எஸ்.பி.டி.ஏ.ராஜசேகர், சோஹம் அகர்வால் இருவரும் இணைந்து தயாரித்துள்ள புதிய படம் ‘முன்னோடி’.
தெலுங்கில் தற்போது வளர்ந்து வரும் ஹரீஷ், யாமினி பாஸ்கர் இருவரும் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர். நகைச்சுவை நடிகராக நிரஞ்சன் என்பவர் அறிமுகமாகியுள்ளார்.
மேலும், இரண்டு கதாநாயக நடிகர்கள் இப்படத்தின் மூலம் வில்லன்களாகியுள்ளனர். ‘கங்காரு’ படத்தின் நாயகன் அர்ஜுனா, ‘குற்றம் கடிதல்’ படத்தில் குணச்சித்திர நடிப்பால் நம் மனம் கவர்ந்த பாவல் நவநீதன் இருவரும் வில்லன்களாக நடிக்கிறார்கள்.
இவர்களுடன் ஷிஜாய் வர்கீஸ், நிரஞ்சன், சுரேஷ், தமன், வினுக்ருதிக் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – வினோத் ரத்னசாமி. இசை – கே.பிரபு ஷங்கர். படத் தொகுப்பு – என்.சுதா. நடனம் – ஏபி.சந்தோஷ். சண்டை பயிற்சி – டேஞ்சர் மணி. எழுத்து, இயக்கம் – எஸ்.பி.டி.ஏ.குமார் இயக்கியுள்ளார். தொழிலதிபரான இவர் தென்காசிக்காரர். சினிமா மீது கொண்ட காதலால் யாரிடமும் பணிபுரியாமல் இந்தப் படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாகிறார்.
‘முன்னோடி’ படம் சென்னையில் நடக்கும் கதை. என்றாலும் பிற வட்டார மொழியையும் சில கதாபாத்திரங்கள் பேசுகின்றன. படப்பிடிப்பு 120 நாட்கள் நடை பெற்றுள்ளது. படம் நன்றாக வரவேண்டும் என்று இயக்குநர் உறுதியாக இருந்ததால், செலவைப் பற்றி கவலைப்படவே இல்லையாம். நல்ல விஷயங்களுக்காக மெனக்கிடுவதில் தவறில்லைதானே.
படம் பற்றி இயக்குநர் எஸ்.பி.டி.ஏ.குமார் பேசும்போது, “ஒருவன் யாரை முன்னோடியாகக் கொண்டு பின்பற்றுகிறானோ, அதைப் பொறுத்தே அவனது வாழ்வு உயர்வாகவோ, தாழ்வாகவோ அமையும். ‘வாழ்க்கையில் யாரை அல்லது எதை முன்னோடியாக எடுத்துக் கொள்கிறோம் என்பது முக்கியம்’ என்கிற கருத்தை முன் வைத்துதான் இந்தப் படம் உருவாகியுள்ளது.
இன்று நம் வாழ்க்கையில் உறவுகளின் மேன்மை தெரிவதில்லை அப்படித் தெரியும்போது அவை இருப்பதில்லை. நம்மை விட்டுப் போய்விடுகின்றன. இதைத்தான் இந்தப் படம் பேசுகிறது.
படத்தின் நாயகன் நல்லவனா கெட்டவனா..? சூழலால் மாறியவனா..? மாற்றப்பட்டவனா..? என்பது மட்டுமல்ல நல்லவனை முன்னோடியாக எண்ணுகிற பாத்திரத்தின் நிலையையும், தீயவனை முன்னோடியாகக் கொண்ட பாத்திரத்தின் நிலையையும் காட்டி திரைக்கதை அமைத்துள்ளேன். இதனால் படத்தின் திரைக்கதையில் சுவாரஸ்யம் குறையாமல் படம் விறுவிறுப்பாகச் செல்லும்.
நீண்ட இடை வெளிக்குப் பிறகு சித்தாரா இதில் அம்மா வேடமேற்று நடித்துள்ளார். படம் முழுக்க வரும் நல்ல பாத்திரம் அவருக்கு.
படத்திற்கு இசை பிரபு சங்கர். இவர் குறும்பட உலகில் பிரபலமானவர் மட்டுமல்ல; கலைஞர் டிவியின் நாளைய இயக்குநர்களில் டைட்டில் வென்ற இசையமைப்பாளர். படத்தில் நான்கு பாடல்கள். தவிர இரண்டு சிறு பாடல்களும் உண்டு. ஒரு பாடல் முழுக்க, முழுக்க கிராபிக்சில் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆறு மாதங்கள் ஆகியுள்ளன.
நன்கு முன் தயாரிப்பு செய்து கொண்டுதான் படப்பிடிப்பினை நடத்தியுள்ளோம். இதுவரை 95% படப்பிடிப்பு முடிந்து விட்டது. இந்த ‘முன்னோடி’ திரைப்படம் காதல், ஆக்ஷன், செண்டிமெண்ட் கலந்த கமர்ஷியல் படமாக இருந்தாலும், உளவியல் சார்ந்த விஷயங்களும் குறையாமல் இருக்கும்.
காட்சிக்குக் காட்சி விறுவிறுப்பு ஏற்றும்படி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. படத்தில் நான் பார்த்த, கேள்விப்பட்ட அனுபவங்கள் காட்சிகளாகியுள்ளன. போலீஸ் எப்படி ஒவ்வொரு வழக்கின்போதும் குற்றங்களை கூர்மையாக துப்பறிந்து கண்டு பிடிக்கிறார்கள் என்பதை அறிந்து வியந்தவன் நான். இதில் சிலவற்றை படத்தில் காட்சிகளாக்கியுள்ளேன்.
இதில் வரும் சண்டைக் காட்சிகள் நிச்சயம் பார்ப்பவர் மனதில் பல நாள் நிற்கும். தொழில் நுட்பரீதியிலும் பேசப்படும் விதத்தில் காட்சிகளில் அசத்தியிருக்கிறோம்…” என்றார்.
‘முன்னோடி’ படத்தை வரும் டிசம்பர் மாதம் வெளியிடுவதற்கு ஏதுவாக, தற்போது படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.









