full screen background image

“காஷ்மோரா’ நிச்சயமாக ‘பாகுபலி’ மாதிரியான படமில்லை..” – நடிகர் கார்த்தியின் பேச்சு..!

“காஷ்மோரா’ நிச்சயமாக ‘பாகுபலி’ மாதிரியான படமில்லை..” – நடிகர் கார்த்தியின் பேச்சு..!

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘காஷ்மோரா.’

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று மாலை ரெசிடென்ஸி டவர் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு, இயக்குநர் கோகுல், ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ், படத் தொகுப்பாளர் சாபு ஜோசப், கலை இயக்குநர் ராஜீவன், விஎஃப்எக்ஸ் ஸ்டாலின், நடிகர்கள் கார்த்தி, விவேக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தப் படத்தில் கார்த்தி 3 கெட்டப்புகளில் நடித்திருக்கிறாராம். ‘காஷ்மோரா’, ‘ராஜ்நாயக்’ மற்றும் இன்னொரு கதாபாத்திரம் சஸ்பென்ஸ் என்கிறது படக் குழு.

s.r.prabhu

முதலில் பேசிய தயாரிப்பாளர் S.R.பிரபு, “மிகுந்த பொருள் செலவில் மூன்றாண்டுகளாக கடுமையான உழைப்பில் தயாரிக்கப்பட்டுள்ள படம் இது. மூன்று ஆண்டு கால உழைப்பு, பணம், வட்டி இதெல்லாம் படத்தின் மீது இன்வெஸ்ட் செய்யப்பட்டுள்ளது.. ஆனாலும் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை இப்போதுவரையிலும் உள்ளது. நிச்சயம் இந்த படம் எல்லோரையும் கவரும் என்றே நினைக்கிறேன்.

இந்த படம் உலகம் முழுவதும் 1700 திரைகளில் ரிலீஸ் ஆகிறது. முதல் முறையாக பெல்ஜியம் ஹாலந்து போன்ற நாடுகளிலும் இந்தப் படம் ரிலீஸ் ஆகிறது. கார்த்தி நடித்த ஒரு படம் இத்தனை ஸ்கிரீன்களில் வெளியிடப்படுவது இதுவே முதல் முறை. இந்தச் சாதனை படைத்த படத்தை, நான் தயாரித்ததில் எனக்கும் மிகுந்த சந்தோஷம்…” என்றார்.

actor vivek

அடுத்து நடிகர் விவேக் பேசும்போது, “காஷ்மோரா’ படம் மிக பிரமாதமாக வந்திருக்கிறது. இந்தப் படம் ‘பாகுபலி’க்கு முன்பாகவே வந்திருந்தால் இந்தியாவே கொண்டாடும் அளவுக்கு புகழ் பெற்றிருக்கும். இப்போது அதே ஜர்னரில் இந்த படம் வருவதால் நிச்சயம் ‘பாகுபலி’யுடன் ஒப்பீடு செய்வார்கள். ஆனால் இது நிச்சயம் ‘பாகுபலி’ அல்ல.

இது முழுக்க, முழுக்க பொழுது போக்கு படம்தான். இடையில் ஒரு அரை மணி நேரம் உங்களை வேறொரு உலகத்துக்கு அழைத்துச் செல்லும் பேண்டஸியும் இதுல இருக்கு.

இந்தப் படம் தமிழ் சினிமாவின் ஒரு மைல் கல்ன்னும் சொல்லலாம். இதற்கு முன் வந்த எல்லா தமிழ்ப் படங்களுக்கும் நிச்சயம் சவால் விடும் படம்தான் இது. இது வெறும் வாய் பேச்சில்லை. இந்த படத்தின்  தரமும், கதையும் அப்படித்தான் இருக்கிறது. இப்படியொரு படத்தை இனிமேல் நிச்சயம் யாரும் யோசிக்கவும், எடுக்கவும் முடியாது  மூன்று வருடம் கடுமையாக உழைத்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

இதில் நான் கார்த்திக்கு அப்பாவாக நடித்துள்ளேன். 30 வருடங்களுக்கு முன்பு நான் சிவக்குமார் ஸாருடைய மகனாக ஒரு படத்தில் நடித்தேன். 30 வருடங்கள் கழித்து அவருடைய மகன், எனக்கு மகனாக நடித்திருக்கிறார்.

நயன்தாராவுடன் நான் முதன் முதலில் ‘கள்வனின் காதலி’ படத்தில் நடித்தேன். அதன் பிறகு அவருடன் நடிக்கும் வாய்ப்பு இந்த ‘காஷ்மோரா’ படத்தில்தான் கிடைத்து. அப்படியிருந்தும் அவருடன் நடிக்கும் சீனே இல்லை. ‘உங்களுக்கு எதிர்த்தாப்புல நயன்தாரா நிக்குறதா நினைச்சு இந்த வசனத்தை பேசிருங்க’ன்னு சொல்லியே நடிக்க வைச்சுட்டாங்க. கடைசிவரைக்கும் கண்ல காட்டவே இல்லை.

படம் உங்களை சந்தோசமாக சிரிக்க வைக்கும். நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு சிறப்பான நகைச்சுவை கலந்த வேடத்தை ஏற்றுள்ளேன். ஒரு நல்ல நகைச்சுவையை இந்தப் படத்தில் உங்களுக்கு தருகிறேன்..” என்றார்.

img_3808

தொடர்ந்து பேசிய நடிகர் கார்த்தி, “இந்தப் படம் ஒரு ஜாலியான படம். இதுல நாங்க எந்தவிதமான பரீட்சார்த்த முயற்சிகளையும் செய்யலை. அந்த என்டர்டெயின்மென்டை எவ்வளவு பெருசா, கிராண்டா கொடுக்க முடியுமோ, அதுக்கு நாங்க டிரை பண்ணியிருக்கோம்.

இன்றைய சூழலில் பெரிய முதலீட்டில் படம் தயாரிப்பதற்கு, தயாரிப்பாளர்களிடையே பெரிய தயக்கம் இருக்கிறது. காரணம், கிராபிக்ஸ் காட்சிகளால் நிறைய செலவாகும், நேரமும் ஆகும் என்பதால் தயங்குகிறார்கள்.

தமிழ்ச் சினிமாவில் சரியாக திட்டமிட்டால் மட்டுமே எதையும் செய்ய முடியும் என்று தெரிந்துதான் இதில் கால் வைத்திருக்கிறோம். நாங்கள் நினைத்தை எடுக்கும் அளவுக்கு முதலீடு இங்கே கிடையாது. ‘பாகுபலி’ மாதிரி 200 கோடி முதலீட்டுக்கான மார்க்கெட் இங்கு கிடையாது. எனக்கு இருக்கும் மார்க்கெட்டையும் தாண்டி கொஞ்சம் அதிகமாகத்தான் இதில் செலவுகளை செய்திருக்கிறோம்.

கோகுலின், ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை மிகவும் ரசித்தேன். ஒரு பேய் படம் பண்ணலாம் என்றுதான் ஆரம்பித்தோம். ஆனால் கோகுல் இந்தப் படத்தின் ‘காஷ்மோரா’, ‘ராஜ்நாயக்’ என்ற இரண்டு கதாபாத்திரங்களைப் பற்றி சொன்னார். அதிலேயே நான் மயங்கிட்டேன். இப்படத்தில் காமெடி, வரலாறு, பேய் என அனைத்துமே இருக்கிறது. 30 நிமிடங்கள் மட்டுமே வரலாற்றுக் காட்சிகள் இருக்கும்.

ஒரு இயக்குநர் கூறும் கதையில் காமெடி, சுவாரஸ்யம், பிரம்மாண்டம் என அனைத்துமே இருக்கும்போது ரிஸ்க் எடுத்து பார்க்கலாமே என்று ஆரம்பித்ததுதான் இந்த ‘காஷ்மோரா’. ‘தோழா’வும் ‘காஷ்மோரா’வும் ஒன்றாக ஆரம்பிக்கப்பட்ட படங்கள். மூணு வருஷத்துக்கு முன்னாடி ஆரம்பிச்சது. இப்போதான் படம் முடிஞ்சு வெளியிடும் நேரம் வந்திருக்கு.

கோகுல் சார், ஆரம்பத்துல இருந்தே அருமையா வொர்க் பண்ணாரு. என்ன ஷுட் பண்ண்ணும்ன்னு பேப்பர்ல இருக்கோ அதைத்தான் ஷூட் செய்வாரு. தேவையில்லாமல் எதையும் ஷூட் செய்யலை.

படத்துல காமெடியும் நிறையவே இருக்கு. இது காமெடி கலந்த படமும்கூட. தயவு செய்து டிரைலரைப் பார்த்துட்டு இதுவும் ஒரு ‘பாகுபலி’யோன்னு நினைச்சி வந்துடாதீங்க. நானும் திரும்பத் திரும்ப சொல்றேன். இது ‘பாகுபலி’ அல்ல. இது ஒரு ஜாலியான படம், நீங்க எதிர்பார்க்கிற ஜாலியான பல விஷயங்கள் இந்தப் படத்துல இருக்கும்.” என்றார் கார்த்தி.

Our Score