சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவரவிருக்கும் ‘ஜெயிலர்’ படத்திற்கு புதிய பிரச்சினை எழுந்துள்ளது.
படத்தின் தலைப்புதான் தற்போது சிக்கலில் சிக்கியுள்ளது. இதே தலைப்பில் மலையாளத்தில் ஒரு படமும் தயாராகிறது என்பதுதான் சர்ச்சைக்குக் காரணம்.
இந்த மலையாளப் படத்தில் ரஜினியுடன் பிலிம் இன்ஸ்ட்டியூட்டில் உடன் படித்த நண்பரும், பிரபல மலையாள நடிகர், கதாசிரியரான சீனிவாசனின் மகன் தியான் சீனிவாசன் ஹீரோவாக நடிக்கிறார். சாக்கீர் மடத்தில் இந்தப் படத்தை இயக்குகிறார்.
இந்த இரண்டு படங்களின் கதைகளில் ஒற்றுமை இல்லை என்றாலும், அதே தலைப்பில் வெளியானால் அது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் என்று மலையாள ‘ஜெயிலர்’ படத்தின் தயாரிப்பாளர்கள் நினைக்கிறார்கள்.
இதையொட்டி மலையாள இயக்குநரான சாக்கீர் மடத்தில் சமீபத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.
அதில் அவர் பேசும்போது, “இது ஒரு தீவிரமான பிரச்சினை. ரஜினிகாந்த் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸை இது குறித்து அணுகினோம். ஆனால் அவர்கள் டைட்டிலை மாற்ற மறுத்துவிட்டார்கள். நாங்கள் சிறிய படத்தைத் தயாரிப்பதால், ஏற்கனவே படத்தின் தயாரிப்பு தொழிலில் நஷ்டத்தில் உள்ளதாலும் தமிழ் ஜெயிலர் தலைப்பை மற்ற வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
மேலும், “தமிழ் ஜெயிலர் படத்தில் மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன்லாலும் நடிக்கிறார். எனவே, மலையாளத்தில் தலைப்பை மாற்றி வெளியிட்டால் அது படத்தின் வசூலை பாதிக்காது..” என்றும் இயக்குநர் சாக்கீர் மடத்தில் தெரிவித்தார்.
ஆனால் தமிழ் ‘ஜெயிலர்’ படத்தின் தயாரிப்பாளரான சன் பிக்சர்ஸ் நிறுவனம், “தமிழின் உச்ச நட்சத்திரத்தை வைத்து இந்தப் படம் உருவாகியிருப்பதாலும், படத்தின் கதைக்கு இந்தத் தலைப்பே மிகப் பொருத்தமாகவும் இருப்பதால் படத்தின் தலைப்பை மாற்ற முடியாது..” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.









