full screen background image

“என் கணவர் சூர்யாதான் என் உலகம்…” – நெகிழ்கிறார் நடிகை ஜோதிகா..!

“என் கணவர் சூர்யாதான் என் உலகம்…” – நெகிழ்கிறார் நடிகை ஜோதிகா..!

2-டி எண்டெர்டெயின்மென்ட் சார்பில் நடிகர் சூர்யா தயாரித்து, ஜோதிகா நடிக்கும் ‘36 வயதினிலே’ படத்தின் இசை வெளியீட்டு விழா, இன்று காலை ராஜாஅண்ணாமலைபுரம் லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், படத்தின் இயக்குநர் ரோஷன் ஆண்ட்ரூஸ், இயக்குநர்கள் கே.எஸ்.ரவிகுமார், பாலா, வஸந்த், வெங்கட்பிரபு, பாண்டிராஜ், நடிகைகள் ஜோதிகா, அபிராமி, நடிகர் ஷாம் உள்ளிட்ட திரையுலகினர் பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியை பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கினார். ஜோதிகாவின் மாமியாரும், சிவக்குமாரின் மனைவியுமான லட்சுமி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். டிரெயிலரை நடிகர் கார்த்தியும், பாடல் காட்சிகளின் முன்னோட்டத்தை ஞானவேல்ராஜாவும் வெளியிட்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அனைவருமே ஜோதிகாவின் வருகையை தமிழ்த் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது என்கிறார்கள்.

அனைவருக்கும் பதில் சொல்லும்விதமாக பேசிய நடிகை ஜோதிகா தன்னுடைய திரையுலக ரீ-என்ட்ரிக்கு தனது நண்பர்கள் தந்த உற்சாகமும், குடும்பத்தினர் அளித்த ஒத்துழைப்பும்தான் முக்கியக் காரணம். தன்னுடைய வீட்டில் தனது குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் பெண்ணையும் மறக்காமல் பெயர் சொல்லி அழைத்து கூட்டத்தினருக்கு அறிமுகப்படுத்தி வைத்து  நன்றி சொன்னது டச்சிங்காகத்தான் இருந்தது.

ஜோதிகாவின் பேச்சில் இருந்து சில பகுதிகள் :

“எல்லாருமே என்னை ரொம்ப வாழ்த்தி,  நல்ல விதமா பேசியிருக்கீங்க. மனப்பூர்வமா உங்க எல்லாருக்கும் எனது நன்றி.  வீட்டுக்கு வெளியே வந்து நான் இந்தப் படத்தில் நடிப்பதற்கு பெரிய பலமாக இருந்தது அனு, லட்சுமி, தேவி, பூர்ணிமா உள்ளிட்ட எனது முக்கியமான சில தோழிகள் கொடுத்த ஊக்கம்தான் இந்தப் படத்தில் நடிக்க பெரும் உதவியாக இருந்தது.

வீட்டுல இருக்கிற பெண்கள் நிறைய வேலை பண்றாங்க.. அது சாதாரண விஷயமில்லை. எனக்கு என்னுடைய நண்பர்கள்தான் ஒரு டிரைவிங் ஃபோர்ஸ்-ஆ அமைஞ்சாங்க. ஏதாவது நல்லது பண்ணணும்னா நம்மைச் சுத்தி ஒரு பாசிட்டிவ் எனர்ஜி வேணும்னு சொல்வாங்க. என் ஃபிரண்ட்ஸ்தான் எனக்கு அந்த எனர்ஜியைக் கொடுத்திருக்காங்க.

இத்தருணத்தில் என் நண்பர்கள், என் வீட்டில் வேலை செய்பவர்கள், என் மாமனார், மாமியார் ஆகியோருக்கு என் நன்றிகளை தெரிவித்து கொளிகிறேன். இவர்கள் துணையில்லையென்றால் என்னால் மீண்டும் நடிக்க முடிந்திருக்குமா என தெரியாது.   

ரொம்ப முக்கியமான ஆளு, என் வீட்டுல வொர்க் பண்ற தேவி. அவங்கதான் என் பசங்களை அம்மா மாதிரி பார்த்துப்பாங்க. அவங்க வீட்டுல இருக்கிறதுனாலதான், நான் வீட்டை விட்டு வெளிய வர முடிஞ்சது.

அத்தை, மாமா இருவரையும் நான் ‘அம்மா’, ‘அப்பா’ என்றுதான் அழைப்பேன். இதுவரைக்கும் ஒரு நாள்கூட  என்னை ‘இது மாதிரி பண்ணாதே’ என்று கூறியதே இல்லை.

என்னோட சின்ன வயதில், என் அம்மா, தம்பியை எப்படி ட்ரீட் பண்ணுவாங்களோ, அதே மாதிரிதான் என்னையும் ட்ரீட் பண்ணினாங்க. பையன், பொண்ணு என்று அம்மா பிரித்துப் பார்த்ததில்லை. அதெல்லாம் இப்போவரைக்கும் எனக்கு பல இடங்களில் உதவியாக இருக்கிறது.

‘ஜோ, பசங்க வீட்டுல இருக்காங்க, திரும்ப நடிக்காத’ன்னு சொல்லலை. பசங்கள அப்பா காலையில ஸ்கூல்ல டிராப் பண்ணுவாங்க. அம்மா சமைச்சிக் கொடுத்தனுப்புவாங்க, பசங்களை கிளாஸ்க்கு கூட்டிட்டு போவாங்க. அந்த அளவுக்கு அவங்க எனக்கு சப்போர்ட்டா இருந்தாங்க. ஃபேமிலிக்கு பெரிய நன்றி.

பிரியதர்ஷன் ஸார்தான் என்னை அறிமுகப்படுத்தினவர். இருந்தாலும் வசந்த் ஸார்தான் என்னை திட்டித் திட்டி நடிப்புச் சொல்லிக் கொடுத்து என் கேரியருக்கு உதவியா இருந்தவர்.

ராதா மோகன் என் வாழ்க்கையில முக்கியமான படத்தை எனக்குக் கொடுத்தாரு. மொழி படத்துக்காக அவருக்கு நான் பெரிய நன்றியை சொல்லணும்.

இயக்குநர் ரோஷன் ஆண்ட்ரூஸ் இப்படி ஒரு சிறந்த படத்தை எனக்குக் கொடுத்திருக்கிறார். இதுக்காக அவருக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது. என் திரையுலக வாழ்க்கையில் ஒரு மிகச் சிறந்த படத்தை எனக்குக் கொடுத்திருக்காங்க. ஒரு ஆண், பெண்கள் பத்தி கதை எழுதியிருப்பதே பெரிய விஷயம்.

ஷூட்டிங் ஸ்பாட்ல எல்லோருமே இப்படி ஒரு அழகான அனுபவத்தோடுதான் கழித்தோம். இந்தப் படத்தில் டெக்னீஷியன்கள் உழைப்பு ரொம்பவே ஸ்பெஷலாக இருந்தது. இசைக் கோர்ப்பின்போது சந்தோஷ் நாராயணனின் மனைவி கூடவே இருந்து பார்த்தாங்க. படப்பிடிப்பின்போது கேமராமேன் திவாகரின் மனைவி உடன் இருந்தாங்க. நல்ல அலைவரிசை கொண்ட ஜோடிகள். படப்பிடிப்பு முழுக்க பரபரப்பாக ஒரு ஆண் மாதிரியே கணவருக்கு உதவியாக இருந்ததை எல்லாம் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது.

தமிழில் தற்போது பெண்களை மையமாக வைத்து படம் உருவாகும் டிரெண்ட் இல்லை. மலையாளம், தெலுங்கு, இந்தியில் அந்த சூழல் உள்ளது. இங்கே இல்லாமல் இருப்பதற்கான காரணம் ஏனென்று தெரியவில்லை. இந்த சூழலில் பெண்ணை மையமாக வைத்து இப்படி ஒரு கதையின் பின்னணியில் நான் மீண்டும் நடிக்க வந்திருப்பது மகிழ்ச்சி. இதற்கு பின்னணியாக இருப்பது கூட்டு உழைப்புதான்.

என் கணவர் சூர்யாதான் எனது உலகம். அவர் போல் கணவர் அமைந்ததற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். சென்னைக்கு புதிதாக வந்தபோது நான் சந்திந்த முதல் மனிதரும் இவர்தான். அப்போ இருந்து இப்போவரைக்கும் எல்லா வகையிலும் ஒரு தூண் மாதிரி இருப்பது அவர்தான். கணவருக்கு நன்றி சொல்லக் கூடாது என்று சொல்வார்கள். அவரை கணவராக அடைந்ததை பெருமையான விஷயமாக கருதுகிறேன்.” – இவ்வாறு நடிகை ஜோதிகா பேசினார்.

ஜோதிகா சரளமாக தமிழ்ப் பேசியதை பார்த்து சூர்யா ஆச்சரியப்பட்டு போனார்.  “நான்கூட இந்த எட்டு வருஷத்துல இவ்வளவு சரளமா ஹிந்தி பேச மாட்டேன். ஆனால், ‘ஜோதிகா’, ‘சந்திரமுகி’, ‘மொழி’ இந்தப் படங்களோட விழாக்களுக்கெல்லாம்கூட வந்ததில்லை. முதல் முறை அவங்க மேடையில தமிழ்ல இப்பதான் பேசறாங்க..  

திருமணத்திற்குப் பிறகு கடந்த 8 ஆண்டுகளாக குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டி விடுவது, குளிக்க வைப்பது என்று எல்லாமே ஜோதிகாதான். அழகான அம்மாவாக இருக்க ஒரு நாள்கூட அவங்க தவறினதே இல்லை. வீட்டில் இருக்கும்போது டிவியில் ஒரு நல்ல படம் ஓடினால், ‘எப்பவாவது நடித்தால் இது மாதிரி ஒரு படம் நடிக்க வேண்டும்’ என்று பேச ஆரம்பிப்பாங்க. அப்பவும் பாதியிலேயே பேச்சை நிறுத்தி விடுவாங்க.

வர வேண்டும், வரணும்ன்ற எண்ணம் எல்லாவற்றையும் அவங்களுக்குள்ளேயேதான் வைத்திருந்தாங்க. ஒரு படத்தின் புரமோஷன் அப்போதான் இயக்குநர் ரோஷன் ஆண்ட்ரூஸின் உதவியாளர் மூலம் இந்தப் படத்தின் டிவிடி கிடைத்தது.

ஜோதிகா ரீ என்ட்ரியாக வரும்போது இப்படி ஒரு படம் அமைந்தால் நன்றாக இருக்கும் என்று அப்போதே நினைத்தோம். அதற்கான வேலைகள் அடுத்தடுத்து உடனடியாகத் தொடங்கி இன்று படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் வரைக்கும் தொட்டுவிட்டோம்.

ரசிகர்கள் கடந்த 8 ஆண்டுகளாகவே என்னை எங்கே பார்த்தாலும் ‘ஜோதிகா நடிப்பதை ஏன் தடுத்துட்டீங்க..?’ என்று என்னை திட்டிக்கிட்டேயிருந்தாங்க. இது மாதிரி சரியான கதை அமையும் நேரத்திற்காகத்தான் காத்துக் கொண்டிருந்தோம். இப்போது வந்துவிட்டோம்..” என்றார்.

நிகழ்ச்சியில், படத்தின் இசைத் தட்டை சூர்யா – ஜோதிகாவின் மகள் தியா வெளியிட, மகன் தேவ் பெற்றுக் கொண்டு வெளியிட்டது நிகழ்ச்சியின் ஹைலைட்டாக இருந்தது.

Our Score