“ராஜினாமா கடிதம் ரெடி…” – டி.ராஜேந்தர் அறைகூவல்..!

“ராஜினாமா கடிதம் ரெடி…” – டி.ராஜேந்தர் அறைகூவல்..!

அடுத்த மாதம் நடைபெறவுள்ள தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் டி.ராஜேந்தர் அணியில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுக விழா நேற்று நடைபெற்றது.

அந்த அணியில் தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர் போட்டியிடுகிறார். செயலாளர்கள் பதவிக்கு மன்னன், என்.சுபாஷ் சந்திரபோஸ் இருவரும் போட்டியிடுகின்றனர்.  பொருளாளர் பதவிக்கு கே.ராஜன் போட்டியிடுகிறார். துணைத் தலைவர்கள் பதவிக்கு கே.முருகன், பி.டி.செல்வக்குமார் இருவரும் போட்டியிடுகின்றனர்.

மேலும் 21 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு, ஏ.எம்.ரத்னம், என்.பிரபாகரன், அசோக் சாம்ராஜ், மனோஜ்குமார், மனோபாலா, ஷக்தி சிதம்பரம், எம்.திருமலை, சரவணன், டி.டி.ராஜா, ரிஷிராஜ், ஸ்ரீதர், செந்தில் குமார், ஜான் மேக்ஸ், பாபு கணேஷ், கே.ஜி.பாண்டியன், இசக்கிராஜா, மதுரை செல்வம், ராஜா, பிரபாதிஷ் சாம்ஸ், திருக்கடல் உதயம், ஆர்.சந்திரசேகர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இவர்கள் அனைவரும் நேற்று நடைபெற்ற அறிமுகக் கூட்டத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

தொடர்ந்து தலைவர் பதவிக்குப் போட்டியிடும் டி.ராஜேந்தர் இந்தக் கூட்டத்தில் பேசும்போது, "நான் தற்போது தலைவராக உள்ள சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் அனுமதியுடன்தான் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிடுகிறேன்.

இதற்காக எங்களது சங்கத்தின் சட்டத் திட்டத்தில் தேவையான திருத்தத்தைச் செய்து அதற்கு விநியோகஸ்தர்கள் சங்கத்தின் செயற்குழுவிலும் ஒப்புதல் பெற்றுவிட்டோம். பொதுக்குழுவில் மட்டும்தான் ஒப்புதல் பெற வேண்டியுள்ளது.

100 பேருக்கும் மேல் கூட்டமாகக் கூடக் கூடாது என்று தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவல் தடுப்புக்காக உத்தரவிட்டுள்ளதால் இந்தப் பிரச்சினை முடிந்தவுடன் எங்களது விநியோகஸ்தர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டப்பட்டு எங்களுடைய சட்டத் திருத்தத்திற்கு நாங்கள் ஒப்புதல் பெற்றுவிடுவோம்.

அப்படி எங்களுடைய பொதுக்குழு ஒப்புதல் அளிக்கவில்லையெனில் நாங்கள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் பதவியில் இருந்து விலகிவிடுவோம். அதற்கான ராஜினாமா கடிதத்தைக்கூட தயார் நிலையில் வைத்திருக்கிறோம்.

நாங்கள் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்று பொறுப்புக்கு வந்தால், சிறு பட தயாரிப்பாளர்கள் நலனுக்காக போராடுவோம். திரையரங்குகளில் வசூலிக்கப்படும் உள்ளாட்சி கேளிக்கை வரியை நீக்க முதல்வருக்கும் ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய பிரதமருக்கும் கோரிக்கை வைப்போம். சிறு தயாரிப்பாளர்கள் நலனுக்காக குரல் கொடுப்போம். வி.பி.எப்., கட்டணத்தை ரத்து செய்யப் போராடுவோம்.

தமிழ்த் திரையுலகின் மூத்தத் தயாரிப்பாளர்களான எஸ்.ஏ.சந்திரசேகர், தாணு, முரளிதரன், ஆர்.பி.சவுத்ரி, கமீலா நாசர், ஏ.எல்.அழகப்பன், கேயார் போன்றோரை இணைத்து சங்கத்தில் ஒரு உயர்மட்ட ஆலோசனை குழுவை அமைப்போம். அவர்களது ஆலோசனையின்படி சங்கத்தை நடத்துவோம்.

முந்தைய நிர்வாகத்தினர் முறைகேடாக செலவு செய்திருந்த சங்கப் பணத்தைத் திரும்பப் பெறுவோம். தயாரிப்பாளர்களின் நலனுக்காக பேச வேண்டிய நேரத்தில்.. பேச வேண்டிய இடத்தில்.. பேச வேண்டிய விதத்தில் பேசுவோம்…" என்றார்.