full screen background image

ஜெ.பேபி – திரைப்பட விமர்சனம்

ஜெ.பேபி – திரைப்பட விமர்சனம்

இந்தப் படத்தை இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ், விஸ்டாஸ் மீடியாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

அறிமுக இயக்குநர் சுரேஷ் மாரியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில், ஊர்வசி, தினேஷ், மாறன் மூவரும் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

மேலும் கவிதா பாரதி, ஜெயமூர்த்தி, சேகர் நாராயணன், ஏழுமலை, தக்‌ஷா, இஸ்மத் பானு, சபீதா ராய், பெ.மெலடி டார்கஸ், மாயாஸ்ரீ அருண் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இசை –  டோனி பிரிட்டோ, ஒளிப்பதிவு ஜெயந்த் சேது மாதவன், படத் தொகுப்பு சண்முகம் வேலுச்சாமி, கலை இயக்கம் ராமு தங்கராஜ், பாடல்கள் கபிலன் உமாதேவி, விவேக், பத்திரிக்கை தொடர்பு குணா.

இதுவொரு உண்மைக் கதை. இயக்குநர் சுரேஷ் மாரியின், பெரியம்மா குடும்பத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம்தான் இந்தப் படமாக உருவாகியுள்ளது.

மனிதர்களின் இயல்பான குணத்தில் தாய்ப் பாசம் உலகளாவிய வகையில் முதன்மையானது. அதன் நீக்குப்போக்கு மதம், மொழி, நாடு கடந்த தன்மையுடையது. தாய்ப் பாசத்திற்கு ஈடு இணை ஏதுமில்லை என்பார்கள். அந்தப் பாசத்திற்கு பிள்ளைகள் காட்டும் பிரதியுபகாரம்தான் இன்றைக்கு உலகம் முழுவதும் பேசு பொருளாயிருக்கிறது.

பெற்ற தாய்களை மறக்கும் பிள்ளைகள்.. தாய்களுடன் சண்டைக்கு நிற்கும் பிள்ளைகள்.. நீதிமன்றப் படியேறி தாயுடன் முரண்பட்டிருக்கும் பிள்ளைகள் என்று தாய்ப் பாசத்தை எடைக்கு எடை போடும் வகையில் இப்போதைய வாழ்க்கைச் சூழல் அமைந்திருக்கிறது.

இந்தச் சந்தர்ப்பத்தில் தாய்ப் பாசத்தையும், பிள்ளைகளின் பாசத்தையும் ஒன்று கூட்டி, இரண்டும் ஒன்றே என்று சொல்ல வந்திருக்கிறது இந்த ‘ஜெ.பேபி’ திரைப்படம்.

கணவரை இழந்த ‘ஜெ.பேபி’ என்ற ஊர்வசிக்கு 3 மகன்கள், 2 மகள்கள். மகன்கள் இருவருக்குமிடையில் ஏற்பட்ட மோதலினால் குடும்பமே இரண்டாகிப் போய்க் கிடக்கிறது. கணவர் கட்டிக் கொடுத்த வீடு, கடனால் பறி போகிறது. இந்தப் பிரச்சினையினால் கடுமையான மன உளைச்சலுக்குள்ளாகும் ஊர்வசி, இதன் விளைவாய் மனப்பிறழ்வு நோய்க்கு ஆளாகிறார்.

எந்த நேரத்தில் என்ன செய்கிறோம்.. யாரிடம் என்ன பேசுகிறோம்.. எப்படி நடந்து கொள்கிறோம் என்பதே தெரியாத வகையில் ஒரு குழந்தை மனதுடன் வாழும் ஊர்வசியை, அவருடைய பிள்ளைகள் அன்பாகக் கவனித்துக் கொண்டாலும், சமாளிக்க முடியாமல் திணறுகிறார்கள்.

ஊர்வசியை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளிக்கிறார்கள். ஆனால் ஊர்வசி அங்கிருந்து வெளியேறுகிறார். எப்படியும் வீட்டுக்கு வந்துவிடுவார் என்று பிள்ளைகள் காத்திருக்க, ஊர்வசியோ அரக்கோணம் போவதாக நினைத்து கொல்கத்தா ரயிலில் ஏறி கொல்கத்தா சென்றடைகிறார்.

கொல்கத்தாவில் இருந்து வந்த தகவலையடுத்து மூத்த மகன் மாறனும், இளைய மகன் தினேஷூம் அம்மாவை அழைத்து வர கொல்கத்தா பயணமாகின்றனர். அம்மாவைப் பத்திரமாக அழைத்து வந்தார்களா..? இல்லையா..? என்பதுதான் இந்தப் படத்தின் மீதமான திரைக்கதை.

ஜெ.பேபி என்ற அம்மாவாக நடித்திருக்கும் ஊர்வசிதான் படத்தைப் பெரிதும் தாங்கியிருக்கிறார். அவருடைய மனப்பிறழ்வு தன்மையுடனான நடிப்பு குழந்தைத்தனத்தையும் தாண்டி செல்வதால், நாமும் ஒரு குழந்தையாகவே அவரை பெரிதும் ரசிக்க முடிந்திருக்கிறது.

அப்பாவியான கேரக்டரெல்லாம் ஊர்வசிக்கு அல்வா சாப்பிடுவதுபோல… இந்தப் படத்திலும் அதை அலட்சியமாக செய்து நம்மை கவர்ந்திழுத்திருக்கிறார்.

திறந்திருக்கும் வீடுகளை பூட்டிவிட்டுப் போவதும், வீட்டில் இருக்கும் நகையை எடுத்து பூக்கார அம்மாவுக்கு அலட்சியமாகக் கொடுத்துவிட்டுப் போவதும், பிச்சைக்காரர்களுக்கு சாப்பாடு வாங்கித் தருவதும், டீயில் மாத்திரையை கலந்து கொடுத்ததால் டீக்கடையையே அடித்து நொறுக்குவதும், போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் “நான் ஜெயலலிதாவுக்கு பிரெண்டு” என்று சதாய்ப்பதும், கொல்கத்தாவில் “நான் இந்திராகாந்திக்கு பிரெண்டு” என்று அள்ளிவிடுவதுமாக அழிச்சாட்டியம் செய்து தனது கதாப்பாத்திரத்தை நூறு சதவிகிதம் முழுமையாக்கியிருக்கிறார் ஊர்வசி. தி கிரேட் சல்யூட் டூ ஊர்வசி..!

தினேஷ் நல்ல நடிகர் என்று ஏற்கனவே பல படங்களில் நிரூபித்திருக்கிறார். இந்தப் படத்திற்காக தனது உடல் எடையைக் கொஞ்சம் கூட்டி, தொப்பையையும் அதிகப்படுத்தி கேரக்டர் மாற்றமும் செய்து சிறப்பாகவும் நடித்திருக்கிறார்.

தன்னிடம் பேச மறுக்கும் மாறனிடம் “என்னப்பா.. வாப்பா.. போப்பா..” என்று பாசத்தோடு அழைத்து, தனது மனைவியையும் விட்டுக் கொடுக்க முடியாமல் குடும்பமே முக்கியம் என்பதாகப் பேசும் பொறுப்பான தம்பியாய் ஜொலிக்கிறார் தினேஷ்.

இதுவரையிலும் காமெடி நடிகராக மட்டுமே நாம் பார்த்திருக்கும் ‘லொள்ளு சபா’ மாறனை இதில் வேற மாதிரியாகக் காண்பித்திருக்கிறார்கள். அவருடைய தனிப்பட்ட ஸ்டைலான கவுண்ட்டர் டயலாக்குகள்தான் கொஞ்சம், கொஞ்சம் நம்மை சிரிக்க வைக்கின்றன.

தம்பியுடனான பிணக்கினை சரிக்கட்ட நினைக்காமல் அதை இழுத்துக் கொண்டே போவதும், கிடைத்த இடைவெளியில் டாஸ்மாக் சரக்கினை தேடியலைவதும்.. தம்பியின் பாசத்தைப் புரிந்து கொள்ளாத அண்ணனாகவும், தனது இன்னொரு பக்க நடிப்பை காண்பித்திருக்கிறார் மாறன். பாராட்டுக்கள்.

மகள்களாக நடித்தவர்களும், மருமகள்களும், மருமகன்களும் என்று அத்தனை பேரும் சிறப்பாக நடித்துள்ளனர். கொல்கத்தாவில் இவர்களுக்கு உதவி செய்யும் ராணுவ வீரருக்கு இது முதல் படம். நிஜத்தில் அவர் செய்த அதே கதாப்பாத்திரத்தை படத்திலும் அப்படியே செய்திருக்கிறார். இந்த நல்லுள்ளத்தை வணங்கத்தான் வேண்டும்.

கொல்கத்தாவின் அழகையும், சென்னையின் இதுவரையிலும் பார்த்திராத குடியிருப்புப் பகுதிகளையும் அழகாகப் படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

டேனி பிரிட்டோவின் இசையில் ஒலிக்கும் ‘இதைத்தானே எதிர்பார்த்தேன்’, ‘நெடுமரம்’, ‘யார் பாடலை’ ஆகிய பாடல்கள் அந்தந்த சூழலின் இருப்பை நமக்குள் உணர்த்துகின்றன.

படத்தின் நீளம் கொஞ்சம் அதிகம்தான். இதை மட்டும் கொஞ்சும் மட்டுப்படுத்தியிருக்கலாம் இயக்குநரே..!

வயோதிகப் பருவத்தில் பலருக்கும் ஒரு சுமையாக வந்து சேர்கிற மறதி நோயும், மனப்பிறழ் நோயும் ஒரு எளிய குடும்பத்திற்குள் உருவாக்கும் உளவியல் தாக்குதலை இந்தப் படத்தில் மிக அழகாக படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநரான சுரேஷ் மாரி.

ஒட்டு மொத்தமாகப் பார்க்கப் போனால் படத்தில் அனைத்துக் கதாப்பாத்திரங்களின் வடிவமைப்பு,  நடிகர்களின் தேர்வு, காட்சிகளின் உருவாக்கம் என்று அனைத்திலும் ஒரு தேர்ச்சி பெற்ற இயக்குநராகவே தெரிகிறார் சுரேஷ் மாரி.

படம் பார்ப்போரின் மனதை நெகிழச் செய்து அம்மாக்களைப் பற்றிய அவரவர் நினைவுகளைக் கிளறுவதோடு, செய்திருக்கும் குற்றங்களுக்காக நம்மை குற்ற உணர்வுக்குள்ளாக்கும் பல காட்சிகளை இந்தப் படம் கொண்டுள்ளது.

நம் வாழ்க்கையில் தாய் என்பவர் எவ்வளவு முக்கியம் என்பதை புரிந்து கொள்ளாமல் நாம் நமக்காக ஓடிக் கொண்டேயிருக்கிறோம். நமக்கெல்லாம் அம்மா என்ற உயிரின் மதிப்பை, அவர்களை கடைசி காலத்தில் எப்படி பாதுகாக்க வேண்டும் என்பதை இந்தப் படம் எளிய கதையில் புரிய வைக்கிறது. சில காட்சிகளில் அழவும் வைக்கிறது.. பல காட்சிகளில் சிரிக்கவும் வைத்திருக்கிறது.

குடும்பத்துடன் அவசியம் பார்க்க வேண்டிய படம்..! மிஸ் பண்ணிராதீங்க..!

RATING : 4 / 5

Our Score