full screen background image

ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதை ‘அம்மா’ என்ற பெயரில் படமாகியுள்ளது..!

ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதை ‘அம்மா’ என்ற பெயரில் படமாகியுள்ளது..!

தமிழ்நாடே அம்மா, அம்மா என்று கதறிக் கொண்டிருக்க ஒரு சினிமா தயாரிப்பாளர் இப்படியெல்லாம் நடக்குமென்று எதிர்பார்த்தோ அல்லது எதிர்பார்க்காமலோ ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் ஒரு திரைப்படத்தை தயாரித்து முக்கால்வாசியை முடித்திருக்கிறார்..

பைசல் சைஃப் என்னும் இந்த இயக்குநரே சர்ச்சைக்குரியவர்தான்.. சென்ற மாதம்தான் இவர் தயாரித்த ‘மெயின் ஹூன் ரஜினிகாந்த்’ என்னும் படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கோரி சூப்பர் ஸ்டார் ரஜினியே கோர்ட்டில் மனு கொடுத்தார். அந்த மனுவின் அடிப்படையில் அந்தப் படம் இப்போதுவரையிலும் தடை விதிக்கப்பட்ட நிலையிலேயே இருக்கிறது.

இந்த நிலையில்தான் இதே தயாரிப்பாளர் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ஒரு திரைப்படத்தை தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளிலும் தயாரித்திருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.

Amma_(film)

‘அம்மா’ என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் பிரபல கன்னட ஹீரோயின் ராகினி திவேதி ஜெயலலிதாவாக நடித்திருக்கிறார்.  ராகினியின் கேரக்டர் பெயரே ஜெயாதானாம்..

மேலும் இந்தப் படத்தில் ரூபா நட்ராஜ், ஹம்ஸா பிரதாப், கோகுல், ஆன்ஞான் ஸ்ரீவத்ஸவ், ராஜ்பால் யாதவ், கவிதா ராதேஷ்யம் போன்றோரும் நடித்திருக்கின்றனர். பைசல் சைஃபும், ஏ.ஆர்.ரவீந்திராவும் எழுதியிருக்கிறார்கள். பரத் ஆர்.பார்த்தசாரதி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தான்வி பிலிம்ஸ் புரொடெக்சன்ஸ் சார்பில் டாக்டர் சி.ஆர்.மனோகர் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.

இந்தப் படம் பற்றிய தகவல்கள் முன்கூட்டியே ஜெயலலிதாவுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். மேலும் இந்தப் படம் ஹீரோயின் ராகினி திவேதியின் பிறந்த நாளான இந்தாண்டு மே 23-ம் தேதியன்றுதான் பூஜையோடு துவக்கப்பட்டுள்ளது. அன்றைய பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் ஜெயலலிதாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாம்..

ஒரு இளம்பெண் சினிமாவுக்குள் நுழைந்து படிப்படியாக உயர்ந்து எப்படி உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கிறார். அதற்குப் பிறகு அரசியலில் அடியெடுத்து வைக்கும்போது அவரது வாழ்க்கை என்னவாகிறது என்பதுதான் இந்த ‘அம்மா’ படத்தின் கதையாம். படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடித்து விட்டதாகத் தயாரிப்பாளர் சொல்கிறார். இன்னும் 15 நாட்கள் ஷூட்டிங் மட்டுமே பாக்கியாம். தற்போது ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றதைத்தான் படத்தின் கிளைமாக்ஸாக சேர்க்க இருக்கிறார்களாம்..!

இந்தப் படம் தமிழைத் தவிர மற்ற மொழிகளில் நிச்சயம் வெளியாகும் என்று நம்பலாம்..!

Our Score