‘காதலில் சொதப்புவது எப்படி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பாபி சிம்ஹா. அதனை தொடர்ந்து, ‘பீட்சா’, ‘நேரம்’, ‘சூது கவ்வும்’, ‘நான் ராஜாவாக போகிறேன்’ போன்ற படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ‘ஜிகிர்தண்டா’ படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார். அந்த படத்திற்காக தேசிய விருதும் பெற்றார்.
தற்போது ‘பாம்பு சட்டை’, ‘உறுமீன்’, ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ உள்பட பல படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதில் ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ படம் வருகிற 10-ம் தேதி வெளிவரவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குநர் எம்.முத்துபாண்டியன், நடிகர் பாபி சிம்ஹா மீது பரபரப்பு குற்றசாட்டுகளை கூறியுள்ளார்.
இது பற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், “நான் திரைப்படக் கல்லூரியில் படித்து முடித்துவிட்டு சில குறும்படங்களை இயக்கினேன். அப்போது குறும்பட வட்டாரத்தில் இருந்த ஒரு நண்பர் மூலம் பாபி சிம்ஹா அறிமுகமானார். அப்போது அவர் சின்ன சின்ன வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.
அவருக்குள் இருக்கும் திறைமையை கண்டுபிடித்து அவரை ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்தினேன். அவருடன் லிங்கா, பிரபஞ்சயன், சரண்யா, பனிமலர் ஆகியோரும் நடித்தனர்.
பல கனவுகளுடன் சென்னைக்கு வரும் மூன்று இளைஞர்கள் சென்னையில் பெறும் அனுபவங்கள்தான் படத்தின் கதை. இதில் சிம்ஹா, இயக்குனர் கனவோடு வரும் இளைஞராக நடித்துள்ளார்.
எனக்கு ஏற்பட்ட சில பணப் பிரச்சனைகள் காரணமாக படம் வெளியிட தாமதம் ஏற்பட்டது. அதற்குள்ளாக பாபி சிம்ஹா நடிப்பில் ‘ஜிகிர்தண்டா’ படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. அதில் அவர் பெரிய உயரத்திற்கு சென்றார். சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதினையும் பெற்றுவிட்டார். இதில் எனக்கும் சந்தோஷம்தான்.
ஆனால், அதற்கு இந்தப் படத்திற்கு முன்பாக ஒத்துக் கொண்ட எனது படத்தை மறக்கலாமா.. இப்போது நான் இயக்கிய ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ பட வெளியீட்டு நிகழ்ச்சிகளுக்கு அழைத்தால். ‘இப்போ என்னோட வேல்யுவே வேற.. படத்தில் எனக்கு பெரிய ஷேர் வேண்டும். அப்போதுதான் டப்பிங் பேசுவேன்..’ என்றார்.
அவருக்கு கொடுக்கும் அளவிற்கு பணம் இல்லாததால் நான் வேறொருவரை வைத்து டப்பிங் பேசினேன். இதை அவர் நடிகர் சங்கத்தில் புகாராக கூறினார். நடிகர் சங்கத்தில் நாங்கள் விளக்கம் அளித்து விட்டோம்.
இப்போது எங்கள் படத்தை ‘குறும்படம்’ என்று விமர்சிக்கிறார். 125 சீன் கொண்ட ஸ்க்ரிப்டை அவரிடம் படிக்க கொடுத்தோம். 25 நாள் நடித்துக் கொடுத்தார். அப்போது தெரியாத இவருக்கு குறும்படம் என்று..? எங்கள் படத்தை கெடுப்பதற்காகவே இவ்வாறு கூறுகிறார். சினிமாவில் பணமும், புகழும், விருதும் திடீரென்று வரும், போகும். அது சிம்ஹாவின் கண்ணை மறைக்கிறது.
யாருமே அவரை திரும்பி பார்க்காமல் இருந்தபோது, அவருக்கு வாய்ப்பு கொடுத்தவன் நான்தான் என்பதை அவர் இப்போது மறந்து விட்டார்…” என்று வருத்தத்துடன் கூறுகிறார் இயக்குநர் எம்.மருதுபாண்டியன்.
இதுதாங்க சினிமாவுலகம்..!