அரசியல், காதல் கலந்த தேசப் பாதுகாப்பு தொடர்புடைய திரைப்படம் ‘காப்பான்’

அரசியல், காதல் கலந்த தேசப் பாதுகாப்பு தொடர்புடைய திரைப்படம் ‘காப்பான்’

‘எந்திரன் 2.0’, ‘செக்கச் சிவந்த வானம்’, ‘கோலமாவு கோகிலா’, ‘வட சென்னை’ ஆகிய படங்களைத் தயாரித்த லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘காப்பான்’.

இந்தப் படத்தில் சூர்யா நாயகனாகவும், மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லால் ஒரு முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மேலும் சாயீஷா, ஆர்யா, சமுத்திரக்கனி, போமன் இரானி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

Kaappaan-poster-13Kaappaan-poster-13

ஒளிப்பதிவு – எம்.எஸ்.பிரபு, இசை – ஹாரிஸ் ஜெயராஜ், பாடல்கள் – கபிலன், கபிலன் வைரமுத்து, வைரமுத்து, ஞானகரவேல், நடன இயக்கம் – பாபா பாஸ்கர், கணேஷ் ஆச்சார்யா, ஷோபி, படத் தொகுப்பு – ஆண்டனி, மக்கள் தொடர்பு – டைமண்ட் பாபு, கதை, திரைக்கதை, வசனம் – பட்டுக்கோட்டை பிரபாகர், இயக்கம் – கே.வி.ஆனந்த்.

இந்தப் படத்தில் பிரபல எழுத்தாளரான பட்டுக்கோட்டை பிரபாகர் முதல்முறையாக இயக்குநர் கே.வி.ஆனந்துடன் இணைந்திருக்கிறார். கதை, திரைக்கதையை இருவரும் இணைந்து எழுத, வசனத்தை மட்டும் பட்டுக்கோட்டை பிரபாகர் தனித்து எழுதியிருக்கிறார்.

Kaappaan-poster-12

கே.வி.ஆனந்த், சூர்யா கூட்டணி ‘அயன்’, ‘மாற்றான்’ ஆகிய படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக இத்திரைப்படத்தில் இணைந்துள்ளது. இவர்களுடன் லைகா தயாரிப்பு நிறுவனம் இணைந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

‘கனா கண்டேன்’, ‘அயன்’, ‘கோ’, ‘மாற்றான்’, ‘அனேகன்’, ‘கவண்’ என்று வித்தியாசமான கதைக் களங்களின் படைப்புகளை படைத்திருக்கும் இயக்குநர் கே.வி.ஆனந்தின் ஏழாவது படைப்புதான் இந்த ‘காப்பான்’ திரைப்படம்.

Kaappaan-poster-11

‘காப்பான்’ படத்தின் கதையும், கதையின் பின்னணி களமும் தமிழ்ச் சினிமாவிற்குப் புதியது. “இது அரசியல் படமா..?” என்றால் “ஆமாம்…” என்றுதான் சொல்ல முடியும். ஆனால் கட்சிகளின் அரசியலைப் பற்றி இது பேசவில்லை. நாட்டின் அரசியலைப் பற்றித்தான் பேசுகிறது.

“இது பாதுகாப்புப் படையைப் பற்றிப் பேசும் படமா..?” என்றால் “அதுவும் உண்மைதான்..” என்று சொல்லலாம். “ஆனால் எதைப் பாதுகாக்கிறார்கள்..?” என்பதைப் பற்றி இத்திரைப்படம் பேசுகிறது.

“இது காதல் திரைப்படமா..?” என்றால் “ஆமாம்.. காதலும் கலந்திருக்கும் படம்” என்று சொல்லலாம். மொத்தத்தில் ஒரு அழுத்தமான கதைக் களத்துடன் துள்ளத் துடிக்கும் கமர்ஷியல் கலந்த ஆக்சன், திரில்லர் திரைப்படமாக இந்தக் ‘காப்பான்’ உருவாகியிருக்கிறது.

Kaappaan-poster-8

இந்தப் படத்தில் நாயகனான சூர்யாவின் கதாபாத்திரம் பன்முகத்தன்மை கொண்டது. பலருக்குக் கடவுளாகத் தெரியும் சிலை.. சிலருக்கு மட்டும் கல்லாகத் தெரிவதுபோல.. சூர்யாவின் கதாபாத்திரம் நிஜம், நிழல் இரண்டும் கலந்து வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

என்ன செய்தால் கெட்டவன்..?

என்ன செய்தால் நல்லவன்..?

நல்லவன் கெட்டது செய்தால்..?

கெட்டவன் நல்லது செய்தால்..?

இப்படியான கேள்விகளுடன் அமைக்கப்பட்டிருக்கும் சூர்யா கதாபாத்திரத்திடம் ‘நாயகன்’ படத்தில் கேட்கப்படும் கேள்வியான ‘நீங்க நல்லவரா..? கெட்டவரா..?’ என்ற கேள்வியை நிச்சயமாகக் கேட்கலாம்.

“நல்லது செய்வதற்காகக் கொஞ்சம் கெட்டதும் செய்ய வேண்டியிருக்கிறது…” என்று மோகன்லால் இந்தப் படத்தில் பேசும் வசனம் சூர்யாவுக்கும் பொருந்தும்வகையில் அவரது கேரக்டர் ஸ்கெட்ச் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

Kaappaan-poster-10

கற்பனையில் ஒரு அரண்மனையையும், அரங்கத்தையும் அழகுணர்ச்சியுடன் வடிவமைப்பதைவிடவும் நிஜத்தில் அதை அமைப்பதுதான் சவாலான விஷயம். அமைக்கப்பட்ட அரங்கமா அல்லது நிஜ அரங்கமா என்று சந்தேகம் வரும் அளவுக்கு அரங்கங்கள் அமைக்கப்பட்டால்தான் அது பெருமைக்குரிய விஷயம். அந்தப் பெருமையை இந்தப் படத்தில் செய்திருப்பவர் கலை இயக்குநரான கிரண்.

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஐந்து பாடல்களையும் ஐந்து ரகமாக, ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருக்கும்வகையில் அளித்திருக்கிறார். ஆனால், எல்லாப் பாடல்களுமே இளமைத் துடிப்புடன் இருக்கும்வகையில் படைக்கப்பட்டிருக்கிறது.

ஒரு பாடலை ஹாரிஸ் ஜெயராஜின் மகளான நிகிதா ஹாரிஸ் பாடியதுடன் அந்தப் பாடலில் நடித்தும் இருக்கிறார்.

Kaappaan-poster-5

படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘சிறுக்கி சீனிக்கட்டி’ பாடலை பாடலாசிரியர் ஞானகரவேல் எழுதியிருக்கிறார். செந்தில் கணேஷும், ரமணி அம்மாளும் இந்தப் பாடலை பாடியிருக்கிறார்கள்.

‘விண்ணில் விண்மீன் ஆயிரம்’ பாடலை கவிஞர் வைரமுத்து எழுத, நிகிதா ஹாரிஸ் பாடியிருக்கிறார்.

‘ஹேய் அமிகோ’ பாடலை கவிஞர் வைரமுத்து எழுத, லெஸ்லி லீவிஸ் மற்றும் ஜோனிதா காந்தி இருவரும் பாடியிருக்கிறார்கள்.

‘குறிலே குறிலே’ பாடலை கவிஞர் கபிலன் எழுத, ஜாவேத் அலியும், கே.டி.தர்ஷனாவும் பாடியுள்ளனர்.

‘மச்சான் இங்க வந்தீரா’ பாடலை கவிஞர் கபிலன் வைரமுத்து எழுத, கரீஷ்மா ரவிச்சந்திரனும், நிகிதா காந்தியும் பாடியுள்ளனர்.

Kaappaan-poster-2

‘காப்பான்’ படம் இன்னொரு ‘உலகம் சுற்றும் வாலிபன்’ என்று சொல்லும் அளவுக்கு பல்வேறு நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. லண்டன், ஜாவா தீவுகள், மற்றும் ரஷ்யாவில் இருக்கும் உலகப் புகழ் பெற்ற நன்னீர் ஏரியான ‘பைகால் ஏரி’ ஆகிய இடங்களில் பல காட்சிகளை படமாக்கியிருக்கிறார்கள்.

தவிர இந்தியாவில் குலுமனாலி, டெல்லி, ஹைதராபாத், பஞ்சாப், சென்னை, தஞ்சாவூர் ஆகிய இடங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது.

‘காப்பான்’ திரைப்படத்தின் டிரெயிலரை இதுவரையிலும் ஒரு கோடியே நாற்பத்து மூன்று லட்சம் பேருக்கு மேல் பார்த்திருக்கிறார்கள். இதேபோல் இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘சிறுக்கி சீனிக்கட்டி’ என்கிற பாடலுக்கான வீடியோவை மட்டும் இருபது லட்சம் பேருக்கும் மேல் பார்த்திருக்கிறார்கள் என்பது பெருமைக்குரிய விஷயமாகும்.

‘காப்பான்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 30-ம் தேதியன்று உலகமெங்கும் பிரம்மாண்டமான முறையில் வெளியாகவுள்ளது.

Our Score