சென்ற மாதம் கொரோனா காலத்திற்குப் பிறகு தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்கப்பட்டபோது கியூப் நிறுவனத்திற்குச் செலுத்த வேண்டிய கட்டணத்தைக் கட்ட மாட்டோம் என்று அனைத்துத் தயாரிப்பாளர்கள் சங்கமும் போர்க்கொடி தூக்கின.
இதையடுத்து பேச்சுவார்த்தைக்கு வந்த கியூப் நிறுவனம் வரும் டிசம்பர் மாதம்வரையிலும் தயாரிப்பாளர்களுக்கு கட்டணத்தில் சலுகை தருகிறோம் என்றது. ஆனால் அந்தச் சலுகையையும் ஏற்பதற்கில்லை என்று தயாரிப்பாளர்கள் சங்கம் சொன்னது. திடீரென்று 100 சதவிகிதம் கட்டணக் குறைப்பு என்று ஒரு அறிக்கையை வெளியிட்டது கியூப் நிறுவனம்.
இதற்கடுத்து சென்ற மாதம் கடைசியாக நடத்தப்பட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தையின்போது இந்தக் கட்டணக் குறைப்பை அடுத்தாண்டு மார்ச் மாதம்வரையிலும் கொண்டு செல்வதாகவும், அதற்குள்ளாக இந்தத் திரையீட்டு பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வை அனைவரும் கூடிப் பேசி முடிவு காண்போம் என்று முடிவெடுத்தார்கள்.
தியேட்டர்கள் திறக்கப்பட்டன. புதிய படங்கள் வெளியிடப்பட்டன. கூட்டம் குறைவாக இருந்தாலும் ஏதோ படத்தைத் தயாரித்து தியேட்டரில் வெளியிட்ட திருப்தியோடு, சில தயாரிப்பாளர்கள் அலுவலகத்தை மூடிவிட்டு வீடுகளுக்குள் ஓடி ஒளிந்தார்கள்.

இந்த நிலையில் தற்போது கியூப் நிறுவனம் கட்டணத்தில் இருந்து 100 சதவிகிதம் தள்ளுபடி என்று சொன்னதெல்லாம் பொய். அது தமிழ்ப் படங்களுக்கும், தென்னிந்திய மொழிப் படங்களுக்கும் அல்ல.. இ்ந்தித் திரைப்படங்களுக்கு மட்டுமே.. என்பதும் தெரிய வந்துள்ளது.
மற்றைய தென்னிந்திய மொழித் திரைப்படங்களுக்கு அவர்கள் நிர்ணயித்துள்ள 40 சதவிகிதக் கட்டணத்தைக் கட்டியே தீர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்று ‘பழகிய நாட்கள்’ படத்தின் தயாரிப்பாளரான ராம்தேவ் மிக வருத்தத்துடன் கூறியுள்ளார்.
இது பற்றி வாட்ஸ் அப்பில் அவர் எழுதிய பதிவு இது :
மரியாதைக்குரிய தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் வணக்கம்.
‘பழகிய நாட்கள்’ திரைப்படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளரும் ஆன ராம்தேவ் பகிர்ந்து கொள்வது :
தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்ற மறுநாளே கியூப் கம்பெனியில் தயாரிப்பாளர்களிடம் திரையிட்டூக் கட்டணத்தை 40 சதவீதம் கொடுங்கள் என்று சொல்கிறார்கள். போன வாரம் 1,500 ஆக இருந்த கட்டணம், இந்த வாரம் 5,500 ஆக உயர்ந்திருக்கிறது.
பேருக்குத்தான் பெத்த பெயர் ‘தயாரிப்பாளர்கள் நாம்’ என்று…! கியூப் நிறுவனம் 40 சதவிகிதம் VPF கட்டணம் கேட்கிறார்கள் என்று நேற்றைக்கு பரிதவித்து பதிவிட்டு கதறினேன். அனாதையாக நின்று க்யூப் நிறுவனத்தில் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறேன்.
அவர்கள் விட்ட அறிக்கையில் 100 சதவிகிதம் கட்டணக் குறைப்பு என்றும், இது டிசம்பர் மாதம் வரையிலும் நடைமுறையில் இருக்கும் என்று சொன்னார்கள். ஆனால், அதற்குக் கீழே சிறிய எழுத்தில் “தமிழ்ப் படங்களுக்கு இது பொருந்தாது” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
ஹிந்தி மொழிக்கு மட்டும் டிசம்பர் மாதம்வரையிலும் 100 சதவிகிதம் VPF கட்டணம் இலவசம் என்றால்.. தமிழ்நாடு இந்தியாவில் இல்லையா..? இல்லை தமிழ் தயாரிப்பாளர்கள் எல்லாம் இளிச்சவாயனா..? இதைப் பற்றி யாரும் பதிவிடவில்லை வேறு என்னென்னவோ பதிவிடுகிறார்கள்.
இதைத் தட்டிக் கேட்க தயாரிப்பாளர்களும் இல்லை… விநியோகஸ்தர்களும் இல்லை… மீடியேட்டர்களும் இல்லை.

சினிமா வரலாற்றில் ஒரு டிக்கெட்டுக்கு ஒரு டிக்கெட் இலவசம், பாப்கான் இலவசம் என்று தியேட்டரில் ஆள் பிடிக்கிறார்கள்.
இந்த நிலைமை நன்கு தெரிந்தும் போனால் போகட்டும் என்று என்னை மாதிரி சிறு பட தயாரிப்பாளர்கள் எங்கள் படத்தை வெளியிடுகிறோம்.
தியேட்டரையே மறந்துபோன ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைப்பதுதான் இப்போது தமிழ்ச் சினிமாவுலகத்தின் மிகப் பெரிய கவலை.
உடலின் உயிர் ஒட்டிக் கொண்டு இருந்தால்தான் அந்த உடலுக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்க முடியும். இப்போது திரையரங்குகளின் உயிர் போன்றதுதான் எங்களது சிறு முதலீட்டு படங்கள். 40 சதவிகித VPF கட்டணத்தால் சிறு தயாரிப்பு படங்கள் வெளிவராவிட்டால் ஒரே அடியாக தியேட்டர்கள் மரணித்து விடும்.
தியேட்டர்கள் பழைய நிலைமைக்கு இப்போதுதான் வந்து கொண்டிருக்கிறது. ஆகவே கியூப் நிர்வாகமும் இதை மனதில் வைத்து செயல்பட வேண்டுகிறேன்.
சிதறிக் கிடக்கும் தயாரிப்பாளர்கள் இதை மனதில் வைத்து ஒன்று கூடி சீக்கிரம் முடிவெடுத்தால் சினிமா வளரும். இல்லையென்றால் உடை அணிந்து வரும் தயாரிப்பாளர்கள் படம் ரிலீஸ் ஆகி வீட்டுக்கு போகும்போது கோமணம்கூட அவர்களிடத்தில் மிஞ்சியிருக்காது…” என்று கூறியிருக்கிறார்.