‘8 தோட்டாக்கள்’ படத்தில் ஹீரோவாக நடித்த வெற்றி நாயகனாக நடிக்கும் அடித்த படம் ‘ஜீவி’.
தீவிரமான சஸ்பென்ஸ் விஷயங்களை கொண்ட இந்த ‘ஜீவி’ திரைப்படம், விஞ்ஞானம் மற்றும் உள்ளுணர்வுகளுக்கு இடையே உள்ள மனித உணர்வுகளை பற்றி பேசியிருக்கிறது.
தேசிய விருது பெற்ற படத் தொகுப்பாளர் K.L.பிரவீன் படத் தொகுப்பாளராகப் பணிபுரிவதும், கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைப்பதும், படத்தின் தரத்தை மேலும் உயர்த்தும். பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐ.பி. கார்த்திகேயன் லைன் ப்ரொடுயூசராக முழு ஈடுபாட்டுடன் பணிபுரிவது படத்துக்கு பலம். பாபு தமிழ் எழுதிய திரைக்கதை மற்றும் வசனம் படத்தின் தரத்தை கணிசமாக உயர்த்தியுள்ளது.
விறுவிறுப்பான திரில்லர் கதையில் உருவாக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக ஒரே ஷெட்யூலில் எடுத்து முடிக்கப்பட்டிருக்கிறது.
இது பற்றி தயாரிப்பாளர் எம்.வெள்ளப்பாண்டியன் கூறும்போது, “எல்லா புகழும் இயக்குநர் வி.ஜே. கோபிநாத்தையே சேரும். அவர் புதுமுக இயக்குநராக இருந்தாலும், அவரது சரியான திட்டமிடல் மற்றும் அதை சமாளித்த அவரது திறமை எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.
ஒரு அறிமுக இயக்குநர் வழக்கத்திற்கு மாறான கதையுடன் அல்லது சிறப்பான கதை சொல்லும் திறனால் ஒரு தயாரிப்பாளரை ஈர்க்கக் கூடும். ஆனால் குறித்த காலத்துக்குள் படத்தை முடித்து கொடுப்பது அரிது. ஆனால் கோபிநாத் இதனை செய்து முடித்ததைப் பார்த்து எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது..” என்றார்.
இயக்குநர் வி.ஜே.கோபிநாத் கூறும்போது, “தயாரிப்பாளரின் முழுமையான ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியமில்லை. எனக்கு படைப்பு சுதந்திரத்தை வழங்குவதில் அவர் உண்மையாக செயல்பட்டது என் வேலையை மிகவும் எளிதாக்கியது. மேலும், இத்தகைய குணங்களை கொண்ட ஒரு தயாரிப்பாளர் கிடைப்பது எந்தவொரு இயக்குநருக்கும் ஒரு வரம். ஆனால் அதுவே போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளை முடிக்கவும் மற்றும் அவருக்கு உறுதியளித்தபடி முழு படத்தை சிறப்பாக வழங்கும் கூடுதல் பொறுப்பையும் என் தோள்களில் ஏற்றி உள்ளது…” என்றார்.
மேலும் நாயகியாக நடித்திருக்கும் மோனிகாவுக்கும் நன்றி கூறுகிறார் இயக்குநர். “படத்தின் சில காட்சிகளில் இந்த கலைஞர்களிடம் இருந்து திறமையான நடிப்பு தேவைப்பட்டது. குறித்த நேரத்துக்குள் முடிக்க வேண்டிய ஒரு கட்டாயம் இருந்தாலும், அவர்கள் சிறந்த நடிப்பை கொடுத்தனர். மற்ற படங்களில் நடித்து வந்தாலும் நாங்கள் கேட்ட தேதிகளை ஒதுக்கி முழு ஆதரவு தந்தார் நடிகர் கருணாகரன்.
‘8 தோட்டாக்களில்’ தனது நடிப்பு திறனை நிரூபித்த நாயகன் வெற்றி, வழக்கத்திற்கு மாறான நாயகன் கதாபாத்திரத்தில் மீண்டுமொரு முறை நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் பிரவீன் குமார் படப்பிடிப்பு முழுவதும் பிரதான ஆதரவு தூணாக இருந்தார். குறித்த காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டிய அழுத்தத்தில் நாங்கள் இருந்தபோது, அவரது பங்களிப்புதான் எங்களுக்கு சிறப்பாக படத்தை முடிக்க உதவியது…” என்றார் இயக்குநர்.