full screen background image

காத்துவாக்குல ஒரு காதல் – சினிமா விமர்சனம்

காத்துவாக்குல ஒரு காதல் – சினிமா விமர்சனம்

காதலையும், வன்முறையையும் ஒன்றாக இணைத்து ஒரு கலவரப் படமாக இதைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் மாஸ் ரவி.

படத்தி நாயகனான மாஸ் ரவியும், நாயகி லட்சுமி பிரியாவும் உயிருக்கு உயிராக காதலிக்கிறார்கள். எவராலும் நம்மை பிரிக்க முடியாது என்ற தெய்வீக காதலில் நிலைத்திருக்கிறார்கள் இருவரும்..!

இந்த நேரத்தில் திடீரென்று மாஸ் ரவி காணாமல் போகிறார். லஷ்மி பிரியா துடியாய் துடிக்கிறார். காதலனை தேடி அலைந்து கொண்டிருக்கிறார்.

இந்த நேரத்தில் சென்னையில் ரவுடி கோஷ்டிகளுக்கு இடையில் பெரும் மோதல் ஏற்படுகிறது. பல ரவுடிகள் கொலை செய்யப்படுகிறார்கள்.

வடசென்னைக்கு மிகப்பெரிய தாதாவான சூப்பர் சுப்பராயன், அவரது எதிரிகளை சாய் தீனாவின் மூலமாக கொலை செய்கிறார். அதே சாய் தீனா கொஞ்சம் வளர்ந்து தன்னுடைய குரு சூப்பர் சுப்பராயனையே போட்டு தள்ளுகிறார்.

இப்போது ஏரியாவில் சாய் தீனாவை யார் எதிர்ப்பது என்கின்ற கேள்வி எழும்போது நாயகன் மாஸ் ரவி வேறு ஒரு கெட்டப்பில் வருகிறார். வட சென்னையில் தனியாக ஜிம் வைத்து நடத்தும் மாஸ் ரவி, அங்கே உள்ளோருக்கு நல்லவராக தெரிகிறார் தனக்கென்று ஒரு விசிறி கூட்டத்தை கூட்டி வைத்துக் கொண்டு அவர்களுடன் சுற்றிக் கொண்டிருக்கும் மாஸ் ரவி, சாய் தீனாவை கடுமையாக எச்சரிக்கிறார். “அமைதியாக அடங்கி இரு” என்று எச்சரிக்கிறார்.

எதிர்பாராமல் தோன்றிய எதிரி மாஸ் ரவியைத் தீர்த்து கட்ட சாய் தீனா முடிவெடுக்கிறார். இன்னொரு பக்கம் லட்சுமி பிரியா அவருக்கு போன் செய்து அவரைப் பற்றி கேட்க “அது நான் இல்லை.. ராங் கால்” என்று சொல்லி நாயகியை புறக்கணிக்கிறார்.

இன்னொரு பக்கம் மாஸ் ரவியையும் ஒரு பெண் விரட்டி விரட்டி காதலிக்கிறார் “கட்டினால் உன்னைத்தான் கட்டுவேன்” என்று ஒற்றை காலில் நிற்கிறார். இந்த மூன்று பிரச்சனைகளுக்கும் முடிவு என்ன என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

படத்தின் நாயகனாக நடித்திருக்கும் மாஸ் ரவி இரண்டு கெட்டப்புகளிலும் மிக, மிக வித்தியாசமாக தோற்றம் அளிக்கிறார். முதல் கெட்டப்பில் உண்மையாகக் காதலிக்கும் அந்த அமைதியான ஹீரோவை நிச்சயமாக அனைவருக்கும் பிடிக்கும். இரண்டாவதாக ரவுடிகளை துவக்கம் செய்யும் ஒரு மாஸ் ஹீரோவாக தன்னுடைய நடிப்பில் பெரும் வித்தியாசத்தை காட்டி தோற்றத்திலும், வித்தியாசத்தை காட்டி ஒரு நல்ல நடிப்பை காண்பித்திருக்கிறார் மாஸ் ரவி.

அவரேதான் இயக்குநர் என்பதால் தன்னால் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு நடிப்பை கொடுத்திருக்கிறார். அதேபோல் மற்றவர்களிடமும் நடிப்பை வரவழைத்து இருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் லட்சுமி பிரியாதான் படத்தில் நம்மை அசத்தி இருக்கும் முதல் நபர். நம்முடைய பக்கத்து வீட்டு பெண் போல எளிமையாக இருக்கிறார். காணாமல் போன தன் காதலனை தேடி அலையும் அந்த காட்சிகளிலும் இறுதியாக இந்த படத்தின் மிகப் பெரிய டிவிஸ்ட்டை அவர் உடைக்கின்ற பொழுதும் அவருடைய நடிப்பு அபாரம். இறுதிக் காட்சிகள் நிஜமாகவே உண்மைதானோ என்று நம்மை சந்தேகிக்க வைத்துவிட்டார். இந்தப் படத்தின் மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட் லக்ஷ்மி பிரியாதான்.

இன்னொரு நாயகியாக நடித்திருக்கும் மஞ்சுவும் நடிப்பில் குறையில்லாமல் செய்திருக்கிறார். வில்லனாக நடித்திருக்கும் சூப்பர் சூப்பராயன் ரவுடியிசம் பற்றி தன் மகனுக்கு கிளாஸ் எடுக்கும்பொழுது நம்மை பெரிதும் கவர்கிறார். அதேபோல் வில்லத்தனத்திலும் மிகப் பெரிய வித்தியாசத்தை காட்டி மிரட்டி இருக்கிறார்.

படத்தின் துவக்கத்தில் அமைதிப்படை அமாவாசையாக தோன்றும் சாய் தீனா அதற்குப் பிறகு போகப் போக கலர், கலர் டிரஸ்களை எல்லாம் அணிந்து கொண்டு திடீரென்று “ஐ லவ் யூ” என்றெல்லாம் பெண்களிடம் சொல்லி நம்மை அசர வைத்திருக்கிறார். இந்தப் படம் சாய் தீனாவுக்கு மிகப் பெரிய முக்கியமான ஒரு திரைப்படம். இந்தப் படத்தில்தான் அவருடைய நடிப்பு பண்பட்ட  நடிப்பைக் காண்பித்திருக்கிறார். பாராட்டுக்கள்.

மாஸ் ரவியின் நண்பர்களாக நடித்திருக்கும் ஆதித்யா பாஸ்கர், தங்கதுரை…  இருவரும் சம்பந்தப்பட்ட காட்சிகளில் சிறிதளவு நம்மை சிரிக்க வைத்திருக்கிறார்கள்.

பவர் ஸ்டார் ஒரு காட்சியிலும் கல்லூரி வினோத், பாஸ்கர், மேனாஷா, மீப்பு மொசக்குட்டி என்று மற்றைய நடிகர்களும் அவ்வப்பொழுது தோன்றி படத்தின் திரைக்கதையை நகர்த்த பெரிதும் உதவி இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர்கள் ராஜதுரை மற்றும் சுபாஷ் மணியனின் ஒளிப்பதிவு மீடியம் பட்ஜெட் படத்துக்கு ஏற்றபடியே அழகாக அமைந்துள்ளது. பாடல் காட்சிகளை ரொம்பவும் மெனக்கெட்டு படமாக்கி இருக்கிறார். அதேபோல் படத்தின் கிளைமாக்ஸ் கட்சியை படமாக்கியவிதமும் நன்று.

இசையமைப்பாளர்கள் ஜி.கே.வி. மற்றும் அருள் தேவின் இசையில் பாடல்கள் ஒரு முறை கேட்கும் ரகம்தான். அதிலும் தேவாவின் குரலில் ஒலிக்கும் ஒரு பாடல் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை மட்டும் சுமார் ரகம்.

காதல் கதையாக துவங்கும் படத்தை இடையிடையே ரௌடிகள் சாம்ராஜ்யம், ரவுடிகளின் சண்டை படுகொலைகள் இப்படியாக கதையை விரித்துக் கொண்டே சென்று திடீரென்று இங்கே இருந்த மாஸ் ரவியை வித்தியாசமாக காட்டி.. அங்கே ஒரு ரவுடியாக அவரையும் காட்டி… ஒரு சஸ்பென்ஸ், திரில்லராக இந்த படத்தை முதல் பாதியில் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

ஆனால் அந்தக் காட்சிகளை தொகுத்து அளித்தவிதம்தான் குழப்பமாகியுள்ளது. லட்சுமி பிரியா, மாஸ் ரவியின் காதல் காட்சிகள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்க சம்பந்தமே இல்லாமல் இடையிடையே கொலைகளும், காதல் காட்சிகளும் வருவது நமக்கு பிடிபடவில்லை.

முதல் பாதியில் நடக்கும் இத்தனை கொலைகளுக்கும் மாஸ் ரவிக்கும் என்ன தொடர்பு மாஸ் ரவி எங்கே போனார் என்கின்ற அந்த கேள்விக்கு விடை இரண்டாம் பாதியில் கிளைமாக்ஸில்தான் கிடைத்திருக்கிறது. ஆனால் இந்தக் கிளைமாக்ஸ்வரையிலும் நம்மை நம்ப வைக்க இயக்குனர் எந்த முயற்சியும் செய்யவில்லை என்பது உண்மை.

முதல் பாதியில் தலையை சுற்ற வைத்திருக்கும் அந்த திரைக்கதையை கொஞ்சம் மாற்றி அமைத்து நேர் மறையாக படத்தைத் தொகுத்து இருந்தால் நிச்சயமாக இந்தப் படத்தை இன்னமும் ஆழமாக நாம் ரசித்திருக்கலாம். அந்த ஒரேயொரு கிளைமாக்ஸ் காட்சிக்காக நம் இரண்டு மணி நேரம் அமர வேண்டும் என்பது நமது தலைவிதியோ என்னவோ?!

RATING : 3 / 5

Our Score