full screen background image

ஜீவி – சினிமா விமர்சனம்

ஜீவி – சினிமா விமர்சனம்

வெற்றிவேல் சரவணா மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் மு.வெள்ளபாண்டியன், வெ.சுடலைக்கண் வெள்ளபாண்டியன், வெ.சுப்ரமணியன் வெள்ளபாண்டியன் மூவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

படத்தில் வெற்றி நாயகனாக நடித்துள்ளார். மோனிகா சின்னகோட்ளா மற்றும் அஸ்வினி சந்திரசேகர் இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். மற்றும் ரோகிணி, ரமா, கருணாகரன், மைம் கோபி, தங்கத்துரை, அனில் முரளி, திருநாவுக்கரசு ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – பிரவின்குமார், இசை – கே.எஸ்.சுந்தரமூர்த்தி, படத் தொகுப்பு – கே.எல்.பிரவீன், கலை இயக்கம் – வைரபாலன், சண்டை இயக்கம் – சுதேஷ்குமார், பாடல்கள் – ஜி.கே.பி., சவுந்தர், திரைக்கதை, வசனம் – பாபு தமிழ், நிர்வாகக் கட்டுப்பாட்டாளர் – எஸ்.நாகராஜன், லைன் புரொடியூஸர் – ஐ.பி.கார்த்திகேயன், நிர்வாகத் தயாரிப்பாளர் – எஸ்.ஆர்.விவின், மக்கள் தொடர்பு – டி ஒன், சுரேஷ் சந்திரா, ரேகா, எழுத்து, இயக்கம் – வி.ஜெ.கோபிநாத்.

இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் சக்தி பிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பி.சக்திவேலன் வெளியிட்டுள்ளார்.

இதே நிறுவனம் இதற்கு முன் தயாரித்த ‘8 தோட்டாக்கள்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது நினைவிருக்கலாம்.

இதுவரையிலும் தமிழ்ச் சினிமாவில் சொல்லப்படாத விஷயமாக விஞ்ஞானம் மற்றும் உள்ளுணர்வுகளுக்கு இடையே உள்ள மனித உணர்வுகளைப் பற்றி இத்திரைப்படம் பேசியிருக்கிறது.

இயற்பியல் பிரிவில் முக்கோண அறிவியலில் தொடர்பியல் என்றதொரு பாடம் இருக்கும். அந்த தொடர்பியலைத்தான் இத்திரைப்படம் பேசுகிறது.

“நேரடி தொடர்பே இல்லாத இரண்டு குடும்பங்களில் நடந்த சம்பவங்கள் மட்டும் ஒன்று போலவே இருக்கும். என்றோ ஒரு நாள் அந்தத் தொடர்பு அந்த இரண்டு குடும்பங்களையும் தொடர்பு கொள்ள வைக்கும்” என்கிறார் இயக்குநர். இதைத்தான் திரைப்படத்திலும் சொல்லியிருக்கிறார். இதற்கான மையப்புள்ளியாக யாரோ ஒருவர்.. அல்லது எதுவோ ஒன்று நிச்சயமாக இருக்கும் என்பதும் இயக்குநரின் தீர்ப்பு..! இதுதான் இத்திரைப்படத்தின் மையக் கரு.

அப்பா விவசாயத்தைப் பார்த்துக் கொள்ள.. அம்மாவும், அக்காவும் வீட்டு வேலைகளையும், தோட்டத்து வேலைகளையும் செய்து கொண்டிருக்க.. ஒரே மகனான ஹீரோ வெற்றி மட்டும் வெட்டியாக ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கிறார்.

அப்பாவின் செல்லப் பிள்ளை என்பதால் அதிக சுதந்திரம் கிடைத்திருக்கிறது. வேலைக்குப் போக வேண்டும். காசு, பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஐடியாவே இல்லாமல் வாழும் வெற்றியிடம் இருக்கும் ஒரேயொரு நல்ல குணம்.. அடிக்கடி நூலகத்திற்குச்  சென்று மன வளம் பற்றிய புத்தகங்களைப் படிப்பதுதான்.

வீட்டில் ஒரு நாள் அப்பா செண்டிமெண்ட்டாக தனக்கு வயதாகிவிட்டதை அழுத்திச் சொல்ல.. வெற்றிக்குள் தூங்கிக் கொண்டிருந்த கடமையுணர்ச்சி தட்டி எழுப்பப்படுகிறது. வேலை தேடி சென்னைக்கு வருகிறார்.

சென்னையில் அனைத்து வகையான வேலைகளையும் செய்து களைத்துப் போய் இப்போது கடைசியாக ஒரு ஜூஸ் கடையில் ஜூஸ் பிழிந்து கொண்டிருக்கிறார். அதே கடையில் டீ ஆற்றிக் கொண்டிருக்கிறார் அவரது அறைத் தோழர் கருணாகரன்.

இவர்களின் டீக்கடைக்கு எதிரில் செல்போன் ரீசார்ஜ் கடையில் வேலை செய்து வருகிறார் ஆனந்தி என்னும் மோனிகா. பார்த்தவுடன் லவ்வாகி அவரையும் காதலிக்க வைத்து அவருடன் சுற்றுகிறார் வெற்றி.

ஆனால் சில நாட்கள் கழித்து, மோனிகா தன்னுடைய தாய் மாமன் மகன் ஆசிரியர் வேலையில் இருப்பதால் தான் அவனையே கல்யாணம் செய்யப் போவதாகச் சொல்ல வெற்றிக்கு இப்போதுதான் தன்னுடைய நிலைமையே புரிகிறது.

பணமில்லையெனில் காதல்கூட நிலைக்காது என்பதை புரிந்து கொண்ட வெற்றி எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

இந்த நேரத்தில்தான் அவரது ஜூஸ் கடைக்கு ரெகுலராக வந்து செல்லும் போலீஸ் இன்பார்மரின் புத்தகக் கடையில் படித்த ஒரு புத்தகம் அவருக்குள் ஆழமாக ஊடுருவிகிறது.

காவல்துறையினரின் கையில் சிக்காமல் ஒரு குற்றத்தைச் செய்ய… என்ன செய்ய வேண்டும் என்று வெற்றியின் மூளை திட்டமிடுகிறது. இதைச் செய்து பார்க்கக் களம் கிடைக்காமல் யோசித்து வருகிறார் வெற்றி.

இந்த நேரத்தில் அவர்கள் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளரான ரோகிணி தனது கண் தெரியாத மகளின் கல்யாணத்திற்காக நகைகளை வாங்கி வீட்டு பீரோவில் பூட்டி வைத்திருப்பது வெற்றிக்கு தெரிய வருகிறது. அந்த நகைகளைக் கொள்ளையடிக்கத் திட்டமிடுகிறார் வெற்றி. கருணாகரனையும் மூளைச் சலவை செய்து அவரையும் தனது கூட்டணிக்குள் இழுத்து விடுகிறார் வெற்றி.

திடீரென்று கிடைத்த ஐந்து நிமிட இடைவெளியில் அந்த நகைகளைத் திருடுகிறார் வெற்றி. அதே நேரம் ஊரில் அவரது தந்தை எதிர்பாராத நெஞ்சு வலியால் இறந்து போகிறார். நகைகளுடன் ஊருக்கு வரும் வெற்றி நகைகளை ஊரிலேயே வைத்துவிட்டு வருகிறார்.

போலீஸ் விசாரணையில் சந்தேகம் இவர்கள் மீதும் விழுகிறது. ஆனால் சாட்சியம் இல்லாததால் தப்பிக்கிறார்கள். அடுத்து ரோகிணியின் அண்ணன் மைம் கோபியும் வந்து இவர்கள்தான் நகைகளைத் திருடியிருப்பார்களோ என்று சந்தேகிக்கிறார். ஆக.. நகைத் திருட்டு இவர்களை நிம்மதியிழக்க வைக்கிறது. நண்பர்களுக்குள்ளேயே சண்டையையும் ஏற்படுத்துகிறது..

இறுதியில் என்னாகிறது என்பதுதான் இந்தப் புதுமையான படத்தின் புதுமையான திரைக்கதை.

திருடுவது, மாட்டாமல் தப்பிப்பது என்பது மாதிரியான கதைதான். ஆனால் மாட்டிக் கொள்ளாமல் திருடுவது எப்படி என்பதை முன்பேயே ரசிகர்களுக்குச் சொல்லிவிட்டு அந்தத் தந்திரங்கள் ஒவ்வொன்றாக உடைவதைக் காண்பிக்கும் ஒரு சுவையான திரைக்கதையைக் கொண்ட திரைப்படம் இது.

திரைக்கதை ஆசிரியரான பாபு தமிழின் சுவையான திரைக்கதையை கொஞ்சமும் சுவாரஸ்யம் குன்றாமல் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் கோபிநாத்.

என்னதான் சின்னத் திருட்டு என்றாலும் அதற்கான வினைப் பையன் அவனையும், அவன் குடும்பத்தையும் விடாது என்பார்கள். அவன் விதைத்ததை அவனேதான் அறுவடை செய்ய வேண்டும் என்பார்கள். சுருக்கமாகச் சொல்லப் போனால் இதுதான் படத்தின் கரு.

இந்தத் திரைக்கதைக்கு பக்க பலமாக இருந்திருப்பது வசனங்கள்தான். பாபு தமிழின் எளிய வசனங்களை “புரியலீல…” என்று கருணாகரனிடம் அடிக்கடி கேட்டு அவருக்கு விளக்கும் கொடுக்கும் பொருட்டு விளக்கவுரையாக, தெளிவுரையாக காட்சிகளில் விவரித்திருக்கிறார் இயக்குநர் கோபிநாத்.

நாயகன் வெற்றிக்கு இது இரண்டாவது திரைப்படம். முதல் படத்திலேயே அதிகமான உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளோ, கண்ணீரை வரவழைக்கும் உருக்கமான காட்சிகளோ தேவையற்று இருந்ததால், அந்தக் கான்ஸ்டபிள் கேரக்டரில் மிக இயல்பாக நடித்திருந்தார்.

இந்தப் படமும் அதேதான். அவரது கேரக்டருக்கு பொருத்தமானதாகத்தான் அமைந்திருக்கிறது. இதிலும் கண்ணீர் விடும் காவியங்களும், சோகங்களும் இல்லாததால் அவர் இயல்பாக பேசுவதையும், வசனங்கள் பேசுவதையுமே நடிப்பாக்கி காண்பித்திருக்கிறார் இயக்குநர்.

படத்தின் கதையும், திரைக்கதையும், வசனமும்தான் பிரதானமாக இருப்பதால் நடிப்பைப் பார்த்து அசரும் அளவுக்கு ரசிகர்களும் தயாராக இல்லை.. காதலி திரும்பவும் வந்து பேருந்து நிறுத்தத்தில் “ஹாய்” சொல்லி தனது கல்யாணம் நின்று போன கதையைச் சொல்லும்போது கோபத்தை அடக்கிக் கொண்டு “2-5ஜி வந்திருச்சு. கிளம்பு” என்று சொல்லிவிட்டு நகரும் காட்சியில் அனைத்தையும் தாண்டி வெற்றி தெரிகிறார்.

இதேபோல் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டரிடம் வார்த்தைகளாலேயே விளையாட்டு காட்டும் காட்சியிலும், தனது குடும்பக் கதையும், ரோகிணியின் குடும்பக் கதையும் ஒன்றாக இருப்பதை அறிந்து கொண்டு இதன் பின்பு இந்தச் சிக்கலில் இருந்து விடுபட விரும்பி கருணாகரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சியிலும் கேரக்டரோடு ஒன்றிப் போய்தான் நடித்திருக்கிறார் வெற்றி. பாராட்டுக்கள்.

கருணாகரன் இரண்டாவது நாயகனை போல படம் முழுவதும் வியாபித்திருக்கிறார். பார்வையாளர்கள் கேட்க நினைக்கும் கேள்விகளையெல்லாம் கருணாகரன் கேட்டு அதற்கான பதிலையும் பெற்றுத் தருகிறார்.

உண்மையில் இந்தப் படத்தில் புத்திசாலித்தனமான கேரக்டர் இவர்தான். இந்தப் படத்தின் கதையை எழுதும்போதே கருணாகரனை மனதில் வைத்துதான் எழுதியதாக கதாசிரியர் பாபு தமிழ் கூறினார். இதற்கு தகுந்த பலனை கொடுத்திருக்கிறார் கருணாகரன்.

சிற்சில இடங்களில் நாயகனுக்குக் கொடுக்கும் கவுண்ட்டர் டயலாக்குகள் குபீர் சிரிப்பையும், சில தடங்கல் கேள்விகளும், சில விசாரணைகளும் பார்வையாளர்களுக்குள் திகிலையும் ஏற்படுத்துகிறது.

“அக்கா மாசமா வேற இருக்கா” என்ற வெற்றியின் தகவலுக்கு “இப்பத்தாண்டா கல்யாணமாச்சு” என்று அப்பாவியாய் திருப்பிக் கேட்கும் தருணத்தில்தான் தியேட்டரில் கிளாப்ஸ் அதிகம்.

முதல் நாயகியாக மோனிகா.. சின்ன வயது அழகியாக.. பார்த்தவுடன் பிடிப்பதைப் போலவே இருக்கிறார். இவர் தனது காதலை வெற்றியிடம் சொல்லும் இடத்தில் அத்தனை அழகாய் தெரிகிறார். நடித்திருக்கிறார். இவரும் பாதியிலேயே விடை பெறுகிறார். இன்னொரு நாயகியான கண் தெரியாத அஸ்வினி சில காட்சிகளுக்கு பொருத்தமாக நடித்திருக்கிறார்.

வெற்றியின் தாயாக ரமாவும், அஸ்வினியின் தாயாக ரோகிணியும் நடித்திருக்கிறார்கள். ரமா மகனின் செயலால் எரிச்சல்பட்டும், “வேலையைவிட்டு திரும்பி வரப் போகிறேன்…” என்று சொல்லும் மகனை காய்ச்சியெடுத்து அங்கேயே இருந்து தொலை என்று எச்சரிக்கும் தாயாகவும் இருக்கிறார். ரோகிணியின் மிகையில்லாத நடிப்பு இன்னொரு பக்கம் ரசிக்க வைக்கிறது.

தவறுதலாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இப்ராஹிம் “யாரையும் ஒரு நொடிகூட சந்தேகப்பட்டிராதீங்கக்கா…” என்று உதடு துடிக்க பொங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டு பேசும் காட்சியில், ஒரு நிமிடத்திலேயே நம் மனதைக் கவர்கிறார்.

இன்ஸ்பெக்டரின் அதட்டல், உருட்டல் நடிப்பு.. மைம் கோபியின் நல்லவன் போன்ற நடிப்பெல்லாம் இயக்குநரின் இயக்குதல் திறமைக்குச் சான்றாக எடுத்துக் கொள்ளலாம்.

பிரவீன் குமாரின் ஒளிப்பதிவு ரம்மியம். அந்த ஒற்றை வீட்டுக்குள் வெற்றியும், கருணாகரனும் பேசும் பேச்சுக்களை சளைக்காமல் பதிவு செய்திருப்பதுடன் பார்வையாளர்களுக்கு போரடிக்காமல் இருக்கும்வகையில் அடிக்கடி கேமிரா கோணங்களை மாற்றி வைத்து ரசிக்க வைத்திருக்கிறார்.

கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் இசையில் ‘அஞ்சாரி’ பாடலும், ‘விடைகளே கேள்விகளாய்’ பாடலும் கேட்கும் ரகம். கணீர் குரல். கேட்கும் அளவுக்கான இசை.. எளிதில் காதில் நுழையும் பாடல் வரிகள் என்று இசையில் ஒரு குறையும் சொல்ல முடியவில்லை.

இது போன்ற சற்றே பிசகினாலும் பக்கவாதம் வந்துவிடும் அளவுக்கு நெளிவு, சுளிவு கொண்ட கதையை, திரைக்கதையை அதன் அச்சிலிருந்து, மையப்புள்ளியிலிருந்து விலகாமல் அப்படியே தொகுத்தளித்திருக்கிறார் படத் தொகுப்பாளர் கே.எல்.பிரவீன். இதற்காகவே இவருக்கு ஒரு ஸ்பெஷல் ஷொட்டு.

ஒரு புத்திசாலித்தனமான கதையை, அதைவிட புத்திசாலித்தனமான திரைக்கதையைக் கொண்டு சொல்லும்போது எந்த இடத்திலும் பார்வையாளர்களுக்குள் கேள்வியை எழுப்பவே விடக் கூடாது. இதைத்தான் இந்தப் படத்தின் இயக்குநர் மிகுந்த அக்கறையெடுத்து பேப்பரில் காட்டியதை படைப்பாக்கத்திலும் செய்திருக்கிறார்.

இடைவேளைக்கு பின்பு மைம் கோபி தண்ணியடித்துவிட்டு பேசும் காட்சிகளின் தொடர்ச்சியாக அவர் மீது சந்தேகப்பட்டு தேனிக்குச் சென்று விவரம் சேகரிக்கும் காட்சியிலும் அடுத்தடுத்து தொடரும் டிவிஸ்ட்டுகள்தான் படத்தைத் தூக்கி நிறுத்துகின்றன.

இறுதியில் கருணாகரனை வைத்துக் காட்டப்படும் ஒரு மெகா டிவிஸ்ட்டுக்கு செமத்தியான கை தட்டல். “ஏழேலு சிங்கன் பொருள் ஏழு கடல் தாண்டினாலும் திரும்ப வரும்..” என்பதைப் போல் கிளைமாக்ஸில் பணம் போய்ச் சேருமிடம் “ஐயோ சபாஷ்…” என்று சொல்ல வைத்திருக்கிறது.   

போலீஸ் விசாரணை தொடர்பான காட்சிகளில் மட்டுமே சிற்சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும் அது கண்ணுக்குத் தெரியாமல் மறைந்துபோகும் அளவுக்கு இருக்கிறது என்பதால் அதை விட்டுவிடுவோம்.

இந்து-முஸ்லீம் கலவரத்தை உண்டு செய்யும் அளவுக்கான வசனத்தைக்கூட மிக இயல்பாக ஜம்ப் செய்து போகும் அளவுக்குக் காட்சியமைத்திருக்கிறார் இயக்குநர். இப்ராஹிமின் வீட்டில் மட்டும் “ரெய்டு” என்ற வார்த்தையை உள்ளூர்காரர்கள் சொல்ல.. அதை தன்னிடம் ரிப்பீட் செய்பவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரிவீட் செய்வது செம கலகலப்பு.

முதல் பாதியில் எப்படி மாட்டிக் கொள்ளாமல் திருடுவது என்பதை பார்வையாளர்களுக்குச் சொல்லிக் கொடுப்பது போலவே காட்சிகள் அமைந்திருப்பது வருத்தம்தான் என்றாலும், திரைப்பட படைப்பாக்கத்தில் இதுவும் ஒன்று என்பதாகத்தான் இதை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

இதற்கான பிராயச்சித்தமாகத்தான் இந்தப் பழி பாவமெல்லாம் நம் தலைமுறையோடு போய்த் தொலையட்டும் என்பதாக கண்ணில்லாத பெண்ணைத் திருமணம் செய்வதாக கதையை முடித்திருக்கிறார் இயக்குநர். இதற்காகவே இவருக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு..!

மிகப் பெரிய நடிகர், நடிகைகள் இல்லாமல்.. வெறுமனே கதையை மட்டுமே நம்பி களத்தில் குதித்து இன்றைக்கு வெற்றியையும் பெற்றிருக்கும் இந்தப் படக் குழுவினருக்கு நமது வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்..!

இந்த ‘ஜீவி’ நிச்சயமாக அறிவுஜீவியான படம்தான்..!

Our Score