இனிமேல் இதுதான் சினிமா துறையில் பெரிய வியாபார கேந்திரமாக இருக்கும் என்று இயக்குநர் சேரன் உருவாக்கியுள்ள C2H திட்டத்தை திரையுலகத்தின் முன்னணி முற்போக்காளர்கள் அனைவருமே சொல்லி வைத்தாற்போல் சொல்லி பச்சைக் கொடி காட்டிவிட்டார்கள்.
‘தியேட்டரில் ரிலீஸாகும் அதே நேரம் டிவிடியும் ரிலீஸாகும்’ என்கிற சேரனின் இந்தத் திட்டத்தை கடைசிவரையிலும் தியேட்டர் அதிபர்கள் ஏற்கவில்லை. “ஒரு மாதம் கழித்தாவது ரிலீஸ் செய்யுங்கள். நாங்கள் எங்களது சங்கத்தினரிடம் பேசி ஆவண செய்கிறோம்..” என்றார்கள். ஆனால் இதற்கு சேரன் மசியவில்லை.
“திருட்டு டிவிடிக்களை ஒழித்துக் கட்டத்தான் இந்தத் திட்டத்தையே துவக்கினேன். ஒரு மாதம் கழித்து எனில், அதற்குள்ளாக புத்தம் புதிய அனைத்து படங்களின் திருட்டு டிவிடிக்களும் சூடாக விற்பனை செய்யப்பட்டு ஓய்ந்துவிடும். ஒரு மாதம் கழித்து ஒரிஜினலை வெளியிட்டால் வாங்க ஆள் இருக்காது..” என்றார் சேரன்.
இப்படி இரு தரப்பினருமே தத்தமது கொள்கையில் உறுதியுடன் இருக்க கடைசியில் சேரனின் இயக்கிய ‘ஜேகே எனும் நண்பனின் கதை’ திரைப்படம் இப்போது தியேட்டர்களில் ரிலீஸாகமலேயே டிவிடியாக விற்பனைக்கு வந்துவிட்டது.
நேற்றில் இருந்து தமிழகம் முழுவதிலும் இருக்கும் அந்த நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களின் கடைகளில் ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’ என்னும் சேரனின் புதிய திரைப்படம் புத்தம் புதிய ஒரிஜினல் டிவிடி வடிவத்தில் கிடைக்கிறது.
புதிய படங்களை வீட்டில் இருந்தே பார்க்க விரும்புவர்களுக்கு வாரந்தோறும் புதிய திரைப்படங்களைக் கொடுக்க சேரன் முனைந்திருக்கிறார். ஆனால் தியேட்டர் அதிபர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக பல முன்னணி படங்கள் கிடைக்கவில்லை.
அனைவருமே சேரனின் முதல் சில படங்களின் விற்பனை அளவு எவ்வளவு..? எத்தனை டிவிடிகள் விற்பனையாகும்..? எத்தனை லட்சம் ரூபாய் தயாரிப்பாளரின் பங்காகக் கிடைக்கும் என்ற தகவல்களை அறிய ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இதில் குறிப்பிடத்தக்க அளவுக்கு வெற்றி கிடைத்தால் இந்த C2H திட்டத்திற்கு அடுத்தடுத்து படங்கள் கிடைக்க வாய்ப்புண்டு.
இணையத்திலும் இந்தப் படம் அதிகாரப்பூர்வமான இணையத்தளம் மூலமாக வெளியிடப்பட்டிருக்கிறது. www.c2hnetwork.com என்ற இணையத்தளத்தில் இந்தப் படத்தை 3 டாலர் விலையில் PayPal முறையில் பணம் கட்டிப் பார்த்துக் கொள்ளலாம்.
இந்த நேரத்தில் நேற்று வெளியான ஒரிஜினல் டிவிடியில் இருந்த படத்தை பல்வேறு இணையத்தளங்களில் சுடச்சுட வெளியிட்டுவிட்டார்கள் சில களவாணிகள். காப்பியே செய்ய முடியாதபடி செக்யூரிட்டி செய்யப்பட்டிருக்கிறது என்று சேரன் சொல்லியிருந்தார். ஆனால் தியேட்டர்களுக்கே வராத படம் என்பதால், இந்த டிவிடியில் இருந்துதான் போலி இணையத்தளங்களுக்கு வந்திருக்க வேண்டும் என்று சந்தேகம் வருகிறது.
எத்தனை பாதுகாப்புகளை செட் செய்து வைத்தாலும் அதையும் உடைக்க விஞ்ஞான அறிவு கை கொடுக்கிறது.. ஒரிஜினல் டிவிடியை வாங்க வைக்கத்தான் சேரன் இத்தனை கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறார். இப்போது இணையத்திலேயே செலவில்லாமலேயே பார்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கும் அளவுக்கு இணைய ரவுடிகளும் இப்படியொரு கொடுமையை செய்திருக்கிறார்கள்.
ம்ஹூம்.. விஞ்ஞானத்தின் வளர்ச்சியை யாராலும் கட்டுப்படுத்தி நிறுத்த முடியாது போலிருக்கிறது.
பாவம் சேரன் அண்ணன்..!