கட்டசேரி ஜோசப் யேசுதாஸ் என்ற கே.ஜே.யேசுதாஸ், கேரள மாநிலம் கொச்சியில் 1940-ம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி பிறந்தவர். இவரது தந்தை அகஸ்டின் ஜோசப், பிரபல பாடகராகவும் மேடை நடிகராகவும் விளங்கியவர்.
மூத்த மகனான யேசுதாசுக்கு சிறு வயதிலேயே இசைப் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்தார். கர்நாடக இசையின் அடிப்படையான விஷயங்களை தந்தையிடம் இருந்தே கற்றுக் கொண்ட யேசுதாஸ், பின்னர் குஞ்சன் வேலு ஆசான், பி.எக்ஸ்.ஜோசப், சிவராமன் நாயர், ராமகுட்டி பாகவதர், கே.ஆர்.குமாரசாமி, செம்மங்குடி சீனிவாச ஐயர், செம்பை வைத்யநாத பாகவதர், பல்லவி நரசிம்ம ஆச்சாரியா ஆகியோரிடம் இசை பயின்றார்.
கொச்சி, செயிண்ட் செபாஸ்டியன் உயர்நிலைப் பள்ளி மாணவனாக இருந்தபோதே பல்வேறு பாட்டு போட்டிகளில் பங்கேற்று சிறந்த பாடகராக தேர்வு செய்யப்பட்டு பரிசுகளை வென்றார்.
மாநில அளவிலான இளைஞர் விழாவில் கர்நாடக வாய்ப்பாட்டு பிரிவில் முதல் பரிசை வென்றது, இவரது இசைத் திறனை பெரிய அளவில் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.
எர்ணாகுளத்தில் 1958-ல் நடந்த கேரள கத்தோலிக்க இளைஞர் விழாவின் பாட்டு போட்டியில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.
பள்ளிப் படிப்பு முடிந்ததும், கொச்சின் அருகே திரிப்புனித்துராவில் உள்ள ஆர்.எல்.வி. மியூசிக் அகடமியில் சேர்ந்து கானபூஷனம் பாடப் பிரிவில் சேர்ந்து பயின்று, சிறந்த மாணவராக டபுள் புரமோஷனுடன் தேர்ச்சி பெற்றார்.
மேற்படிப்புக்காக, திருவனந்தபுரம் ஸ்ரீசுவாதித் திருநாள் மியூசிக் அகடமியில் சேர்ந்தவர், குடும்ப சூழல் காரணமாக படிப்பை தொடர முடியாமல் போனது.
1961-ல் முதல் முறையாக திரைப்பட வாய்ப்பு கிடைத்தது. பிரபல கவிஞர் ஸ்ரீ நாராயண குரு எழுதிய ’ஜாதி பேதம் மத துவேஷம் ஏதுமில்லா’ என்ற அந்தப் பாடல் மிகுந்த வரவேற்பைப் பெற்றது (படம்: கால்பாடுகள்).
இதைத் தொடர்ந்து யேசுதாஸுக்கு திரையுலகில் வாய்ப்புகள் குவிந்தன. அனைத்து தரப்பினரையும் தனது கம்பீரமான இனிய குரலால் கவர்ந்திழுத்த யேசுதாஸ், கேரளா மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணிப் பாடகராக தனது முத்திரையைப் பதித்தார்.
வீணை எஸ். பாலச்சந்தர் இயக்கிய ‘பொம்மை’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘நீயும் பொம்மை, நானும் பொம்மை’ என்ற பாடல் மூலம்தான் இந்த யேசுதாஸ் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். ஆனால் யேசுதாஸ் பாடல் பாடி தமிழில் முதலில் வெளியான படமாக ‘கொஞ்சும் குமரி’ அமைந்தது.
1970-களில் இந்தித் திரைப்படங்களில் பாடத் துவங்கினார் யேசுதாஸ். முதல் இந்தி மொழிப் பாடல் ‘ஜெய் ஜவான் ஜெய் கிசான்’ என்ற திரைப்படத்திற்காக பாடினார். ஆயினும் அவர் பாடி வெளிவந்த முதல் இந்திப் படமாக ‘சோடிசி பாத்’ அமைந்தது.
இவற்றைத் தொடர்ந்து பல மொழி படங்களில் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடி பல விருதுகளையும் பெற்றிருக்கிறார் யேசுதாஸ். எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், என்.டி.ராமாராவ், அமிதாப்பச்சன், சஞ்சீவ்குமார், சத்யன், பிரேம் நசீர், மம்மூட்டி, மோகன்லால் உள்பட இந்தியாவின் பிரபல நடிகர்கள் பலருக்கும் பாடல்களைப் பாடியுள்ளார்.
1968-ல் சோவியத் அரசின் அழைப்பின் பேரில் கலாசாரத் தூதராக ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கஜகஸ்தான் வானொலியில் இவர் பாடிய ரஷ்ய மொழிப் பாடல் அந்நாட்டு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
புகழ் பெற்ற லண்டன் ராயல் ஆல்பர்ட் ஹால் (2001), சிட்னி ஓபரா ஹவுஸ் (2006) அரங்குகளில் இசை நிகழ்ச்சி நடத்தும் வாய்ப்பும் இவரைத் தேடி வந்தது.
1965-ல் இந்தியா – சீனா இடையே போர் நடந்தபோது, நாடு முழுவதும் இசை நிகழ்ச்சிகளை நடத்தி நிதி திரட்டியவர், டெல்லியில் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியிடம் அதை நேரில் வழங்கி அவரது பாராட்டுகளைப் பெற்றார்.
தமது திரைவாழ்வில் வெற்றிகரமாக 50 ஆண்டுகளை நிறைவு செய்து இசைப் பயணத்தை தொடர்ந்து வரும் அவர் மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, வங்காள மொழி, குஜராத்தி, ஒரியா, மராத்தி, பஞ்சாபி, சமஸ்கிருதம், துளு, மலாய், ரஷ்யன், அரபி, இலத்தீன், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 50,000-க்கும் கூடுதலான திரைப் பாடல்களைப் பாடி ஈடு இணையற்ற சாதனையாளராக விளங்கி வருகிறார்.
‘சிறந்த திரைப் பின்னணிப் பாடகர்’ என்ற வகையில், ஏழு முறை தேசிய விருது பெற்று சாதனை படைத்துள்ளார்.
மாநில அளவில் கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம் மற்றும் மேற்கு வங்க அரசுகளிடம் இருந்து மொத்தம் 45 முறை சிறந்த திரைப் பின்னணிப் பாடகராக விருது பெற்றுள்ளார்.
1975-ல் பத்மஸ்ரீ விருதும் 2002-ல் பத்மபூஷண் விருதும் பெற்றிருக்கிறார்.
திரையிசையுடன், கர்நாடக இசைக் கச்சேரிகள் பல நிகழ்த்தியுள்ளார். சமயப் பாடல்கள், பிற மெல்லிசைப் பாடல்கள் அடங்கிய இசைத் தொகுப்புகளையும் வழங்கியுள்ளார். மலையாளத் திரைப்படங்களுக்கு இசை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.
2006-ம் ஆண்டு சென்னை ஏவி.எம். அரங்கில் ஒரே நாளில் நான்கு தென்னிந்திய மொழிகளிலும் 16 திரைப்படப் பாடல்களை பாடி சாதனை நிகழ்த்தினார்.
அரை நூற்றாண்டுகள் கடந்தும் இந்த கான கந்தர்வனின் இசைப் பணி இப்போதும் இனிதே தொடர்கிறது.









