full screen background image

கபிலவஸ்து – சினிமா விமர்சனம்

கபிலவஸ்து – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை புத்தா பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் ‘நேசம்’ முரளி தயாரித்துள்ளார்.

படத்தில் இயக்குநர் ‘நேசம்’ முரளியே நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக நந்தினி நடித்துள்ளார். மேலும், மன்சூரலிகான், கோவை செந்தில், வான்மதி, பாண்டு, சத்யா, சரவணன், பேபி ஐஸ்வர்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – ‘நேசம்’ முரளி, இசை – ஸ்ரீகாந்த் தேவா, ஒளிப்பதிவு – விஜி, படத் தொகுப்பு – எஸ்.பி.அஹமது, சண்டை இயக்கம் – நரேன், மக்கள் தொடர்பு – நிகில், வெளியீடு – பவுனு முருகன் பிக்சர்ஸ்.

நாட்டின் எந்தவொரு அமைப்பும் கண்டு கொள்ளாத கடை நிலை மனிதர்களான சாலையோரத்தில் வசிக்கும் மனிதர்கள் பற்றிய கதைதான் இத்திரைப்படம்.

முருகன் என்னும் நேசம் முரளி பொதுக் கழிப்பறையில் பிறந்தவர். இவரைப் பிரசவித்து அதே இடத்தில்விட்டுவிட்டு அவரது அம்மா ஓடிவிட்டார். இதனால் அங்கேயிருந்தவர்கள் அவரைத் தூக்கி வளர்த்திருக்கிறார்கள். முருகன் இப்போதும் அதே பொதுக் கழிப்பிடத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இந்தக் கழிப்பிடத்தின் அருகிலேயே பிளாட்பாரத்தில் வசித்து வருகிறது ஒரு கூட்டம். ஒரு பாட்டி சின்னதாக கையேந்தி பவன் போன்று கடை நடத்தி பொழைப்பை நடத்தி வருகிறது. இந்தப் பாட்டியின் பேத்தியான வேளங்காண்ணி பள்ளி செல்லும் சிறுமி. இவளது பெற்றோர்களும், உடன் பிறந்தவர்களும் வேளாங்கண்ணியில் நடந்த சுனாமி தாக்குதலில் இறந்துவிட்டதால் அனாதையான நிலையில் பாட்டியும், பேத்தியும் சென்னைக்கு வந்து இந்த பிளாட்பாரத்தில் ஐக்கியமாகியிருக்கிறார்கள்.

இதே இடத்தில் கோவை செந்திலும் தனது மகள் டயனாவுடன் வசித்து வருகிறார். கோவை செந்தில் குப்பை பொறுக்குகிறார். டயானா அந்தக் குப்பை மண்டியில் வேலை செய்து வருகிறார்.

முருகனும், டயானாவும் காதலிக்கிறார்கள். இந்தக் காதலுக்கு கோவை செந்திலும் பச்சைக் கொடி காட்டியிருக்கிறார். வேளாங்கண்ணி தண்ணீர் கேன் போடும் வேலையையும் செய்து வருகிறார்.

எப்படியாவது வாடகை வீட்டுக்குக் குடி போக வேண்டும் என்பது வேளாங்கண்ணியின் ஆசை. இதற்காக படிப்பு நேரம் போக மீதமிருக்கும் நேரத்தில் உழைத்துக் கொண்டிருக்கிறார் வேளாங்கண்ணி.

அந்தப் பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டரான மன்சூரலிகான், ஸ்டேஷன் கணக்கிற்கு கேஸ் கிடைக்கவில்லையென்றால் வேளாங்கண்ணியின் பாட்டியை அழைத்து அவர் மீது ஏதாவது கேஸ் போட்டு ஜெயிலுக்கு அனுப்பி அரசுக்குக் கணக்குக் காட்டுவது வாடிக்கை.

வேளாங்கண்ணியிடம் காசு வாங்கிவிட்டு ஏமாற்றிய வீட்டு புரோக்கரை முருகன் அடித்து உதைத்துவிட இது போலீஸ் கேஸாகி முருகன் ஜெயிலுக்குப் போகிறான். அவன் திரும்பிவரும் வரையிலும் டயானாவே கழிப்பறையைக் கவனித்துக் கொள்கிறாள்.

ஜெயிலில் இருந்து திரும்பி வரும் முருகனுக்கும், டயானாவுக்கும் திருமணம் நடக்கிறது. ஆனால், மறுபடியும் ஒரு தகராறில் சப்-இன்ஸ்பெக்டரை முருகன் தாக்கிவிட.. இதற்காக முருகன் மீது மேலும் பல வழக்குகளை பதிவு செய்து ஜெயிலுக்கு அனுப்புகிறார் மன்சூரலிகான்.

இப்போது ஒரு வருடம் கழித்து ஜெயிலில் இருந்து திரும்பி வரும் முருகனுக்கு தன்னுடைய சொந்தங்கள் ஒருவர்கூட அங்கே இல்லை என்பதை பார்த்து அதிர்ச்சியாகிறான்.

அவர்களைத் தேடத் துவங்குகிறான். கண்டுபிடித்தானா இல்லையா.. டயானா கதி என்ன ஆனது.. என்பதுதான் இந்த கபிலவஸ்து படத்தின் திரைக்கதை.

மகான் புத்தர் அவதரித்த லும்பினி என்ற நகரம் இருக்கும் பகுதியின் பெயர்தான் கபிலவஸ்து. அடையாளமற்று இருப்பிடம் இல்லாதவர்களுக்கும், சமயம், ஜாதியற்றவர்களுக்கும் புத்தரே அடைக்கலம் என்பதைக் குறியீடாகச் சொல்லும் பொருட்டு கபிலவஸ்து என்று பெயர் வைத்திருக்கிறார்கள் போலிருக்கிறது.

நேசம் முரளியும் தோற்றமும், உருவமும் இந்தக் கேரக்டருக்குப் பொருத்தமானதாகத்தான் இருக்கிறது. இருந்தும் சிற்சில காட்சிகளில் யதார்த்தமான நடிப்பைக் காட்டியிருக்கிறார் முரளி. இதற்காக கழிப்பறையிலேயே படுத்துக் கிடப்பது போலவும், கைகளாலேயே சுத்தம் செய்வது போலவும் காட்சியமைத்திருப்பது உவ்வே ரகம்.

நாயகி டயானாகவாக நடித்திருக்கும் நந்தினி பொருத்தமான முகம். கேமிராவுக்கு ஏற்ற முகத்தோடு காதல் உணர்வுகளை முகத்தில் காட்டும்போது ரசிக்க வைத்திருக்கிறார். வசன உச்சரிப்பும் கச்சிதம்.

சிறுமியாக நடித்திருக்கும் வேளாங்கண்ணிதான் படத்தில் டாக் ஆஃப் தி போர்ஷன். எப்பாடுபட்டாவது வாடகை வீட்டில் குடியேறிவிட வேண்டும் என்று இந்தச் சிறுமி துடிக்கும் துடிப்பும், இது தொடர்பான காட்சிகளும் நியாயமானவை.

பாட்டியாக நடித்தவர், கோவை செந்தில் மற்றும் மன்சூரலிகான் என்று படத்தில் இருக்கும் மற்றவர்களும் வஞ்சகமில்லாமல் நடித்திருக்கிறார்கள். ஆனால் திரைக்கதையில்தான் உண்மைத்தன்மையும், அழுத்தமும் இல்லாமல் போய்விட்டது.

ஒளிப்பதிவும், இசையும் சின்ன பட்ஜெட் படங்களுக்கேற்றதை செய்திருக்கின்றன. ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் நான்கு பாடல்களுமே கேட்கும் ரகம். ‘மதுர மீனாட்சி’ பாடலும், ‘நான் நிம்மதியா’ பாடலும் அக்மார்க் கொண்டாட்டத்தைத் தருகிறது. ‘கருவறையில்’, ‘கழிப்பிடமே’ பாடல்கள் சோகத்தைக் கவ்வுகின்றன. நான்கு பாடல்களின் வரிகளும் எளிமையாக தமிழில் புரியும்வரையில் இருப்பதும் பாராட்டுக்குரியது.

சிறுமி வேளாங்கண்ணி படிக்கிற நேரம் போக மீதி நேரத்தில் தண்ணீர் கேன் போடவும் தயாராக உழைக்கும் காட்சிதான் கொஞ்சம் ஓவர். நினைப்பது சரிதான். ஆனால் யதார்த்தமாக இல்லையே..

அங்கேயிருக்கும் அனைவருமே ஒன்று சேர்ந்து பணத்தைப் புரட்டிக் கொடுத்தாலே வாடகை வீட்டுக்குப் போயிருக்கலாம். மற்றவர்களை நம்பாமல் முருகனிடம் சொல்லியே வீடு பார்க்க போயிருக்கலாம். இதைவிட்டுவிட்டு வேறு ஆளிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்து அதையும் ஒரு திரைக்கதையாக்கி.. கொஞ்சம் நம்பகத்தன்மையிலிருந்து விலகிவிட்டது திரைக்கதை.

திரைக்கதையில் கழிப்பறையையே சுற்றிச் சுற்றி காட்சிகள் நடப்பதுதான் ஜீரணிக்க முடியாததாக இருக்கிறது. மீரா கிருஷ்ணன் 25 வருடம் கழித்து வந்து கழிப்பறையில் அமர்ந்து அழுது கொண்டிருப்பது காட்சிக்கு வேண்டுமானால் அழுத்தம் தந்திருக்கலாம். யதார்த்தத்தை மீறியது.

 பிளாட்பாரத்தில் காரை ஏத்தி அப்பாவிகளை உயிர்க் கொலை செய்த சிலரின் கதையையும் படத்தில் சேர்த்து வைத்திருக்கிறார். இது நியாயமானது. அதில் பணமும்,செல்வாக்கும்தான் ஜெயிக்கும் என்பது பல கதைகளில் நாம் கண்கூடாகப் பார்த்ததுதான். இந்தக் கதைதான் இந்தப் படத்திலும் நடந்திருப்பதால் படத்தின் முடிவு நம்மை கலங்க வைக்கிறது.

படத்தில் சில குறியீடுகளையும் பொருத்தமான இடத்தில் வைத்திருக்கிறார் இயக்குநர். “‘நம்ம கஷ்டமெல்லாம் எப்போதான் தீரும்?” என்ற கேள்விக்கு “இன்னொரு அம்பேத்கர் பிறந்து வந்தால்தான் தீரும்..” என்று கோவை செந்தில் வசனம் பேசுவதும், “இந்த நாட்டில் மாட்டை பாதுகாக்கவெல்லாம் அமைப்புகள் இருக்கு.. மனுசனை மதிக்கத்தான் நாதியில்லை…” என்று பிளாட்பாரவாசிகள் பற்றி அவர்களே சொல்வதெல்லாம் உண்மைதான்.

சாலையோர மக்களின் கதையைச் சொல்ல வந்த கதைதான் என்றாலும் அதை இன்னும் கொஞ்சம் நம்பகத்தன்மையோடு, அழுத்தமாகச் சொல்லியிருந்தால் மேலும் பல பாராட்டுக்களை இந்தப் படம் பெற்றிருக்கும்.

Our Score