Raghav Home Entertainment சார்பில் தயாரிப்பாளர்கள் P.ஹரிஹரன், B.உதயகுமார், P.ராதாகிருஷ்ணன் மூவரும் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘காசு மேவே காசு.’
இந்தப் படத்தில் ஷாருக் நாயகனாகவும், காயத்ரி நாயகியாகவும் நடித்துள்ளனர். படத்தில் இன்னொரு ஹீரோவாக மயில்சாமியும் நடித்திருக்கிறார். இவர்களுடன் கஞ்சா கருப்பு, கோவை சரளா, நளினி, மதுமிதா, லொள்ளு சபா சாமிநாதன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இசை – பாண்டியன், ஒளிப்பதிவு – சுரேஷ் தேவன், பாடல்கள் – கருப்பையா, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – கே.எஸ்.பழனி. தயாரிப்பு – P.ஹரிஹரன், B.உதயகுமார், P.ராதாகிருஷ்ணன், எக்ஸ்குயூட்டிவ் புரொட்யூசர் – A.சுதாகர்.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், பார்த்திபன், P.வாசு, பாண்டியராஜன், தரணி, நடிகர் விவேக், மயில்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் இயக்குநர் இமயம் பாரதிராஜா பேசும்போது, “ஒரு படத்தில் ஹீரோவாக நடிப்பது ஈஸி. ஆனால் காமெடியனாக நடிப்பதுதான் கடினம். அதற்கு அந்தக் கலைஞனுக்கு இயல்பாகவே நகைச்சுவை உணர்வு இருக்க வேண்டும்.
அது போன்ற நகைச்சுவை உணர்வு அதிகம் மிக்கவன் மயில்சாமி. அதைவிட இதயம் சுத்தமானவன். மக்களை மகிழ்விப்பதில் மன்னன். எனக்கெல்லாம் நகைச்சுவை உணர்வு கொஞ்சம்கூட இல்லை. ஆனால் இந்த படத்தின் அழைப்பிதழ் பார்த்ததும் விழுந்து, விழுந்து சிரிச்சேன். அந்த அளவுக்கு காமெடியாக வடிவமைத்திருந்தார்கள். இந்தப் படத்தின் பாடல்களை பார்த்தேன். நிச்சயமாக இந்தப் படம் ஒரு வெற்றிப் படமாக அமையும்.
இந்து, கிறிஸ்தவர், முஸ்லீம் என்று நீ யாராக வேண்டுமானாலும் இரு.. ஆனால், ஆட்சியில் இருக்கும் ஐந்து வருடங்களும் அது பிரதமராக இருந்தாலும் சரி.. ஜனாதிபதியாக இருந்தாலும் சரி.. அனைவருக்கும் பொதுவான மனிதனாக இருத்தல் வேண்டும்.
நானும் ஆன்மீகவாதிதான். முருகன் என்பவன் ஆறு படை வீடுகளை ஆண்ட சாதாரண மனிதன். பின்னாளில் நாம்தான் அவனை கடவுள் ஆக்கிட்டோம். இப்போது நம் நிலம் களவாடப்படுகிறது, மொழி களவாடப்படுகிறது, கொஞ்சம் விட்டால் இந்த இனமே களவாடப்படும். தமிழா இப்போதாவது முழித்துக்கொள். டைனோசர் இனம் அழியக் காரணம் அதனிடம் எதிர்ப்பு சக்தி இல்லாததுதான். தமிழனுக்கு ருத்ரம் இப்போது அதிகமாக தேவைப்படுகிறது…” என்று உணர்ச்சிகரமாகப் பேசினார்.