full screen background image

ஜின் – சினிமா விமர்சனம்

ஜின் – சினிமா விமர்சனம்

நாயகன் சக்தி என்ற முகேன் ராவ், மலேசியாவில் ராப் பாடகராக வேலை பார்த்து வருகிறார். ஒரு ரெஸ்டாரண்டில் இரவு நேரத்தில் சின்ன இசை குழுவை வைத்து கச்சேரிகளை நடத்தி வருகிறார். அவருடைய குடும்பம் சென்னையில் இருக்கிறது. அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவருடைய அக்கா வினோதினி. மாமா ஜார்ஜ். அப்பா இமான் அண்ணாச்சி. பாட்டி வடிவுக்கரசி ஆகியோர் சென்னையில் உள்ளனர்.

சக்தியின் வேலை திடீரென்று பறிபோகிறது. அவர் சென்னை திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அந்த நேரத்தில் தன்னுடைய குடும்பத்தினருக்கு வேண்டிய பரிசு பொருள்களை பெறுவதற்காக கடைக்கு சென்றவர் அங்கே இருந்த ஒரு பெட்டியை பார்த்து ஆச்சரியப்பட்டு, அதிசயித்து அதைப் பெட்டியை பற்றி விசாரிக்கிறார்.

அதற்குள் பழங்காலத்திய ஜின் என்கின்ற பேய் இருப்பதாகவும், அதை யாருக்கும் கொடுப்பதாக இல்லை என்று கடைக்காரர் சொல்கிறார். ஆனால் வம்படியாக அந்த பெட்டியை வாங்கிக் கொண்டு சென்னைக்கு வந்து விடுகிறார். அந்தப் பெட்டியில் ஜின் என்ற பேய் இருப்பதை தன்னுடைய குடும்பத்தினர் அனைவரிடமும் சொல்லிவிடுகிறார் சக்தி.

அவ்வப்பொழுது பெட்டியை திறந்து பேய்க்கு உணவும் வைக்கிறார்கள் அவருடைய குடும்பத்தினர். இந்தப் பேய் அந்த வீட்டுக்குள் வந்தவுடன் சக்திக்கு நல்ல வேலை கிடைக்கிறது. நல்ல காதலியும் கிடைக்கிறார். அதேசமயம் சின்னச் சின்ன இடர்பாடுகளும் குடும்பத்தினருக்கு ஏற்படுகிறது.

ஒரு சமயம் சக்தியின் மனைவி கடுமையாக தாக்கப்பட்டு கோமா ஸ்டேஜில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். இந்த துர்பாக்கிய நிகழ்வுகள் எல்லாமே இந்த பேய் வந்த பின்புதான் நடக்கிறது என்று அவருடைய பாட்டி கடுமையாக திட்டி சக்தியைக் கண்டிக்க அவரும் கோபமாகி ஜின் இருக்கும் பெட்டியை ரோட்டில் வீசுகிறார்.

இப்போது நடுரோட்டிற்கு வந்துவிட்ட அந்தப் பேய் அந்த பெட்டியில் இருந்து விடுதலை பெற்று தானாகவே ஒரு உருவெடுக்கிறது. இப்போது அது பேய் சக்தியின் கண்களுக்கு மட்டும் தெளிவாக தெரிகிறது. அது ஒரு கதையை சொல்கிறது.

அந்தக் கதையின்படி சக்தி பல, பல ஜென்மங்களுக்கு முன்பாக ஒரு கதையின் நாயகனாக இருந்திருக்கிறார். இப்பொழுது அவருக்கு எதிரிகளாக இருப்பவர்களும் அந்த பல ஜென்மங்களுக்கு முன்பான கதையில் சக்தியின் எதிரிகளாக இருந்தவர்கள்தான். இப்போது இந்த ஜென்மத்தில் அந்தப் பழைய பகையை முடிப்பதற்காக வந்திருக்கிறார்கள் என்று சொல்கிறது பேய்.

ஜின் பேய் சொல்வதை நம்ப முடியாமல் இருக்கிறார் சக்தி. இதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

‘ஜின்’ என்கின்ற பேய் பற்றிய விஷயம் 2000-மாவது ஆண்டில் மிகப் பெரிய அளவுக்கு பெயர் பெற்றது. அதுவும் மலேசியா, சிங்கப்பூரில் வீட்டுக்கு வீடு ‘ஜின்’ என்று வளர்ப்பதாக ஏதோ ஒன்றை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதனுடைய பூர்வாசிரம கதையையும் இந்தப் படத்தில் ஓவிய வடிவில் சொல்லி இருக்கிறார்கள்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மன்னர்கள் ஆட்சி செய்து கொண்டிருந்த நேரத்தில் இந்த பேய்கள் உருவாகி மன்னர்களுக்கு நல்லதொரு உதவியும் செய்து வந்திருக்கின்றன. இதில் நல்ல பேய்களும் உண்டு. கெட்ட பேய்களும் உண்டு.

ஒரு சமயத்தில் கெட்ட பேய்களுடன் ஏற்பட்ட சண்டையில் மன்னர் கொல்லப்பட்டு கெட்டவர்கள் பதவி ஏற்கிறார்கள். அந்த நேரத்தில் நல்ல பேய் கடலுக்குள் வீசப்பட்டு விட்டது. அந்த பேய்தான் இப்போது முகேன் ராவின் கையில் இருக்கும் பேய் என்று ஓவியத்தின் வடிவில் கதையைச் சொல்லி இருக்கிறார் இயக்குநர்.

சக்தியாக நடித்திருக்கும் நாயகன் முகேன்ராவ், பிக் பாஸில் மட்டுமே பிரபலமானவர். அது ஒன்றை மட்டுமே தகுதியாக வைத்து இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஆனாலும், இயக்குதலில் இருக்கும் போதாமையால் அவரிடம் இருந்து அதிகமான நடிப்பை இயக்குநரால் வரவழைக்க முடியவில்லை.

முகேன்ராவும் முதலிருந்து கடைசி வரையில் சிரித்தே ஒப்பேத்தியிருக்கிறார். சோகமான, கோபமான காட்சிகளில் மட்டுமே ஒரு சில நிமிடங்களில் அவருடைய முக பாவனைகள் மாறி இருக்கிறதே தவிர, மற்றபடி படம் முழுவதும் ஒரே மாதிரியான தோற்றத்தை கொடுத்து சமாளித்து இருக்கிறார்.

படத்தின் நாயகியான பாவ்யா தாரிகா அழகா இருக்கிறார். ஆனால் அது மட்டுமே போதுமா… அவருக்கான ஸ்கோப் இந்த படத்தில் அதிகமாக இல்லை என்றாலும் முன்பே சொன்னது போல இயக்குநர் இன்னமும் தன்னுடைய இயக்கத் திறமையை காட்டி அவரிடமிருந்து நடிப்பை வரவழைத்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை.

அக்காவாக நடித்திருக்கும் வினோதினி தன்னுடைய சீரிய நடிப்பின் மூலம் அவர் வருகின்ற காட்சிகளில் எல்லாம் நம்மைக் கவர்ந்திருக்கிறார். அவருடைய கணவராக நடித்திருக்கும் ஜார்ஜ் ஒரு வெட்டி ஆபிஸராகவே படத்தில் தோன்றியிருக்கிறார். அப்பாவாக நடித்த இமான் அண்ணாச்சியை அப்பாவாகப் பார்ப்பதற்கு நமக்கே ஒரு மாதிரியாக இருக்கிறது.

உண்மையில் பொங்குவதில் சிறந்தவரான வடிவுக்கரசு இந்த படத்திலும் பொங்கும்போது பழைய வடிவுக்கரசியாகவே நமக்கு தெரிகிறார்.

வில்லனாக நடித்திருக்கும் ராதாரவி தன்னுடைய அனுபவ நடிப்பின் மூலம் கடைசிவரையிலும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் அர்ஜுன் ராஜா இந்தப் படத்தை முழுவதுமாக கலர்ஃபுல்லாகவே கொடுத்திருக்கிறார். ஒரு மீடியம் பட்ஜெட் படத்தில் இவ்வளவு அழகான ஒளிப்பதிவை இருப்பது மிகவும் சிறப்பானதுதான். விவேக் மெர்வின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் ரொம்பவே சுமார் ரகம் என்றுதான் சொல்ல வேண்டும்.

படத்தை எழுதி இயக்கி இருக்கும் இயக்குநர் டி.ஆர்.பாலா பழைய பேய்க் கதை படங்களை எல்லாம் ஒரு வரிசையில் வைத்து ஒன்றாக்கி திரைக்கதையை அமைத்து புதிய வடிவத்தில் கொடுத்திருக்கிறார்.

ஜின்’ என்ற பேய்களின் தோற்றம், அதனுடைய வளர்ச்சி, அதனுடைய மறைவு… இதைப் பற்றி எல்லாம் ஓவியத்தின் வடிவில் மிக அழகாக சொல்லி இருந்தாலும், அதையே காட்சி வடிவத்தில் அமைத்து இருந்தால் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து இருந்திருக்கும்.

இடைவேளைக்குப் பின்பு அந்த ஜின் ஒரு புதிய உருவம் எடுத்து வருவதை குறைந்தபட்ச பட்ஜெட்டில் தங்களால் முடிந்த அளவுக்கு ஒரு கவன ஈர்ப்பு வரும் அளவுக்கு கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால், பட ரிலீஸுக்கு முன்பாகவே இப்படி ஒரு கேரக்டர் இருப்பதை இது குழந்தைகளுக்கான படம் என்பதையும் கொஞ்சம் அழுத்த திருத்தமாக சொல்லி இருந்தால் தியேட்டருக்கு ரசிகர்களின் வருகையும் அதிகமாக இருந்திருக்கும்.

ஆனால், இதை விளம்பரமே படுத்தாமல் உள்ளே என்ன நடந்து இருக்கிறது என்பதே தெரியாத அளவுக்கு படத்தை மூடி மறைத்து விட்டு கடைசி நேரத்தில் இப்படி படம் பார்த்து விட்டு வெளியில் போய் சொல்லுங்கள் என்று சொல்வதெல்லாம் எந்த வகையிலும் நியாயம் இல்லை இயக்குநரே..

இன்னமும் அதிகப்படியான கிராபிக்ஸில் ஜின் உருவத்தின் தோற்றம்.. மற்றும் இயக்குதலில் கூடுதலான திறமை… இதை எல்லாம் கொண்டு வந்திருந்தால், இந்தப் படமும் இன்னும் கொஞ்சம் நல்ல படமாகவே அமைந்திருக்கும்.

RATING : 2.5 / 5

Our Score