full screen background image

காதல் என்பது பொதுவுடமை – சினிமா விமர்சனம்

காதல் என்பது பொதுவுடமை – சினிமா விமர்சனம்

மம்மூட்டி நடித்த காதல் தி கோர்’ திரைப்படத்தை இயக்கிய ஜியோ பேபி இந்தப் படத்தை வழங்க, மேன்கைன்ட் சினிமாஸ், நித்திஸ் பொரொடக்ஷன் மற்றும் சிம்மட்ரி சினிமாஸ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்த படத்தில் லிஜோ மோல், ரோகிணி, வினீத், கலேஷ் ராம் ஆனந்த், அனுஷா, தீபா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு சரவணன் ஒளிப்பதிவு செய்ய, கண்ணன் நாராயணன் இசை அமைக்க, டேனி சார்லஸ் படத் தொகுப்பு செய்துள்ளார்.

இப்படத்தை எழுதி இயக்கியவர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன். இவர் லென்ஸ்’, ‘மஸ்கிடோபிலாஷபி’, ‘தலைக்கூத்தல்’ ஆகிய படங்களை இயக்கியவர்.

ரோகிணி-வினித் தம்பதியரின் ஒரே மகள் லிஜோமோல். ரோகிணியும், வினீத்தும் தற்போது பிரிந்து வாழ்கிறார்கள். வினீத் ரோகிணியைப் பிரிந்து வேறு ஒரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.

லிஜோமோல் தான் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தன்னுடைய அம்மாவிடம் சொல்கிறார். ரோகிணி பெரும் அதிர்ச்சியாகிறார். அவருடைய தந்தைக்கும் தகவல் சொல்லப்படுகிறது. அவரும் வருகிறார்.

“இது தவறு” என்கிறார்கள் அப்பாவும், அப்பாவும். ஆனால், அதை ஏற்கும் நிலையில் லிஜோமோல் இல்லை. அவரை காதலிக்கும் அனுஷா என்ற பெண்ணும் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் பல சோகங்களை தாண்டி கடந்து வந்து ஆண் வர்க்கமே எனக்கு தேவையில்லை என்றும் ஒரு பெண்தான் தனக்குத் துணையாக வேண்டும் என்று தேடிக் கொண்டிருந்த நிலையில் அவரிடம் சிக்கி இருக்கிறார் லிஜோமோல்.

அனுஷாவும், லிஜோமோலை விட்டுக் கொடுப்பதாக இல்லை. லிஜோமோலும், அனுஷாவிடம் சரண்டரானதுபோல இருக்கிறார். பெற்றவர்கள் காலில் விழுகாத குறையாக கெஞ்சுகிறார்கள். இந்த திருமணம் வேண்டாம். இந்த காதல் வேண்டாம். இது தப்பானது. தவறானது. பொய்யானது என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால் காதலர்கள் இருவரும் அதை ஏற்கும் நிலையில் இல்லை.

இதற்கு அடுத்து என்ன நடக்கும்.. என்ன நடந்தது… இறுதியாக காதலர் சேர்ந்தார்களா… அல்லது பிரிந்தர்களா… என்பதுதான் இந்த படத்தின் கதை.

படத்தின் இயக்கம், நடிப்பு, தொழில் நுட்பம் அத்தனையிலும் இந்தப் படம் சிறந்து விளங்குகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அப்படி ஒரு நடிப்பை கொடுத்திருக்கிறார் செங்கேணி லிஜோமோல்.

பல காட்சிகளில் அவருடைய நடிப்பு நம்மு சொக்க வைக்கிறது. அதிலும் துவக்கத்தில் தான் யாரை காதலிக்கிறோம் என்பதை அம்மாவிடம் சொல்ல முடியாமல் அவர் தவிக்கின்ற தவிப்பைப் பார்க்கும்போது ஒரு பரிதாபத்துடன் ஒரு பரவசத்தையும் சேர்த்துத் தருகிறது.

தன்னுடைய காதலிக்காக அவர் அம்மாவிடம் விட்டுக் கொடுக்காமல் பேசுவதும் அப்பாவிடம் தைரியமாக எதிர்த்து பேசுவதும் அவர்கள் இருவரும் ஏன் பிரிந்தார்கள் என்று எதிர் கேள்வி கேட்டவர்களை வாய் அடைக்கச் செய்வதுமான லிஜோமோலின் நடிப்பு இந்த படத்திற்கு ஒரு மிகப் பெரிய பலம் என்ற சொல்லலாம்.

இன்னொரு பக்கம் ரோகிணி. அம்மா என்கின்ற அந்தக் கதாப்பாத்திரத்தை அப்படி தாங்கிப் பிடித்து நடித்திருக்கிறார் ரோகிணி. அப்பா இல்லாமல் தானாய் அவரை தன் மகளை வளர்த்திருக்கிறார் என்பது அவருடைய பேச்சிலேயே தெரிகிறது.

இப்படி வளர்க்கப்பட்ட ஒரு மகள், தன் நண்பியாகவே இத்தனை நாட்களாக பழகி வந்த மகள் திடீரென்று தான் ஒரு லெஸ்பியன் என்று சொல்வதை ஏற்க முடியாமல் தவிக்கின்ற தவிப்பும், எப்படியாவது மகளை மீட்டுவிட வேண்டும் என்று நினைப்பதும், இது வெளியில் தெரிந்தால் தன்னுடைய குடும்ப நிலைமை என்ன ஆகுமோ என்று அச்சப்படும் சராசரியான ஒரு தமிழ் பெண்ணின் மன நிலையை அப்படியே நம் கண்முன்னே காட்டி இருக்கிறார் ரோகிணி.

பாசமுள்ள அப்பாவான வினீத் தன் மகளுக்கு தான் செய்ய வேண்டிய பொறுப்பை உணர்ந்து இதில் இருக்கின்ற பிரச்சினைகள், சிக்கல்கள், மர்மங்கள்… இதையெல்லாம் வெளிப்படையாக எடுத்துச் சொல்லி மகளை மாற்றம் செய்யும் வேலையில் தீவிரமாக இறங்குபவர், கடைசியாக ஒரு சமரசத்திற்கு வருகின்றவரையிலும் ஒரு அப்பாவாக கச்சிதமாக நிமிர்ந்து நிற்கிறார் வினீத்.

இவர்களுடைய பேச்சின் இடையிலேயே இவர் ஏன் ரோகிணியை விட்டுப் பிரிய வேண்டிய கட்டாயம் வந்தது என்பதைஅவர் சொல்லும்போது ஒரு பரிதாப உணர்வு அவர் மீது நமக்கு கூடுகிறது.

லிஜோமோலின் காதலியாக நடித்திருக்கும் அனுஷாவின் நடிப்பு நிச்சயம் நம்மைக் கவரும். அதிலும் அவருடைய பிளாஷ்பேக் கதையை ஒருவிதமான ஒரு கவிதை போல வடித்திருக்கிறார் இயக்குநர். ஆனால், கொஞ்சம் கொடூரமானது. பார்ப்பதற்கே பயங்கரமாக உள்ளது. அந்தக் கதையை இவருடைய லெஸ்பியன் என்கின்ற அந்த வார்த்தைக்கு இலக்காக பில்டப் கொடுத்தது போல இருக்கிறது என்பதையும் நாம் மறுக்க முடியாது.

லிஜோமோல் மற்றும் அனிஷாவின் நண்பனாக வரும் காரேஷ் ஒரு பக்கம் தன்னுடைய காதல் தோல்வியை மறைத்துக் கொண்டு இவர்களுக்கு உதவி செய்ய வேண்டுமே என்பதற்காக அவரும் தன்னால் முடிந்த அளவுக்கு தன்னுடைய இருப்பை இந்த படத்தில் தன்னுடைய நடிப்பின் மூலமாக காட்டி இருக்கிறார். சிறந்த யதார்த்த நடிப்புதான்.

முதல் காட்சியிலேயே தலையை காட்டும் வீட்டு வேலைக்கார அம்மாவாக நடித்திருக்கும் தீபா சங்கரின் கேரக்டர் எதற்காக வைக்கப்பட்டிருக்கிறது என்பது அதற்கு அடுத்தடுத்தக் காட்சிகளில் நமக்கு தெளிவாக தெரிகிறது. புரிகிறது.

வீட்டு வேலைக்காரியாக இருந்தாலும் இந்த விஷயத்தில் எதுவும் தெரியாதவராக ஒரு அப்பாவியாக லெஸ்பியன் பெண்கள் திருமணம் செய்தால் எப்படி அவர்கள் தாம்பத்தியம் கொள்ள முடியும்.. அவர்கள் ஃபர்ஸ்ட் நைட்டில் என்ன செய்வார்கள்… இதில் யார் புருஷன் யார் பொண்டாட்டி என்றெல்லாம் ஒரு அப்பாவியாக கேட்கின்ற கேள்வி எல்லாம் அந்த நேரத்தில் நமக்குள் இருந்த ஒரு இருக்கத்தை தளர்த்தி இருக்கிறது.

ரோகிணி, தீபாவிடம் பணம் கொடுத்து “இந்த விஷயத்தை வெளியில் சொல்ல வேண்டாம்” என்று சொல்லும்போது பணத்தை திருப்பி கொடுத்துவிட்டு “அவளும் என் பொண்ணு மாதிரிதான்..” என்று சொல்லிவிட்டு போகும்போது ஒரு கணம் நம் மனதில் உயர்ந்து நிற்கிறார் தீபா சங்கர்.

படம் தொழில் நுட்பத்திலும் சிறந்து விளங்குகிறது. ஒளிப்பதிவாளர் ஸ்ரீசரவணனின் வண்ணமயமான ஒளிப்பதிவு அந்த வீட்டையும், சுற்றுப்புறத்தையும் மிக அழகாக காட்டியிருக்கிறது.

படத்தின் கலை இயக்குநரையும் வெகுவாகப் பாராட்ட வேண்டும். ஒரு புதுமையான ஒரு வீடாக, அழகாக காட்டியிருக்கிறார்கள். அந்த வீட்டில் உள்ள பொருட்கள், இடம் அனைத்துமே ஒரு வடிவாக அமைக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல் இந்த படத்தில் காஸ்ட்யூம் டிஸைன் செய்தவரையும் பாராட்ட வேண்டும். படத்தில் அனைத்து கட்சிகளிலும் அனைவரின் உடைகளையும், கவரும்விதத்தில்  கலர்ஃபுல்லாக பார்ப்பதற்கு ரசிக்கும் வகையில் அமைத்திருக்கிறார்கள்.

கண்ணன் நாராயணனின் பின்னணி இசை அட்டகாசம் என்று சொல்ல வேண்டும். ரொம்ப, ரொம்ப மென்மையாக, மெதுவாக போடப்பட்டிருக்கும் இந்த பின்னணி இசை எந்தவிதத்திலும் நம்முடைய கவனத்தை மடை மாற்றாமல் திரைக்கதைக்குள் நம்மை அழுத்தி இருக்கிறது.

நாம் முன்பே சொன்னதுபோல இந்தப் படத்தின் இயக்கம், நடிப்பு, தொழில் நுட்பம் அனைத்தும் சிறந்து விளங்கினாலும் கதையின் முடிவாக சொல்லி இருக்கும் விஷயமான ஓரினச் சேர்க்கையை ஆதரிப்பது என்பதைத்தான் நம்மால் ஏற்க முடியவில்லை.

இப்போதைய நிலையில் இந்தியாவில் ஒரு மிகப் பெரிய அச்சுறுத்தக் கூடிய ஒரு கலாச்சார மாற்றம் ஓரினச் சேர்க்கை என்பதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

இயற்கை நமக்கு கொடுத்திருக்கும் மிகப் பெரிய கொடையே நம்முடைய குடும்ப வாழ்க்கைதான். ஒரு ஆணும், பெண்ணும் இணைந்து வாழ்ந்து குழந்தைகளை உருவாக்கி அந்த குழந்தைகள் அடுத்த தலைமுறையில் திருமணம் செய்து அவர்கள் தங்களுடைய சந்ததிகளை வளர்த்து…

இப்படி ஒரு குடும்பம் குடும்பமாக, வாழையடி வாழையாக, குடும்பகளாக பிரிந்து குழந்தை பெற்றுக் கொண்டு அந்தக் குழந்தைகள் அடுத்த தலைமுறையில் வளர்ந்து இந்தச் சமூகத்தையும் சேர்த்து வளர்த்தெடுப்பதுதான் இயற்கை.

இந்த அறிவார்ந்த சமூகத்தின் நோக்கத்தையே கெடுப்பதுபோல ஓரினச் சேர்க்கையாளர்கள் இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக மிகவும் வேகம் பெற்று வருவது வருத்தத்திற்குரிய ஒரு விஷயம்.

ஓரினச் சேர்க்கை என்பது வெறுமனே ஒரு செக்ஸில் ஒரு கலைதான். அது ஆண்-பெண் திருமணம் செய்து குடும்பம் நடத்துவது போன்ற வாழ்க்கை முறையல்ல. ஓரினச் சேர்க்கையில் செக்ஸை தவிர வேறு எதுவும் இல்லை. அந்த செக்ஸில் இருக்கும் ஒரு கிளர்ச்சிக்காகவே “வாழ்நாள் முழுவதும் நாங்கள் ஒன்றாய் இருப்போம்.. வாழ்வோம்..” என்று ஒருவர் சொன்னால் நிச்சியமாக அவர் பொய் சொல்லுகிறார் அல்லது புரியாமல் பேசுகிறார் என்றுதான் அர்த்தம்.

நிச்சயமாக வாழ்நாள் முழுவதும் அப்படி யாரும் இருந்துவிட முடியாது. மேலைநாடுகளில், ஓரினச் சேர்க்கையை அங்கீகரித்த நாடுகளில்கூட இப்படி யாரும் கடைசிவரையிலும் வாழவில்லை. கொஞ்ச நாட்கள் கழித்த பின்பு தனித்தனியே பிரிந்து சென்று, அடுத்தக்கட்ட வாழ்க்கைக்காக தனித்தனியே குழந்தைகளை தத்து எடுத்து வளர்த்து வருகிறார்கள். இதுதான் உண்மை.

குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தால்கூட அவர்களை வளர்க்கின்ற மனப்பக்குவமும், பொறுமையும், அசத்தியமான திறமையும், கனிவும், பணிவும் பெற்றோருக்கு வேண்டும்.

பெற்றோர் ஆண், பெண் இருவராக இருந்தால் அது நிச்சயம் பயன்படும். ஆண் இல்லாத குடும்பம் என்றால், ஒரு பெண் தன்னுடைய குடும்ப உறவுகளோடு இணைந்து தனது குழந்தைகளை வளர்த்தெடுக்க முடியும். அதேபோல் பெண்ணில்லாமல் ஆண் வளர்த்தாலும் தன்னுடைய குடும்பத்துடன் ஒத்துழைத்து அந்த குழந்தையை வளர்த்தெடுப்பார்கள்.

ஆனால் இந்த ஓரினச் சேர்க்கை என்னும் ஒரு மாய வாழ்க்கை முறையில் இரு தரப்பு பெற்றோர்களும் உடன் இல்லாத நிலையில் அவர்கள் மட்டும் தனியே ஒரு குழந்தையை வளர்த்து எடுப்பது என்பது சுவரில் ஒட்டிக் கொள்கின்ற ஒரு விளையாட்டுதான்.

இந்தப் படத்தில் பேசப்பட்டிருக்கும் பல வசனங்கள் ஓரினச் சேர்க்கையை கேள்விக்கு உள்ளாக்கி இருந்தாலும், இதனால் ஏற்படுகின்ற பக்க விளைவுகள், குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள், அக்கம்பாக்கம் இருப்பவர்கள் என்ன பேசுவார்கள்.. சமூகம் என்ன செய்யும்… இதை எப்படி இவர்கள் எதிர்கொள்வார்கள்… என்றெல்லாம் அலசி ஆராய்ந்து சொல்லியிருந்தாலும்…

அது அனைத்தையும் உடைத்து எறிவது போல இறுதி கட்சியில் ஓரினச் சேர்க்கைக்கு ஒரு வருட கால அவகாசம் கொடுப்பதாக சொல்லி படத்தை முடித்து இருக்கிறார் இயக்குநர். இது நிச்சயமாக கண்டிக்கத்தக்க ஒன்று.

ஓரினச் சேர்க்கையை சரி என்று சொல்லி வாதிடுபவர்கள் நிச்சயம் அவர்களுடைய குடும்பத்தில் இது போன்ற பிரச்சனை வந்தால் அதை வராதது போலவே காட்டிக் கொள்வார்கள். அல்லது அப்படி ஒன்றும் நடக்கவே இல்லை என்று பொய் சொல்வார்கள். அல்லது அப்படி நடந்துவிட்டால் அதை தீவிரமாக தடுக்கும் முயற்சியில்தான் ஈடுபடுவார்கள்.

தனக்கு வந்தால் ஒன்று; பிறருக்கு வந்தால் ஒன்று என்பதுதான் இப்போதைய சக மனிதர்களின் வாழ்க்கையாக இருக்கிறது. அப்படிப்பட்டவர்களிடையே இந்த ஓரினச் சேர்க்கை பேச்சு என்பது அவல் மெல்லும் வாயாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அதேபோல் ரோகிணியும் வீட்டில் மது அருந்துகிறார். ரோகிணியின் மது அருந்தும் பழக்கம் முன்னாள் கணவரான வினீத்திற்கும் தெரியும்போலும். “மது எங்கேயுள்ளது?” என்று கேட்டு தேடியெடுத்து அவரும் அதைக் குடிக்கிறார். போதாக்குறைக்கு சிகரெட் மேல் சிகரெட்டை குடித்துக் கொண்டேயிருக்கிறார் அப்பாவான வினீத்.

பிள்ளைகளுக்கு நல்ல விஷயத்தைச் சொல்லிக் கொடுக்க வேண்டிய பெற்றோர்களே இந்த லட்சணத்தில் இருந்தால் அந்தக் குடும்பம் வெளங்குமா..? லிஜோமோலின் லெஸ்பியன் ஆசைக்குக்கூட அம்மா, அப்பாவின் பொறுப்பற்ற தன்மையும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். எது செய்தாலும் தவறில்லை என்ற உணர்வும், எண்ணமும் லிஜோமோலுக்கு சின்ன வயதிலேயே ஏற்பட்டிருக்கலாம். இதற்கு இவரது பெற்றோர்களின் பிரிவும், நடத்தையும்கூட காரணமாக இருக்கும்.

வினீத் தான் ரோகிணியை பிரிந்ததற்கான காரணத்தைச் சொல்லும்போது ரோகிணி ஏன் அத்தனை பதட்டமாகி அதைத் தடுக்க முனைகிறார் என்று தெரியவில்லை. பிரசவத்தின்போது ஏற்படும் வலியினால் கர்ப்பத்தைக் கலைத்ததாக வினீத் சொல்வதை ஏற்கவே முடியவில்லை. நன்கு படித்தவராக இருக்கும் ரோகிணியின் இந்தச் செயல் பைத்தியக்காரத்தனம்.

சாதாரணமாக, ரயில்வே டிராக் அருகே குடிசை வீட்டில் வாழும் பெண்கள்கூட பிரசவ வலியை நினைத்துப் பயப்பட மாட்டார்கள். ரோகிணி பயந்தார் என்று சொல்வது அவர் அதீத பய உணர்வுள்ளவர் என்பதைக் காட்டுவதற்காக இயக்குநர் செய்திருக்கும் அநியாயமான பில்டப் என்றுதான் நினைக்க வேண்டியுள்ளது.

இந்த ஒரு காரணத்துக்காகவே பெற்ற மகளைவிட்டுவிட்டு வினீத் பிரிந்து சென்று வேறொரு திருமணம் செய்து கொண்டதாகச் சொல்வதும் வினீத்தின் கேரக்டர் ஸ்கெட்ச்சை பலவீனமாக்கியுள்ளது.

பெற்ற பெண்ணின் தகாத உறவைப் பற்றிப் பேச வந்த இடத்தில் பெற்றோர்கள் சண்டையிட்டுக் கொள்வதும், “ஆண், பெண் திருமண வாழ்க்கை இப்படித்தான் இருக்கும். நீங்க லெஸ்பியன் தம்பதிகளாவது நிம்மதியா இருங்க..” என்று இயக்குநர் மறைமுகமாகச் சொல்வது போலத்தான் இருக்கிறது.

தே இயக்குநர் இதற்கு முன்பாக லென்ஸ்’, ‘தலைக்கூத்தல்’ என்று மிக அருமையான இரண்டு படங்களை கொடுத்திருக்கிறார் அதை இரண்டு படங்களுமே தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இடத்தை பிடித்திருக்கின்ற திரைப்படங்கள்.

அவ்வளவு நல்ல திரைப்படங்களை கொடுத்த இயக்குநர் இந்த மூன்றாவது படத்தில் ஏன் இப்படி சோரம் போனார் என்று தெரியவில்லை. நிச்சயம் இந்தப் படத்தை எடுத்திருக்கக்கூடாத விதத்தில் எடுத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஏனெனில் இப்பொழுதெல்லாம் பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்காத விஷயங்கள், பள்ளிகளில் ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்காத பாடங்கள் அனைத்தையும் இளைய சமுதாயத்தினர் சினிமா தியேட்டரில் வந்துதான் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு இந்தப் படம் ஒரு தவறான முன் உதாரணத்தை காட்டிவிடும் என்கின்ற பயம் நமக்கு இருக்கிறது. அதைச் சுட்டிக் காட்ட வேண்டிய பொறுப்பு பத்திரிக்கையாளர் ஆகிய நமக்கும் இருக்கிறது. ஆகவேதான் இந்த படத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

வந்திருக்கக் கூடாத திரைப்படம்.! எடுத்திருக்கக் கூடாத திரைப்படம்..!!

Our Score