நம் நாட்டில் தனி மனித சுதந்திரமும், கருத்து சுதந்திரமும் படும்பாடு அலாதியானது.. ஒருவரின் கருத்து இன்னொருவருக்கு பிடிக்கவில்லையெனில் உடனேயே ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று தெருவில் இறங்கி விடுகிறார்கள்..
பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ் பெண்கள் ஜீன்ஸ் உடை அணிவது குறித்து தெரிவித்த கருத்து கேரளாவில் மகளிர் மத்தியில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறதாம்.
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் தனியார் தொண்டு நிறுவனம் நடத்திய காந்தி ஜெயந்தி விழாவில் கலந்து கொண்ட ஜேசுதாஸ் பெண்கள் ஜீனஸ் அணிவதைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ஜேசுதாஸ் பேசும்போது, “பெண்கள் ஜீன்ஸ் அணிந்து, மற்றவர்களுக்கு தொல்லை தரக் கூடாது. எதை மறைத்து வைக்க வேண்டுமோ அது மறைத்தே வைக்க வேண்டும். இது போன்ற உடைகள் எளிமையையும், அன்பையும் பெண்களின் உயர்ந்த குணங்களாக கொண்ட இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது..” என்றாராம்.
யேசுதாஸின் இந்தக் கருத்திற்கு எதிர்பார்த்தது போலவே உடனேயே எதிர்ப்புகள் கிளம்பிவிட்டன. கேரள காங்கிரஸ் கட்சியின் பெண்கள் பிரிவான மகிளா காங்கிரஸ் அமைப்பு, “யேசுதாஸின் இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. பெண்களின் சுதந்திரத்தை பாதிப்பதாக அவரது இந்த கருத்து அமைந்திருக்கிறது. யேசுதாஸ் தனது கருத்தை வாபஸ் பெற வேண்டும்..” என்று கூறி திருவனந்தபுரத்தில் ஆர்ப்பாட்டமே நடத்திவிட்டார்களாம்.
இது குறித்து பேட்டியளித்த கேரள மகளிர் காங்கிரஸ் தலைவர் பிந்து கிருஷ்ணா, “யேசுதாஸ் ஒரு சிறந்த பாடகர், இசைத் துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகள் இந்தியாவுக்கே பெருமை சேர்ப்பவை. ஆனால், அப்படிப்பட்டவரிடம் இருந்து இப்படி பெண்களுக்கு எதிரான கருத்து வருவது துரதிருஷ்டவசமானது. எங்களால் ஏற்க முடியவில்லை..” என தெரிவித்துள்ளார்.









