“நாவை அடக்கிப் பேச வேண்டும்..” – நடிகர் ஆதி சொல்லும் அட்வைஸ்..!

“நாவை அடக்கிப் பேச வேண்டும்..” – நடிகர் ஆதி சொல்லும் அட்வைஸ்..!

தமிழாய்ந்த தமிழன் ஐயன் வள்ளுவன் உலகுக்கு அளித்த கொடையான திருக்குறளின் அறத்துப் பாலில், இல்லறவியல் பகுதியில் ‘அடக்கமுடைமை’ அதிகாரத்தில் 127-வது குறளாக இருக்கிறது “யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.” என்கிற குறள்.

“ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும். இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகி விடும்.” என்பது இதன் கருத்து.

இந்தக் கருத்தையே அடிநாதமாகக் கொண்டு ஒரு திரைப்படத்தை ‘யாகாவாராயினும் நா காக்கா’ என்று இதன் பெயரிலேயே உருவாக்கியிருக்கிறார்கள்.

தன் தந்தையின் தயாரிப்பில் அண்ணனின் இயக்கத்தில் நடிகர் ஆதி நடித்துள்ள படம் இது.  ஹீரோயின்களாக நிக்கி கல்ராணி, ரிச்சா பலோட் நடித்துள்ளனர்.  இவர்கள் தவிர  நரேன், பசுபதி, பிரகதி, கிட்டி, மகாதேவன், பாண்டியநாடு ஹரிஷ்  போன்ற திறமை கொண்ட நடிகர்களும் நடித்திருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி அறிமுகமாகி நடித்துள்ளார்.

ஒளிப்பதிவு சண்முகசுந்தரம். இவர் ‘ரௌத்ரம்’, ‘ஆரோகணம்’ படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். எடிட்டிங் தேசிய விருது பெற்ற சாபு ஜோசப், நடனம் தினேஷ், இசை ப்ரவீன், ஷ்யாம், ப்ரசன்,  என மூவர். இவர்களும் புதியவர்களே. ஷாம், ப்ரவீன், பிரசன் என்கிற மூவர் இசையமைப்பாளர்கள். முன்னணி முகங்களாக தொழில் நுட்பக் கலைஞர்களை நாடாமல், இது தனக்கு ஒரு வாய்ப்பல்ல; வாழ்க்கை என்று  என்ணுபவர்களை மட்டுமே பயன்படுத்தியுள்ளார் இயக்குநர்.

படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பவர் சத்யபிரபாஸ். ஹீரோ ஆதியின் அண்ணனான இவர் இந்தியாவில் பி.காம். முடித்துவிட்டு லண்டனில் எம்.பி.ஏ. முடித்தவர். தமிழில் ஜெயம் ராஜா, தெலுங்கில் ஷிவ்குமார்  என சில இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.

மேலும் சினிமாவைப் பற்றி ஆழமாக அறிந்து கொள்ள அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்லில் அமெரிக்கன் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் 2 ஆண்டுகள் சினிமா படித்தவர். அங்கு சிறந்த 28 மாணவர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டு பதக்கமும் பரிசும் பெற்றவர். ஆஸ்கார் விருது விழாவில் மல்ட்டி கல்சரல் மோஷன் பிக்சர்ஸ் அசோசியேஷன் சார்பில்   கௌரவிக்கப்பட்டவர்.

தனது முதல் படமாக இதனை இயக்கியுள்ளார். ஆதர்ஷ சித்ராலயா சார்பில் ஆதியின் தந்தை ரவிராஜா பினிசெட்டி தயாரிக்கிறார். இவர் தெலுங்கில் சுமார் 60 படங்களை இயக்கியவர்.

படம் பற்றி பேசிய இயக்குநர் சந்திரபிரபாஸ், “ஆறடி மனிதன் ஆனாலும் அவனது மரியாதையும், கௌரவமும் அவன் பேசும் பேச்சில்தான் இருக்கிறது. அவனது மூன்று  அங்குல நாக்கில்தான் அவனது கௌரவம் இருக்கிறது என்பார்கள். எதை அடக்காவிட்டாலும் நாவை அடக்க வேண்டும் என்பார்களே.. அதைத்தான் இந்தப் படமும் சொல்ல வருகிறது. நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.

ஆதி மற்றும் மூன்று நண்பர்களைச் சுற்றிதான் கதை நிகழ்கிறது. ‘நான்கு வாலிபர்கள், ஓர் இரவு, ஒரு வார்த்தை’தான் கதைக் கரு.  அப்படி அவர்கள் பேசிய  ஒரு வார்த்தை எப்படி அவர்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்டு திசை மாற்றுகிறது என்பதுதான் படத்தின் கதை.

இந்தக் கதையை தயார் செய்துவிட்டு நடிக்க கதைக்கேற்ற ஒருவர் தேடியபோது அகப்பட்டவர்தான் ஆதி.  இது பாசிடிவ் நெகடிவ் இரண்டும் கலந்த பாத்திரம், பிரபல நாயகர்கள் நடிக்கத் தயங்குவார்கள். தன்னைப் பற்றிய இமேஜ் வட்டம் போடாதவர், தன் மீது எந்த பிம்பமும் விழவிடாதவர்  நடிகர் ஆதி. எனவேதான் ஆதியைத் தேர்வு செய்தேன்.

இது தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாராகியுள்ளது. இது ஒரு த்ரில்லர் படம் என்றாலும் ரொமாண்டிக் காமடி, லவ், ப்ரண்ட்ஷிப் எல்லாமே இருக்கும். படத்தைப் பற்றி நானே பெரிதாகப் பேசக் கூடாது. ஆனால் படம் பார்த்தவர்கள் நிச்சயம் இதை பத்தோடு, பதினொன்றாக ஒதுக்கிவிட முடியாத படமாக இருக்கும்…” என்றார் இயக்குநர்.

ஆதியுடன் பயணிக்கும் இந்த 3 இளைஞர்களும் தெரிந்தும் தெரியாத முகங்களாக இருந்தவர்கள். இப்படத்தின் மூலம் கார்த்திக், ஷ்யாம், சித்தார்த் என அந்த மூன்று புதுமுகங்களும் ஆதியின் மூன்று நண்பர்களாக அழுத்தமாக அறிமுகமாகிறார்கள்.

சென்னை, பாண்டிச்சேரி, கோவா, மும்பை, ஹைதராபாத் போன்ற இடங்களில் 111 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. பல இடங்களில் பின்புலம் சரியாக அமைய பல மாதங்கள் காத்திருந்து  எடுத்துள்ளனர். உதாரணமாக சென்னை காசிமேடு கடற்கரையில் 300-க்கும் மேற்பட்ட படகுகள் காத்திருக்கும் காட்சியைப் படமாக்க மீன் பிடி தடைகாலம் வரும்வரையில் காத்திருந்து படமாக்கியுள்ளார்கள்.

அதே போல மும்பையில் பல சுரங்கப் பாதைகளில் ஆயிரம் பேர் துணை நடிகர்களுடன் ஆந்தேரியில்  இரவில் படப்பிடிப்பு நடந்துள்ளது. படத்தில் லொக்கேஷன்களும் அர்த்தமுள்ள பாத்திரங்களாக பேசப்படும். 

பட அனுபவம் பற்றி நடிகர் ஆதி பேசும்போது, “இது எனக்கு ஆறாவது படம். நான் படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவன். இப்படத்தில்  அண்ணனின் இயக்கத்தில் நடித்தது எனக்கு சௌகரியமாக இருந்தது. இது வழக்கமான ஹீரோ ஹீரோயின், வில்லன் பார்முலா கதையல்ல. நாம் கண்முன் காண்கிற யதார்த்த மனிதர்களின் கதை. மிகைப்படுத்தலோ, போலியான பாசாங்கோ இதில் இருக்காது. இயல்பு வாழ்க்கைக்கு நெருக்கமான கதையாக இருக்கும்…” என்கிறார்.

முதலில் நினைத்த படத்தை நினைத்த மாதிரி எடுப்பது.. அதன் பிறகுதான் வியாபாரம் யாருக்கும் எதற்கும் சமரசம் ஆகப் போவதில்லை என்றிருந்துள்ளார் இயக்குநர். அப்படி எடுத்து முடித்து போட்டுக் காட்டியபோது பிடித்து வெளியிட சம்மதித்துள்ளது GLOBEL UNITED MEDIA COMPANY. இது கேரளாவில் முன்னணி விநியோக நிறுவனமாகும். வரும் ஜூன் 26-ம் தேதியன்று இப்படம் உலகமெங்கும் ரிலீஸாகவுள்ளது.

Our Score