“சூர்யா பேசியே மோடிக்கு கேட்டிருச்சு…” – நடிகர் சூர்யாவைப் பாராட்டிய ரஜினி..!

“சூர்யா பேசியே மோடிக்கு கேட்டிருச்சு…” – நடிகர் சூர்யாவைப் பாராட்டிய ரஜினி..!

லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சூர்யாவின் நடிப்பில் இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கியிருக்கும் புதிய திரைப்படம் ‘காப்பான்’.

இந்தப் படத்தில் சூர்யாவுடன், மோகன்லால், ஆர்யா, சாயீஷா, போமன் இரானி, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹாரிஸ் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்சன் சென்டரில் நடைபெற்றது.

kaappaan-audio-4

இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டு படக் குழுவினரை வாழ்த்தினார்.

இந்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சூர்யா, “எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், வெற்றி தோல்வி எது வந்தாலும், தூய்மையான அன்பால்தான் நான் இந்த இடத்தில் இருக்கிறேன்.

577B1397

நாம் எடுக்கும் முயற்சிகள் தவறலாம். ஆனால், விடாமுயற்சியை மட்டும் நாம் தவற விடக்கூடாது என்று எப்போதும் நினைத்துக் கொள்பவன் நான். நிஜ வாழ்வில் நான்கு பேருக்காவது பயன்படும் வகையில் வாழ வேண்டும் என்று நினைக்கிறேன்.

சமூகப் பணிகளை விளம்பரத்திற்காக அல்லாமல் ஆத்மார்த்தமாக செய்யலாம். எதையும் நாம் விளம்பரத்திற்காக செய்ய வேண்டாம். எங்கு என்ன பேச வேண்டுமோ அங்கு மட்டும் அதை பேசினால் போதும். இல்லையென்றால் எதற்காக பேசினோமோ அதற்கான மதிப்பு இல்லாமல் போய்விடும்.

இயக்குநர் கே.வி.ஆனந்த் சார் எனது வாழ்க்கையில் ரொம்பவும் முக்கியமானவர். எனது திரை பயணத்தில் அவர் இயக்கம் செய்த ‘அயன்’ திரைப்படம்தான் என்னை அடுத்தக் கட்டத்திற்கு உயர்த்தியது. ‘காக்க காக்க’ படத்தில் முதன்முறையாக ஹாரிஸ் சாருடன் பணியாற்றினேன். ஷங்கர் சார் சொன்னது போல், கே.வி.ஆனந்த் சார் ஒரு ராட்சசன். அசுரன் மாதிரி வேலை பார்ப்பார்.

BAS_1120

இந்தப் படத்தில் ஆர்யா எதிரிலேயே சாயீஷாவிடம் காதல் சொல்வது போன்ற ரொமாண்டிக் சீன்கள் நடித்ததுதான் மிகவும் கடினமாக இருந்தது. லால் சாருடன் பணியாற்றியது ஒரு அண்ணனுடன் இருந்தது போன்ற உணர்வை அளித்தது. சமுத்திரக்கனி, போமன் இரானி என பல ஸ்டார்களுக்கும் இயக்குநர் திரைக்கதையில் நிறையவே இடம் கொடுத்திருக்கிறார்..

இந்த ‘காப்பான்’ திரைப்படம் கிராமத்தில் இருந்து வெளிநாடுகள்வரை உள்ள அனைவருக்கும் போய் சேரும் சிந்திக்க வைக்கும். அதே சமயம் சிறந்த பொழுதுபோக்கு படமாகவும் இருக்கும்..” என்றார்.

பாடல்களை வெளியிட்டு நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது, “தம்பி சூர்யாவின் இன்னொரு முகம் சில தினங்களுக்கு முன்புதான் எனக்கு தெரிந்தது. மாணவர்கள் படும் கஷ்டத்தை அருகில் இருந்து பார்த்தவர் சூர்யா. அவர்களுக்கு நிறையவே உதவிகளையும் செய்து வருகிறார். அந்த வகையில் புதிய கல்வி கொள்கை விஷயத்தில் சூர்யா பேசிய கருத்து சரிதான். அவருடைய பேச்சுக்கு என் ஆதரவு உண்டு. அவர் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்.

rajinikanth

‘புதிய கல்விக் கொள்கை குறித்து ரஜினி பேசினால் மோடிக்கு கேட்டிருக்கும்’ என்று சொன்னார்கள். ஆனால், இப்போது சூர்யா பேசியே மோடிக்கு கேட்டுள்ளது. இந்தக் கல்வி கொள்கை பற்றி சாதாரணமாக சூர்யா பேசவில்லை. மாணவர்கள் படும் இன்னல்களை அருகில் இருந்து பார்த்ததால்தான் இப்படி பேசியுள்ளார். சினிமா ரசிகர்களுக்கு மட்டுமின்றி மக்களுக்கும் உங்களது தொண்டு தேவை சூர்யா.

அதே போல இன்றைய இளைஞர்கள் தமிழ் மொழியின் சிறப்பை அறிந்து கொள்ள வேண்டும். ‘தமிழாற்றுப் படை’ நூலை படித்த பின்பு கவிஞர் வைரமுத்து மீதான மதிப்பு இன்னமும் பல மடங்கு உயர்ந்துள்ளது. ‘தமிழாற்றுப் படை’யில் தமிழ் பற்றிய தகவல்கள் அனைத்தும் உள்ளன.

rajinikanth-surya

கே.வி.ஆனந்த் திறமையான இயக்குனர். நான் நடித்த ‘சிவாஜி’ உள்ளிட்ட பல படங்களுக்கு சிறப்பான ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அவர் இயக்கத்தில் தயாராகி உள்ள இந்த ‘காப்பான்’ படம் நிச்சயம் வெற்றி பெறும்.

அதேபோல், தம்பி சூர்யாவும் தன்னுடைய விடாமுயற்சியால்தான் இந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறார். ‘நேருக்கு நேர்’ படத்தில் அவரது நடிப்பு பேசப்படும்படி இல்லை. அதன் பிறகு பாலாவின் ‘நந்தா’, ‘பிதாமகன்’ படங்களில் சிறந்த நடிகனாக தன்னை செதுக்கி உயர்ந்த இடத்துக்கு வந்தார். ‘காக்க காக்க’, ‘கஜினி’, ‘அயன்’ என்று பல படங்களில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தினார். இந்தப் படத்தில் ஆர்யாவும் நடித்திருக்கிறார். ‘நான் கடவுள்’ படத்தில் அகோரியாக அவர் நடித்ததை பார்த்து வியந்திருக்கிறேன்.

1960-களில் இருந்த ஒரு பெரிய நடிகரின் கால்ஷீட்டுக்கு அவ்வளவு டிமாண்ட். அவர் கால்ஷீட் கொடுக்கலைன்னா, வேற யார்கிட்டேயும் போக மாட்டாங்க. காத்திருந்து அவர்கிட்டயே கால்ஷீட் வாங்குவாங்க.

அந்த நடிகர், தன் வீட்டுல ரெண்டு செடிகளை நல்ல, நல்ல உரங்களைப் போட்டு வளர்த்தார். அந்த ரெண்டு செடிகளும் மரமான பிறகு, பணத்தை மட்டும் காய்க்கல… நல்ல பெயர், புகழ், செல்வாக்குனு எல்லாமே கொடுத்தது. அந்த நடிகர் சிவக்குமார் ஸார்தான். அந்தச் செடிகள்தான் சூர்யாவும், கார்த்தியும்.

சிவகுமார் சார்கூட ‘கவிக்குயில்’, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ன்னு ரெண்டு படங்கள்ல நடிச்சிருக்கேன். ‘கவிக்குயில்’ பட ஸ்பாட்ல தேவி, ஃபடாஃபட் ஜெயலஷ்மி ரெண்டுபேர்கிட்டேயும் நான் பேசிக்கிட்டு இருப்பேன். அப்போ ‘எப்போ பார்த்தாலும் பொண்ணுங்ககிட்டயே பேசிக்கிட்டு இருக்க. ஏதாவது புத்தகத்தைப் படி, எழுது’ன்னு சிவகுமார் என்னைத் திட்டுவார். ‘நான் என்ன சார் பண்றது…? அவங்கதான் என்கிட்டயே பேசுறாங்க’ன்னு சொன்னேன்.

‘அவங்க என்கிட்ட பேசுறாங்களாய்யா?’ன்னு கேட்டார். ‘ஏன் சிவக்குமார் ஸார்கிட்ட பேச மாட்டேங்கிறீங்க’ன்னு அந்த நடிகைகள்கிட்ட கேட்டேன். சிவகுமார் சார் கோபப்படலைன்னா அவங்க சொன்ன பதிலைச் சொல்றேன். ‘அவர்கிட்ட பேச ஆரம்பிச்சா, 100 பூக்களோட பெயரைச் சொல்ல ஆரம்பிச்சிருவார்’ன்னு சொன்னாங்க.

அடுத்து, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்ல ஒரு சம்பவம். ஒரு நாள் எனக்கு ‘சீன் இல்லை’ன்னு சொல்லிட்டாங்க. அப்போ நானும் நடிகை சுமித்ராவும் உக்காந்து பேசிக்கிட்டு இருந்தோம். கொஞ்ச நேரத்துல ஒரு அசோஸியேட் டைரக்டர் வந்து என் கையில் ரெண்டு பக்க வசனத்தைக் கொடுத்து, ‘இதை ரெடி பண்ணிக்கோங்க. சூரியன் மறையும்போது எடுக்கணும். ஒரே டேக்ல பண்ற மாதிரி தயாராகிக்கோங்க’னு சொல்லிட்டுப் போயிட்டார்.

எல்லாமே திருக்குறள் மாதிரி இருந்தது. சரின்னு நானும் தனியா வந்து ஒரு மரத்தடியில் சேர் போட்டு உட்கார்ந்து, சாப்பிடாமல்கூட மனப்பாடம் பண்ணிக்கிட்டு இருந்தேன். சாயங்காலம் ஆகிருச்சு.. பேக்-அப்பும் சொல்லிட்டாங்க. ஆனால், அந்த சீனை எடுக்கவே இல்லை.

அப்போ சிவக்குமார் சார் என்கிட்ட வந்து, ‘படத்துல இந்த சீனே கிடையாது. நீ ரொம்ப நேரம் அவங்ககூட பேசிக்கிட்டு இருந்ததை வேற யாராவது பார்த்து உன்னை பொம்பளப் பொறுக்கின்னு சொல்லிடக் கூடாதுல்ல. அதனாலதான், நான் இதைக் கொடுக்கச் சொன்னேன்’ன்னு சொன்னார். சக நடிகன் கெட்ட பெயர் வாங்கக் கூடாதுங்கிற அக்கறை அவருக்கு எப்போதும் இருக்கும்.

நான் ஒருமுறை இமயமலைக்கு சென்றிருந்தபோது கங்கை ஆற்றில் குளித்தேன். அப்போது என் கழுத்தில் அணிந்திருந்த ருத்ராட்ச மாலை கழன்று விழுந்துவிட்டது. இதனால் கவலைப்பட்டேன். அப்போது எதிரே வந்த அகோரி ஒருவர் என்னை பார்த்து, ‘ருத்ராட்ச மாலை உனக்கு வேண்டும் இல்லையா…? அது கிடைக்கும்’, என்று கூறிவிட்டு சென்றார்.

அதுபோல ஒரு ஆசிரமத்துக்கு நான் சென்றபோது ஒரு பெண் என்னிடம் வந்து, ‘உங்களுக்காகத்தான் காத்திருக்கிறேன்’ என்று சொல்லிவிட்டு என்னிடம் ஒரு ருத்ராட்ச மாலையை கொடுத்தார். இதுதான் அகோரிகளின் மகத்துவம். இந்த விஷயம் இந்தப் படத்திற்கு சம்மந்தம் இல்லை என்றாலும் சொல்லவேண்டி உள்ளது.

லைகா நிறுவனம் தயாரிக்கப் போகும் கமல்ஹாசன் நடிக்கவிருக்கும் ‘இந்தியன்-2’ நிச்சயம் வெற்றி பெறும். இதேபோல் லைகா தயாரிக்கும் இன்னொரு படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தை மணிரத்தினம் இயக்க உள்ளார். இப்படம் எப்படி வரும் என ஆவலாக காத்திருக்கிறேன்.

நான் நடித்து வரும் ‘தர்பார்’ படம் நல்லபடியாக உருவாகி வருகிறது. ‘என் கலைப் பயணத்தில் இப்படி ஒரு ரஜினி படம் வந்திருக்கக் கூடாது’ என சொல்லி, சொல்லி ‘ராட்சசன்’ மாதிரி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உழைத்து வருகிறார்.

இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நானும் ஒரு படம் நடிக்க வேண்டியிருந்தது, ஆனால் சில காரணங்களால் அது நடைபெறவில்லை இந்தக் ‘காப்பான்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமையும்…” என்று வாழ்த்தினார்.

Our Score