full screen background image

மலையாள ‘வெள்ளி மூங்கா’ தமிழில் ‘முத்தின கத்திரிக்கா’யாக மாறிய கதை..!

மலையாள ‘வெள்ளி மூங்கா’ தமிழில் ‘முத்தின கத்திரிக்கா’யாக மாறிய கதை..!

இயக்குநர் சுந்தர்.சியிடம் பல படங்களில், இணை இயக்குநராகவும், வசனகர்த்தாவாகவும் பணியாற்றியவர் வெங்கட்ராகவன். இவர் தற்போது சுந்தர்.சி நாயகனாக நடிக்க ‘முத்தின கத்தரிக்கா’ படத்தினை இயக்கியிருக்கிறார்.

படம் பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் இயக்குநர் வெங்கட்ராகவன்.

“நான் சுந்தர்.சி சாருடன் பல படங்களில் இணை இயக்குனராகவும், வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளேன். அவர் நடித்த படங்களின் காட்சிகளையும் நான் இயக்கியிருக்கிறேன். இது எனக்கு முதல் படம்.

IMG_0733

இருந்தாலும் முதல் ஹீரோ, முதல் காட்சி என்கிற ஒரு உணர்வே இல்லை.  எல்லாரும் ஒரு குடும்பமாக இணைந்து புதியதாக ஒரு படம் செய்கிறோம் என்கிற உணர்வுதான் என்னிடமிருக்கிறது.

சுந்தர்.சி சார் என்னிடம், விரைவாக ஒரு படத்தினை இயக்குமாறு அறிவுறுத்திக் கொண்டே இருப்பார். படம் இயக்கலாம் என்ற முடிவெடுத்தபின் அவரையே நாயகனாக நடிக்குமாறு கேட்டேன். அவரும் ஒப்புக் கொண்டார். அவருடைய அவ்னி மூவிஸ் மூலமாக இந்தப் படத்தினை அவர்தான் தயாரிக்கவும் செய்கிறார்.

தற்போது பேய்க் கதைகள், போலீஸ் கதைகள், காதல் கதைகள் என எல்லா ஜானர்-லும் படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. வெளிவராத ஒரு ஜானர்-ல் படம் இயக்கலாம் என யோசித்தபோது அரசியல் களத்தினை தேர்வு செய்தோம்.

மலையாளத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ‘வெள்ளி மூங்கா’ படத்தினை நானும்,சுந்தர்.சி சாரும் பார்த்தோம். இருவருக்கும் பிடித்திருந்தது. இதையே தமிழில் ரீமேக் செய்யலாம் என்று இருவரும் முடிவு செய்தோம்.

 vellimoonga

40 வயதான அரசியல்வாதி ஒருவர் அவர் வாழ்க்கையிலும் சரி, அரசியலிலும் சரி எதுவும் சாதிக்க முடியாமல் இருக்கையில், ஒரு கட்டத்தில் ஒரு பெண் மூலமாக அவரது வாழ்வில் நடைபெறும் ஒரு நிகழ்வு அவரை அரசியலில், சொந்த வாழ்க்கையில் எந்த நிலைக்குக் கொண்டு செல்கிறது என்பதுதான் கதை.

படம் முழுவதும் இந்த ஒரு கதாபாத்திரத்தின் செயல்பாடுகளைப் பற்றித்தான் இருக்கும். அவரை ஏன் மக்கள் வெறுக்கிறார்கள்..? அவருடைய எதிரிகள் யார்..? அவரால் ஏன் அரசியலில் சாதிக்க முடியவில்லை என ஒவ்வொரு காட்சியும் அதனைச் சுற்றியே வடிவமைக்கப்பட்டிருக்கும்.

இந்த மலையாளப் படத்தினை முழுமையாக அப்படியே ரீமேக் செய்யாமல் அந்தப் படத்திலிருந்து ஒரு விஷயத்தை மட்டும் எடுத்துக் கொண்டு தமிழ் ரசிகர்களின் ரசனைக்கேற்ப பல மாறுதல்கள் செய்து, அனைவருக்கும் பிடிக்கும் ஒரு படமாக எடுத்திருக்கிறோம்.

அதாவது அந்தப் படத்திலிருந்து ஒரு கோடு மட்டும் எடுத்துக் கொண்டு நாங்கள் ஒரு ரோடு போட்டிருக்கிறோம். ‘வெள்ளி மூங்கா’ படத்தின் இயக்குநர் இந்தப் படத்தினைப் பார்த்தால் இப்படிகூட எடுக்கலாமா என்று யோசிக்கும் அளவிற்கு ‘முத்தின கத்திரிக்கா’ படத்தினை  எடுத்துள்ளோம்.

sundar.c 

படத்தில் ஒரு அரசியல்வாதியின் இயல்பான வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறோம்.

நான் இயக்குனர் ஆவதற்கு முன்பே என்னிடம் ஒரு ஐடியா இருந்தது. ஒரு மாடர்ன் பாக்யராஜ் சார் மாதிரி என் படத்தில் எந்த ஒரு விஷயம் சொன்னாலும் அதில் ஒரு நகைச்சுவை இருக்க வேண்டும் என்பதுதான் அது. அதை இந்தப் படம் முழுவதிலும் பயன்படுத்தி இருக்கிறேன்.

IMG_7358

நான் படத்தின் காட்சிகளை, வசனங்களை எழுதி முடித்த பின் சுந்தர்.சி சாரிடம் காண்பித்தேன். என்னை வெகுவாகப் பாராட்டினார். மேலும் உடனடியாக படப்பிடிப்பினை ஆரம்பிக்கலாம் என்று சொன்னார். அவர் சொல்லிய ஒரு வாரத்தில் நாங்கள் படப்பிடிப்பை ஆரம்பித்து விட்டோம். 

நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என்று வெவ்வேறு நபர்கள் இருந்தால், அவர்களிடம் தனித்தனியாக நான் சென்று படத்தினைப் பற்றி, காட்சிகளைப் பற்றி விளக்கம் கொடுக்க வேண்டும். ஆனால் இந்தப் படத்தில் இரண்டுமே சுந்தர்.சி சாராக இருப்பதால் எனக்கு எளிதாக இருந்தது. 

படத்தின் தலைப்பிலேயே உங்களுக்கு ஒரு விஷயம் புரிந்திருக்கும். ரொம்ப வருடங்கள் திருமணமாகாமல் பேச்சிலராக இருக்கும் இளைஞர்களைத்தான் ‘முத்தின கத்திரிக்கா’ என்று சொல்வார்கள். கதாநாயகனை இமிடேட் செய்யக் கூடிய இந்தத் தலைப்பிற்கு ஓ.கே சொன்னதற்கே சுந்தர்.சி சாருக்கு என் நன்றியைத் தெரிவிக்கிறேன். மேலும் காட்சி அமைப்பிலோ, வசனங்களிலோ எந்த ஒரு இடையூறும் செய்யாமல் என்னை சுதந்திரமாகச் செயல்படவிட்டார்.

IMG_6776

இந்தப் படத்தின் படப்பிடிப்பினை நாங்கள் கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், குற்றாலம் போன்ற இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் நடத்தினோம்.  

பாடல்கள் அனைத்தும் சிறப்பாக வந்திருக்கின்றது. பாடல் காட்சிகளும் கதையோடு இணைந்து வரும்படியாகப் படமாக்கியுள்ளோம்.  கதாநாயகனுடன் இணைந்து ஒரு நகைச்சுவை நடிகர் படம் முழுவதும் தோன்றுவார். அந்தக் கதாபத்திரத்தில் நடிகர் சதீஷ் நடித்துள்ளார். அவருடைய அந்த கதாபாத்திரத்திற்காக அவர் நிறைய உழைத்திருக்கிறார். அவர் மட்டுமல்ல படத்தில் ஒரு நகைச்சுவைப் பட்டாளமே உள்ளனர். அனைவரும் அவரவர் வேலையை சிறப்பாக செய்து படத்திற்கு மெருகூட்டியுள்ளனர். 

படத்தில் பணியாற்றிய அனைவரும் சிறப்பான ஒத்துழைப்பு தந்தனர். கதாநாயகி பூனம் பஜ்வா மற்றும், ஒளிப்பதிவாளர், எடிட்டர், இசையமைப்பாளர், ஸ்டண்ட் மாஸ்டர், டான்ஸ் மாஸ்டர் என,என்னோடு பணியாற்றிய அனைத்து டெக்னீசியன்களும் விரைவாகப் பணியாற்றியதோடு மட்டுமல்லாமல் எந்தவொரு இடத்திலும் படத்தின் தரம் குறையாமல் பார்த்துக் கொண்டனர்.

இந்தப் படத்தைப் பொறுத்தவரை, யாருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், அனைத்துக் காட்சிகளிலும் நகைச்சுவை இருக்குமாறு பார்த்துக் கொண்டோம். சண்டைக் காட்சியானாலும், சென்ட்டிமெண்ட் காட்சியானாலும், காதல் காட்சியானாலும் அதில் ஒரு நகைச்சுவை இருக்கும். ரசிகர்கள் அனைத்துக் காட்சிகளிலும் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் குறிக்கோள். அது நிச்சயமாக நிறைவேறும். அனைத்துத் தரப்பு ரசிகர்களும் குடும்பத்துடன் கண்டு மகிழக்கூடிய ஒரு முழுமையான நகைச்சுவைப் படம் இது…” என்று நீட்டமாகப் பேசி முடித்தார்.

Our Score