு டீம் விக்ரமை பாலோ செய்து துரத்துகிறது. அதே நேரம் அதே போலீஸில் இருக்கும் இன்னொரு டீம் இதற்குத் தடைக்கல்லாக வருகிறது. அபியோ மனைவியை மீட்கப் போராடுகிறார். விக்ரமோ எப்படியாவது அபிக்கு உதவலாமே என்ற எண்ணத்தில் ஓடிக் கொண்டிருக்கிறார்..

கடைசியில் யாருடைய ஓட்டம் நின்றது..? அபியும், அவரது மனைவியும் இணைந்தார்களா..? விக்ரமின் கதி என்ன ஆனது..? என்பதுதான் இத்திரைப்படத்தின் கதை, திரைக்கதை.

2010-ம் ஆண்டில் ‘A bout portant’ என்ற பெயரில் வெளியான பிரெஞ்சு திரைப்படத்தின் தமிழ் ரீமேக்குதான் இந்த ‘கடாரம் கொண்டான்’ திரைப்படம். முறைப்படி அனுமதி வாங்கி படத்தை உருவாக்கியிருப்பதாக படத்தின் டைட்டிலேயே சொல்லியிருக்கிறார்கள்.

இதே பிரெஞ்சு படம் 2014-ம் ஆண்டு கொரிய மொழியில் ‘தி டார்கெட்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. பிறகு ஹாலிவுட்டிலும் ‘Point Blank’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இப்போது மூன்றாவது ரீமேக்காக தமிழில் ‘கடாரம் கொண்டான்’ ஆக வந்திருக்கிறது.

இது போன்ற போலீஸ்-திருடன் விளையாட்டு படங்களில் இருக்க வேண்டியதே பரபரப்பான கதை, திரைக்கதையும், இதுவரையிலும் பார்த்திருக்காத ஆக்சன் காட்சிகளும்தான். இந்தப் படத்தில் திரைக்கதை வலுவாக இருந்தாலும் கதையை அழுத்தமாகச் சொல்லத் தவறியிருக்கிறார்கள். அதோடு ஆக்சன் காட்சிகளும் சில இடங்களில் நமத்துப் போய் இருப்பதால் குறிப்பாக “படம் சிறப்பு” என்று சொல்ல முடியவில்லை.

அதோடு நட்சத்திரங்களின் கேரக்டர் ஸ்கெட்ச்சில் அநியாயத்துக்கு கோட்டை விட்டிருக்கிறார்கள். மலேசிய போலீஸ் ரிக்கார்டில் “கே.கே.” என்ற பெயரில் இடம் பிடித்திருக்கிறார் விக்ரம். ஆனால் அவர் யார்..? அவருடைய பின்னணி என்ன..? இப்போது என்ன வேலை செய்கிறார்..? அண்டர்கிரவுண்ட் கிரிமினல் என்றால் ஏன் அவர் இதுவரையிலும் ஒரு முறைகூட மலேசிய போலீஸிடம் பிடிபடவில்லை..? இப்போது என்ன விஷயமாக அவரை வேறு குழுக்களும் கொலை செய்ய முயல்கின்றன..? இவற்றுக்கெல்லாம் விடையளித்திருக்க வேண்டிய திரைக்கதை பாதியை முழுங்கியும், மீதியை சொல்லாமல் விட்டதாலும் அவர் மீதான கவன ஈர்ப்பே இல்லாமல் போய்விட்டது.

மலேசிய வரலாற்றிலேயே அந்த நாட்டு போலீஸை இவ்வளவு கேவலமாகக் காட்டிய இந்திய திரைப்படம் இந்தக் ‘கடாரம் கொண்டானா’கத்தான் இருக்க முடியும்.

ஊரில் இருக்கும் அனைத்து ரவுடிகளிடமும் பேசி வைத்து அன்றைய நாளில் நகரின் அனைத்து இடங்களிலும் ரகளைகளை செய்யச் சொல்லி, போலீஸை வெளியில் வரவழைத்து.. போலீஸ் ஸ்டேஷனில் ரவுடிகளின் கூட்டத்தைக் கூட்டி.. இந்தக் கூட்ட இடைவெளியில் தான் மட்டும் உள்ளே போய் பென் டிரைவை தேடிக் கண்டுபிடிக்க விக்ரம் போடும் திரைக்கதை ஸ்கெட்ச்.. உண்மையில் சப்பையாக இருக்கிறது.

சிசிடிவி கேமிராவில்கூடவா விக்ரமை யாராலும் அந்தக் கட்டிடத்தில் கண்டுபிடிக்க முடியவில்லை. விகாஸின் அறைக்குள் சர்வசாதாரணாகப் போய் பென் டிரைவை கண்டுபிடிக்க முயலும் விக்ரமின் சொதப்பலான திரைக்கதையால்தான் படம் கவிழ்ந்தது என்றே சொல்லலாம்.

போதாக்குறைக்கு இந்த ஒரு காட்சிக்காகவே மலேசிய அரசு தங்களது நாட்டு போலீஸை அவமானப்படுத்தும்வகையில் படத்தைத் தயாரித்திருப்பதாகச் சொல்லி தங்களது நாட்டில் ‘கடாரம் கொண்டான்’ படத்தை வெளியிட அனுமதி மறுத்திருக்கிறது. இதெல்லாம் தேவைதானா இயக்குநரே..?

முதலில் தன் மனைவி மீது எவ்வளவு வேண்டுமானாலும் காதலும், பிரியமும் இருந்தாலும் ஒரு நன்கு படித்தவர்.. அதுவும் மருத்துவருக்குப் படித்தவர்.. போலீஸிடம் சொல்லாமல் ரவுடிகளின் பேச்சுக்குக் கட்டுப்படுவாரா..? போலீஸிடம் சொன்னால் எளிதாக பிடித்துவிடுவார்களே என்பது அவருக்குத் தெரிந்திருக்காதா..? இங்கேயே படம் பார்வையாளர்களிடமிருந்து வெகுதூரம் தள்ளிப் போய்விட்டது.

பல முறை போலீஸிடம் சரண்டராகும் சூழல் இருந்தும் விக்ரமால் அபி வேறு பக்கம் இழுக்கப்பட்டு மீண்டும், மீண்டும் துரத்தப்படுகிறார். இப்போது விக்ரம் ஏன் அதைச் செய்கிறார்..? அவருக்கு மனிதாபிமானமே இல்லையா..? அபியின் மனைவிக்காகவாவது அபியை அவர் விட்டிருக்கலாமே என்றெல்லாம் கேட்கத் தோன்றுகிறது.

ஆனால் இடைவேளைக்கு பின்பு வரும் சில காட்சிகளின் வேகம் காரணமாய் படத்தைக் கடைசிவரையிலும் பார்க்க வைத்திருக்கிறார் இயக்குநர். குறிப்பாக லேனாவின் மரணம் தொடர்பான காட்சிகளும், அக்சராவை போலீஸ் ஸ்டேஷனில் வைத்திருக்கும் காட்சிகளும்தான்.

விக்ரம் தனக்கு டான் கதாபாத்திரம் கச்சிதமாகப் பொருந்தும் அளவுக்கு தன் உடலை வைத்திருக்கிறார். டாட்டூக்கள் வரைந்த புஜங்களும், அகன்று விரிந்த மார்பும், வாயில் சுருட்டும், ஸ்டைல் காட்டும் வித்தையுமாய் பல காட்சிகளில் அவரை தனித்துப் பார்க்க அழகாகத்தான் இருக்கிறார். ஆனால் இதுவே போதுமா..?

நடிப்புக்கென்று போதுமான ஸ்கோப் அவரது கேரக்டருக்கே இல்லை. ஓட்டம்.. ஓட்டம்.. ஓட்டம்தான்.. ஓடிக் கொண்டேயிருக்கிறார். சண்டை காட்சிகளில் தொழில் நுட்பத்தின் உதவியோடு கச்சிதமாக நடித்திருக்கிறார்.

நாசரின் மகனான அபிஹாசனுக்கு இது பெயர் சொல்லும் படம். மனைவி மீதான காதலில் உருகும் அவரை அந்தக் காதலே தவறுகள் மேல் தவறுகளைச் செய்ய வைக்கிறது. இதனை அழுத்தம் திருத்தமாய் சொல்லும் அளவுக்கு வசனங்களும், காட்சிகளும் இவருக்கு இல்லை என்பதுதான் ஒரே குறை.

அக்சராஹாசன் ஆதிராவாக நடித்திருக்கிறார். கர்ப்பிணி கேரக்டரில் அந்தக் கேரக்டருக்கு ஏற்றவாறு கன்னம்கூட புஸ்ஸாக இருக்கும் அளவுக்கு மேக்கப் போட்டு நடித்திருக்கிறார். கொஞ்சமே சிரிப்பு.. நிறைய காட்சிகளில் அழுக வைத்து காண்பித்திருக்கிறார் இயக்குநர்.

மலேசிய போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் லேனா தனது முகத்தில் எப்போதும் கடுமையைக் காட்டியபடியே இருக்கிறார்.  இவருக்கும் சக போலீஸ் அதிகாரியான விகாஸுக்கும் இடையில் இருக்கும் பிரச்சினைதான் என்ன என்பதை அறிவதற்குள் பொட்டென்று லேனாவை போட்டுத் தள்ளி விடுகிறார்கள். ஆனால், இவரது மரணம் பார்வையாளர்களை கொஞ்சம் டிஸ்டர்ப் செய்கிறது என்பது உண்மை.

இந்த இடத்தில் திரைக்கதையை டிவிஸ்ட்டாக்கும்விதமாய் கொலைக்கு அபியை காரணமாக்கித் தப்பிக்க நினைக்கும் போலீஸ் மூளை, நம்மூர் போலீஸ் போல மலேசிய போலீஸையும் நினைக்க வைக்கிறது.

ஒளிப்பதிவாளர் ஸ்ரீனிவாஸ் குதாவின் கேமரா படத்தை ஹாலிவுட் தரத்திற்கு எடுத்து சென்றுள்ளது. சண்டை காட்சிகளையும், கார் சேசிங் ஆக்சன் காட்சிகளையும் மிரட்டும் தொனியில் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். தாரமே தாரமே பாடல் காட்சியில் அபி மற்றும் அக்சராவை கொள்ளை அழகில் பதிவாக்கியிருக்கிறார்கள்.

அதேபோல் படத்தின் விறுவிறுப்பு குறையாமலும், அதே சமயம் எந்தக் குழப்பமும் வராத வண்ணமும் கத்திரி வைத்திருக்கிறார் படத் தொகுப்பாளர் கே.எல்.பிரவீன்.

ஜிப்ரானின் இசை உண்மையில் மிகப் பெரிய பலமாக இந்தப் படத்திற்குக் கிடைத்திருக்கிறது, பாடல்களைவிடவும் பின்னணி இசையில் அடித்து ஆடியிருக்கிறார். அதிலும் விக்ரம் தனித்து சாகசச் செயல்களில் இறங்கும் நேரத்தில் ஒலிக்கும் அந்த தீம் மியூஸிக் அவரது கேரக்டரையே தூக்கி வைக்கிறது.

இரண்டே பாடல்கள்தான். ‘தாரமே தாரமே’ அன்பையும், பாசத்தையும் காட்சிகளிலும் காட்டுகிறது. சோகத்தின் பங்காக ஒலிக்கும் ‘வேறென்ன வேணும் நீ மட்டும் போதும்’ பாடல் அந்த டென்ஷன் காட்சிகளுக்கு நடுவில் இதமாய் நம் மனதை வருடுகிறது.

முன்பே சொன்னதுபோல நம்பகத்தன்மை கொண்ட திரைக்கதை அமைப்பிலும், இன்னும் கூடுதல் திகிலுடன்கூடிய திரைக்கதையை அமைத்தும், தெளிவான கேரக்டர் ஸ்கெட்ச்சில் உருவாக்கப்பட்ட கேரக்டர்களாலும் இந்தப் படத்தை உருவாக்கியிருந்தால் படம் பிளாக் பஸ்டராகியிருக்கும்.

ஒரு முறை பார்க்கலாம் என்பதைத் தவிர வேறு எதுவும் சொல்வதற்கில்லை..!

Our Score