இயக்குநர்கள் சங்கத் தேர்தல்- ஆர்.கே.செல்வமணி அணி அமோக வெற்றி..!

இயக்குநர்கள் சங்கத் தேர்தல்- ஆர்.கே.செல்வமணி அணி அமோக வெற்றி..!

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கு நடைபெற்ற தேர்தலில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தலைமையிலான அணி அனைத்து பதவிகளையும் பிடித்து அமோக வெற்றியைப் பெற்றுள்ளது.

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கு 2 வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடப்பது வழக்கம். அதன்படி 2019-2021-ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தத் தேர்தலில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தலைமையில் ‘புது வசந்தம் அணி’ என்கிற பெயரில் ஒரு அணியும், இயக்குநர் அமீர் தலைமையில் ஒரு அணியும் போட்டியிட தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தன.  ஆனால் அமீர் மற்றும் ஜனநாதனின் வேட்பு மனுக்கள் தேர்தல் விதிமுறைப்படி தகுதியில்லாமல் இருந்ததால் நீக்கம் செய்யப்பட்டன. இதனைக் கண்டித்த அந்த அணியினர், ஒட்டு மொத்தமாக தேர்தலில் இருந்து விலகிக் கொண்டனர்.

இதையடுத்து இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தலைமையிலான அணியினர் போட்டியிட ஆளே இல்லாத நிலையில் களத்தில் நின்றனர்.

puthu vasantham-team-2

ஏற்கெனவே பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியில்லாததால் ஆர்.கே.செல்வமணி அணியின் சார்பாகப் போட்டியிட்ட இயக்குநர் R.V.உதயகுமார் பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதேபோல் பொருளாளர் பதவிக்கும் போட்டியில்லாததால் ஆர்.கே.செல்வமணி அணியில் போட்டியிட்ட இயக்குநர் M.பேரரசு, பொருளாளர் பதவிக்குப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

puthu vasantham-team-3

மற்றைய பதவிகளுக்கு போட்டிகள் இருந்ததால் அவைகளுக்குத் தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேற்று வடபழனியில் உள்ள இசைக் கலைஞர்கள் சங்கத்தில் காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரையிலும் நடைபெற்றது. 1512 பேர் இந்தத் தேர்தலில் வாக்களித்தனர்.

வாக்குப் பதிவு முடிந்த உடனேயே வாக்கு எண்ணிக்கையும் துவங்கியது.

தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இயக்குநர் R.K.செல்வமணி 1386 வாக்குகள் பெற்று பெரும் வெற்றியைப் பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட இயக்குநர் வித்யாசாகர் வெறும் 100 வாக்குகளே பெற்று படுதோல்வியடைந்தார்.

துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர்களில் இயக்குநர் K.S.ரவிக்குமார் 1289 வாக்குகளையும், இயக்குநர் S ரவிமரியா 1077 வாக்குகளையும், இயக்குநர் வேல்முருகன் 442 வாக்குகளையும் பெற்றனர். இவர்கள் அதிகப்படியான வாக்குகளைப் பெற்றிருந்த இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமாரும், எஸ்.ரவி மரியாவும் வெற்றி பெற்றார்கள்.

r.k.selvamani-team-4

இணைச் செயலாளர்கள் பதவிக்கான தேர்தலில் இயக்குநர் சுந்தர் C, 1271 வாக்குகளையும், இணை இயக்குநர் ஏகம்பவாணன், 1182 வாக்குகளையும், இயக்குநர் லிங்குசாமி 1157 வாக்குகளையும், இயக்குநர் சித்ரா லட்சுமணன் 990 வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றனர்.

மற்றவர்களான  இயக்குநர் ராஜா கார்த்திக் 740 வாக்குகளையும், இயக்குநர் நாகராஜ் மணிகண்டன் 196 வாக்குகளையும் பெற்று தோல்வியடைந்தனர்.

r.k.selvamani-team-3

12 செயற்குழு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டவர்களில்  இயக்குநர்கள் ரமேஷ் கண்ணா 1243 வாக்குகள், மனோஜ் குமார் 1228 வாக்குகள், இணை இயக்குநர் செல்வி ஜெனிபர் ஜூலியர் 1200 வாக்குகள், இயக்குநர்கள் மனோபாலா 1196 வாக்குகள், ஆர்.கே.கண்ணன் 1157 வாக்குகள், ஏ.வெங்கடேஷ் 1150 வாக்குகள், ஏ.ஆர்.முருகதாஸ் 1149 வாக்குகள், சரண் 1025 வாக்குகள், முத்து வடுகு 1019 வாக்குகள், இணை இயக்குநர் நம்பி 824 வாக்குகள், இயக்குநர்கள் திருமலை 810 வாக்குகள், ராம்கி 762 வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.

Our Score