full screen background image

“இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தர் ஒரு பல்கலைக்கழகம்” – நடிகை சுகன்யா பெருமிதம்..!

“இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தர் ஒரு பல்கலைக்கழகம்” – நடிகை சுகன்யா பெருமிதம்..!

‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் 94-வது பிறந்த தினம் நேற்றைக்கு கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடிகை சுகன்யா, கே.பாலசந்தருக்கும், தனக்குமான நட்பு பற்றியும், அவருடைய இயக்கத்தில் நடித்த அனுபவங்கள் பற்றியும் தெரிவித்துள்ளார்.

நடிகை சுகன்யா இது குறித்துப் பேசும்போது, “பெரும் மதிப்பிற்குரிய ‘இயக்குநர் சிகரம்’ திரு.பாலச்சந்தர் அவர்களின் படைப்புக்கள் என்றும் நம் மனதிலிருந்து நீங்காதவை. ஆயினும், அவருடனான ஒரு சில அனுபவங்களை இங்கே கூற ஆசைப்படுகிறேன்.

என் வெள்ளித்திரை பயணத்தில் என் இரண்டாவது படமே அவர் இயக்கத்தில் இருந்திருக்க வேண்டியது. சில தேதிகள் பொருந்தாததால் அந்த வாய்ப்பு தட்டிப் போனது. பின்னர் வேறொரு சமயம் மீண்டும் அவரிடமிருந்து நடிப்பிற்கான அழைப்பு வந்தது.

அப்போது அவர் என்னிடம் “நீ என் படத்துலதான் நடிக்கல.. டப்பிங்காவது பண்ணுவன்னு பாத்தா, நீ ரொம்ப பிசியா இருக்குற…?! ஆனாலும் பரவாயில்லை, இப்போது போல எப்போதும் பிசியாகவே இரு. இன்னொரு நல்ல சந்தர்ப்பத்தில நாம சேர்ந்து வொர்க் பண்ணலாம்..” என்றார்.

உண்மையில் அந்த நல்ல சந்தர்ப்பம் அவர் இயக்கத்தில் இரண்டு மெகா சீரியல்களில் பணியாற்றியபோதுதான் கிட்டியது.

அவருடைய இயக்கத்தில் முதன்முறையாக ‘மரபுக் கவிதைகள்’ என்ற சீரியலில் நான் நடித்தேன். இதில் எனக்கு ஆழமான வேடம். 

இரண்டாவதாக, ’அம்மாவுக்கு ரெண்டுல ராகு’ என்ற காமெடி சீரியலிலும் நடிக்க வைத்தார். இதிலும் எனக்கு ஒரு அழுத்தமான வேடம்தான். பல மொழிகளை ஒரே ஷாட்டில் பேச வைத்தார். லைட்டிங் செய்த பிறகு கண் முன்னே வசனம் எழுதி அப்போதே எடுக்கப்பட்ட காட்சி அது. ஒரே டேக்கில் ஓகே ஆகி அவர் பாராட்டைப் பெற்றது எனக்கு மிகப் பெரிய விருது வாங்கிய உணர்வை ஏற்படுத்தியது.

அந்தக் கேரக்டரில் யார் நடித்திருந்தாலும் அவரும் சிறப்பாகவே செய்திருப்பார். காரணம் கே.பி. அவர்கள் நடிப்பை சொல்லிக் கொடுக்கும் முறை அப்படி..!

ஆனாலும், அவர் என்னிடம் “மரபுக் கவிதைகள்’ கதையை எழுதத் தொடங்கும்போதே, நீதான் இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். யாரிடமும் கதை சொல்லும் வழக்கம் எனக்கில்லை. ஆனால் உன்னிடம் மட்டும் கதையைச் சொல்றேன்..” என்று அவர் என்னிடம் சொன்னதே என்னை பிரமிக்கச் செய்துவிட்டது.

படப்பிடிப்பின்போது ஒவ்வோரு நாளும் சுவாரஸ்யமான அனுபவங்கள் கிடைத்தன. சேர்ந்தார்போல் இரண்டு ஆண்டுகள் அவருடன் தொடர்ந்து பணியாற்றியது ஒரு யூனிவர்சிட்டியில் படித்த உயர்வான அனுபவம் போல இருந்தது.

இது போன்ற பசுமையான நினைவுகள் நிறையவே எனக்குள் உள்ளன. அதற்குப் பிறகு அவ்வப்போது மரியாதை நிமித்தமாக அவரிடம் தொடர்பு கொண்டு பேசுவேன்.

ஒரு முறை, 2014-ம் ஆண்டில் டெல்லியில் ஒரு கான்பிரன்ஸில் நான் கலந்து கொள்ள நேரிட்டது. ‘திரைத்துறையில் பெண்களின் முக்கியத்துவமும் சமுதாயத்தில் அதன் பிரதிபலிப்பும்’ என்ற தலைப்பில் பேச வேண்டும். அவரிடம், “உங்கள் படங்கள் மற்றும் கதாபாத்திரங்களை மேற்கோள் காட்டலாமா..?” என்று கேட்டேன். அவர் உடனே, “சில புகைப்படங்களைத் தருகிறேன். அவைகளையும் சேர்த்துக் கொள். இன்னும் சிறப்பாக இருக்கும்..” என்றார்.

மேலும் மூச்சுக்கு முன்னூறு தடவை அழைக்கும் தன் பிரியமான உதவியாளரான மோகனிடம், “என்ன வேலை இருந்தாலும், இன்றைய மாலைக்குள் அந்த ஃபோட்டோக்களை சுகன்யாவிடம் தந்து விடு” என்றார். மோகனும் அந்தப் புகைப்பட குவியல்களிலிருந்து அரிதான சிலவற்றை அன்றே என்னிடம் கொடுத்து உதவினார்.

பின்பு அவருக்கு திடீரென்று உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் ஆனுமதிக்கப்பட்டார். அப்போது முக்கியமான ஒரு சிலரை மட்டுமே அவர் பார்த்தார். நானும் அவரைப் பார்க்க அனுமதிக்கப்பட்டேன். அவர் மனைவியும், மகள் புஷ்பா கந்தசாமியும் அவர் அருகில் இருந்தார்கள். மிகவும் தளர்ந்த நிலையில் இருந்ததால் அவரால் ஒரு வார்த்தைகூட பேச இயலவில்லை.

ஆனால், தன் கரத்தால் ’அங்கே…. விமானம்…. எப்படிச் சென்றது….‘ என்று, அப்போதும் என் டெல்லி கான்பிரன்ஸைப் பற்றி செய்கையால் அன்போடு கேட்டார். அந்த நிலைமையிலும் அக்கறையோடு அவர் விசாரித்தது கண்டு கண் கலங்கிவிட்டேன். உண்மையில் அவர் ஒரு மாமேதைதான்..!

“நல்ல வரவேற்பு கிடைத்தது. நீங்கள் நலமாகி வீட்டிற்கு வந்ததும். அதைப் பற்றி விவரமாகக் கூறுகிறேன்…” என்று சொன்னேன். ஆனால் அடுத்த சில நாட்களில் அவர் காலமாகிவிட்டார்.

அவருடைய படைப்புக்கள், அனைத்துக் கலைஞர்களுக்கும், வளர்ச்சிக்கான பாதையை வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை.

நான் மதிப்பிற்குரிய ‘இயக்குநர் இமயம்’ திரு.பாரதிராஜாவால் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, ‘இயக்குநர் சிகரம்’ திரு.கே.பாலச்சந்தர் அவர்களின் நன்மதிப்பை பெற்றது எனக்கு அளவிட முடியாத சந்தோஷத்தைக் கொடுத்திருக்கிறது. நிறைவாகவும் உள்ளது.

அந்த மாபெரும் மனிதரான ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தர் அவர்களுக்கு, என் மரியாதையையும் நன்றியையும் அன்போடு சமர்ப்பிக்கிறேன்.

வணக்கத்துடன்

சுகன்யா 🙏

Our Score