full screen background image

“விஷ்ணுவுக்கு இந்தப் படம் ஒரு கேம் சேஞ்சரா இருக்கும்…” – விஷாலின் நம்பிக்கை..!

“விஷ்ணுவுக்கு இந்தப் படம் ஒரு கேம் சேஞ்சரா இருக்கும்…” – விஷாலின் நம்பிக்கை..!

‘பாண்டிய நாடு’ என்ற வெற்றி படத்தைக் கொடுத்த சுசீந்திரன் அடுத்து இயக்கியிருக்கும் படம் ‘ஜீவா’. இதில் விஷ்ணு விஷால், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ஹீரோயின் ஸ்ரீதிவ்யா, சூரி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தை இயக்குநர் சுசீந்தரனே ‘வெண்ணிலா கபடி டீம் புரொடக்சஷன்ஸ்’ என்ற தனது நிறுவனத்தின் சார்பில் தயாரித்திருக்கிறார்.  இந்தப் படம் ‘வெண்ணிலா கபடி குழு’ மாதிரியே ஆனால் ஒரு வித்தியாசமாக கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம்.

டிரெயிலரை பார்க்கும்போது ஒரு நடுத்தர குடும்பத்து இளைஞன் கிரிக்கெட் மீது வைத்திருக்கிற ஆசையும் நம்பிக்கையும், நாட்டுக்காக விளையாட வேண்டும் என்கிற அவனது லட்சியமும் நிஜத்தில் எப்படியெல்லாம் பந்தாடப்படுகிறது என்பதுதான் கதை என்று தெரிகிறது.

படத்தை பார்த்து மிகவும் பிடித்துப் போன நடிகர்கள் ஆர்யாவும், விஷாலும் தங்களுடைய ‘தி ஷோ பீப்புள் கம்பெனி’, ‘தி நெக்ஸ்ட் பிக் பிலிம்’ நிறுவனத்தின் சார்பில் சேர்ந்து வாங்கி வெளியிடுகின்றனர். இந்தப் படத்தின் இசை வெளியீடும், பத்திரிகையாளர் சந்திப்பும் நேற்று நடைபெற்றது.

ஆர்யாவும், விஷாலும் அண்ணன் தம்பிகளாக சேர்ந்தே வந்தார்கள். சிவகார்த்திகேயனுடன் டூயட் பாடுவதற்காக படத்தின் ஹீரோயின் ஸ்ரீதிவ்யா, வெளிநாட்டுக்கு சென்றுவிட்டதால் அவர் மட்டும் ஆப்சென்ட். பாடலாசிரியர்கள் மதன் கார்க்கியும், கபிலன் வைரமுத்துவும் வந்திருந்தார்கள். மூன்றாவது பாடலாசிரியரான வைரமுத்து ஏனோ வரவில்லை.

இது போன்ற விழாக்களில் வரவேற்புரையும், உப்புச் சப்பில்லாத உரைகளையும் யார் கவனிக்கப் போகிறார்கள்..? ஆர்யா பேசும்போதுதான் நிமிர்ந்து உட்கார்ந்தது கூட்டம்..

“ஆடிட்டர் ஷண்முகமும், மகேந்திரனும் என்கிட்ட இந்த படத்தை வாங்கணும்னு சொன்னாங்க. நான் சரின்னு சொல்லிட்டேன். படத்தையும் பார்க்கல. கதையையும் கேட்கல. ஆனால், விஷால்தான் முழு கதையையும் கேட்டார். நல்லாயிருக்கு’ன்னு எங்கிட்ட சொன்னார். ஹாக்கி விளையாட்டை மையப்படுத்தி வந்த ‘சக்தே இந்தியா’ படம் ஹிந்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. அது போன்ற படம்தான் இது. அதில் ஹாக்கி.. இதில் கிரிக்கெட்..” என்றார் ஆர்யா.

 உடனே இடைமறித்து மைக்கை வாங்கிய இயக்குநர் சுசீந்திரன், “விளையாட்டை அடிப்படையாக கொண்ட கதைகள் எல்லாம் ஒரே மாதிரிதான் இருக்கும். அதுக்காக காப்பின்னு எல்லாம் சொல்லக் கூடாது. அது வேற… இது வேற….” என்றார் படபடப்புடன்.

இவருக்குப் பின் மைக்கை வாங்கிய விஷால் “ஒரு நல்ல படத்துல என் பேர் பதிவாகணும்கற நோக்கத்துலதான் இந்தப் படத்தை வாங்கி நான் வெளியிடறேன். லாப நோக்கத்துக்காகவே, வேற எதுக்காகவே இந்தப் படத்தை வாங்கலை.

எனக்கு ரெண்டு நோக்கங்கள்.. ஒன்று.. என் தம்பி விஷ்ணு பெரிய ஹீரோவா வரணும். இரண்டாவது, அஞ்சு வருஷம் கழிச்சி பார்த்தால்கூட நல்ல படம்னு பேரு எடுக்கிற படமா இது இருக்கும்னு நம்பிதான் இந்த படத்தை நான் வாங்கி வெளியிடுறேன்..

சுசீந்திரன் தொடர்ச்சியா நல்ல படங்களையே கொடுத்துட்டு வர்றாரு. பொதுவா சுசீந்திரன் படம்னா அதுல ஒரு நேர்த்தியும், தரமும் இருக்கும். நடுவுல ஒரு படம் மட்டும்தான்… சரி அதை விடுங்க.. இந்த படமும் சுசீந்திரன் ஸ்டைல் படமாகவே இருக்கும்.

போன வருஷம் டிசம்பர்லயே இந்த படத்தோட கதைய சொன்னாரு சுசீந்திரன்.  எல்லா நடிகர்களுக்கும் ஒரு ‘கேம் சேஞ்சர்’ தேவைப்படும். நாம என்னதான் முயற்சி பண்ணாலும் ஒரு காலகட்டத்துல ஒரு இயக்குனர்தான் நம்மள ஏதாவது ஒரு இடத்துக்கு கொண்டு போய் சேர்ப்பாரு.  எனக்கு எப்படி ‘அவன் இவன்’ படம் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்திக் கொடுத்துதோ, அப்படி இந்த ‘ஜீவா’ படம் விஷ்ணுவுக்கு அமையும். இந்தப் படம் விஷ்ணுவுக்கு ஒரு ‘கேம் சேஞ்சரா’  இருக்கும்னு நான் உறுதியா நம்பறேன்.

இந்தப் படத்தோட டிரைலர்ல கடைசியா ஒரு டயலாக் வரும். ‘எல்லா நாட்டுலயும் விளையாடறதுக்கு வாய்ப்பு கிடைச்சிதான் தோத்துப் போவாங்க. ஆனால், இந்த நாட்டுல மட்டும் வாய்ப்பே கிடைக்காம நிறைய பேர் தோத்துப் போயிருக்காங்கன்னு..’ இந்த டயலாக் இந்தப் படத்தை வாங்கிறதுக்கு எனக்கு ஒரு மிகப் பெரிய இன்ஸ்பிரேஷனா இருந்தது.

வாழ்க்கையில எந்த நேரத்துலயும் நாம கலங்கிடக் கூடாது, அதத்தான் நான் ஃபாலோ பண்ணிட்டு வர்றேன். இந்த விஷயம் படத்துல ரொம்ப நல்லா சொல்லப்பட்டிருக்கு…” என்றார் விஷால்.

நன்றியை தனது பதிலில் தெரிவித்தார் நடிகர் விஷ்ணு. ‘செல்லமே’ படத்தை முதல் நாள், முதல் ஷோவை தியேட்டரில் அடித்துப் பிடித்து பார்த்ததையும், ஆர்யாவை ஒரு பார்ட்டியில் சந்திக்கப் போய் அது முடியாமல் ஆர்யா பின்னாலேயே ஓடியதையும் சொன்னார் விஷ்ணு.

“அன்றைக்கு நான் பார்க்க ஏங்கிய அந்த இரண்டு பேரும் சேர்ந்து இன்னிக்கு நான் நடிச்ச ஒரு படத்தை வாங்கி வெளியிடுறாங்கன்னா அது நிச்சயம் நான் செய்த பாக்கியம்ன்னே நினைக்கிறேன்..” என்றார் விஷ்ணு விஷால்.

இந்தப் படத்தில் மேலும் இரண்டு சுவாரஸ்யங்கள்.. ஒன்று.. ‘சதுரங்க வேட்டை’ கதாநாயகன் ஒளிப்பதிவாளர் நட்டி நட்ராஜ் இந்தப் படத்தில் ஒரு குத்துப் பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். பொதுவாக குத்துப் பாடலுக்கு பெண்களைத்தான் வேறு வேறு மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்வார்கள். இப்போதுதான் முதல் முறையாக ஒரு ஆணை ஆட வைத்திருக்கிறார்கள். அந்தப் பாடலைகூட ரம்மியாக எடுத்திருக்கிறார்கள். பாராட்டுக்கள்..

இரண்டாவது சுவாரஸ்யம்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் இந்த ஒரே படத்தில் பாடல்களை எழுதியிருப்பதுதான்.. கவிப்பேரரசு வைரமுத்து, அவரது மகன்கள் மதன் கார்க்கி, மற்றும் கபிலன் வைரமுத்து ஆகிய மூவரும்தான் இருந்த பாடல்களை பங்கிட்டுக் கொண்ட கவிஞர்கள்..!

முன்பு வைரமுத்து மட்டுமே தனியொருவராக படத்தையே கைப்பற்றி வைத்திருந்தார். இப்போது குடும்பத்தோடு கைப்பற்றுகிறார் என்று கெட்ட பெயர் வரப் போகிறது.. பார்த்துக்குங்கப்பா..!

Our Score