ஒரு திரைப்படம் எப்படி எடுக்கக் கூடாதோ, அதற்கு மிகச் சிறந்த உதாரணம் இந்தப் படம்தான்.
நாயகன் ராஜூ தன் அம்மா சரண்யா அப்பா சார்லியோடு வசித்து வருகிறார். இப்போதுதான் பிளஸ் டூ தேர்வு எழுதிவிட்டு தேர்வு முடிவுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். இதேபோல் தேவதர்ஷணியின் மகளான ஹீரோயின் ஆத்யாவும் பிளஸ் டூ தேர்வு எழுதிவிட்டு முடிவுக்கு காத்திருக்கிறார்.
ஒரு கல்யாண நிகழ்ச்சிகள் தற்செயலாக தேவதர்ஷணியை பார்க்கும் சார்லி ஆச்சரியப்படுகிறார். காரணம் சார்லியுடன் பள்ளி காலத்தில் ஒரே வகுப்பில் படித்தவர் தேவதர்ஷிணி. இரண்டு குடும்பங்களும் அந்த திருமண விருந்தில் மனம் விட்டுப் பேசுகிறார்கள். அப்போது தேவதர்ஷிணி தன் மகளைப் பற்றி உயர்த்தி பேச… இன்னொரு பக்கம் சரண்யாவும் தன் மகனைப் பற்றி உயர்த்தி பேசுகிறார். இருவரும் பல நாள் நெருக்கம் என்பதுபோல பேசி பழகுகின்றனர்.
சட்டென்று இருவருக்குமே ஒரு எண்ணம் வருகிறது. இருவருமே அவரவர் பிள்ளைகளை பற்றி உயர்வாக சொன்னதை உண்மை என்று நம்பி இருவருமே தங்களது பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டால் என்ன என்று யோசிக்கிறார்கள். ஆலோசிக்கிறார்கள். அதை கச்சிதமாக செய்து முடிக்க வேண்டும் என்று திட்டமிடுகிறார்கள்.
இதற்கு தோதாக சரண்யா வீட்டு மாடியில் ஒரு வீடு காலியாக இருப்பதை அறிந்து அந்த வீட்டுக்கு குடி வருகிறார் தேவதர்ஷிணி. இப்பொழுது மாடி வீடு, கீழ் வீடு இரண்டிலும் பையனும், பொண்ணும் இருக்க… இவர்கள் இருவர் இடையில் நட்பு வளர்ந்து, அது காதலாகி கல்யாணத்தில் முடியும் என்று பையனின் அம்மாவும். பெண்ணின் அம்மாவும் நினைத்து சந்தோஷப்பட்டு கொண்டே இருக்கிறார்கள்.
ப்ளஸ் டூ ரிசல்ட் வந்து ஹீரோ ராஜூவும், ஹீரோயின் ஆத்யாவும் கல்லூரியில் சேர்கிறார்கள். ஹீரோ ராஜுவின் மிக நெருங்கிய நண்பனான மைக்கேலும் அதே கல்லூரியில் வேறொரு வகுப்பில் சேர்ந்திருக்கிறான். அவனுடன்தான் ராஜூ அதிக நேரம் செலவிடுவான். அவன்தான் உயிர் நண்பன்.
இப்பொழுது அதே கல்லூரியில் ராஜுவின் வகுப்பில் சேர்வதற்காக வருகிறார் ஹீரோயின் பாவ்யா. பாவ்யா ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் மிக மிக ஃபேமஸ் ஆனவர். பாவ்யாவை இன்ஸ்டாகிராமில் பார்த்ததிலிருந்து அவர் மீது ஒரு ரசிகனாகி, பின்பு வெறியனாகி, இப்போது மனதிற்குள் காதலனாகவும் மாறிவிட்டான் ராஜுவின் நண்பன் மைக்கேல்.
இது தெரியாமல் ராஜு பாவ்யாவை காதலிக்க தொடங்க பாவ்யாவும் ராஜுவை காதலிக்க தொடங்குகிறார்.காதல் என்றால் என்னவென்று தெரியாத நிலையில் ராஜு காதலில் இருக்க.. பாவ்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பேமஸ் பிரபலத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் இன்னும் அதிகளவுக்கு பிரபலமாக வேண்டும் என்ற கொள்கையை குறிக்கோளாக வைத்துக் கொண்டிருக்கிறார்.
முதலில் வீட்டில் சந்தித்தாலும் ஆத்யாவும், ராஜூவும் காதலிக்கவில்லை. ஆனால், நண்பர்களாக இருக்கிறார்கள். இதே நேரம் ஆத்யா தன் வகுப்பில் உடன் படித்த இன்னொரு மாணவனை தீவிரமாக காதலித்துக் கொண்டிருக்கிறார். இந்த விஷயம் ராஜூவுக்குத் தெரியும். ஆனால், அவருடைய குடும்பத்தினருக்குத் தெரியாது.
ராஜூ பாவ்யாவை காதலிப்பதை அறிந்து ஒரு கட்டத்தில் மைக்கேல் தன்னுடைய நட்பை முறித்துக் கொண்டு போகிறான். இந்த விஷயம் பாவ்யாவுக்குத் தெரிய வர அவர் இதை ஒரு நாள் ராஜூவிடம் சொல்லி விடுகிறார். ராஜு மிகவும் ஜென்டில்மேனாக இந்த விஷயத்தில் நம் மூவரும் சேர்ந்து முடிவெடுப்போம் என்று சொல்லி பாவ்யாவை அருகில் வைத்துக் கொண்டே “பாவ்யா இப்போது யாரை கை காட்டி அவர்தான் என் காதலர் என்கிறாளோ.. அவனையே அவள் காதலிக்கட்டும். திருமணம் செய்து கொள்ளட்டும். நாம் 3 பேரும் நண்பர்களாகவே இருப்போம்…” என்கிறார்.
இதை எடுத்து பாவ்யா யாரை காதலிக்கிறேன் என்று சொல்கிறார்.. பாவ்யா ராஜு காதல் நிறைவேறியதா… ஆத்யா யாரை திருமணம் செய்தார்… சரண்யா, தேவதர்ஷினியின் நம்பிக்கை ஜெயித்ததா.. இல்லையா… இதுவெல்லாம் இந்தப் படத்தின் திரைக்கதைகள்.
‘பிக் பாஸ்’ மூலம் மட்டுமே மிக மிகப் பிரபலமான ராஜூ மகாலிங்கம் இந்தப் படத்தில் ஹீரோ கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். இந்தக் கதைக்கும் மிகவும் பொருத்தமானவராகத்தான் இருக்கிறார். ஏற்கனவே பல நகைச்சுவை ஷோக்களில் நடித்த அனுபவம் உண்டு என்பதால் மிகச் சரியாக டயலாக் டெலிவரிகளை செய்து நகைச்சுவையை திரையில் நமக்கு கொடுத்திருக்கிறார்.
இவரும், மைக்கேலும் ஓரினச் சேர்க்கையாளர்களாக இருப்பார்களோ என்ற சந்தேகத்தை அவருடைய அம்மா சரண்யாவுக்கு கொடுக்கின்ற வகையில் அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதையில் காமெடி வரும் போலவே சிறப்பாக நடித்திருக்கிறார் ராஜு. அதேபோல் அம்மாவுக்கும், மகனுக்கும் இடையில் நடக்கின்ற அக்கப்போர்களில் பல இடங்களில் வாய் விட்டு சிரிக்க முடிந்திருக்கிறது.
ராஜூவின் நண்பனாக நடித்த மைக்கேலும் மிகச் சிறப்பாகவே நடித்திருக்கிறார். அவருடைய கோபம் நியாயமானது. ஆனால் அதை சரியானவிதத்தில் வசனத்தில் சொல்லாத காரணத்தினால் அவருடைய கேரக்டர் மட்டுப்படுத்தப்பட்டு இருப்பது போல் நமக்கு தோன்றுகிறது.
ஒரு ஹீரோயினான ஆத்யா சினிமாவுக்கு ஏற்ற முகம். கேமராவுக்கேற்ற முகம். மிக அழகாக தன்னுடைய நடிப்பை காண்பித்திருக்கிறார். அம்மா, அப்பா வீட்டில் இல்லாத நேரத்தில் காதலனை வரவழைத்து ஜிங்குச்சா பாட நினைத்த நேரத்தில் சரண்யா உள்ளே நுழைந்து ஆட்டையை கலைக்கும்போது ஆத்யாவின் நடிப்பினாலேயே சிரிக்க முடிந்திருக்கிறது. கிளைமாக்ஸ் கட்சியில் அப்பாவை மீறி நான் எதுவும் செய்ய மாட்டேன் என்ற காதலை தூக்கிப் போட்டுப் போகும் தன் காதலனிடம் அவர் பேசுகின்ற வசனமும், இறுதியில் அவர் ஒரு முடிவினை எடுக்கின்ற அந்தத் தருணத்திலும் கை தட்ட வைத்திருக்கிறார் ஆத்யா.
படத்தில் ராஜூவின் கதாபாத்திரத்தை நகர்த்தும் பெண் கதாபாத்திரம் பாவ்யாதான். ஏற்கெனவே சில படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படம் போல் மற்ற படங்களில் அவருக்கு நடிக்க ஸ்கோப் இல்லை. ஆனால், இந்தப் படத்தில் கிடைத்த இடங்களில் எல்லாம் ஸ்கோர் செய்திருக்கிறார். அதுவும் ராஜூவின் முதல் சந்திப்பில் ராஜூ மனப்பாடமாக பொரிந்து தள்ளிவிட்டு போகின்ற கட்சியில் அவரை அப்பாவியாக பார்க்கும் அந்த ஒரு காட்சியிலேயே நமக்கு சிரிப்பை வரவழைத்துவிட்டார்.
இன்ஸ்டாகிராமில் அவர் போடுகின்ற ஆட்டம் நிச்சயம் இன்றைய இளசுகளை கவரும் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த அளவுக்கு அவருடைய ஸ்கிரீன் பிரசன்ஸ் அழகாக உள்ளது.
மைக்கேலிடம் நட்பு முறிவுக்கான காரணத்தை கேட்டுவிட்டு அப்படியே அதிர்ச்சியில் திகைத்துப் போய் நிற்பதும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பற்றிய கனவுகளை சொல்லும்போது ராஜூ அதை லெப்ட் கேண்டில் கேண்டில் செய்வதைபோலவும், அது ஒரு பிரச்சனையே இல்லை என்பது போல் சொல்லும் போது அவர் படும் ஏமாற்றமும், அதற்கு பின்பு அவர் யாரை தேர்வு செய்கிறார் என்பதை சொல்லும்போதும் அவர் தன்னுடைய நடிப்பை நிறைவு செய்துவிட்டார். ஆனால் இதுவே திரைக்கதைக்கு போதாமையாக இருக்கிறது.
சரண்யாவும், தேவதர்ஷணியும் இதற்கு முன்பாக 2000-ம் ஆண்டுகளில் மின் பிம்பங்கள் நிறுவனம் தயாரித்த வீட்டுக்கு வீடு லூட்டி என்ற தொடரில் நடித்திருந்தார்கள். அந்தத் தொடரில் இவர்கள் என்ன கதாபாத்திரத்தில் இருந்தார்களோ அதை அப்படியே இதில் பிரதிபலித்து இருக்கிறார்கள் அதே போன்ற நடிப்பு அதே போன்ற ஸ்கிரீன் பிரசன்ஸ்.
இரண்டு வெள்ளதியான அம்மாக்கள் தங்களுடைய பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதை விடவும் அதற்கு பின்பு அவர்களுடைய வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும். நாமும் அவர்களுடன் வாழ வேண்டும் என்கின்ற எல்லா பெற்றோர்களைப் போன்ற அந்த அக்கறையினால் அவர்கள் செய்கின்ற செயல்கள் அனைத்தும் நமக்கு ஓவராக இருந்தாலும், அவர்களுடைய கேரக்டர் ஸ்கெட்ச்படி நிச்சயம் சரிதான்.
சரண்யாவின் படபட பேச்சுகளும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் பேசுகின்ற வெள்ளத்தியான பேச்சும் அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறது. அதேபோல் தேவதர்ஷணியும் சரண்யாவுக்கு கொஞ்சமும் சளைத்தவர் இல்லை என்கிற வகையில் தனது நடிப்பினை இந்தப் படத்தில் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.
சரண்யாவின் கணவராக நடித்திருக்கும் சார்லி எந்நேரமும் சிகரட்டை புகைத்துக் கொண்டு வீட்டில் தான் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் ஹஸ்பண்ட் என்கின்ற பெயரை பெற்று சென்று இருக்கிறார்.
தேவதர்ஷிணியின் கணவர் 24 மணி நேரம் பேஸ்புக், டிவிட்டரை பார்த்துக் கொண்டு வீட்டில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்கும் ஹஸ்பண்டாக அனைவரின் பொறாமையையும் சம்பாதித்துவிட்டார்.
படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் விக்ராந்த் 25 அரியர்ஸ்களை வைத்துக் கொண்டு அதே கல்லூரியில் ஹாஸ்டலில் தங்கி கொண்டு அரியர் பாஸ் செய்வதற்காக இருக்கும் அவருக்குள் இருக்கும் அந்தக் காதலும் கை தட்ட வைக்கிறது. அவர் கடைசியாக எடுக்கின்ற அந்த முடிவு நிச்சயம் பாராட்டுக்குரியது. அந்த வகையில் இந்தப் படம் கூடுதலாக ஒரு காதல் கதையையும் சொல்லி இருக்கிறது.
தொழில் நுட்பத்திலும் இந்தப் படம் மிகச் சிறப்புதான். ஒளிப்பதிவு அவ்வளவு தரமானது. அந்த வீட்டுக்குள் மிக அழகாக கலை இயக்குநர் வடிவமைத்திருக்கும் நிலையில் எந்தளவுக்கு புதுப்புது கோணங்களில் காட்சிகளை எடுக்க முடியுமோ அந்த அளவுக்கு எடுத்து நமக்கு விருந்தாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
நிவாஸ் கே.பிரசன்னாவின் பாடல்களும், இசையும் அபாரம். இந்தப் படத்தின் பாடல்கள் மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும், மீண்டும் கேட்கும் அளவுக்கு சாதாரண ரசிகர்கள் முணுமுணுக்கும் அளவுக்கு இசை அமைத்திருக்கிறார். பாராட்டுக்கள்.
சண்டைக் காட்சிகளை ஓவராக செல்லாத அளவுக்கு, அதிகம் ரத்தம் சிந்தாமல் எடுத்திருக்கிறார்கள். இதற்காகவே சண்டை இயக்குநரை பாராட்ட வேண்டும்.
படத்தின் காஸ்ட்யூம் டிசைனரையும் வெகுவாக பாராட்ட வேண்டும். படத்தில் ஒவ்வொரு காட்சிக்கும் புதிது புதிதாக உடைகளை வடிவமைப்பு செய்து அதுவும் அந்த வீட்டின் கலர் அமைப்புக்கும் அவர்கள் அணியும் ஆடைக்கும் பொருத்தமாக தேர்வு செய்து கொடுத்திருப்பதும் படத்தை கலர்ஃபுல்லாக பார்க்க வைத்திருக்கிறது.
சமீப ஆண்டுகளில் இளம் இயக்குநர்கள் தங்களது காதல் படங்களில் சொல்கின்ற வார்த்தைகள் பெஸ்ட் பிரண்டு… பெஸ்ட்டி… அப்புறம் லவ்வர் என்கிறார்கள். இது மாதிரியான பேச்சுக்கள் சினிமா துவங்கிய காலத்தில் இருந்தே இருக்கிறது.
நண்பர்கள், நெருங்கிய நண்பர்கள், திருமணமானால் கணவன், மனைவி என்ற ஒரு சொற்றொடர் இரு பாலருக்குமே பொருத்தமானது. இப்பொழுதுதான் இந்த இளைய இயக்குநர்கள் தங்கள் கண்டுபிடித்ததுபோல கதை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ஒரு சொற்றொடரைவைத்துதான் இந்த படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் ராகவ் மிர்தாத்.
யாரையோ காதலித்து திருமணம் செய்து வீட்டுக்கு கொண்டு வந்து நிறுத்துவதைவிட நமக்கு தெரிந்த, ஒருவருக்கொருவர் அறிமுகமான குடும்பத்திற்குள்ளே இருந்து நம்முடைய பிள்ளைகளை பேச வைப்போம்.. பார்க்க வைப்போம்.. பழக வைப்போம்… காதலிக்க வைப்போம்.. பின்பு திருமணம் செய்து வைப்போம்.. இது அரேஞ்ச்டு மேரேஜாகவும் இருக்கட்டும். அதே சமயம் காதல் திருமணமாகவும் இருக்கட்டும் என்று நினைக்கும் அந்த இரண்டு தாய்க்குலங்களின் நம்பிக்கையை தவறு என்று சொல்லவில்லை.
ஆனால் பிள்ளைகள் பிளஸ் டூ படித்து முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்லும் காலத்திலேயே இதை ஆரம்பிக்க வேண்டுமா என்பதுதான் நமது கேள்வி. அவர்கள் முதலில் படிப்பினை முடிக்கட்டும். அதன் பின்பு நல்ல வேலைக்கு போகட்டும். வெளி உலகத்தை பார்க்கட்டும். நான்கு பேருடன் பேசட்டும். பழகட்டும்.. வெளியுலகத்தைப் பார்த்த பின்புதான் உலகம் என்பது என்ன என்று அவர்களுக்குத் தெரியும். நடைமுறை வாழ்க்கையின் பயம் அவர்களுக்குப் புரியும். அதன் பின்பு அவர்கள் காதலித்தால் திருமணம் செய்து வைத்து விடலாம். இதுதான் சரியான நடைமுறை.
பிளஸ் டூ காலத்திலேயே பார்த்துக் கொள்ளுங்கள்.. பேசிக் கொள்ளுங்கள்… பழகிக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு அவர்கள் கல்லூரி முதலாம் ஆண்டிலேயே “நாங்கள் கல்யாணம் பண்ணிக்க போறோம்” என்று சொன்னால் இப்பொழுது பெற்றோர்கள் என்ன செய்வார்கள்..
22 வயதில் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்து விடுவார்களா பெற்றோர்கள்.. அந்த 22 வயதில் அவர்களுக்கு என்ன தெரிந்திருக்கும்.. வாழ்க்கையை எதிர்கொள்ளும் பக்குவம் இருக்குமா… படித்து முடித்து வேலைக்கு சென்று அதற்கு பின்பு சில ஆண்டுகள் கழித்து திருமணம் செய்தால் அது மிக சரி.. ஆனால் இப்பொழுதே கல்லூரியில் நுழையக் காத்திருக்கும்பொழுதே இப்படியொரு ஏற்பாட்டை செய்வது படு முட்டாள்தனம்.
கதையை வடிவமைத்தபொழுது இவர்கள் இருவரும் கல்லூரிக்கு முடித்துவிட்டு வேலைக்கு சென்று கொண்டிருக்கிறார்கள் என்றாவது கதையை மாற்றி விட்டு கொண்டு வந்திருக்கலாம். அதுகூட தவறில்லை. அதுவும் நியாயமானதாக இருக்கும்
ஆனால் இப்போது பிள்ளைகள் கல்லூரிகள் கால் வைக்கும்போதே நாங்கள் சம்பந்தியாகிவிட வேண்டும் என்று இரண்டு அம்மாக்களும் நினைப்பது ரொம்பவும் ஓவராக இருக்கிறது.
இரண்டாவது பிரச்சனையாக ராஜு கதவை அறைக் கதவைப் பூட்டிவிட்டு கம்ப்யூட்டரில் பிட்டுப் படம் பார்ப்பதாகவும் அதைத் தொடர்ந்து சுய இன்பம் செய்வதாகவும் காட்சிகளை மூன்றுமுறை வைத்திருக்கிறார் இயக்குநர். இது முற்றிலும் தவறு. வைத்திருக்கவே கூடாது. இதைப் பார்க்கின்ற குடும்பத்தினர் தங்கள் பிள்ளைகளிடம் என்ன சொல்வார்கள்.. என்ன பேசுவார்கள்? கொஞ்சமாவது இயக்குநர் யோசித்திருக்க வேண்டாமா… இந்தப் படத்தின் மிகப் பெரிய கறை, கரும்புள்ளி அந்தக் காட்சிகள்தான்.
மூன்றாவது ராஜுவின் அப்பாவான சார்லி எந்நேரமும் சிகரெட் பிடித்துக் கொண்டே இருக்கிறார். நான் சின்ன வயதிலிருந்தே சிகரெட் குடிக்கிறேன் என்று சிகரெட் குடிப்பதை நியாயப்படுத்தி பேசுகிறார். ஆனால் விட முடியல என்று சப்பை கட்டும் கட்டுகிறார்.
ஆனால் இந்த சிகரெட்டை பிடித்தால் கேன்சர் வரும். கேன்சர் வந்தால் ஒரு குடும்பமே சின்னாபின்னம் ஆகிவிடும் என்பதை ஒரு சின்ன வசனத்தில்கூட இந்த இயக்குநர் வைக்கவில்லை அதைவிட கொடுமையாக அப்பாவும், மகனுமாய் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு சிகரெட் பிடிப்பதை போலவே காட்சிகள் வைத்திருப்பது மிக மிக கொடுமையானது… கொடூரமானது… இந்த காட்சிக்காகவும் இந்த இயக்குநரை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
அப்பா, மகன் ரிலேஷன்ஷிப் மிக இயல்பாக தோழமையாக, நட்பாக இருக்க வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் இந்த அளவுக்கு இருத்தல் கூடாது. புகைப்பிடித்தல் என்பது நோயை வரவழைத்தாலும் நோய்க்கு பின்பு ஏற்படும் பிரச்சனைகளால் பல குடும்பங்களில் சிதறுண்டு போயிருக்கின்றன. அதைத்தான் இயக்குநர் முக்கியமாக வசனத்தில் சொல்லி இருக்க வேண்டும். ஆனால் ஒரு இடத்தில்கூட அதைச் சொல்லாமல் வெறுமனே ஸ்கிரீனில் “புகைப்பிடித்தல் உயிருக்கு ஆபத்து” என்று ஸ்லைடு மட்டும் போட்டுவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா..?
படத்தின் இடைவேளைக்கு பின்பு வரும் ஒரு காட்சியில் ஆத்யா தன் காதலனை வீட்டுக்கு அழைத்து ஜல்சா செய்யலாம் என்று முயற்சி செய்கிறார். இந்த நேரத்தில் சரண்யா வந்து அதை கெடுத்து விடுகிறார்.
இப்படி ஒரு காட்சி அமைப்பை வைத்தால் படம் பார்க்கின்ற இளசுகள் என்ன நினைப்பார்கள்… அப்பா, அம்மா வீட்டில் இல்லை என்றால் காதலனையோ, காதலியையோ வீட்டுக்கு வரவழைத்து உடலுறவு கொள்ளலாம் என்று இந்த இயக்குநர் சொல்லிக் கொடுக்கிறார் என்பதாகத்தானே அர்த்தம்..? இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்..! இதுவும் இந்த படத்தில் நிச்சயம் வன்மையாக கண்டிக்கத்தக்கக் காட்சிதான்.
மேற்கண்ட நான்கு பிரச்சனைகளாலுமே இந்தப் படத்தை ஒரு சிறந்த படம் என்று நம்மால் சொல்ல முடியவில்லை. தவறான கதை ஓட்டத்தில் இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இளைஞர்கள் அதிகம் வரக் கூடிய திரைப்படங்களில் அவர்கள் பொதுவாக செய்கின்ற தவறுகளையே நியாயப்படுத்துவதைப் போல காட்சி அமைத்தால் அவர்களுக்கு அசுர பலம் வந்துவிடும். அந்த அசுர பலம் அவர்களுடைய குடும்பத்தை நிச்சயம் பாதிக்கும். அவர்களுடைய வாழ்க்கையையே கெடுத்து விடும்.
அப்படி ஒரு தவறை இயக்குநர்கள் செய்யக் கூடாது என்பதற்காகத்தான் இவ்வளவு விளக்கமாக இந்த படத்தில் காட்சிகளை கண்டித்து இருக்கிறோம்.
இயக்குநர் ராகவ் மிர்தா சிறந்த இயக்குநர்தான். சந்தேகமில்லை. அவருடைய இயக்கம் சிறப்பானதாக இருக்கிறது. காமெடி வருவது போலவும் அவரால் இயக்க முடியும். அந்த அளவுக்கு அவருடைய இயக்கத் திறமை இருக்கிறது.
இவ்வளவு இயக்கத் திறமையை வைத்துக் கொண்டு தவறான கதை, தவறான திரைக்கதைகள், படங்களை செய்வதை விட்டுவிட்டு அடுத்தப் படத்தில் இந்த தவறுகளை திருத்தி விட்டு நல்லதொரு படமாக… குடும்பத்துடன் அனைவரும் அமர்ந்து பார்க்கக் கூடிய வகையில் ஒரு படத்தை கொடுப்பார் என்று நம்புகிறோம்.
RATING : 2.5 / 5









