full screen background image

ஐவராட்டம் – சினிமா விமர்சனம்

ஐவராட்டம் – சினிமா விமர்சனம்

11 பேர் ஆடும் கால்பந்தாட்டத்தை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். பார்த்திருக்கிறோம். ஆனால் 5 பேர் மட்டுமே ஆடும் கால்பந்தாட்டம் பற்றி தெரியுமா..? இந்த ‘ஐவராட்டம்’ திரைப்படம் அந்த வித்தியாசமான ஆட்டத்தையும், அதனால் சிலருக்கு ஏற்பட்ட அனுபவங்களையும்தான் சொல்கிறது.

சிவகங்கை மாவட்டத்தில் இந்த ‘ஐவராட்டம்’ மிகப் பெயர் பெற்ற ஒன்று. வருடாவருடம் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பாக அங்கு நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தைத்தான் படமாக்கியிருக்கிறார்கள்.

உலக நாடுகளெல்லாம் இந்த விளையாட்டை வைத்து தங்களுடைய நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ளவும், தங்களுக்கான பெருமையை வளர்த்துக் கொள்ளவும் படாதபாடுபட்டுக் கொண்டிருக்கின்றன.

ஆனால் இங்கே.. நமது தமிழகத்தின் ஒரு ஊரில்… அந்த கால்பந்தாட்டமே மனிதர்களுக்குள் கொலைப் பழி ஏற்படும் அளவுக்கு வெறி கொண்ட ஆட்டமாக மாறியிருக்கிறது.

அந்த ஊரில் ஜெயபிரகாஷ் பண்ணையார் மாதிரி. அவருடைய ஒரு தம்பி ஐவராட்டத்தின் ஒரு குழுவை வைத்திருக்கிறார். சிறந்த கால்பந்து வீரரான இன்னொரு தம்பி காதல் திருமணம் செய்ததால் வீட்டில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார். இவரது காதல் மனைவி பிரசவத்தின்போது திடீரென்று இறந்துவிட, இப்போது கைப்பிள்ளையை வைத்துக் கொண்டு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

அந்த ஊரின் சீனியர் குழுவின் தலைவரான நிரஞ்சனும், ஜூனியர் டீமின் தலைவரான துஷ்யந்தும் சொந்த அண்ணன், தம்பிகள். ஆனால் எலியும், பூனையும் மாதிரி. அந்த ஊரில் இருக்கும் ஒரேயொரு மைதானத்தில் பிராக்டீஸ் செய்வதில் இரு அணிகளுக்குமிடையே முட்டல், மோதல்கள் நடந்து கொண்டேயிருக்கின்றன.

இதற்கிடையில் தமிழ்ச் சினிமாவின் பாரம்பரிய பழக்கத்தின்படி காதலும் இருக்கிறது. ஜெயபிரகாஷின் மகளான நித்யா ஷெட்டியை நிரஞ்சன் லவ்விக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் ஒரு நாள் மைதானத்தில் சீனியர்களுக்கும், ஜூனியர்களுக்கும் இடையில் மோதல் ஏற்படுகிறது.

யார் விளையாட்டில் வல்லவர் என்பது சில தள்ளுமுள்ளுகள்.. சண்டைகளுக்கு பிறகு பேசப்பட்டு, இருவரும் போட்டி வைத்து மோதுவது.. அதில் ஜூனியர்கள் தோற்றுவிட்டால் இனிமேல் எந்தக் காரணத்தை முன்னிட்டும் அந்த மைதானத்தில் கால் வைக்க மாட்டார்கள் என்பது போட்டி நிபந்தனை.

ஏற்றுக் கொண்டு சீனியர்களும், ஜூனியர்களும் மோதுகிறார்கள். மோதலில் ஜூனியர்கள் வெற்றி பெற சீனியர்கள் வெறுப்பாக அதனை ஏற்றுக் கொள்கிறார்கள். இதனால் இரண்டு தரப்பினருக்கும் இடையில் புகைச்சல் பொங்கிக் கொண்டிருக்கிறது.

அடுத்து வருடா வருடம் நடக்கும் சாம்பியன்ஷிப் போட்டிகள் துவங்குகின்றன. இதில் வெற்றி பெறுவதை கவுரவப் பிரச்சினையாக கருதுகிறார் ஜெயபிரகாஷ். விரட்டப்பட்ட தம்பி அம்ருத் கலாம், திடீரென்று களத்தில் குதித்து ஜூனியர்களுக்கு பயிற்சி கொடுத்து அவர்களை தயார் செய்கிறார்.

ஒரே ஊரில் இருந்து சீனியர், ஜூனியர் என்று இரண்டு அணிகள் களமிறங்கியிருந்தாலும் சீனியர்கள்தான் ஜெயித்தாக வேண்டும் என்று ஜெயப்பிரகாஷும், அவரது ரவுடி தம்பியும் நினைக்கிறார்கள். போட்டிகள் பரபரப்பாக நடக்கின்றன. யார் ஜெயித்தார்கள்.. நிரஞ்சனின் காதல் ஜெயித்ததா..? என்பதுதான் படமே..!

2 மணி நேரத்திற்கும் குறைவான படம்தான். முதல் காட்சியில் இருந்தே கதைக்குள் இறங்கிவிட்டார்கள்.  

நிரஞ்சன், துஷ்யந்த் இருவருமே நடிகர் ஜெயபிரகாஷின் மகன்கள். இது இவர்களுக்கு அறிமுகப் படம். நன்றாகவே நடித்திருக்கிறார்கள். அதிலும் துஷ்யந்த் மற்றும் அவருடைய தந்தை சிவக்குமார் சம்பந்தப்பட்ட காட்சிகள் செம காமெடி.

ஹீரோயின் நித்யா ஷெட்டிக்கு அதிகம் வேலையில்லை.. கண்களாலேயே பேசுகிறார். ஹீரோயின் ஸ்டோரி கிடைத்து அதில் நடிப்பாற்றலைக் காட்டினால் அடுத்து ஆராதனை செய்யலாம். வழக்கமான விரட்டி, விரட்டி காதல் செய்வதும்.. விழுவதும்.. படத்துக்குப் படம் பார்த்து போரடிக்கிறது.

ஜெயபிரகாஷ் தம்பி மீது கோபத்தில் இருப்பதும், பின்பு ஒரு கட்டத்தில் தம்பியின் குழந்தையை வைத்தும், மகளின் பாசத்தை வைத்தும் சட்டென மாறுவது மிக இயல்பாக இருக்கிறது. இவரது தம்பியான அம்ருத் கலாம் பாசத்துடன் அண்ணனை நெருங்குவதும், அவர் கோபப்படுவதும், இன்னொரு அண்ணனிடம் அடி வாங்கியும் தனது பொறுமையை இழக்காமல் தன் நிலைமையை எடுத்துச் சொல்லி கண் கலங்குவதுமான காட்சியில் இயக்கம் சிறப்புதான். ஆனால் நடிப்புதான் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம்.

துவக்கத்தில் நடக்கும் ஒரு கொலையில் இருந்துதான் காட்சிகள் விரிகின்றன. ஆனால் எதற்காக இந்தக் கொலை..? கொலையின் துவக்கத்தில் அங்கேயே நிற்கும் அம்ருத் கலாமின் பங்கு இதில் என்ன..? எதற்காக அவரை நிறுத்தி வைத்தார்கள் என்பதெல்லாம் புரியவில்லை. எந்த இடத்தில் கதை தற்காலத்திற்கு வருகின்றது என்பதையும் புரியும்படி சொல்லவில்லை.

கால்பந்தாட்டத்தை விரட்டி விரட்டி பல கோணங்களில் படம் பிடித்திருக்கும் ரவீந்திரநாத் குருவுக்கு ஒரு ‘ஜே’ போடலாம். கோல் போடுவதையெல்லாம் அப்படியே சூட் செய்வதெனில் மிக பிரயத்தனம் செய்ய வேண்டும். அத்தனை கஷ்டப்பட்டு அந்தக் காட்சிகளை படமாக்கியிருக்கிறார்கள். பாராட்டுக்கள்..! என்ன இதில் ஒரேயொரு விஷயம்.. அணிகளை குறிப்பிட்டுக் காட்டுவதற்காக தனித்தனி உடை அடையாளங்கள்.. மற்றும் சில முக்கிய ஷாட்டுகளில் குளோஸப் காட்சிகளை வைத்துக் காட்டியிருக்கலாம். ஸ்கோர் போர்டை பார்த்துதான் யார் ஜெயித்தார்கள் என்பதை பார்க்க வேண்டியிருந்தது.

சுவாமிநாதனின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். கால்பந்தாட்ட நேரத்தில் பின்னணி இசையும் ஆறாவது ஆளாக ஓடுகிறது. பாராட்டுக்கள்.

படத்தின் பிற்பாதியில் முழுக்க, முழுக்க கால்பந்தாட்டத்தை வைத்தே படத்தை எடுத்திருக்கிறார்கள். அதிகப்படியான நேரத்தை இது சாப்பிட்டுவிட்டதால் கேரக்டர்களின் நடிப்புக்கு முக்கியமில்லாமல் போய்விட்டதால் விளையாட்டுத்தனமான படத்தை பார்த்த பீலிங் வந்துவிட்டது. கிளைமாக்ஸில் மைதானத்தில் நடக்கும் ஒரு டிவிஸ்ட் எதிர்பாராதது. ஆனால்.. அது எதற்கு..? அவர் யார்..? என்பதை குறிப்பால் உணர்ந்து நாமளே புரிந்து கொள்ள வேண்டும் என்றால் எப்படிங்கோ இயக்குநர் ஸார்..?

ஆனால் ‘ஒரு கெட்டதில் ஒரு நல்லதும் இருக்குமென்பார்கள்’ என்று சொல்லி தம்பியின் குழந்தையை விளையாட்டு வீரனாகவே ஜெயபிரகாஷின் குடும்பம் வளர்த்து வருவதைக் காட்டுகிறார்கள். இதேபோல் இந்தப் படத்தின் மூலமாக ‘ஐவராட்டம்’ என்றொரு கால்பந்தாட்டம் நமது தமிழகத்தின் ஒரு ஊரில் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது என்பதைக் காட்டியவகையில் இயக்குநருக்கும் நமது நன்றிகள்..!

Our Score