full screen background image

“ஜாமீன்தாரர் எப்படி சொத்தில் உரிமை கொண்டாட முடியும்..?”-டி.ராஜேந்தரிடம் பாரதிராஜா கேள்வி..!

“ஜாமீன்தாரர் எப்படி சொத்தில் உரிமை கொண்டாட முடியும்..?”-டி.ராஜேந்தரிடம் பாரதிராஜா கேள்வி..!

‘மாநாடு’ படத்தின் சேட்டிலைட் உரிமை விவகாரம் தொடர்பாக, அப்படத்தின் நாயகனான சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர், படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி மற்றும் அந்தப் படத்திற்கு கடன் அளித்திருந்த பைனான்ஸியர் மீது வழக்கு தொடர்ந்தமைக்கு,   தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

‘மாநாடு’ படத்தின் சேட்டிலைட் உரிமை, ஓடிடி உரிமை விற்பனையாவதில் ஏற்பட்ட சிக்கல்களால் படத்தின் வெளியீடு கடைசி நிமிடத்தில் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு பின்னர் அந்தச் சிக்கல்கள் சரி செய்யப்பட்டன.

படத்தின் சேட்டிலைட் உரிமை விற்காமல் இருந்ததால் டி.ராஜேந்தர் ரூ.5 கோடி பொறுப்பேற்க வேண்டும். அல்லது ரூ.5 கோடிக்குக் குறைவாக விற்றால் அதற்கான மீதித் தொகைக்கும் தொகையையும் டி.ராஜேந்தரே ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என்ற நிபந்தனையுடன் பைனான்சியர் உத்தம் சந்த்  படத்தை வெளியிட சம்மதம் தெரிவித்தார். இதற்கு உடன்பட்டு டி.ராஜேந்தரும் கையெழுத்திட்டார். இதன் பிறகுதான் மாநாடு’ படம் வெளியானது.

இந்நிலையில், தன்னிடம் தெரிவிக்காமலேயே பைனான்சியர் உத்தம் சந்த் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இருவரும் படத்தின் சேட்டிலைட் உரிமையைத் தனியார் தொலைக்காட்சிக்கு விற்க முற்படுவதாகக் கூறி டி.ராஜேந்தர் அவர்கள் இருவர் மீதும் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரான பாரதிராஜா, தற்போது டி.ராஜேந்தருக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் அவர் எழுதியிருப்பது இதுதான் :

”தங்கள் மகன் சிலம்பரசன் நடித்து எங்கள் உறுப்பினர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெளியான ‘மாநாடு’ திரைப்படம் சம்பந்தமாகத் தயாரிப்பு நிலையிலும், வெளியீட்டு நிலையிலும் தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் பல முறை தலையிட்டுப் படம் சுமுகமாக வெளியாக உதவியது தாங்கள் அறிந்ததே.

படம் நன்முறையில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்று இன்று சிலம்பரசனின் வியாபாரமும், அவர் மீதான நம்பகத்தன்மையும் வெகுவாக உயர்ந்துள்ளது மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

இந்த வெற்றிக்குப் பின்னால் இதன் தயாரிப்பாளரும், நிதியாளரும் எவ்வளவு இடர்களைத் தாங்கி நின்றார்கள் என்பதை நீங்கள் உட்பட மொத்தத் திரையுலகமும் அறியும். அப்படிப்பட்ட தயாரிப்பாளர், நிதியாளர் இருவர் மீதும் தாங்கள் வழக்குத் தொடுத்துள்ள செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம்.

‘மாநாடு’ வெளியீட்டுக்கு முந்தைய நாள் மொத்தத் திரையுலகமும் படம் வெளியாக பிரதிபலன் பாராமல் உதவ முன் வந்தது இன்றும் நாம் ஒரு குடும்பமாக இருப்பதற்குச் சான்று.

படத்தின் தொலைக்காட்சி உரிமம் விற்கப்படாததால் அதன் மீதான கடன் தொகைக்கு யாராவது உத்தரவாதம் கொடுத்தால் பணம் தனது கைக்கு வரத் தாமதமானாலும் பரவாயில்லை, படத்தை வெளியாக அனுமதிப்பதாக நிதியாளர் பெரிய மனதுடன் ஒப்புக் கொண்டதால்… தாங்கள் தங்களது மகனின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு உத்தரவாதம் தர முன் வந்தீர்கள். படம் நன்முறையில் வெளியாகி பெரும் வெற்றியடைந்து, தொலைக்காட்சி உரிமமும் நல்ல விலைக்கு விற்று, இன்று தயாரிப்பாளரே கடனைத் திருப்பித் தருகிறார்.

ஆனால் திடீரென்று தொலைக்காட்சி உரிமம் எனக்கு சொந்தம் என நீங்கள் கூறியிருப்பது மிகத் தவறான முன் உதாரணம் ஆகும். ஜாமீன்தாரர் சொத்துகளுக்கு உரிமம் கோர முடியுமா..? திரைத் துறையில் மதிப்புமிக்க கலைஞர், ஒரு பாரம்பரியமான வியாபார அமைப்பின் பொறுப்பில் இருப்பவர் இவ்வாறு செய்வது நியாயமா..?

ஒரு அமைப்பில் மிக முக்கியப் பொறுப்பு வகிக்கும் தாங்கள் தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் தெரியாமலே தெலுங்கில் பிரஸ் மீட் வைத்து கீதா ஆர்ட்ஸ் மூலமாக படத்தை வெளியிட முயன்றது எந்தவிதத்தில் நியாயம்..? நீங்கள் அதன் சாதக பாதகங்களை அறியாதவரா..?

இதையெல்லாம் சகித்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் நஷ்ட ஈடு கேட்டு உங்கள் மீது வழக்குத் தொடுத்தால் உங்கள் நிலை என்னவாகும்..?

வியாபாரக் குளறுபடிகளை ஏற்படுத்தியதோடு மட்டுமில்லாமல், வழக்குப் போட்டும் ஒரு தயாரிப்பாளரை மன உளைச்சலுக்குள்ளாக்கி இருப்பதை தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது…”

இவ்வாறு அந்தக் கடிதத்தில்  இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

Our Score