full screen background image

‘தெனாலிராமனை’ முடிந்தால் தடுத்துப் பாருங்கள்-ஜாகுவார் தங்கம் சவால்..!

‘தெனாலிராமனை’ முடிந்தால் தடுத்துப் பாருங்கள்-ஜாகுவார் தங்கம் சவால்..!

மைக் கிடைத்துவிட்டால் கொள்கைவாதிகள் நீண்ட முழுக்கமிடுவார்கள். அதிலும் கை தட்டவும் ஆட்கள் கிடைத்துவிட்டால் சொல்லவா வேணும்..?

நேற்று நடைபெற்ற ‘காதல் பஞ்சாயத்து’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம், வழக்கம்போல ‘தமிழ்’, ‘தமிழன்’, ‘தமிழ்நாடு’, ‘இன உணர்வு’ போன்றவைகளை கையில் எடுத்தார்.

“நம்முடைய வடிவேலு உண்மையான மக்கள் கலைஞன். சுத்தத் தமிழன். அப்பேர்ப்பட்ட தமிழன் நடித்த ‘தெனாலிராமன்’ படத்தை வெளியிட விடமாட்டோம் என்று தமிழ்நாட்டில் இருக்கும் தமிழரல்லாத சிலர் அறிக்கை விடுகிறார்கள்.

இது வந்தாரை வாழ வைக்கும் பூமி. தன்னை நம்பி வந்தவர்களை என்றைக்குமே தமிழ்நாடு கைவிட்டதில்லை. இங்கே வந்து பிழைத்து பெரும் கோடீஸ்வரர்களான வேற்று மாநிலத்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒரு தமிழன்கூட வேற்று மாநிலத்திற்கு போய் பெரிய ஆளாக ஆனதில்லை. ஆனால் நாம் அவர்களையெல்லாம் வாழ வைத்திருக்கிறோம்..

இப்போது அவர்களில் ஒரு சிலர்தான் இந்தத் ‘தெனாலிராமன்’ படத்திற்கெதிராக ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.. அவர்களிடம் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் முடிந்தால் ‘தெனாலிராமன்’ படத்தைத் தடுத்து பாருங்கள். தமிழர்களாகிய நாங்கள் திரண்டு வந்து தற்கொலை படையாக மாறிகூட அந்தப் படத்தை தியேட்டர்களில் திரையிட வைப்போம். உங்களால் முடிந்தால் தடுத்து பாருங்கள்..” என்றார்.

ஏற்கெனவே இதே ஜாகுவார் தங்கம் அண்ணன்தான் “தங்களது பெயரை தமிழ்ப் பெயராக மாற்றாத நடிகைகளை செருப்பால் அடிக்கவேண்டும்…” என்று பேசியவர். இப்படி இவர் பேசியதில் எந்த ஆச்சரியமும் இல்லைதான்..!

அண்ணன் சொல்லிட்டாரு.. இனிமேல் ஆக வேண்டியதை பாருங்கள் தமிழர்களே..!

Our Score