மிகக் குறுகிய காலத்தில் தமிழ்த் திரையுலகில் முன்னணி விநியோகஸ்தராக வலம் வந்து கொண்டிருப்பவர் எம்.எஸ்.சரவணன். இவர் ‘மாசாணி’, ‘சலீம்’ ஆகிய படங்களைத் தயாரித்தவரும்கூட.
‘வேலையில்லா பட்டதாரி’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘மான் கராத்தே’, ‘காக்கிசட்டை’, ‘கயல்’ போன்ற படங்களை சென்னை செங்கல்பட்டு பகுதிகளுக்கு விநியோகம் செய்தவரும் இவரே. மேலும் விரைவில் வெளிவரவுள்ள பாலாவின் தயாரிப்பில் சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் ‘சண்டிவீரன்’ படத்தை தமிழகமெங்கும் தனது ‘Sri Green Productions’ சார்பில் வெளியிடவுள்ளார்.
இவர் இப்போது மீண்டும் படத் தயாரிப்பில் இறங்கியிருக்கிறார். சென்ற ஆண்டு வெளியான ‘பர்மா’ என்ற வெற்றிப் படத்தை இயக்கிய தரணிதரன் இயக்கத்தில், ‘நாய்கள் ஜாக்கிரதை’ வெற்றிக்கு பிறகு சிபிராஜ் கதாநாயகனாக நடிக்கவுள்ள புதிய படத்தை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.
‘ஜாக்சன் துரை’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சிபிராஜூடன் முக்கிய வேடத்தில் சத்யராஜும் நடிக்கிறார். மேலும் பிந்துமாதவி, கருணாகரன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன்.. இவர்களுடன் முக்கிய வேடத்தில் தமிழில் முதன் முறையாக ஹாலிவுட் நடிகர் ZACHERY-யும் நடிக்கிறார்.
இத்திரைப்படத்திற்கு கதை, திரைகதை, வசனம், எழுதி இயக்குகிறார் தரணிதரன், ஒளிப்பதிவு – யுவராஜ், இசை – சித்தார்த் விபின், படத்தொகுப்பு – விவேக் ஹர்ஷன் கலை – T.N. கபிலன், EXECUTIVE PRODUCER – அருண் புருசோத்தமன், T. ரகுநாதன், PRODUCTION CONTROLLER – M.பூமதி, LINE PRODUCER – செல்வா, PRODUCTION MANAGER – C.பாலமுருகன் PRO – நிகில் முருகன் மற்றும் இவர்களுடன் பல தொழில் நுட்ப கலைஞர்களும் இப்படத்தில் இணைந்து பணியாற்றுகின்றனர்.
இந்தப் படத்தின் சிறப்பு என்னவெனில் தமிழின் முதல் PERIODICAL பேய் படம் என்கிற பெயரை இது பெற்றுள்ளது. மேலும் ஹாலிவுட்டில் மிகப் பெரிய வெற்றி பெற்ற ‘CONJURING’ படத்தின் ஒப்பனை தொழில் நுட்பமும் இப்படத்தில் பயன்படுத்தப்படவுள்ளது.
திகிலும், நகைசுவையும் கலந்த படமாக இது உருவாகிறது. இப்படத்தின் கதை, திரைக்கதை 1940 -களில் நடப்பதுபோல் அமைக்கப்பட்டுள்ளதால் அதற்கேற்றாற்போன்ற மிகுந்த பொருள் செலவில் அரங்குகள் அமைக்கப்பட்டு தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் சத்யராஜ் பேயாகவும், சாதாரண மனிதராகவும் இரு வேடங்களில் நடிக்கிறாராம். 25 சதிவிகித படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்ட நிலையில் நேற்று படப்பிடிப்பு தளத்திலேயே பத்திரிகையாளர்களை சந்தித்தனர் சிபிராஜும், இயக்குநர் தரணிதரனும்.
மேக்கப்போடு வந்து அமர்ந்த நாயகன் சிபிராஜ், “நாய்கள் ஜாக்கிரதை’ படம் முடிந்தவுடன் ஒரு விஷயத்துல ரொம்ப முடிவா இருந்தேன். அப்பாகூட நடிக்க்க் கூடாதுன்னு நினைச்சிருந்தேன். இன்னொன்னு நாம அடுத்து நடிக்கிற படம் படமா இருக்கக் கூடாதுன்னு. ஏன்னா, இப்போ மாசத்துக்கு 13 படம் வருதுன்னா அதுல 4 பேய் படமா இருக்கு. இதுல நம்ம என்ன வித்தியாசமா சொல்லி, காட்டி ஹிட் பண்ணிட முடியும்ன்னு நினைச்சேன். அவ்வளவு உறுதியா இருந்தும் இந்தப் படத்துல அந்த ரெண்டுமே நடந்துருச்சு. தரணிதரன் சொன்ன கதை அப்படி.. இந்தப் படத்தோட கதையைக் கேட்டதும் மெய்மறந்துபோய் ‘ஓகே’ன்னு சொல்லிட்டேன். அந்த அளவுக்கு கதை ரொம்பவும் வித்தியாசமானது..” என்றார்.
கூடவே டிப்ஸாக தலைப்புச் செய்திக்கு ஏற்றாற்போல் அவரே சொன்ன தகவல்.. “என்னோட ரொம்ப நாள் ஆசை பிந்துமாதவிகூட நடிக்கறது. அது இந்த படத்துல நிறைவேறிடுச்சு..” என்றார். “பிந்து மாதவியை அவ்ளோ பிடிக்குமா..?” என்று திருப்பிக் கேட்டவுடன் பட்டென்று “இல்லீங்க. என் உசரத்துக்கு கரெக்ட்டான ஆளு அவங்கதான்..” என்றார்.
“ஜாக்சன் துரை’ என்று பெயர் வைத்ததற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா..?” என்று துருவித் துருவிக் கேட்டபோதும் இயக்குநர் நேரடியாக பதில் சொல்லாமல் “ச்சும்மா.. அதுவொரு பெயர் மட்டுமே..” என்றார். “இதுவும் பேய்ப் படம்தானே..?” என்று கேட்டதற்கு முதலில் பதில் சொல்லாமல் தவிர்த்துவிட்டு சில நிமிடங்கள் கழித்து ஒவ்வொரு முடிச்சையும் அவிழ்த்துக் கொண்டே வந்து கடைசியில் ‘பேய்’ போய் ‘ஆவி’யில் வந்து நின்றார் இயக்குநர்.
“இந்தக் கதை இரண்டுவிதமான காலக்கட்டத்தில் நடக்கிறது. ஒன்று சுதந்திரத்திற்கு முன்பான காலம். இன்னொன்று தற்போதைய காலக்கட்டம். இதில் சத்தியராஜ் பேயாக நடிக்கிறார். கூடவே சாதாரண மனிதராகவும் தெரிவார். சிபிராஜ் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
நகரத்திலிருந்து அந்தக் கிராமத்திற்கு வேலை விஷயமாக செல்கிறார் சிபிராஜ். அந்த நேரத்தில் நடக்கும் சுவாரஸ்யம் கலந்த அமானுஷிய நிகழ்வுதான் இந்தப் படத்தின் கதை. அந்தக் கிராமத்தில் பல ஆண்டுகளாக பேய் உலாவி வருவதாக ஒரு வதந்தி. அந்த மர்மத்தைத் தேடி சிபிராஜ் கிளம்புகிறான். அதுதான் திரைக்கதை..
முதல்ல சத்யராஜ் ஸார், பேய்க் கதையா இருக்கேன்னு நினைச்சு இந்தப் படத்துல நடிக்க முடியாதுன்னுதான் சொன்னார். கதையைக் கேளுங்க. பிடிச்சுருந்தா நடிங்கன்னு சொன்னேன். கதையை கேட்டு இதில் இருக்கும் கருத்துக்களை புரிந்து கொண்ட பிறகுதான் நடிக்க சம்மதிச்சாரு. இதுவரைக்கும் 25 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. அடுத்தடுத்து வேறு வேறு இடங்களில் ஷூட்டிங் நடத்தவுள்ளோம்..” என்றார்.
காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ளத்தான் வேண்டும். தவறில்லை.. எத்தனை பேய்ப் படங்கள் வந்தாலும் மக்கள் ஆதரிக்க தயாராக இருக்கும்போது ஏன் தயங்க வேண்டும்..?