தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் பல வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன்.
தமிழில் ரஜினிகாந்த், விஜயகாந்த், விஜய், ரகுமான் என பல முன்னணி நடிகர்களை இயக்கியதோடு விஜயகாந்த், விஜய், விஜய் ஆண்டனி, சிம்ரன் போன்ற பலரையும் திரையுலகில் பிரபலப்படுத்தியவர்.
இவர் இப்போது இயக்கும் 70-வது திரைப்படம் ‘கேப் மாரி’. ‘கிரீன் சிக்னல்’ நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரனே இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
இந்தப் படத்தில் ஜெய் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த ‘கேப் மாரி’ திரைப்படம் ஜெய் நடிக்கும் 25-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தில் இவருக்கு ஜோடியாக அதுல்யா, வைபவி ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் சத்யன், தேவதர்ஷினி, பவர் ஸ்டார், லிவிங்ஸ்டன், சித்தார்த் விபின் (இசை அமைப்பாளர்) நடிக்கிறார்கள்.
இசை – சித்தார்த் விபின், ஒளிப்பதிவு – ஜீவன், கலை – வீரமணி, படத் தொகுப்பு – ஜி.வி.பிரசன்னா, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு -எஸ்.ஏ.சந்திரசேகரன்.
படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மதியம் வடபழனி சிகரம் ஹாலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், நடிகர் ஜெய், நடிகைகள் அதுல்யா, வைபவி சாண்டில்யா, ஒளிப்பதிவாளர் ஜீவன் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது, “இந்த படம் எனக்கு 70-வது படம். காதலும், கவர்ச்சியும், காமெடியும் நிறைந்த இந்தப் படம் சிறந்த பொழுது போக்கு படமாக உருவாகி வருகிறது.
நான் வாழ்க்கையில் எல்லாவற்றையும் பார்த்து அனுபவித்துவிட்டேன். இந்த படத்தை முடித்த பிறகு இந்த படம் வெற்றி பெற்றாலும், இல்லாமல் போனாலும்… இனிமேல் படம் இயக்க மாட்டேன். ஆனால் இந்தப் படத்தை அடுத்து இந்தியில் இயக்கப் போகிறேன். வாய்ப்பு கிடைத்தால் தெலுங்கிலும் இயக்குவேன்.
இந்தப் படத்திற்கு ‘கேப்மாரி’ என்று தலைப்பு வைத்ததற்குக் காரணம் இன்றைய நிலையில் இளைஞர்கள் என்ன மாதிரியான நிலைமையில் இருக்கிறார்கள் என்பதை யதார்த்தமாகக் காட்டுவதற்காகத்தான்.
இப்போதைய இளைஞர்களைக் கவர வேண்டுமெனில் அவர்கள் வழியில் சென்று அவர்களுக்கான அறிவுரையைச் சொல்ல வேண்டும். நம்முடைய பழைய பாணியில் சொன்னால் ‘போடா கிழவா’ என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். அதனால்தான் இந்தத் தலைப்பில் இந்தக் கதையைச் சொல்ல வந்திருக்கிறேன். படத்தின் கதைக்கேற்பத்தான் தலைப்பினை வைத்திருக்கிறேன்.
இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை முறை.. ஐ.டி. தொழில்.. அதில் பணிபுரியும் இளைஞர்களின் வாழ்க்கைக் களம்.. செக்ஸ் பற்றி இப்போதைய தலைமுறையின் பார்வை.. சமூகம் கொண்டிருக்கும் கருத்து.. இதைப் பற்றித்தான் இத்திரைப்படம் பேசுகிறது.
செக்ஸ் என்பது மனித வாழ்க்கையில் ரொம்பவும் அழகான ஒரு விஷயம். ஆனால் நமது சமூகத்தில் அதைப் பற்றி வெளிப்படையாக பேசவே தயங்குவார்கள். எல்லாவற்றையும் மூடி மூடி வைத்து அனைத்தையும் கெடுத்து வைத்திருக்கிறார்கள். ஆனால் செக்ஸ் ரொம்பவும் அருமையானது. அதை அனுபவிச்சு வாழ்ந்திடணும். நான் அப்படித்தான் வாழ்ந்திருக்கேன்.
ஓப்பன் மைண்டோட வாழ்ந்து பாருங்க.. பழகுங்க.. ஏன்னா, இந்த வாழ்க்கை ஒரு முறைதான் நமக்கு உண்டு. அடுத்த பிறவியில் நாம் எப்படி இருக்கப் போகிறோம் என்று நமக்கே தெரியாது. அதனால் தற்போதைய மனித வாழ்க்கையை அழகா, ரசிச்சு வாழ்ந்துவிடுங்கள்.
தப்பு செய்தால் அதை தைரியமா சொல்லிடணும். மனைவிகிட்ட மட்டுமில்ல.. காதலிகளிடமும் உண்மையைச் சொல்லி அவர்களுக்கு உண்மையாக இருந்தால் வாழ்க்கையில் பிரச்சினைகளே வராது.
என் அனுபவத்தில் வாழ்க்கையில் நிறைய பேர் பொய் சொல்லியே வாழ்ந்து கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன். ஏன் அப்படி வாழ வேண்டும்.. அப்படி வாழ்வதை தவறு என்று இத்திரைப்படத்தில் சொல்லியிருக்கிறேன்.
இப்படிப்பட்ட போலித்தனமான வாழ்க்கையை வாழாத இரண்டு பேரின் வாழ்க்கையைத்தான் இந்த கேப்மாரி படத்தில் சொல்லியிருக்கிறேன். முன்பெல்லாம் பெண்கள் தங்களுக்குள் எழும் காதலை வெளிப்படையாகச் சொல்லத் தயங்குவார்கள். ஆனால் இப்போது அப்படியில்லை. ஒரே நேரத்தில் 3, 4 பேரிடம் காதலைச் சொல்கிறார்கள்.
ஆனால் இந்தப் படத்தில் ஒரு பெண் கதாபாத்திரம் காதலை வெளிப்படையாக சொல்லவே தயங்கும். அந்தக் கதாபாத்திரத்தில்தான் அதுல்யா நடித்துள்ளார்.
ஜெய் விளையாட்டு பையனா இருக்கானே என்று எல்லாரும் சொல்கிறார்களே என்று நினைத்தபடியேதான் ஜெய்யை அழைத்துப் பேசினேன். ஆனால் ஜெய் நிஜத்தில் அப்படியில்லை.
இந்தப் படத்தில் ஒப்பந்தம் ஆனதும், படத்தில் மிக, மிக ஆர்வமாக நடித்தார். ‘அவரால் எப்போதெல்லாம் ஷூட்டிங் வர முடியும்?’ என்று கேட்டு, அதற்கேற்றாற்போல்தான் நான் படப்பிடிப்பை நடத்தினேன். தயாரிப்பாளருக்கு ஏற்ற நடிகராக அவர் இருந்தார். நிச்சயமாக ஜெய், திரையுலகத்தில் பெரிய ஆளாக வருவார். இதை நான் உறுதியாகச் சொல்கிறேன்.
இப்போதைய காலக்கட்டத்தில் சினிமா ரசிகர்கள் எதை எதிர்பார்க்கிறார்களோ அதைத்தான் இந்தப் படத்தில் சொல்லி இருக்கேன். இந்தப் படம் கண்டிப்பாக தம்பி ஜெய்க்கு ஒரு மிகப் பெரிய ஹிட்டை கொடுக்கும்..” என்றார் நம்பிக்கையுடன்.