ஜெயில் – சினிமா விமர்சனம்

ஜெயில் – சினிமா விமர்சனம்

‘வெயில்’, ‘அங்காடி தெரு’, ‘அரவான்’, ‘காவியத் தலைவன்’ என்று புதுமையான படைப்புகளைத் தந்தவர் இயக்குநர் வசந்த பாலன். இவர் இயக்கியிருக்கும் புதிய திரைப்படம் ஜெயில்’.

இந்தப் படத்தை கிரிகேஷ் சினி கீரியேஷன் சார்பில் தயாரிப்பாளர் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரித்துள்ளார். இவர் மிஷ்கின் இயக்கிய சவரக்கத்தி’,  விஷாலின் ‘இரும்புத்திரை’ ஆகிய வெற்றிப் படங்களை வெளியிட்டவர்.

இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார்,  அபர்நதி, நந்தன் ராம், பசங்க’ பாண்டி, ராதிகா சரத்குமார், ரவி மரியா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தயாரிப்பு மேற்பார்வை – பி.டி.செல்வகுமார், ஒளிப்பதிவு – கணேஷ் சந்திரா, பாடல்கள் – கபிலன், இசை – ஜி.வி.பிரகாஷ் குமார், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் வசந்த பாலன்.

இயக்குநர் வசந்தபாலன் படம் என்றாலே நல்ல சினிமாவை எதிர்பார்த்து ஏங்கும் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். ஏனெனில் அப்படியான தனித்துவமான படைப்புகளை வழங்கியவர்தான் வசந்தபாலன்.

அவரது இயக்கத்தில் வெளியான ‘வெயில்’, அங்காடித் தெரு’ இரண்டும உலக சினிமாக்களுக்கு சவால்விடும் படங்கள். இடையில் அரவான்’, ‘காவியத் தலைவன்’ என இரண்டு சறுக்கல்கள். அதன் பின் ஏழு ஆண்டுகள் கழித்து இந்த ‘ஜெயில்’ மூலமாக வந்திருக்கிறார்.

படம் துவங்கும்போதே படத்தின் மையக் கருவை வசந்தபாலனின் குரல் பதிவு செய்கிறது. அந்தப் பதிவின்படி பார்த்தால் இக்கதை அடித்தட்டு மக்களுக்கு நிலம் மறுக்கப்படுவதால், அவர்கள் வாழும் காலனிகளே அவர்களுக்கு ஜெயிலாக மாறுகிறது என்பதே.

மேலும் நிலம் விட்டு நிலம் விட்டு தொடர்ந்து அடித்தட்டு மக்களை விரட்டும்போது அவர்களின் உளவியலும் மாறுபாட்டுக்குள்ளாகி சிலரை தவறான வழிக்கு அழைத்துச் செல்கிறது. அப்படிச் செல்லும் சிலரை அதிகார வர்க்கமும், அரசியல்வாதிகளும் தங்களின் சுயநலத்திற்காகப் எப்படி பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை வசந்த பாலனின் குரல் வழிக் கதை சொல்கிறது. ஆனால், படத்தின் பயணமோ வேறோர் கோணத்தில் பயணிக்கிறது என்பதுதான் உண்மை.

படத்தின் துவக்கத்திலேயே ஹீரோ ஒரு திருடன் என காட்டப்படுகிறது. ஒரு ஐ போனை மிரட்டி திருடுவதில் ஆரம்பிக்கும் அவர் தொடர்ந்து திருட்டு வேலைகளைச் செய்கிறார்.

அவருக்கு ராமு என்ற போதைப் பொருள் விற்கும் நண்பனும் உண்டு. இன்னொரு நண்பரான பசங்க பாண்டி இவர்களோடு நட்பில் இருந்தாலும் தொழில் விசயத்தில் இவர்களிடம் இருந்து விலகியே நிற்கிறார். இந்த மூவரின் நட்பை ஒட்டி படம் பயணிக்கும்போது இவர்களின் எதிர் கோஷ்டி மூலமாக சில பிரச்சனைகள் இவர்களுக்கு ஏற்படுகிறது.

இந்தப் பிரச்சனைகளை காவல் துறையும், அரசியல்வாதிகளும் ஊக்கவிக்கிறார்கள். அதன் விளைவாக நந்தன் ராம் கொலை செய்யப்படுகிறார். இதன் பின்பு அவரின் இறப்பிற்குப் பின்னால் இருக்கும் சதி வேலைகளை ஜீ.வி. கண்டு பிடிக்க முயல்கிறார். அது முடிந்ததா… இல்லையா.. என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

படத்தில் நடிகர்களின் தேர்வும் அவர்களின் நடிப்பும் முத்திரைப் பதிக்கிறது. நடிகர்களை நடிக்க வைப்பதில் தானொரு தேர்ந்த படைப்பாளி என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறார் வசந்தபாலன். இதிலும் அப்படியே..!!!

ஜீ.வி.பிரகாஷ் வட சென்னை வாலிபனாக நடித்துள்ளார். நட்புக்காக உயிரையும் கொடுக்கத் துணிவதால் அவருக்கு கர்ணா’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள் போலும்..!

சென்னை வாழ் அடித்தட்டு வர்க்க இளைஞராக சென்னைத் தமிழில் பேசிக் கொண்டு வரும் சில்லரைத் திருடனாக ஜீ.வி. அப்படியே பொருந்திப் போயிருக்கிறார்.

ஜீ.வி. இங்கேயே பிறந்து வளர்ந்திருப்பதால் அவருக்கு சென்னையின் வட்டார மொழி லாவகமாக வருகிறது. அதற்கேற்ற உடல் மொழியையும் அவர் இந்தப் படத்தில் கையாண்டிருக்கிறார்.

மற்ற ஹீரோக்களைப் போல பறந்து பறந்து அடிக்கும் ஹீரோயிஸம் தனக்கு செட்டாகாது என்பதை உணர்ந்து கதையின் கதாபாத்திரத்திற்கேற்ற கேரக்டர்களை தேர்வு செய்யும் ஜீ.வி.யின் முயற்சி பாராட்டத்தக்கதுதான். அவரது சமீபத்திய பல படங்களிலும் இந்தக் கதாபாத்திரத்தில் வாழ்வது போன்றே ஸ்கிரீனில் தோன்றியிருக்கிறார் ஜீ.வி.

இந்தப் படத்தின் அறிமுகக் காட்சியில் நமக்குப் பயத்தைக் கொடுத்தாலும் போகப் போக.. நண்பர்களின் வாழ்க்கைக்காக எதையும் செய்யும் அவரது குணாதிசயத்தை முன் வைத்த திரைக்கதையினால் அவர் ஈர்த்திருக்கிறார்.

தம்பியை இழந்து நிற்கும் நந்தன் ராமின் அக்காவுக்கு அவளது காதலனை தேடிச் பிடித்து வந்து சேர்ப்பிக்கும் காட்சியில் நம்மை கவர்ந்திழுக்கிறார் ஜீ.வி.. தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகச் சொல்லிவிட்டு அவரது அம்மாவான ராதிகா அவர் கண்ணெதிரே அதைச் செய்தும் கண்டுகொள்ளாமல் சோறு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் அவரது கேரக்டர் ஸ்கெட்ச்சுதான் சுவாரசியம்.

இதேபோல் அபர்நதியுடனான சந்திப்பு மோதலில் துவங்கி.. காதலை கொஞ்சம், கொஞ்சமாக வளர்த்துக் கொள்ளும் அந்த ஸ்டைலும் இயக்குநரின் திறமையைக் காட்டுகிறது. அவருக்கான காதல் காட்சிகள் மிக சுவாரசியமாக இருக்கிறது. நிச்சயம் அவை ரசிகர்களை ஈர்க்கும்.

நாயகியான அபர்நதியும் வடசென்னைப் பெண்ணாகவே மாறி நமக்கு ஆச்சர்யத்தைக் காட்டுகிறார். என்னவொரு பெர்பார்மென்ஸ்…? சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார். அவர் ஜீவி பிரகாஷை காதலித்ததுக்கு சொல்லும் காரணம் ரசனையானதுதான்.

ஜீ.வி.க்கு இணையான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் நந்தன் ராமுக்கு இது அறிமுக படம் என்றாலும் அப்படி தெரிய விடாமல் அந்தப் பாத்திரத்தில் ஒன்றி இயல்பாக நடித்திருக்கிறார். அவரது தோற்றத்தைப் பார்த்தால் அவரே இன்னொரு தனி ஹீரோவாக ஆகிவிடுவார் போலிருக்கிறது. ஆகலாம்.

பசங்க’ படத்தில் சிறுவனாக பார்த்த பாண்டி இப்போது இளைஞனாக இந்தப் படத்தில் பிரமோஷன் ஆகியிருக்கிறார். சிறையிலிருந்து வீட்டுக்கு வரும் வழியிலேயே தனது அம்மா குப்பை பொறுக்கிக் கொண்டிருப்பதை பார்த்து பதறி, வண்டியை நிறுத்தி தாயை நோக்கி ஓடும் காட்சியில் நம்மை நெகிழ வைக்கிறார்.

தன் பெற்றோர்களுக்கு நண்பர்கள் உதவவில்லையோ என்று சந்தேகப்பட்டு பின்பு, உண்மை தெரிந்து அவர்களுடன் தன் நட்பை புதுப்பித்துக் கொள்வது ரசிக்க வைக்கிறது .

ீ.வி.பிரகாஷின் அம்மாவாக நடித்திருக்கும் ராதிகா சரத்குமார் தன்னுடைய நடிப்பில் ஒரு குறையையும் வைக்கவில்லை. அக்மார்க் தாய்ப் பாசத்தை ஓவராகவே காட்டும் சாதாரணமான தாயை பிரதிபலித்திருக்கிறார். ஆனால், அவருக்கான ஸ்கோப் இந்தப் படத்தில் இல்லை என்பதும் உண்மை.

பல படங்களில் அழுத்தமில்லாத கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் சரண்யா ரவிச்சந்திரனுக்கு இந்தப் படத்தில்தான் சொல்லிக் கொள்ளும்படியான வேடம் கிடைத்திருக்கிறது. பசங்க’ பாண்டியின் ஜோடியாக கொஞ்சம் சிரிக்கும்படி நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். இவருடைய காதல் வெற்றி பெற்றதில் மனதில் ஒரு சின்ன சந்தோஷம்..!

அந்தப் பகுதி இன்ஸ்பெக்டரான ரவி மரியா ஒரு மோசமான போலீஸுக்கு எடுத்துக்காட்டாக காட்டப்பட்டிருக்கிறார். அந்தப் பகுதி இளைஞர்களை தன் சுயநலத்திற்காக அவர் பயன்படுத்திக் கொள்வதைப் பார்த்தால் போலீஸ் என்றாலே நமக்கு அலர்ஜி என்று சொல்பவர்களின் எண்ணிக்கை நிச்சயமாக கூடும்.

சில இடங்களில் வில்லனா? காமெடியனா? என்று குழம்பவும் வைக்கிறார். இன்னொரு பக்கம் அவருக்கு இருக்கும் ‘உள் மூலம்’ அவரை வதைப்பதை நினைத்து சிரிக்கவும் முடிகிறது. அந்த வதைப்பை இவ்ளோ நீளத்திற்கா சொல்ல வேண்டும்..?

படத்தின் ஒளிப்பதிவைப் பற்றி ஒரு தனிப்பதிவே போடலாம். சண்டை காட்சிகளில் ஒளிப்பதிவாளரின் திறமை பளிச்சிடுகிறது. பரந்தும், விரிந்தும், உயர்ந்தும், தாழ்ந்தும் இருக்கும் அந்தக் குடியிருப்பு முழுவதையும் ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திராவின் கேமரா படம் பிடித்திருக்கிறது. அதன் இண்டு இடுக்கெல்லாம் சென்று வரும் வேகத்தைப் பார்த்தால் ஒளிப்பதிவாளருக்கு நிச்சயமாக ஒரு சபாஷ் போட வேண்டும்.

ஜீ.வி.பிரகாஷின் இசையில் காத்தோடு காத்தானேன்’ பாடல் முன்பேயே ஹிட்டடித்துவிட்டதால் பாடல் காட்சியை ஆவலோடு பார்க்க வைத்திருக்கிறார் இயக்குநர். மற்றவைகளில் ‘நகரோடி’யும், ‘பத்து காசு’ம் கவனத்தை ஈர்க்கின்றன. பின்னணி இசையிலும் ஜீவி பிரகாஷ் குறை வைக்கவில்லை.  

மூன்று நண்பர்களும் படத்தின் பல்வேறு காட்சிகளில் குடியிருப்பு பகுதிகளில் உள்ளேயே ஓட ஓட விரட்டப்படுவதில் மொத்தமாக எத்தனை மைல் தூரம் ஓடி இருப்பார்கள் என்றே தெரியவில்லை. அப்படி ஓட வைத்திருக்கிறார் இயக்குநர். இந்த ஓட்டக் களத்தில் நம்மையும் சேர்த்து இழுத்துக் கொண்டு ஓடியிருக்கிறார்கள் ஒளிப்பதிவாளரும், இசையமைப்பாளரும்.

படத்தின் துவக்கத்தில் வசந்த பாலனின் குரல் வழியாக சொன்ன கருத்துக்கள் கதையில் பெரிதாக இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. அவர் சொன்னது ஒன்று.. ஆனால் படமாக எடுத்திருப்பது ஒன்று.. ஆனாலும், இந்தப் படத்திலும் இயக்குநர் வசந்த பாலனின் வழமையான ட்ரேட்மார்க் முத்திரைகள் இருக்கத்தான் செய்கின்றன.

படத்தின் கதை மிகவும் வலுவானதாக இருந்தாலும், திரைக்கதையில் வழக்கமான திரில்லர், சேஸிங்காக மாறியிருப்பதால் இந்தப் படமும் சாதாரணமான கமர்ஷியல் பட வரிசையில் சேர்ந்துவிட்டது. இதுதான் இந்தப் படத்தினால் கிடைத்த எதிர்பாராத திருப்பம்.

மக்களின் இடம் மாறுதல் என்பது அவர்களுடைய வாழ்க்கை முறையையே தலைகீழாக மாற்றக் கூடியது. இதனால் முதலில் பாதிக்கப்படுவது குழந்தைகளின் கல்வி. அடுத்தது தொழிலாளர்களின் வேலை. பெண்களின் வீட்டு வேலைகள்.. அவர்களின் அன்றாட தொழில்கள். இந்தப் படம் இது பற்றித்தான் பேசியிருக்க வேண்டும்.

ஆனால் எதற்குத் தேவையே இல்லாமல் 3 இளைஞர்களின் நட்பையும், அவர்களது ரவுடித்தனத்தைப் பற்றியும் பேசியது என்பதுதான் புரியவில்லை.

ஒரு வித்தியாசமான கதைக் கருவை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் திரைக்கதை வணிக ரீதியாக அமைந்திருப்பதாலும், வட சென்னைவாசிகளின் படங்களை தொடர்ந்து பார்ப்பதாலும் ஒட்டு மொத்தப் படம் பற்றி நமக்கு ஏதோ ஒருவித ஒவ்வாமை ஏற்படுகிறது.

இதையெல்லாம் தாண்டி, பெரிய எதிர்பார்ப்புகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டுச் சென்றால் இந்த ஜெயில்‘ படம் நிச்சயமாக நமக்கு ஒரு நல்ல அனுபவத்தைக் கொடுக்கும்.

RATING : 3.5 / 5

Our Score