டி.டி.எஸ்.பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில், டி.துரைசாமி தயாரிப்பில் உருவாகும் படம் ‘காதல் வேகம்’.
இந்தப் படத்தில் கெளசிக் நாயகனாகவும், சந்தியா கதாநாயகியாகவும், இரண்டாவது கதாநாயகியாக லைலாவும் நடிக்கிறார்கள்.
இசைஞானி இளையராஜா உள்ளிட்ட பல முன்னணி இசையமைப்பாளர்களிடம் பணியாற்றியதோடு, மேடை இசை நிகழ்ச்சிகளில் முதன்மையானவராக வலம் வந்த பிரபல இசைக் கலைஞர் எம்.வி.ரகு இசையமைக்கும் இப்படத்திற்கு ரவி சுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறார். சுரேஷ் அர்ஸ் படத் தொகுப்பு செய்ய, கோயா கலை இயக்குநராக பணியாற்றுகிறார். எம்.எல்.ஆனந்த் நடனக் காட்சிகளை வடிவமைக்க, ஜான்சன் சண்டைக் காட்சிகளை வடிவமைக்கிறார். மக்கள் தொடர்பு – கோவிந்தராஜ்.
இந்தப் படத்தை இயக்குநர் டி.துரை பாரதி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.
காதலால் ஒரு இளைஞரின் வாழ்க்கை எப்படி வேகம் எடுக்கிறது, என்பதை மையப்படுத்திய இப்படம் ஆக்ஷன், காமெடி, காதல்,செண்டிமெண்ட் என அனைத்தும் கலந்த ஒரு முழுமையான கமர்ஷியல் படமாக உருவாக உள்ளது.
இப்படத்தின் துவக்க விழா ஏவி.எம் ஸ்டுடியோவில் நேற்று காலை பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த விழாவில் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், நடிகர்கள் ஓய்.ஜி.மகேந்திரன், பாபு கணேஷ், பவர் ஸ்டார், முல்லை, கோதண்டம் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும், தொழிலதிபர்களும் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய ஆர்.கே.செல்வமணி, “நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்படி ஒரு பிரம்மாண்டமான பூஜையை பார்த்தது சந்தோஷமாக இருக்கிறது. இந்த படத்தின் பூஜையை போல் படமும் பிரமாண்ட வெற்றியடையும் என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.

இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசுகையில், “இந்தப் படத்தின் இசையமைப்பாளர் எம்.வி.ரகு மாபெரும் இசைக் கலைஞர் ஆவார். இவர் இசையமைப்பில் இந்த படம் உருவாகிறது என்றால், படத்தின் பாடல்கள் மிகப் பெரிய பெரிய வெற்றியைப் பெறும். படமும் வெற்றி பெறும்.” என்று வாழ்த்தினார்.

இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ் பேசுகையில், “ஏவி.எம் ஸ்டுடியோவில் ஒரு படத்தின் பூஜை நடைபெறுகிறது என்றால், அந்த படம் மிகப் பெரிய வெற்றி படமாகத்தான் இருக்கும். அந்த வகையில் இந்த படமும் மிகப் பெரிய வெற்றி பெற வேண்டும்…” என்று வாழ்த்தினார்.
தற்போது இந்தப் படத்திற்கான பாடல் பதிவு நடைப்பெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது..!













