full screen background image

போலீஸ் வேடத்தில் தன்ஷிகா நடிக்கும் ‘காத்தாடி’

போலீஸ் வேடத்தில் தன்ஷிகா நடிக்கும் ‘காத்தாடி’

கேலக்ஸி  பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ‘காத்தாடி.’  இந்த படத்தில் அவிஷேக்  நாயகனாக நடிக்கிறார். இவர் பிரபல நடிகை ஸ்ரீதேவியின் சித்தி மகனும், பிரபல நடிகையான மகேஸ்வரியின் சகோதரரும்  ஆவார்.

கதாநாயகியாக தன்ஷிகா நடிக்கிறார். இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கபாலி’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.  மற்றும் சம்பத், ஜான் விஜய், மனோபாலா, கோட்டா சீனிவாசராவ், வி.எஸ்.ராகவன், காளி வெங்கட்,  ‘சுமார் மூஞ்சி குமார்’ டேனியல், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன்,  ‘பசங்க’ சிவகுமார்,  லொள்ளு சபா மனோகர்,  வினோதினி,  மதுமிதா, ‘சூப்பர் குட்’ சுப்ரமணி,  சேரன் ராஜ். மற்றும் முக்கிய கதாப்பாத்திரத்தில் பேபி சாதன்யாவும் நடிக்கிறார்.

ஒளிப்பதிவு – ஜெமின் ஜோம்அயாநாத், பாடல் இசை – பவன் , பின்னணி இசை – தீபன், பாடல்கள் – மோகன்ராஜன், சண்டை பயிற்சி – அன்பறிவு,  கலை – ஜெய், தயாரிப்பு மேற்பார்வை – அரவிந்த், தயாரிப்பு – கேலக்ஸி பிக்சர்ஸ், எழுத்து, இயக்கம் – எஸ்.கல்யாண். (இவர் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘கத சொல்ல போறோம்’ படத்தை இயக்கியவர்.)

படம் பற்றி இயக்குநர் கல்யாண் பேசும்போது, “இந்தப் படம் முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் காமெடி இரண்டும் கலந்து உருவாக்கி இருக்கிறோம். படத்தின் ஆரம்பம் முதல்,  இறுதிவரை  காமெடி கலாட்டாவாக இருக்கும்.

தொழிலதிபராக வரும் சம்பத்தின் குழந்தை சாதன்யாவை திருடர்களான அவிஷேக், ‘சுமார் மூஞ்சி குமார்’ டேனியல் இருவரும் பணத்திற்காக கடத்துகிறார்கள். போலீஸ் ஆபிசராக வரும் தன்ஷிகா, திருடர்களிடமிருந்து பேபி சாதன்யாவை எப்படி காப்பாற்றினார் என்பதை ஆக்சன் மற்றும் காமெடி கலந்து உருவாக்கியுள்ளோம்.

எனது ‘கத சொல்ல போறோம்’ படம் வெற்றி பெற்றதற்கு காரணமே, அதில் இருந்த செண்டிமெண்ட் காட்சிகள்தான். அது, இந்த படத்திலும் காட்சிகளுக்கேற்ப இருக்கிறது. எனவே இந்த படமும் நிச்சயமாக வெற்றியடையும் என்று எதிர்பார்க்கிறேன்.

‘கத சொல்ல போறோம்’ படத்தின் வெற்றியை கவனித்த லிப்பி சினி கிராப்ட்ஸ் வி.என்.ரஞ்சித்குமார் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டியோஸ் கே.சசிகுமார் இருவரும் இணைந்து  இந்தப் படத்தை வாங்கி உலகம் முழுதும் வெளியிடுகிறார்கள்.

ஏலகிரி, கேரளாவில் உள்ள வாகுமன் மற்றும் சென்னை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. விரைவில் படம் வெளியாக உள்ளது…” என்றார்.

Our Score