full screen background image

“எந்திரன்’ படம் எப்படி ‘சன் பிக்சர்ஸ்’ கைக்கு வந்தது..?” – தயாரிப்பாளர் விஜயகுமாரின் விளக்கம்..!

“எந்திரன்’ படம் எப்படி ‘சன் பிக்சர்ஸ்’ கைக்கு வந்தது..?” – தயாரிப்பாளர் விஜயகுமாரின் விளக்கம்..!

ரஜினி, ஐஸ்வர்யாராய் நடிப்பில் மெகா இயக்குநர் ஷங்கர் இயக்கிய ‘எந்திரன்’ திரைப்படம் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் ஒரு சாதனை திரைப்படமாக அமைந்தது.

தமிழில் மட்டுமே தயாரிக்கப்பட்டு மிக அதிக வசூலைப் பெற்ற திரைப்படங்களில் இன்றைக்கும் முதலிடத்தில் இருப்பது இந்த ‘எந்திரன்’ திரைப்படம்தான்.  

உலக அளவில் இத்திரைப்படத்தின் மொத்த வசூல் 256 கோடி ரூபாய் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தாலும் படத்தை துவக்கியது சன் பிக்சர்ஸ் அல்ல. ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம்தான் இந்தப் படத்தைத் துவக்கியது. அதன் பின்புதான் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இந்தப் படம் கை மாறியது.

கை மாறிய அந்த நிகழ்வு ஏன், எதனால் நடந்தது என்பது பற்றி அப்போது ‘எந்திரன்’ படத்தில் நிர்வாகத் தயாரிப்பாளராகப் பணியாற்றிய தயாரிப்பாளர் கே.விஜயகுமார் ‘சாய் வித் சித்ரா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விரிவாகச் சொல்லியிருக்கிறார்.

இது பற்றி தயாரிப்பாளர் கே.விஜயகுமார் பேசும்போது, “முதலில் ஐங்கரன் மட்டுமே இந்தப் படத்தைத் தயாரிப்பதாக இருந்தது. அப்போது முதல்கட்ட பேச்சுவார்த்தையில் ஷங்கர் ‘90 கோடி பட்ஜெட்’ என்றார். இதை தயாரிப்பாளர் கருணாமூர்த்தியும் ஒத்துக் கொண்டார்.

படம் துவங்கி ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கும்போது பட்ஜெட் நிச்சயம் போட்டிருப்பதைவிடவும் தாண்டும் போல எங்களுக்குத் தோன்றியது. மறுபடியும் ஷங்கரிடம் இது பற்றிக் கேட்டபோது, ‘எனக்கே தெரியலை..’ என்று குழப்பமாக பதில் சொன்னார்.

திரும்பவும் டிஸ்கஷனில் அமர்ந்து பட்ஜெட் பற்றிப் பேசினோம். அப்போது ஈரோஸ் இண்டர்நேஷனல் நிறுவனமும், ஐங்கரன் நிறுவனத்துடன் இந்தப் படத்தின் தயாரிப்பில் இணைந்தது. இப்போது பட்ஜெட்டை 100 கோடி என்று வைத்து பேசினோம். பின்பு கருணாமூர்த்தி கடைசியாக ‘115 கோடிதான் இறுதியான பட்ஜெட்’ என்று சொன்னார். ஷங்கரால் இதையும் உறுதிப்படு்த்த முடியவில்லை.

இப்போது ஐங்கரன் தரப்பில் 3 ஆப்ஷன்கள் ஷங்கர் முன் வைக்கப்பட்டன.

“முதல் ஆப்ஷன் : முதல் பிரதி அடிப்படையில் ஷங்கர் 125 கோடி ரூபாயை வாங்கிக் கொண்டு படத்தை முடித்துக் கொடுக்க வேண்டும்.

இரண்டாவது ஆப்ஷன் : படம் பட்ஜெட்டை தாண்டினால் ஷங்கர், ரஜினி இருவருக்கும் சம்பளம் கிடையாது.

மூன்றாவது ஆப்ஷன் : வேறு யாரிடமாவது படத்தைக் கை மாற்றிவிடலாம்..”

என்றார்கள்.

இது பற்றி ரஜினி ஸாரே என்னை அழைத்து விசாரித்தார். நானும் நடந்ததையெல்லாம் சொன்னேன். அவரும் புரிந்து கொண்டார். அவரும் ஷங்கரிடம் பேசினார். ஆனாலும் ஷங்கரால் ஒரு தெளிவான மனநிலைக்கோ.. பட்ஜெட்டுக்கு ஒப்புதலோ தர முடியவில்லை.

இடையில் வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்துடன் ஷங்கரே பேசியிருக்கிறார். அவங்க எடுத்த எடுப்பிலேயே “செலவுக்கேற்ற வரவு வரும் வழியைச் சொல்லுங்கள்…” என்றார்கள். இதைத்தான் நாங்களும் கேட்டுக் கொண்டிருந்தோம். இதனால் இதுவும் நின்று போனது.

இப்படி பட்ஜெட்டை பிக்ஸ் செய்யாமல் அடுத்தக் கட்டத்துக்கு படத்தை கொண்டு போக முடியாது என்ற சூழல் இருந்த நிலையில்தான் ரஜினி ஸார் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் பேசி பிராஜெக்ட்டை அவர்களிடத்தில் கொடுக்க வைத்தார்.

அதுவரையிலும் கிட்டத்தட்ட 40 நாட்கள் ஷூட்டிங் நடத்தப்பட்டு.. பல்வேறு கலை இயக்கப் பணிகள் நடைபெற்று.. 39 கோடி ரூபாய்வரையிலும் செலவிடப்பட்டிருந்தது. அந்தத் தொகையை அப்படியே முழுமையாகக் கொடுத்துவிட்டு சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை வாங்கிக் கொண்டது. இந்தப் படத்தைத் துவக்கியதில் ஐங்கரன் நிறுவனத்திற்கு லாபமும் இல்லை.. நஷ்டமும் இல்லை.

ஆனால், இந்தப் படம் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றபோது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. இந்த வெற்றியை நாம்தான் கொண்டாடியிருக்க வேண்டும். கை நழுவிப் போய்விட்டதே என்கிற வருத்தம் எனக்கிருந்தது.

அதைவிட மிகப் பெரிய வருத்தம்.. இந்த ‘எந்திரன்’ படத்தின் டைட்டில் கார்டில் ‘நன்றி – ஐங்கரன்’ என்றோ, ‘நன்றி – விஜயகுமார்’ என்றோ ஒரு கார்டுகூட போடவில்லை. நிச்சயமாக போட்டிருக்க வேண்டும்.

இயக்குநர் தரப்பில் இருந்து சொல்லியிருந்தால் அது நடந்திருக்கும். நடக்காதது குறித்து எனக்கு இப்போதுவரைக்கும் ஷங்கர் மீது மிகுந்த வருத்தம் உண்டு..” என்றார் தயாரிப்பாளர் கே.விஜயகுமார்.

Our Score