ஜெயலலிதா சினிமாவாக தயாரிக்க ஆசைப்பட்ட நாடகம்..!

ஜெயலலிதா சினிமாவாக தயாரிக்க ஆசைப்பட்ட நாடகம்..!

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், ‘கலைச்செல்வி’ என்று திரையுலகில் பாராட்டப்பட்டவருமான செல்வி.ஜெ.ஜெயலலிதா ஒரு திரைப்படத்தைத் தயாரிக்கவும் விருப்பப்பட்டிருக்கிறார் என்னும் சுவையான செய்தி வெளியாகியுள்ளது.

நடிகரும், இயக்குநருமான மெளலி இயக்கிய ஒரு நாடகத்தை சினிமாவாக தயாரிக்க ஜெயலலிதா முன் வந்ததாக மெளலியே சொல்லியிருக்கிறார்.

சமீபத்தில் மெளலி 'டூரிங் டாக்கீஸ் யு டியூப் சேனலு'க்கு அளித்திருக்கும் ஒரு பேட்டியில் இது பற்றி அவர் விரிவாகப் பேசியிருக்கிறார்.

“நான் தொடர்ந்து சென்னையில் நாடகங்கள் போட்டுக் கொண்டிருந்த நேரத்தில் ‘தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில்’ என்ற நாடகத்தை எழுதினேன். அது நாடகமாக அரங்கேற்றம் ஆனபோது பெரும் வரவேற்பைப் பெற்றது.

பல காட்சிகள் ஹவுஸ்புல்லாக அந்த நாடகம் நடைபெற்றது. அந்த நாடகத்தைப் பார்க்க பல்வேறு திரையுலக பிரபலங்கள் வந்தார்கள். ‘இது சினிமாவுக்கேற்ற கதையா இருக்கே…?’ என்று எல்லோரும் சொன்னார்கள்.

அப்போது எனது நண்பரான ஜானகிராமன் இந்த நாடகத்தைப் படமாக்க முன் வந்தார். அதற்கு முதல்படியாக சில விநியோகஸ்தர்களை நாடகம் பார்க்க அழைத்து வந்தார். அவர்களும் வந்து நாடகத்தைப் பார்த்துவிட்டு 'பக்காவான சினிமாவுக்கு ஏற்ற கதை இது' என்று சர்டிபிகேட் கொடுத்துவிட்டார்கள்.

அதன் பின்பு கேரக்டர்களில் யார், யாரை புக் செய்யலாம் என்று பேசிக் கொண்டிருந்தோம். அந்த நாடகத்தில் இரண்டு முக்கியமான பெண் கதாபாத்திரங்கள் இருந்தனர். ஒருவர் மாடர்ன் கேர்ள். மற்றவர் கிராமத்துப் பெண். இதில் வரும் கிராமத்துப் பெண் கேரக்டருக்கு ஸ்ரீவித்யாவை புக் செய்யலாம். மாடர்ன் கேர்ள் கேரக்டருக்கு ஜெயலிலதாவை அப்ரோச் செய்யலாம் என்று நாங்கள் பேசிக் கொண்டோம்.

அந்தச் சமயத்தில் ஜெயலலிதாவும் எங்களது நாடகத்தைப் பார்க்க வந்தார். அவரை எனக்கு இதற்கு முன்பேயே பரிச்சயம் உண்டு. நான் ஒய்.ஜி.பி. குரூப்பில் நடித்துக் கொண்டிருந்தபோதே ஜெயலலிதா எனக்குப் பழக்கமானவர்.

இந்த நாடகத்தைப் பார்த்த ஜெயலலிதா நாடகத்தில் மிகவும் இம்ப்ரஸ்ஸாகிவிட்டார். அப்போது அவர், “இந்த நாடகத்தை சினிமாவுக்குக் கொடு்க்கலாமே..?” என்றார். நானும் அதை ஆமோதித்தேன். உடனேயே அவர், “இதை நானே தயாரிக்கிறேன்…” என்றார். என்னால் நம்ப முடியவில்லை. “ஆமாம்.. நான் தயாரிக்கிறேன். இந்த நாடகத்துல வர்ற கிராமத்து பொண்ணு வேடத்துல நானே நடிக்கிறேன்…” என்றார்.

“அம்மா.. நாங்க ஏற்கெனவே உங்களை மாடர்ன் கேர்ள் கேரக்டருக்கு கேக்கலாம்ன்னு நினைச்சிருந்தோம்.. நீங்க கிராமத்து வேடத்துக்கு போயிட்டீங்கன்னா அந்த மாடர்ன் கேர்ள் கேரக்டருக்கு இப்போ யாரைத் தேடுவோம்…?” என்று சொன்னோம். அதன் பிறகு அவர் அதில் ஆர்வம் காட்டவில்லை. நாங்களும் விட்டுவிட்டோம்.

ஆனால் படத்தைத் தொடர்ந்தோம். நாயகனாக ஸ்ரீகாந்த் நடித்தார். உடன் ஸ்ரீவித்யாவும் நடித்தார். ஸ்ரீகாந்த் அப்போது மிகவும் பிஸியான நடிகர். ஒரு நாள், ரெண்டு நாள் என்று இடையிடையே வந்து, வந்து நடித்துக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஸ்ரீவித்யா மலையாளப் படங்களில் நடித்து முடித்துவிட்டு வந்து நடித்துக் கொடுத்தார்.

ஒரு கட்டத்தில் படம் இழுத்துக் கொண்டே போனது. யாரையும் ஒரு தேதிக்குள்ளாக பிடிக்க முடியவில்லை. படப்பிடிப்பை முழுவதும் முடிக்க.. ஒரு மாதம் அல்ல.. இரண்டு மாதங்கள் அல்ல.. இரண்டு வருடங்களாகிவிட்டது. 1978-ல் அந்தப் படம் உருவாகத் துவங்கி.. 2 வருடங்கள் கழித்து 1980-ம் ஆண்டுதான் அத்திரைப்படம் வெளியானது.

‘மற்றவை நேரில்’ என்ற பெயரில் இந்தப் படம் வெளியானபோது சுற்றிலும் 7, 8 கலர் படங்கள் வெளியாகின. இந்த ஒரு படம் மட்டுமே கருப்பு, வெள்ளை திரைப்படம். அப்படியிருந்தும் படம் ஓரளவுக்கு ஓடியது. திரையிட்ட தியேட்டர்களில் 75 நாட்கள் ஓடி விநியோகஸ்தர்களுக்கு போட்ட காசை எடுத்துக் கொடுத்தது. அந்த வகையில் நாங்கள் தப்பினோம்..” என்றார் இயக்குநர் மெளலி.