full screen background image

நடிகர் விஜய்யின் 28 ஆண்டு கால வெற்றிப் பயணம்..!

நடிகர் விஜய்யின் 28 ஆண்டு கால வெற்றிப் பயணம்..!

‘தளபதி’ என்றும், ‘இளைய தளபதி’ என்றும் தமிழ்த் திரையுலகத்தில் போற்றப்படும் நடிகர் விஜய் தமிழ்த் திரையுலகத்தில் ஒரு நாயகனாக அடியெடு்த்து வைத்து நேற்றோடு 28 வருடங்களாகிவிட்டது.

அவர் ஹீரோவாக நடித்த முதல் திரைப்படமான ‘நாளைய தீர்ப்பு’ திரைப்படம் 1992-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதியன்றுதான் வெளியானது. இன்றோடு அத்திரைப்படம் வெளியாகி 28 ஆண்டுகள் கடந்துவிட்டது.

முதலில் சில திரைப்படங்களில் வழக்கமான ஹீரோவாக அவர் வந்து கொண்டிருந்தாலும் 1996-ல் இயக்குநர் விக்ரமனின் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த ‘பூவே உனக்காக’ திரைப்படம்தான் முதல்முறையாக விஜய்யின் நடிப்புலக வாழ்க்கையில் ஒரு பிரேக்கை கொடுத்தது.

அதுவரையிலும் விஜய்க்கென்றே இருந்த ரசிகர்கள் கூட்டம் மட்டுமே வந்து கொண்டிருந்த நிலையில் ‘பூவே உனக்காக’ படத்திற்குப் பிறகு அவரது படங்களுக்கு பேமிலி ஆடியன்ஸ்களும் வரத் துவங்கினர். இங்கேதான் விஜய்யின் கேரியரின் அடுத்தக் கட்டம் துவங்கியது.

இதைத் தொடர்ந்து வந்த ‘நேருக்கு நேர்’, ‘காதலுக்கு மரியாதை’ இரண்டு படங்களும் அவரை ஒரு மார்க்கெட் உள்ள நடிகராக தமிழ்த் திரையுலகத்தில் நிலை நிறுத்தியது. இந்தப் படங்களுக்குப் பிறகு இயக்குநர்களின் பார்வை விஜய்யின் மீது திரும்பியது.

‘நினைத்தேன் வந்தாய்’, ‘பிரியமுடன்’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘மின்சாரக் கண்ணா’, ’குஷி’ என்ற படங்கள் அவரை ‘தளபதி’ என்ற அடைமொழிக்குக் கொண்டு போயின.

இதன் பின்பு விஜய்யின் மார்க்கெட் ஸ்டெடியாகவும், படத்துக்குப் படம் உயர்ந்து கொண்டே போகவும் செய்தன. இதற்கடு்த்து வந்த ‘பிரெண்ட்ஸ்’ படத்தின் அதிரி புதிரி ஹிட்டால் மிகவும் பயனடைந்தார் விஜய்.

இதற்குப் பின் வேறு ஹீரோக்களுடன் பயணம் செய்ய மறுத்து தனது தனி ஆவர்த்தனத்தைக் காட்டத் துவங்கினார் விஜய்.

பல படங்கள் வெற்றியடைந்தாலும், சில படங்கள் தோல்வியடைந்தாலும் அவருடைய மார்க்கெட் என்றும் ஸ்டெடியாகவே இருந்து வந்தது.

2000-த்திற்குப் பிறகு பொருளாதார மார்க்கெட் சூழல் காரணமாக சம்பள விகிதத்தில் யாருமே எட்டிப் பிடிக்க முடியாத முதலிடத்தைத் தொட்டார் விஜய். ரஜினியின் திரைப்படங்கள் தொடுவதற்குத் தயங்கிய வசூலை, விஜய்யின் திரைப்படங்கள் அலட்சியமாகத் தாண்டி போயின.

இதுவே அவரை அடுத்த ரஜினியாக்கியது. போட்டியாளர் என்ற ஒருவர் இல்லையெனில் யாருமே ஓட்டப் பந்தயத்தில் சாதனை நிகழ்த்த முடியாது என்பதால் அஜீத்தை தனது போட்டியாளராக வரித்துக் கொண்ட விஜய் அதன் பின்பு காட்டிய பாய்ச்சலில் இன்றைக்குத் தமிழ்த் திரையுலகத்தின் மார்க்கெட் நிலவரம் உச்சத்தில் நிற்கிறது.

‘கில்லி’, ‘சிவகாசி’, ‘போக்கிரி’, ‘வில்லு’, ‘காவலன்’, ‘நண்பன்’ என்றவரையிலும் ‘கமர்ஷியல் கம்மர் கட்’ என்று சொல்லப்படும் படங்களை வாரி வழங்கிய விஜய், இதற்குப் பிறகு வருடத்திற்கு ஒரு படம் செய்யலாமே என்று நின்று நிதானமாக ஆடத் துவங்கினார்.

இதற்குப் பின்புதான் விஜய்யின் மெகா டிரீம் பிராஜெக்ட்டுக்கள் வெளிவரத் துவங்கின. ‘துப்பாக்கி’, ‘தலைவா’, ‘ஜில்லா’, ‘கத்தி’, ‘புலி’, ‘தெறி’, ‘பைரவா’, ‘மெர்சல்’, ‘சர்க்கார்’, ‘பிகில்’ என்று அவர் கொடுத்த அத்தனையும் தமிழ்ச் சினிமாவின் ஒட்டு மொத்த பட்ஜெட்டில் கால்வாசியைத் தொட்டுவிட்டன.

படத்தின் ஒட்டு மொத்த வசூலில் இவரது பல திரைப்படங்கள் முதலிடத்தைப் பிடித்துவிட்டது. அஜீத்தும் இவரும் வசூலில் போட்டி போட்டுக் கொண்டிருப்பது தமிழ்த் திரைப்படத் துறையின் வர்த்தகத்திற்கு ஆக்ஸிஜன் கொடுப்பதாகவே உள்ளது.

தற்போதைய கொரோனா காலக்கட்டம் முடிந்து அடுத்து மீண்டும் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் தியேட்டர்களுக்கும், தமிழ்த் திரைப்படத் துறைக்கும் புத்துணர்ச்சியை ஊட்ட ஒட்டு மொத்தத் தமிழ்நாடே காத்துக் கொண்டிருப்பது விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்திற்காகத்தான். இதிலிருந்தே இவரது அருமையையும், பெருமையையும் அறிந்து கொள்ளலாம்.

ரசிகர்களைப் பொறுத்தமட்டில் ‘சூப்பர் ஸ்டார்’ என்றழைக்கப்படும் ரஜினிக்கு அடுத்தபடியாக அதிகப்படியான ரசிகர் பட்டாளத்தைத் திரட்டி வைத்திருக்கிறார் விஜய். ‘அண்ணா’.. ‘அண்ணா’.. என்று அழைக்கும் அளவுக்கு தமிழகம் தாண்டியும் தமிழ் பேசும் மக்களிடையே வீட்டில் ஒருவராக நினைக்கும் அளவுக்கு விஜய் இருப்பதுதான் மிகப் பெரிய விஷயம்.

இதை இந்த 28 ஆண்டுகளில் செய்து முடித்திருக்கிறார் என்பதில்தான் விஜய்யின் வெற்றியே அடங்கியிருக்கிறது..!

நடிகர் விஜய்க்கு நமது வாழ்த்துகள்..!

Our Score