மறைந்த இயக்குநர் சிகரம் சிகரம் கே.பாலசந்தரின் பெயரில் அமைப்பு ஒன்றை உருவாக்கி அதன் மூலமாக திரைப்படத் துறைக்கு அவர் செய்ய நினைத்த சில பணிகளை செய்யவிருப்பதாக திரு.கே.பாலசந்தரின் மகளும் தயாரிப்பாளருமான திருமதி.புஷ்பா கந்தசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை இது :
கடந்த வருடம் டிசம்பர் 23-ம் தேதி எனது தந்தையான ‘இயக்குநர் சிகரம்’ திரு. கே. பாலசந்தர் அவர்கள், அமரரான செய்தியைக் கேட்டவுடன் திரண்டு வந்து எங்களது குடும்பத்தின் ஒரு அங்கத்தினராய் இணைந்து எனது தந்தைக்கு மரியாதை செலுத்தி வேண்டிய உதவிகள் செய்த பத்திரிகை, ஊடக நண்பர்களுக்கு எங்களது குடும்பத்தினர் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் எனது தந்தையின் தயாரிப்பு நிறுவனமான ‘கவிதாலயா’விற்கு இத்தனை காலமும் பெரும்பாலமாக இருந்து எங்களுக்கு ஆதரவு கொடுத்துவரும் உங்கள் அனைவருக்கும் இந்தத் தருணத்தில் நன்றி கூற விழைகிறேன்.
எங்களது தந்தை ‘இயக்குநர் சிகரம்’ திரு.கே. பாலசந்தர் அவர்களின் பெயரில் ‘கே.பாலசந்தர் பவுண்டேஷன்’ (K. Balachander Foundation) என்ற ட்ரஸ்ட் அமைப்பை ஏற்படுத்தியுள்ளோம்.
இந்த அமைப்பிற்கு கே.பி.யின் குடும்ப உறுப்பினர்களான திருமதி.ராஜம் பாலசந்தர், திருமதி.புஷ்பா கந்தசாமி, திரு.பிரசன்னா, திருமதி.கீதா கைலாசம், திரு.கந்தசாமி பரதன் இவர்களுடன் இயக்குநர் திரு. வசந்த் சாய் ஆகியோர் அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அமைப்பின் மூலம் கீழ்க்கண்ட திட்டங்களை நாங்கள் விரைவில் முறையாக அனைத்து ஊடகங்களுக்கும் தகவல் அளித்துவிட்டு செயல்படுத்த உள்ளோம்.
1. ‘இயக்குநர் சிகரம்’ திரு.கே.பாலசந்தர் அவர்களின் விருப்பப்படி திரைப்படத் துறையைச் சேர்ந்த நலிந்த தொழிலாளிகளின் குழந்தைகளுக்கு கல்வி உதவி.
2. ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லூரிகளில் Visual Communication துறையில் பயிலும் மாணவர்களில் சிறந்தவருக்கு ‘இயக்குநர் சிகரம்’ திரு.கே.பாலசந்தர் பெயரில் ‘Creative Excellence’ விருது வழங்குதல்.
3. ஒவ்வொரு ஆண்டும் அவருடைய பிறந்த தினமான ஜுலை 9-ல் விழா நடத்தி நாடகம், திரைப்படம், சின்னத்திரை ஆகிய மூன்று துறைகளில் சிறந்து விளங்கும் படைப்பாளிகளுக்கு விருது வழங்குதல்.
4. ‘இயக்குநர் சிகரம்’ திரு.கே.பாலசந்தர் அவர்களின் படைப்புகளை Digitize செய்து பாதுகாத்து அவரைப் பற்றிய எல்லா தகவல்களையும் ஆவணப்படுத்தி, எதிர்கால தலைமுறையினருக்கு பயன் தரக் கூடிய ஒரு கண்காட்சியகத்தினை ஏற்படுத்துதல்.
5. ‘இயக்குநர் சிகரம்’ திரு.கே.பாலசந்தர் அவர்களின் மகன் மறைந்த திரு.கைலாசம் அவர்கள் பெயரில் தொலைகாட்சித் துறையைச் சேர்ந்த ஒருவருக்கு சிறந்த படைப்பாளி விருது அளித்தல்.
6. ‘இயக்குநர் சிகரம்’ திரு.கே.பாலசந்தர் அவர்களைப் பற்றிய புத்தகங்களை வெளிக்கொணர்வது. அதில் முதல் புத்தகம் ஜுலை 9, 2015 அன்று வெளிவர இருக்கிறது. இதை எழுதியவர் இயக்குனர் வசந்த் சாய்.
இது போன்ற பல பணிகளை மேற்கொள்ள உள்ளோம். எங்களது பணி சிறந்து விளங்கிட தங்களுடைய மேலான ஒத்துழைப்பை வேண்டுகிறோம்.
நன்றி
திருமதி புஷ்பா கந்தசாமி,
Managing Trustee,
K. Balachander Foundation